நெறிக்கப்படும் ஜனநாயகம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

நெறிக்கப்படும் ஜனநாயகம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

பல்வேறு விதங்களில் சிதைக்கப்பட்டு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலேயே, அநேகமாக 1976இல் அவசரநிலைப் பிரகடனத்தின் போது 42ஆவது அரசமைப்புச்சட்டத்திருத்தம் கொண்டுவந்து எதேச்சாதிகார ஆட்சிக்கு வழிவகுத்த கூட்டத் தொடரைத் தவிர்த்துவிட்டோமானால், இதர கூட்டத்தொடர்களில் மிகவும் மோசமான கூட்டத்தொடராகும்.

மாநிலங்களவையில், வேளாண் சட்டமுன்வடிவுகள் இரண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நடந்தவை, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இவற்றின் மீதான விவாதங்களையும் வெட்டிச் சுருக்கியபின்னர், மாநிலங்களவைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இரண்டு சட்டமுன்வடிவுகளையும் அடாவடித்தனமான முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அவசரச்சட்டங்களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் சட்டரீதியான இந்தத் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் (‘division’)  என்கிற கோரிக்கை, உதாசீனம் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானங்கள், இச்சட்டமுன்வடிவுகளை, நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரின. இவை அனுமதிக்கப்படவில்லை. இவற்றின்மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பல்வேறு திருத்தங்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அனைத்து சட்டமுன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் தங்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை ஊகித்துணர்ந்துகொண்ட அரசாங்கம், இந்தச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுவதற்கு இவ்வாறு நாடாளுமன்றத்தின் அடிப்படை விதிகளை மீறி, மிகவும் அத்துமீறிய விதத்தில் (highhanded behaviour) நடந்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினாலும், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற நடைமுறைகளும், விதிகளும் வெளிப்படையாகவே மீறப்பட்டதானது, இயற்கையாகவே எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புகளை எதிர்கொண்டது,. இதற்கு அரசாங்கம் பதிலளித்த விதம், மாநிலங்களவையிலிருந்து ஒரு வார காலத்திற்கு எட்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததாகும்., இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  இளமாரம் கரீம் மற்றும் கே.கே.ராகேஷ் போன்ற பலர், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தங்கள் உரிமையை வலியுறுத்தியவர்களாவார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாகவே இரவும் பகலும் தர்ணா போராட்டம் மேற்கொள்ள இட்டுச்சென்றது.  மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எஞ்சிய கூட்டத்தொடரை புறக்கணித்தனர். இக்கூட்டத்தொடர் செப்டம்பர் 23 முடிவடைந்தது.

நாடாளுமன்றம் சம்பந்தமான எதேச்சாதிகார நடத்தை, முன்னதாக கேள்வி நேரத்தை ஒழித்துக்கட்டியபோதே துவங்கிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று உறுப்பினர்கள் மத்தியில் தனிநபர் இடைவெளியுடன் இருக்கையை அமைத்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய அரசாங்கத்தால், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதை மட்டும் ஒழித்துக்கட்டியதற்கான காரணங்களை விளக்க முடியவில்லை. இவ்வாறு, அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கான அடிப்படை உரிமைகளும், அரசாங்கம் அதன்மூலம் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் மறுக்கப்பட்டன.

Parliament highlights: 45 MPs suspended; Rahul says Modi fled Rafale debate  | Business Standard News

அரசாங்கம் நாடாளுமன்றத்தை நிராகரிக்கும் அணுகுமுறையை, அது எழுத்துபூர்வமான கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கும் விதத்திலிருந்தே பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தின்போது தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச்சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் இறந்தவர்கள் தொடர்பான தரவுகள் தங்களிடம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்தது.  அதே போன்றே சென்ற ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அடைப்புக் காவல் முகாம்களில் இருந்த நபர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்த அரசாங்கம், இப்போது அது தொடர்பான தரவுகள் இல்லை என்று கூறியிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை வெட்டிக்குறைத்திருப்பதில் மற்றுமொரு முக்கியமான அம்சம், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சட்டமுன்வடிவுகளையும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு, அல்லது, தெரிவுக்குழுவுக்கு அனுப்ப மறுத்திருப்பதாகும். சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அவற்றின்மீது ஆழமான விவாதம் மற்றும் நுண்ணாய்வு தேவைப்படும் என்பதால் இத்தகு நடைமுறை இதுவரை இருந்து வந்தது.

கடந்த ஆறு மாதங்களில் இந்த அரசால் பிரகடனம் செய்யப்பட்ட பதினொரு அவசரச்சட்டங்களும் இப்போது சட்டமுன்வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டன. இவற்றில் ஒன்றைத் தவிர, வேறெந்த அவசரச்சட்டமும் கொரோனா வைரஸ் தொற்றால் உருவாக்கப்பட்டுள்ள அதீதமான நிலைமையுடன் அவசரமாகத் தீர்த்துவைக்கக் கூடியவிதத்தில் அமைந்தவை அல்ல. நாடாளுமன்றத்தை ஓரங்கட்டுவதற்கு, இத்தகைய அவசரச்சட்ட மார்க்கம் வசதியாக இருப்பதாக, அரசாங்கம் கருதுகிறது. அவசரச்சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, ஆறு வார காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், நிலைக்குழுவுக்கு அனுப்பவில்லை என்று அரசுத்தரப்பில் காரணமாகக் கூறப்படுகிறது.

Parliament Winter Session: Govt keen on proper discussion on GST Bills |  India News,The Indian Express

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைக் கட்டிப்போடுவது, ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீது நடைபெற்று வரும் விரிவான தாக்குதலின் ஒரு பகுதியேயாகும். குடிமக்களின் உரிமைகள் மீது மிகவும் விரிவான அளவில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் கொடூரமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பலர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தேசத்துரோகச் சட்டப்பிரிவை ஏவி, தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினர், அறிவுஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தேச விரோதிகள் எனக் குறிவைத்து முத்திரை குத்தப்படுகிறார்கள். ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்களாக மாறி, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துள்ளன.  தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.  வேலை நிறுத்தங்கள் மேற்கொள்வதன்மீது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன. நாட்டில் ஜனநாயகத்திற்கு எங்கெங்கு இடமிருந்தனவோ அவை அத்தனையும் அடைக்கப்பட்டு வருகின்றன. இதுவே ஜனநாயகம் இறப்பதற்கான வழியாகும்.

ஆனாலும், ஜனநாயகத்தின் இந்த அழிவினை தடுத்துநிறுத்த முடியும். மக்கள், அதிலும் பிரதானமாக உழைக்கும் மக்கள், தாங்கள் கடுமையாகப் போராடி வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்திட அணிதிரட்டப்படுவதன் மூலம் இதனைத் தடுத்து நிறுத்த முடியும்.  விவசாயம் சம்பந்தமான சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் விவசாயிகளின் வெகுஜனப் போராட்டங்கள் வீறுகொண் டெழுந்துள்ளன. பாஜக-வின் நீண்டுகாலக் கூட்டணிக் கட்சியாக இருந்த அகாலி தளம் கூட, இந்தப் பிரச்சனைமீது, அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட்டது. மோடி அரசாங்கத்தின் பல கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கூட, இதற்கு எதிராக வெளியே வந்திருக்கிறது. பிஜு ஜனதா தளம்கூட இந்தச் சட்டமுன்வடிவுகளை ஆதரிக்கவில்லை. மாறாக இவை தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லாத சமயத்தில், நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதும், ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்க இயக்கத்தால் தீர்மானகரமான முறையில் எதிர்க்கப்படும். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது, கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தகப் பெரும்புள்ளிகள் பயன் அடைவதற்காக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது மிகவும் அசிங்கமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறது. இந்நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மக்கள் ஒன்றுபட்டுப் போராட முன்வரும்போது, அது அனைத்து ஜனநாயக சக்திகளின் ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றுபட்ட இயக்கத்திற்கு வழிவகுத்திடும். அந்த வகையில்தான் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதை முறியடித்திட முடியும்.

(செப்டம்பர் 23, 2020)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *