ஒரு நூல் நம்மை ஒவ்வொரு இடத்திலும் உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்து, மகிழ்வையும் சினத்தையும் வெளிப்படுத்த வைத்து, தொடர்ந்து கண்ணீரையும் சிந்த வைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக அதனை, ஏதோ ஒரு நூல்!
யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என கடக்க முடியவில்லை என்றுதான் அர்த்தம்.
இந்த நூலை வாசிக்க வாசிக்க சொல்லி மாளாத அளவிற்கு மகிழ்வு எனக்கு. ஏனென்றால் எனது சொந்த மண்ணின் சாயலை சுமந்துள்ளதால் அப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
நான் வேதாரண்யத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி, வாய்மேடு எல்லாம் நான் கடந்து சென்ற ஊர்கள். மேலும், எனது அப்பாவின் பூர்வீகமான ஆரியலூர், குலமாணிக்கம் அதனை அடுத்த எடையூர் சங்கேந்தி, தேவதானம் எல்லாம் இன்னும் எங்களது உறவினர்கள் வாழும் ஊர்கள். இந்நூல் முழுமையும் அந்த ஊர்களின் பெயர்கள் வலம் வந்துக் கொண்டே இருந்தது ஒரு வித மகிழ்வை கொடுத்தது.
இந்த கதையைப் படிக்க தொடங்கிய உடனே தெரிந்து விட்டது. இது நிச்சயமாக கற்பனை கதையே அல்ல; முழுக்க முழுக்க உண்மையும், ஓரத்தில் கற்பனைகளும் ஒட்டிக்கொண்ட கதை என்று. ஏனென்றால் இவ்வளவு துல்லியம் கற்பனையில் வர வாய்ப்பில்லை.
சுந்தரவல்லி வைராக்கியத்தை சுமந்துக் கொண்டு வாழ்ந்து காட்டிய பெண்மணி. அவள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தை,
“தப்பு தண்டா செய்யாம
அடுத்தவங்களுக்குக்
கேடு நினைக்காம,
முடிஞ்சா மத்தவங்களுக்கு ஒத்தாசையா இருந்து
இந்த மண்ணுல பாடுபட்டா,
அது நிச்சயம் நம்மளைத் தூக்கி விடும்” என்பதே!
ஒரு மனிதனின் வாழ்வை பிறப்பில் தொடங்கி இறக்கும் வரை என்னவெல்லாம் நடந்ததோ? அதனை அனைவருக்கும் விரும்பும் வகையில் சொல்லி, “சுந்தரவல்லியை” நீங்காமல் நம் மனதில் பதிவு செய்துவிட்டது இந்த கதை.
‘கிழக்கு வாசல் உதயம்’ என்கிற மாத இதழ் திருத்துறைப்பூண்டியில் இருந்து வெளிவந்த பொழுது 9 வருடங்களாக 102 அத்தியாயங்களாக வெளிவந்த கதையே இந்த “சுந்தரவல்லி சொல்லாத கதை.” (Suntharavalli Sollaatha Kathai) இதற்கு ஸ்யாம் அவர்களின் ஓவியமும் உயிரூட்டுகிறது.
வாய்மேட்டை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு மகளாக பிறந்த சுந்தரவல்லியின் முழு வாழ்வு இந்த நூல். வெற்றிவேலின் முதல் மனைவி இறந்துவிட சித்தியால் பல கஷ்டங்களுக்கு நடுவில் வாழ்வாள் சுந்தரவல்லி! அவளிடம் முல்லையம்மா என்ற தாழ்ந்த சாதியை (எனச் சொல்லப்படும்) சேர்ந்த ஒரு பெண் தாயைப் போல் இருந்து அன்பு காட்டுவாள். காரணம்! முதல் மனைவி இறந்த பிறகு வெற்றிவேலுக்கு முல்லையம்மா மீது விருப்பம் வரும். சாதியால் திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் போகும். இருந்தாலும் கடைசி வரை முதல் மனைவிக்கு பிறந்த சுந்தரவல்லியை வீட்டில் வேலைக்காரியைப் போல் இருந்து சொந்த மகளை போல் பார்த்துக் கொள்வாள் முல்லையம்மா. சுந்தரவல்லிக்கு பார்த்த மாப்பிள்ளை திருமணத்திற்கு முன்பு இறந்துவிட ‘ராசி கெட்டவள்’ என்ற பெயரால் யாரும் அவளை துணிந்து திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கதிரேசன் சுந்தரவல்லியை திருமணம் செய்து கொள்வார்.
தங்க இடம், உண்ண உணவு என ஒன்றுமே இல்லாத அவர்கள், அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு சென்று வேலைத் தேட சுந்தரவல்லியால் கதிரேசனுக்கு வயல்களை பார்த்துக் கொள்ளும் மணியாராக வேலை கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து சம்பாதித்து சொந்த நிலம், சொந்த வீடு என அவர்கள் வாழும் வாழ்வை நிச்சயம் ரசிக்காமல் இருக்க முடியாது.
சுந்தரவல்லி போன்ற அன்பான மனைவி இருந்தும் கதிரேசனுக்கு ஒவ்வொரு பெண்ணின் மீதும் ஏற்படும் சபலம்! கடைசியாக நான்காவது பிரசவத்தின் போது சுந்தரவல்லிக்கு துணையாக உதவிக்கு வந்த ‘கனகம்’ என்ற பெண்ணிடம், கதிரேசன் ஆசைக்கு இணங்க சொல்லிக் கெஞ்சி கொண்டிருப்பார். கனகமோ என் உடன்பிறவா அக்காவிற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்ல கதிரேசனை அந்த வார்த்தை குத்தி கிழிக்கும். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரவல்லியோ அன்றிலிருந்து ஒரு வருடம் வரை கணவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள். பேச மாட்டாள். அதன் பிறகு முழுவதும் திருந்தி விடுவார் கதிரேசன்.
முல்லையம்மா பெறாத அம்மாவாக இருந்தாலும் அவர் மரணிக்கும் வரை தன்னோடு வைத்து பார்த்துக் கொள்வாள் சுந்தரவல்லி. தனக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் மூத்த மகனாகப் பிறந்த ராஜதுரைக்கு அரசு வேலை கிடைத்துவிடும். விரும்பிய பெண்ணை மணமுடித்து வைப்பார்கள். கடைசியில் ராஜதுரை ஒரு தாசில்தாராகி ஜீப்பில் வருவார். மகனைக் கண்டு பூரித்துப் போவாள் சுந்தரவல்லி.
காலம் கடந்து வயதான பின்பு மனைவிக்கு செய்த துரோகத்தையெல்லாம் நினைத்து வருந்தி, சுந்தரவல்லியைகட்டிக் கொண்டு அழுவார் கதிரேசன். அதன் பிறகு கதிரேசன் நினைவுகளை இழந்து விட முதன் முதலில் பழக்கம் ஏற்பட்ட பெண்ணான அஞ்சம்மாளின் பெயரை மட்டுமே சொல்லிக் கத்திக்கொண்டிருப்பார். சுந்தரவல்லிக்கு அது மேலும் வருத்தமளிக்கும். ஒரு நாள் கதிரேசன் இறந்து விட 60, 70 வருட திருமண வாழ்வில் சுந்தரவல்லி என்ற பெயர் அவர் மனதில் பதியவில்லையா? நம்மிடம் அன்பு காட்டியது பொய்யா? ஏன் சாகும் முன்பு அஞ்சம்மாள் பெயரையே சொல்லிக்கொண்டிருந்தார்? என வருந்தினாலும் இல்லை இல்லை… இருக்காது… என தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக்கொள்வாள்.
கதிரேசனும், சுந்தரவல்லியும் உழைத்து முதன் முதலில் வாங்கிய நிலத்திலேயே உயிரை விடும் சுந்தரவல்லியின் வாழ்வை முழுதாக படித்தால் மட்டுமே உணர முடியும்.
ஒன்றுமே இல்லாமல் வாழ்வை தொடங்கி அத்தனை இன்னல்களையும் சாகும் வரையில் அனுபவித்தவள் சுந்தரவல்லி!
விவசாய நிலத்தின் மீது தீரா காதல் கொண்ட, சாதி பார்க்காத, வீரனாக, நல்ல தகப்பனாக வாழ்ந்த கதிரேசன் சுந்தரவல்லியை மனதார நேசித்தது உண்மை. ஆனாலும் மற்ற பெண்கள் மீது கொண்ட சபலம் என்ற ஒற்றைக் குறை இல்லையென்றால் கோவிலே கட்டியிருப்பாள் சுந்தரவல்லி. ஆனாலும் கதிரேசனை எங்கேயும் விட்டுக்கொடுத்ததே இல்லை.
அம்மா அப்பாவிற்காக படித்து அரசு அதிகாரியாக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் மாறுவார் ராஜதுரை!
முல்லையம்மா, வெற்றிவேல், வேலபுரையர் மற்றும் அவரது மனைவி போன்ற அன்பான கதாபாத்திரங்கள் நிறைந்து கிடக்க, எங்கள் மண்ணின் பெருமை பேசும் மரம், செடி, கொடி பறவை, ஆறு, விவசாயம், பனை ஏற்றம், சிலம்பம், மாடுகளின் வகைகள், புழு, பூச்சி என ஒன்று விடாமல் சொல்லி, உண்ணும் உணவையும் விட்டு வைக்காமல்! நீராகாரம், வத்தல் குழம்பு, மருந்து குழம்பு, கசாயம், பயிறு கஞ்சி என அத்தனையும் பழைய நினைவுகளை ஏற்படுத்தி விடும்.
நிச்சயமாக சொல்ல முடியும் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்துப் போகும் இந்த அற்புதப் படைப்பு!
நூலின் தகவல்கள் :
நூல் : சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai)
ஆசிரியர் : உத்தமசோழன் (Uthama Cholan)
வெளியீடு : கிழக்கு வாசல்
பக்கங்கள் : 920
விலை : ரூ.950
நூல் அறிமுகம் எழுதியவர் :
தீபா ராஜ்மோகன்
சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) – நூல் அறிமுகம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான பதிவு. நேர்த்தியான அறிமுகம். மகிழ்ச்சியும் நன்றியும்.
நன்றி சகோதரி! ஆழ்ந்த வாசிப்பின் பலனாக நுட்பமாக வந்துள்ளது நூல் அறிமுகம். மிக்க மகிழ்ச்சி!
ஆழமான வாசிப்பின் காரணமாக நுட்பமாக அமைந்துள்ளது நூல் அறிமுகம்!
மிக்க மகிழ்ச்சி!
நன்றி தோழர்!
அருமையான அறிமுகம் !
அற்புதமான மதிப்பீட்டு!
நன்றியும் வணக்கமும்..