அயோத்தி ராமர் கோவில் (Ayodhya Ram Temple) சுரண்யா அய்யர் (Suranya Aiyar)

C:\Users\Chandraguru\Pictures\19 01 2024.jpg

அன்பு நண்பர்களே, சக பயணிகளே,

மாசுபடுத்தப்பட்ட நகரம் என்ற புகழுடன் ஏற்கனவே இருந்து வருகின்ற தில்லியின் சூழல் அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடக்கவிருக்கும் நிகழ்வால் ஹிந்துப் பேரினவாதம், வெறுப்பு, அடாவடித்தனத்தின் அடர்த்தியுடனான ஆன்மீகரீதியான நச்சு தோய்ந்து, மேலும் சுவாசிக்க முடியாததாக மாறியுள்ளது. இவையனைத்தும் குறித்து இந்தியராக, ஒரு ஹிந்துவாக நான் உண்மையில் அதிகம் வேதனைப்படுகிறேன். அதுகுறித்து என்ன செய்யலாம்  என்று யோசித்த வேளையில் இருபதாம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் அயோத்தியில் வேலைகள் முடிந்த பின்னர் இருபத்தி மூன்றாம் நாள் செவ்வாய்கிழமை வரையிலும் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்தேன்.

C:\Users\Chandraguru\Pictures\images (2).jpg

முக்கியமாக இந்திய முஸ்லீம் சக குடிமக்களிடம் எனது அன்பை, துக்கத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் நான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போகிறேன். அயோத்தியில் ஹிந்து மதம், தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் செயல்களைக் கண்டிக்கும் என்னால் அவற்றை நிராகரிக்கிறேன், உங்களை நேசிக்கிறேன் என்று முடிந்த அளவு சத்தமாக என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடம் சொல்லாமல் இந்த தருணத்தைக் கடந்து சென்று விட முடியாது.

முகலாய பாரம்பரியத்தின் மீதான எனது அன்பின் வெளிப்பாடாகவும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். மற்றவரைப் பாதுகாக்கும் உணர்வாக மட்டுமே இந்த உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. அது எனது கலாச்சாரம், பண்பாடு குறித்ததாகவும் இருக்கப் போகிறது. துருபதம், கயல் இசை வடிவங்களை நான் அதிகம் நேசிக்கிறேன். கதக் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தில்லி நகரத்தில் இருக்கின்ற முகலாய, சுல்தானிய கட்டிடங்களை நான் அதிகம் நேசிக்கிறேன் – குதுப்மினார், ஹுமாயூனின் கல்லறை, சப்ஸ் புர்ஜ் இல்லாத தில்லியை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. பக்கத்தில் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

C:\Users\Chandraguru\Pictures\22673197.jpg

ஆவாத் அரண்மனை நவாப் வஜித் அலி ஷா தலைமையில் உருவாக்கிய அற்புதமான கலாச்சாரத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அதேபோன்று தில்லி சுல்தானகமும் இந்தியாவிற்கு விலைமதிப்பற்ற ஒன்றை வழங்கியிருப்பதைக் காண்கிறேன். அவர்களுடன்தான் சூஃபிகளும், அமீர் குஸ்ரோவின் தந்தையும் இங்கே வந்து சேர்ந்தனர். வட இந்தியாவில் நமது மொழி, கலாச்சாரத்திற்காக ஹஸ்ரத் அமீர் குஸ்ரோவுக்கு நாம் அதிகம் கடன்பட்டிருக்கிறோம். ஹிந்தவியை கவிதை மொழியாக அவர் ஏற்றுக்கொண்டார்.  அதுவே பின்னர் ஹிந்தி, உருது போன்ற மிகப் பெரிய மொழிகளை உருவாக்கியது. இசையில் அவர் செய்த புதுமைகள் நாம் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்கின்ற வட இந்தியாவின் செவ்வியல் இசையான சாஸ்திரிய சங்கீதத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. இந்தப் பட்டியல் முடிவற்றதாக நீள்கிறது.

சுல்தான்கள், முகலாயர்கள், நவாப்கள், நிஜாம்களின் முத்திரையில்லாமல் நமது உயர்ந்த பாரம்பரியக் கலாச்சாரத்தின் எந்தவொரு பகுதியும் வட இந்தியாவில் இருக்கவில்லை. இதை நான் அந்தப் பாரம்பரியங்கள் அனைத்தும் இந்த ஆட்சியாளர்களின் ஏக விளைபொருட்கள் அல்லது முஸ்லீம்கள்தான் நமக்கெல்லாம் அறிவூட்டினார்கள் என்று சொல்வதற்காகக் கூறவில்லை. மாறாக அந்தக் கலாச்சாரம் நம்முடைய பூர்வீகக் கலைகள், பாரம்பரியங்கள், மொழிகள் போன்றவை சுல்தான்கள், முகலாயர்களால்  இங்கே கொண்டு வரப்பட்டவற்றுடன் இணைந்த கலவையின் விளைவாகவே உருவானது. அந்தக் கலப்பு ஏற்கனவே இருந்த கலாச்சாரம் அவர்களுடையதைத் தழுவி ஏற்றுக் கொண்டதால் மட்டுமே நிகழ்ந்தது.

பிரபல ஹிந்து அரண்மனை இசைக்கலைஞர் கோபால் நாயக்கைப் பற்றி பேசாமல் அமீர் குஸ்ரோவின் இசையைப் பற்றி நம்மால் பேசி விட முடியுமா? துருவபதங்கள் அல்லது நாட்டிய சாஸ்திர ரசங்கள் பற்றி பேசாமல் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையைப் பற்றி அல்லது கதக் பற்றி நாம் பேச முடியுமா? பண்டிட் ஹரிதாஸ் பற்றி பேசாமல் தான்சேன் பற்றி பேச இயலுமா? இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்த ராசலீலா மற்றும் ராமாயணம், மகாபாரதத்தின் பாரம்பரியம் இல்லையென்றால் நம்மிடம் கதக் இருந்திருக்குமா? சிவபெருமானை வழிபடாமல் துருபதம் நமக்குக் கிடைத்திருக்குமா? ஹோலி இல்லாமல் தமர் இருந்திருக்குமா? அக்பரின் அரண்மனை வாழ்க்கை வரலாற்றாசிரியர் அபுல் ஃபஸ்லின் எழுதியிருப்பவற்றைப் படித்துப் பாருங்கள். அவர் ஹிந்து நம்பிக்கைகள், நடைமுறைகள், அறிவியல் மற்றும் தத்துவங்களை எப்படியெல்லாம் புகழ்ந்து பாடியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஹிந்துக்களிடம் இருந்த மிகப் பெரிய கலாச்சாரத்தை  வெளிப்படுத்துவதற்காக மகாபாரதத்தை அக்பர் பாரசீக மொழியில் மொழிபெயர்க்க ஆணையிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? மகாபாரதத்தின் பெரும் அபிமானியாக இருந்த காரணத்தாலேயே அந்தப் பாரசீக மொழிபெயர்ப்பு தன்னிடம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அது போதுமானதாக இல்லை என்று அவரால் கேலி செய்ய முடிந்தது.  கதக் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கவிதைகள் குறித்து நவாப் வஜித் அலி ஷா மேற்கொண்ட வேலைகளைப் பாருங்கள் –  அவையனைத்தும் அவரது ஹிந்து குடிமக்களின் ராதா-கிருஷ்ணரின் பாரம்பரியக் கொண்டாட்டத்தில் ஈர்த்துக் கொள்ளப்பட்டன.

இது வரலாற்றுப் பாட விரிவுரை போன்றாகி விடக்கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனாலும் எடுத்துக்காட்டுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. எனது முகலாய பாரம்பரியத்தை நேசிப்பதாகக் கூறும்போது, இந்த மண்ணின் ஹிந்து, முஸ்லீம் பாரம்பரியங்களில் இருந்து வளர்ந்தெழுந்த கலவையான கலாச்சாரத்தை நான் நேசிக்கிறேன் என்றே அவர்களுக்கு விளக்கமளித்துள்ளேன். முஸ்லீம் கலாச்சாரம் அல்லது ஹிந்து கலாச்சாரம் என்று பிரித்துத் தேர்வு செய்து கொள்ள முடியாத ஒரு கலாச்சாரமாக,  பூர்வீகமானது அல்லது வெளியிலிருந்து வந்தது என்று சொல்ல முடியாத கலாச்சாரமாக அந்தக் கலாச்சாரம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று இணைந்ததாக, பரஸ்பர உத்வேகம், போற்றுதலுக்கு உரியதாக அது இருந்துள்ளது. அனைத்து இடங்களிலிருந்தும் இருந்து அதன் மீது தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வந்தவற்றைத் திணிக்கும் வகையில் அது இருக்கவில்லை. பிற மொழிகள், அழகியல் மரபுகள்,  நம்பிக்கைகள், தத்துவங்களுடனான உரையாடலில் உருவான கலாச்சாரமாகவே அது இருக்கிறது. கிரேக்கர்களுடன் துணைக் கண்டத்திற்கு ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிளைத்த கலாச்சாரத்திலிருந்தே நாட்டிய சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள அற்புதமான வடிவம் தோன்றியது. வெளிநாட்டவர் அல்லது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என்று எதையாவது கூறி அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டால் இனிமேல் நம்மிடம் எது மிஞ்சியிருக்கப் போகிறது? முகலாயப் பேரரசின் கீழ் வளர்ந்த கலாச்சாரம் திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. அது வேறெங்கும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை. இங்கே இந்த மண்ணில் இருந்தே அது வளர்ந்தது. இந்த மண்ணுக்கான தனித்துவத்துடனே அது இருந்தது.

முகலாயப் பாரம்பரியம் மட்டுமே எனது ஒரே பாரம்பரியம் என்று கருதவில்லை என்பதையும் நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  தமிழ் பிராமணர், பஞ்சாபி சீக்கியர் என்ற கலவையான பின்னணியுடன் இருக்கும் நான் எனது பாரம்பரியத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் நேசிக்கிறேன், மதிக்கிறேன்.  தனது குடும்ப வரலாற்றுடன் ராணுவத்தை இணைத்துக் கொண்டுள்ள எனது கணவர் ராஜஸ்தானி ஜாட் மற்றும் ஜாத் சீக்கிய பாரம்பரியம் கொண்டவர். அவரது தைரியம், வீரம் பற்றிய கதைகளை எனக்குச் சொந்தமானதாக்கிக் கொண்டு அவரது பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதில் நான் மகிழ்கிறேன்.

வெளிநாட்டு குழந்தை சேவை நிறுவனங்களால் கொடூரமாகப் பறிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளை இழந்து நிற்கின்ற வெளிநாட்டு இந்தியக் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகின்ற என்னுடைய பணியில் தவிர்த்துக் கொள்ள வழியின்றி நான் அவர்களுடைய கலாச்சாரம், மதத்தைப் பற்றி அறிந்து கொள்கிறேன். அவர்கள் என்னுள் ஊடுருவுவதைக் கண்டிருக்கிறேன். அதுபோன்றே பெங்காலி குடும்பங்கள்  மா துர்காவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தன. இப்போது எனது பெங்காலி நண்பர்களைப் போல துர்காவை நானும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறேன். சமீபத்தில் சமணக் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில்  சில சமண நூல்களைப் படிக்கத் தொடங்கும் அளவுக்கு ஆர்வம் கொண்டேன். இதுபோன்ற வாழ்க்கைமுறை  என்னிடம் மட்டும் இருக்கவில்லை. அது நாடு முழுவதும் பல நூற்றாண்டுகளாக அனைத்து இனங்கள், மதங்களின் பின்னணியுடன் இருக்கின்ற எண்ணற்ற இந்தியர்களிடையே இருந்து வருகிறது.

ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று ஒத்திசைவான அடையாளத்தை அனைவரும் உருவாக்கிக் கொள்ள  வேண்டும் என்று ஹிந்துத்துவவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அது உண்மையல்ல. பொது நோக்கு, பொதுவான அடையாளத்தை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். எதை நீங்கள் விலக்கி வைக்கிறீர்கள் அல்லது உள்ளடக்கிக் கொள்கிறீர்கள் என்பது பற்றிய பிரச்சனையாக அது இருக்கவில்லை. மாறாக விழுமியங்கள், நம்பிக்கை மீது எழுப்பப்படும் கேள்வியாகவே அது இருக்கிறது. ஏதோ புதிதான, நவீன சிந்தனையகவும் அது இருக்கவில்லை. இந்தியா எப்போதும் பன்முகத்தன்மை கொண்ட நாடாகவே இருந்துள்ளது. அடையாளம், சமூகம், நம்பகத்தன்மை, சமூகப் பிரிவினை குறித்த பிரச்சனைகள் எப்போதும் அங்கே இருந்துள்ளன. வெளிப்படையாக இருப்பது அல்லது ரகசியமாக இருப்பது என்ற தேர்வு எப்போதும் நம்மிடையே ப் இருந்துள்ளது.

இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உரையாடல். கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இவ்வாறு கூறினார்:  ‘அனைத்து மதத்தினரும் எனது நிலத்தில் வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஏனென்றால் அவர்கள் அனைவரும் அடிப்படையில் சிறப்பான சிந்தனை, நன்னடத்தையை நம்புகிறார்கள். பிறருடைய நம்பிக்கைகளை மதிக்கின்ற வழிகளைக் காணுங்கள். பரந்த அறிவுடன் இருங்கள். பிறரின் நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள். நட்பை, வெளிப்படையான மனப்பான்மையை அனைவரிடமும் வளர்த்துக் கொள்ளுங்கள்’.

அதையே பேரரசர் அக்பர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பதினாறாம் நூற்றாண்டில் ‘உண்மையை அறிந்து கொள்வதற்கான விசாரணையின் பாதையில் நீதியை தனது வழிகாட்டியாக ஆக்கிக் கொண்டு, அனைத்து விதமான நம்பிக்கைகளிலிருந்தும் பகுத்தறிவுடன் ஒத்துப் போகின்றவற்றை பெற்றுக் கொள்பவரே மனிதராக இருப்பார். அந்த வழியில் சாவி தொலைந்த பூட்டும் ஒருவேளை திறக்கப்படலாம்’ என்று கூறியிருக்கிறார்.

ஹிந்துஸ்தானில் வெவ்வேறு மதங்களுக்கு இடையே தவறான புரிதல்கள், சண்டைகள் இருந்து வந்துள்ள போதிலும், அனைத்து காலகட்டங்களிலும் சிறந்த தீர்மானங்கள், நல்லெண்ணம் கொண்ட திட்டங்களைக் கொண்ட விவேகமான மனிதர்களுக்கான குறையும் இருந்ததில்லை.

சொந்த மதத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு பிரிவினரும் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை அதிகரித்துக் கொண்டுள்ளனர். தங்கள் சொந்தக் கொள்கைகள் மட்டுமே உண்மையென்று கருதுகின்ற ஒவ்வொருவரும் பிற கடவுளை வணங்குபவர்களைத் துன்புறுத்துகிறார்கள். மனம் என்ற கண்கள் உண்மையான பார்வையுடன் இருந்தால் இந்தக் கண்மூடித்தனமான கொந்தளிப்பிலிருந்து அவர்கள் அனைவரும் விலகி, மற்றவர்களுக்கான அக்கறைகளில் தலையிடுவதைக் காட்டிலும் தங்கள் சொந்த விருப்பங்களிலேயே ஈடுபடுவார்கள். அதனால் உள்ளும், வெளியிலும் உள்ள கருத்து வேறுபாடுகள் சமாதானமாக மாறி முட்காடுகள் இணக்கமான தோட்டமாக மாறி பூக்கத் துவங்கும்.

காந்திஜி ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அனைவருக்கும் சேவை செய்து நட்புடன் பழக வேண்டும் என்பதே உண்மையான மத போதனையின் சாராம்சமாகும். இதை என் அம்மாவின் மடியில் நான் கற்றுக் கொண்டேன். என்னை ஹிந்து என்று சொல்ல நீங்கள் மறுக்கலாம். இக்பாலின் புகழ்பெற்ற பாடலில் இருந்து மற்றவர் மீது தீய எண்ணம் கொள்வதற்கு மதம் கற்றுத் தரவில்லை என்ற இந்த வரியை மேற்கோள் காட்டுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று கூறினார்.

என்னை எப்பொழுதும் ஒரு ஹிந்துவாகவே நினைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும் பலதரப்பட்ட கருத்துகள், நடைமுறைகளைத் தழுவுவதில் எந்தவொரு சிரமமும் எனக்கு இருந்ததே இல்லை. தனிப்பட்ட நடைமுறையில் எனது குடும்பத்தில் நடைபெறும் திருமணங்கள், விழாக்களில் எனது தந்தைவழி பாட்டியின் முறைப்படி – தமிழர்களிடையே இருக்கின்ற ஹோமம் செய்வது போன்ற சடங்குகளைச் செய்து வருகிறேன் – தமிழ் புரோகிதர்கள் சமஸ்கிருதத்தை உச்சரிக்கும் விதம் மற்றும் பூஜை செய்யப்படும் முறைகள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கும். அப்படியான பூஜைகளைப் பார்த்து வளர்ந்ததே அதற்கான காரணமாய் இருக்கிறது. அது எந்த விதத்திலும் நிஜாமுதீன் தர்கா, வாடிகன், ஜமா மசூதி, தில்லி பாபா காரக் சிங் மார்க்கில் என் தாத்தா கட்டிய விநாயகர் கோவில் அல்லது தஞ்சையில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட எனக்கு மிகவும் பிடித்த பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில்  – அது தமிழ்நாட்டில் எனது பூர்வீக கிராமத்திலிருந்து சில நிமிட பயணத்தில் உள்ளது – என்று எந்தவொரு வழிபாட்டு தலத்திலும் மரியாதை, நம்பிக்கையை வசதியாக என்னால் உணர முடிவதைத் தடுக்கவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\371826451_10228364273664754_7121452253032102594_n.jpg

நான் ஆச்சாரமான பழமைவாத ஹிந்து கிடையாது. எனக்கு எல்லா மந்திரங்களும் தெரியாது. விரதங்கள், உணவு சார்ந்து வழக்கங்களைக் கடைபிடிப்பது, தினமும் காலையில் பிரார்த்தனை  செய்வது, தவறாமல் கோவிலுக்குச் செல்வது என்று எனக்கு எந்தவொரு பழக்கமும் இல்லை. ஹிந்துத்துவவாதிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் பழமைவாதிகளாக இருப்பதாக என்னால் பார்க்க முடியவில்லை. ட்விட்டரில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக நம்மிடையே இருக்கின்ற காவிகள், நடிகர்கள், செய்தி ஆளுமைகள் என்று அனைவருமே மிக நவீனமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்கள். திருமணம், உணவுப் பழக்கம், உடைகள், வாழ்க்கை முறை போன்றவற்றில் பாரம்பரிய மரபுவழியிலான ஹிந்து நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறப் போகின்ற விழாவும்கூட ஹிந்து மதச் சம்பிரதாய முறைப்படி நடைபெறவில்லை – கண்டிப்பான சம்பிரதாயப்படி அது நடக்கவில்லை என்று சங்கராச்சாரியார்கள் புகார் கூறியிருக்கின்றனர். என்னைப் பொருத்தவரை அது ஒரு பிரச்சனையே இல்லை. ஹிந்து மதம் என்பது மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத மதமாக இருக்கவில்லை. பிரார்த்தனைகளில் ஒவ்வொரு சாஸ்திர முறையும் ஒரு பரிகாரத்துடனே நடத்தப்படுகிறது. ஹிந்து மதத்தின் வெளிப்படைத்தன்மையாக, பிரார்த்தனைகளைப் பொருள்சார்ந்து இல்லாமல் விஷயங்களின் ஆன்மா மீது கவனம் செலுத்துகின்ற நிலையான தன்மையாக அது இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\169666_10151420605244359_1074892534_o.jpg

கடவுள்கள், பெண் தெய்வங்களின் கதைகள் என்றிருந்து வருகின்ற ஹிந்து மதம் என்னைப் பொருத்தவரை ஏதோவொரு வகையில் எனது இருப்பை வரையறுக்கிறது காவியக் கதைகள், பெரும் போர்கள், காதல்கள், மெய்யியல் உரையாடல்களுடன் கண்ணுக்குத் தெரியாத ஆனால் மிகவும் உண்மையான நாடகம் போன்று அவர்கள் என்னைச் சுற்றி எப்போதும் நடந்து கொண்டு, என்னுடைய உள்ளுலகத்தை வண்ணமயமாக்கி, அறிவுரை, ஆறுதல் போன்றவற்றால் நிரப்பி வருகின்றனர். அவர்களுடன் உயிர்ப்புடன் வருகின்ற அனைத்தும் அவர்களுக்கான காணிக்கையாகின்றன. என் ஹார்மோனியத்தை அல்லது மேடையை வணங்கும் போது (முஸ்லீம் உஸ்தாத்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருப்பதைப் போல்) சரஸ்வதி தேவி என் கண் முன்னே தோன்றுகிறாள். இளம் தாயான நான் குறும்புத்தனம் கொண்ட என் குழந்தைகளால் விரக்தியுடன் சோர்வாக இருந்த வேளைகளில் குறும்புக்கார கிருஷ்ணனால் திசைதிருப்பப்பட்ட யசோதாவின் கதைகளே எனக்கு ஆறுதலை, புரிதலை அளித்தன. இதை நான் சொல்லும் போது பெண்ணியவாதிகள் குமுறுவார்கள். முழுநேரத் தாயாக மாறுவதற்காக நான் என்னுடைய வேலையை விட்டு விலகிய போது எல்லோரும் என்னை அன்னியமாகப் பார்த்தனர். பக்தி, தியாகம், சேவை  என்று ஹிந்து பெண்மையின் உயர்லட்சியத்தின் வலிமையும், தன்னம்பிக்கையும் அப்போது எனக்குள் ஊற்றெடுத்ததைக் கண்டேன். அவற்றில் உங்களையே மறந்து போகின்ற நீங்கள் அவர்களுக்குச் சேவை செய்வது உங்கள் கடமை என்பதால்  உங்களுடைய உடல், ஆன்மா, செல்வம் என்று அனைத்தையும் அவர்களுக்குத் தருகிறீர்கள். ஆக ஒரு ஹிந்துவாக என்னை நினைத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் போது நான் உண்மையுடன்   இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை அதுதான் ஹிந்து மதம். நான் ஹிந்து இல்லை என்றால் அல்லது அது ஹிந்து மதம் இல்லை என்றால் அதை நீங்கள் என்னிடம் நேரடியாகச் சொல்லலாம்.

C:\Users\Chandraguru\Pictures\maxresdefault (6).jpg

ஹிந்துத்துவவாதிகள் மீண்டும் மீண்டும் நம்மிடம்  முகலாயர்கள் நம் மீது படையெடுத்தார்கள் என்று நினைவுபடுத்திக்  கொண்டே இருக்கிறார்கள். ஆம் – முதல் முகலாயர் இந்தியாவிற்குள் நம்மை வெற்றி கொண்டவராகவே வந்தார் என்றாலும் அவர் தில்லியை எந்தவொரு ஹிந்து ஆட்சியாளரிடமிருந்தும் பிடுங்கிக் கொள்ளவில்லை. பானிபட்டில் பாபர் யாருடன் சண்டையிட்டார்? இப்ராகிம் லோதியுடன்தான் அவர் சண்டையிட்டார். அதற்கு முன்பு தௌலத் கானை பஞ்சாபில் அவர்  தோற்கடித்தார். முஸ்லீம் ஒருவர் இன்னுமொரு முஸ்லீமை வெற்றி கொண்டதன் மூலமே முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். உண்மையில் முஸ்லீம்கள் பலரை முஸ்லீம் ஒருவர் வெற்றி கொண்டதாலேயே அந்த நுழைவு நிகழ்ந்தது. லோதியைத் தோற்கடிப்பதற்கு முன்பு பாபர் ஆப்கானியர்களை காபூலில் வென்றார். வரலாற்றாசிரியர்கள் சிலர் பாபருக்கும், ராஜபுத்திர மன்னரான ராணா சங்காவுக்கும் இடையே இப்ராகிம் லோதியை எதிர்த்துப் போரிடுவதற்கான கூட்டணிக்கான முன்மொழிவு இருந்திருக்கலாம் என்கின்றனர். அந்த கூட்டணி நடந்தேறவில்லை. ஆனாலும் இப்ராஹிம் லோதி தோற்கடிக்கப்பட்டபோது லோதியின் சகோதரர் பாபரைத் தோற்கடிக்கும் முயற்சியில் ராணா சங்காவுடன் இணைந்து கொண்டார். ஆக முஸ்லீம் ஒருவர் வந்து இந்தியாவைக் கைப்பற்றி விட்டார் என்று கூறக் கூடிய வகையில் பாபரின் கதை மிகவும் எளிமையான கதையாக  இருக்கவில்லை.

பாபரின் வெற்றியில் எந்தவொரு துயரமும் நேரவில்லை என்று நான் இங்கே சொல்லப் போவதில்லை. வெற்றி என்பது அதிலுள்ள வன்முறை, அழிவால் எப்போதும் மிக மோசமானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஏதோவொன்றின் முடிவாக, ஏதோவொன்றின் மரணமாக இருப்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. ஹிந்துக்கள் அல்லாதவர்களால் தாங்கள் ஆளப்படுவதை ஹிந்துக்கள் குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் சரிக்கட்டி ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள் என்றே என்னால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. அந்தக் காலகட்டம் மன்னர்கள், வெற்றிகளுக்கான காலமாகவே இருந்தது. அது ஏகாதிபத்தியத்தின் காலம். ஏகாதிபத்தியம், ரத்தத்திற்கான பகை, போர் ஆகியவற்றை முடிவிற்குக் கொண்டு வருவதற்காகத்தான் மக்கள் ஜனநாயகம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை குறித்த கருத்துகளை நோக்கித் திரும்பினர். படையெடுப்புகள் என்ற பெயரில் ஆயிரம், ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவில் நடந்தவற்றை பொறுப்பற்ற முறையில் நாம் நிராகரித்தோம் என்று கூறுகின்ற சிந்தனையைத் தவிர்த்து, இதையெல்லாம் விட்டு விலகிச் செல்வோம் என்று அவர்கள் இருந்ததாக ஏன் நம்மால் கூற முடியாது?

இங்கு ஆட்சி செய்த ஐநூறு ஆண்டு காலமும் முகலாயர்கள் ராஜபுத்திரர்களுக்கு எதிரிகளாக இருக்கவில்லை. ராஜபுத்திரர்களுடன் அவர்கள் திருமண பந்தத்தில் ஈடுபட்டு வந்தனர். முகலாயர்களுடைய மூத்த தளபதிகள், அதிகாரிகளில் சிலர் ராஜபுத்திரர்களாக இருந்தனர். உடைகள், கட்டிடக்கலை, கலாச்சாரம் போன்றவற்றை ராஜபுத்திரர்களிடம் இருந்தே அவர்கள் அதிக அளவில் எடுத்துக் கொண்டனர். தில்லியை விட்டு வெளியேறும் போது சில நிமிடங்களிலேயே கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் என்று ராஜபுத்திரர்களின் பிரதேசத்தில் நீங்கள் இருப்பீர்கள். அவையெல்லாம் அழிக்கப்பட்டனவா, முகலாயர்களால் கைப்பற்றப்பட்டனவா? இல்லை. முகலாயத் தலைநகரில் இருந்து ஒரு கல் எறியும் தூரத்தில் அவர்கள் அங்கேயே பாதிப்பின்றி இருந்தார்கள்.

அதன் காரணமாகவே ஐநூறு ஆண்டுகால ஹிந்து அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறப்படும் இந்த ராம ஜென்மபூமி போராட்டம் பொய்யானதாக இருக்கிறது.

முகலாய ஆட்சி அப்படியெல்லாம் இருக்கவில்லை. அந்த ஆட்சி மன்னர்கள், வெற்றியாளர்களுக்கான லட்சியங்களுடன் மட்டுமே இருந்தது. ஹிந்து மதம் அல்லது இஸ்லாம் போன்றவை துணைப் பங்கு வகித்ததைத் தவிர வேறெந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. ஔரங்கசீப்பைத் தவிர முகலாயர்கள் யாரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவில்லை. அவர்கள் மது அருந்தினர். ஓபியம் எடுத்துக் கொண்டனர்.  உலாமாக்களைக் காட்டிலும் சூஃபிகளையே அதிகம் விரும்பினர். இஸ்லாமைக் கடைப்பிடிக்காதவர் என்று கூட அக்பர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அக்பருடைய தீன்-இ-இலாஹி முஸ்லீம் மரபுவழிக்கு நேரடியான சவாலாகவே பார்க்கப்பட்டது.

முகலாயப் படையெடுப்பால் நேர்ந்ததாகக் கூறப்படும் வலியைப் பற்றி என்ன சொன்னாலும், அவர்களுடைய படையெடுப்பு நூற்றாண்டுக்கால ஹிந்து அடக்குமுறையை அல்லது அடிமைத்தனத்தை உருவாக்கிடவில்லை என்பதே உண்மையாகும். அந்தப் படையெடுப்பு உண்மையில் ஹிந்து மதம் அல்லது அதன் கலாச்சாரத்திலிருந்து எதையும் எடுத்துச் சென்று விடாத அழகான கலாச்சாரத்தையே பெற்றெடுத்துக் கொடுத்தது.

ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மதமாற்றங்கள், கோவில்களை உடைப்பது குறித்த சிக்கலான பிரச்சனைக்கு இப்போது வரலாம். அவையிரண்டும் இன்றைய பார்வையில் தவறாகவே இருக்கின்றன.

சொல்லப்படுகின்ற வரலாற்றுத் தவறுகளின் வரம்புகள் பற்றி முதலில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஹிந்து மதத்தின் மீது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடக்குமுறை,  இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கான அரசின் கொள்கை, கோவில்கள் இருந்த இடத்தில் பெருமளவில் மசூதிகளைக் கட்டுவதைப் பற்றி மட்டும் நாம் பேச முடியாது. இதுபோன்ற விஷயங்கள் முகலாயர்களுக்கு முன்னும், பின்னும், அதற்குப் பின்னரும் நடந்துள்ளன. எனவே இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்றுவது, கோவில்களை அழிப்பது போன்றவை முகலாயர்களின் கொள்கையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் முகலாயர்கள் கோவில்களைக் கட்டினார்கள், பூர்வீகமாக இருந்து வந்த கலைகளை ஆதரித்தார்கள். அவர்களில் அக்பரைப் போன்ற பலரும் மதரீதியான துன்புறுத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கான, மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான பெரும் முயற்சிகளை இங்கே மேற்கொண்டனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு சில மசூதிகளைப் பற்றி பேசுகின்ற நாம் மறுபுறத்தில் நாடு முழுக்க நமது சமூகத்தின் கட்டமைப்பின் மீது காயம், அவநம்பிக்கை, உறுதியற்ற தன்மை, பிளவுகளை ஏற்படுத்தி வருகிறோம். பழைய விரோதங்கள் தூண்டப்பட்ட மணிப்பூரில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். ஒரு சில மசூதிகளை அழிப்பதற்காக இவ்வளவு ஆழமான, நீடித்த சமூகக் கொந்தளிப்பைத் தூண்டி விடுவதில் எந்தவொரு நியாயமும் இருக்கப் போவதில்லை. ஒருபொழுதும் இது முடியப் போவதே இல்லை. கர்நாடகாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்பி கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மசூதிகள் குறித்து முடிவில்லாமல் சண்டையிட்டு கோவில்களைக் கட்டுவதைக் காட்டிலும் நாம் செய்வதற்கு வேறு விஷயங்கள் ஏராளமாக உள்ளதாக  ஏன் நம்மால் சொல்ல முடியாது?

கோவில் குறித்த இந்தப் போராட்டங்களில் மிக மோசமான விஷயமாக இருப்பது அவை தூண்டி விடுகின்ற அசிங்கமான உணர்வுகளாகும். மதத்திலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அந்த உணர்வுகள் நம்மைப் பிரித்து வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்கின்றன.  ராம ஜென்ம பூமி போராட்டம் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையுடன் தொடங்கியபோது எனக்கு சுமார் பதினைந்து வயது. என் பள்ளி முழுவதும் அதற்காகக் காத்திருந்தது. என்னுடன் பள்ளியில் படித்த சக மாணவர்களிடமிருந்து இன்றைக்கு முஸ்லீம்களைப் பற்றி சொல்லப்படும் விதத்திலான எந்தவொரு அசிங்கமான பேச்சையும் நான் அப்போது கேட்டதில்லை. அவர்கள் கண்களில் இருந்த வன்மத்தை, உதடுகளிலிருந்து துளிர்விட்ட பகைமையை என்னால் மறந்து விட முடியாது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தங்கள் கார்களில் ஒலிக்க விடப்பட்ட சாத்வி ரிதம்ப்ராவின் ஒலிநாடாக்களை மகிழ்ச்சியுடன் அவர்கள் கேட்டு வந்ததை என்னால் மறக்க முடியாது. ஆனால் ராமரைப் பற்றி அல்லது வேறு எந்தக் கடவுளையும் பற்றி அவர்கள் பேசியதை ஒருபோதும், அதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு அல்லது எப்போதும் நான் கேட்டதே இல்லை. கல்லூரிக்குச் சென்றபோது அங்கிருந்த பாஜக ஆதரவாளர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அப்போதுதான் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. காவிப் பிரமுகர்களிடம் முஸ்லீம்களைப் பற்றி இழிவாகப் பேசுவதற்கு எந்தவொரு குறையும் இருந்ததில்லை. ஆனாலும் எந்தவொரு கடவுள் மீதான பக்தியை அல்லது எந்தவொரு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தியதை நான் பார்த்ததே இல்லை. அந்த மக்களிடம், அவர்களது குடும்பங்களிடம் தர்மம் அல்லது இந்தியத்தன்மை என்று எதுவும் குறிப்பாக இருந்ததில்லை. முஸ்லீம்களை இழிவு செய்ததைத் தவிர அவர்கள் எந்தவொரு மதச்சார்பற்ற, தாராளவாத குடும்பத்திடமிருந்தும் வித்தியாசமே இல்லாத வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். அந்த வாழ்க்கை ஒருபோதும் ராமர் பக்தி குறித்ததாக இருக்கவில்லை. ஹிந்து பேரினவாதம், முஸ்லீம்களை இழிவுபடுத்துவது என்ற அளவிலேயே அது இருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\babri12-k8BC--621x414@LiveMint.jpg

யாராலும் இப்படிப்பட்ட பொய்கள், வன்முறைகள், வெறுப்புகள், பழிவாங்கல்கள் ஆகியவற்றின் பின்னணியில் கட்டப்பட்ட ஒரு கோவிலை எப்படிக் கொண்டாட முடியும்? அதை எவ்வாறு ஹிந்து மதப் போதனைகளுடன் இணைத்துக் கொள்ள முடியும்? இந்தக் கோவிலைக் கட்டியதன் பின்னணியில் பழிவாங்கும் காரணம் இருக்குமென்றால், அத்தகைய உந்துதலை எப்படி ஹிந்து மதத்தில் நியாயப்படுத்த முடியும்? பகவத் கீதையை எடுத்துக் கொள்ளலாமா? ராமர் கோவில் கட்டியதில் மகிழ்ச்சியடைந்துள்ளவர்கள் பகவத் கீதையை ஹிந்து நூல் என்று கருதுகிறார்களா? சரி – அப்படியென்றால் ஒருவரது செயல்களில் ஒழுக்கத்தைப் பேணுவது குறித்து கீதை என்ன கூறுகிறது? சொந்த ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளாமல் தன்னலம் எதுவுமின்றி, கடமை உணர்வுடன் கடவுளுக்கு காணிக்கையாகச் செய்கின்ற செயல்கள் மட்டுமே தார்மீகமானவை என்று கீதை கூறுகிறது. பழிவாங்குதல், கோபம், செயலுக்கான பலனை எதிர்பார்ப்பது போன்ற எந்தவொரு செயலும் தார்மீகச் செயலாக இருப்பதில்லை என்றே பகவத் கீதை உரைக்கிறது.

கோபத்தில் செயல்படுவது பற்றி ‘கோபம் மாயையில் ஆழ்த்துகிறது, மாயை அறிவை அழிக்கிறது, அறிவை  இழப்பதால் பகுத்தறிவு இல்லாமல் போகிறது, பகுத்தறிவை இழக்கும் போது நீங்கள் வீழ்ந்து விடுகிறீர்கள்’ என்று கீதை கூறுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\3546587db71ca89c111e0b2e329be80d.jpg

அர்ஜுனன் தான் சண்டையிட விரும்பவில்லை என்று கிருஷ்ணனிடம் கூறுவதாகவே கீதை தொடங்குகிறது. கிருஷ்ணன் உடனடியாக அர்ஜுனனிடம் ‘எழுந்திரு. நீ ஒரு போர்வீரன், நீ கட்டாயம் போரிட வேண்டும் அல்லது உலகம் உன்னை நிந்திக்கும்’ என்கிறார். இது கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள பதினெட்டாவது ஸ்லோகத்தில் உள்ளது. கீதை சொல்ல வந்த செய்தி அதுதான் என்றால் மேலும் பதினெட்டு அத்தியாயங்கள் வரை அது ஏன் தொடர்கிறது? மேலும் பதினாறு அத்தியாயங்கள் தொடர்ந்து சொல்வதற்கு கீதையில் என்ன இருக்கிறது? போர்க்களத்தில் இருந்து ஓடக் கூடாது என்று வீரனின் கடமையைப் பற்றியே மீண்டும் அந்த அத்தியாயங்களிலும் கிருஷ்ணன் சொல்கிறானா?

C:\Users\Chandraguru\Pictures\1137709367-H-1024x700.jpg

இல்லை. தார்மீக நடவடிக்கை குறித்து, தர்ம யுத்தம் என்றால் என்னவென்று சொல்ல ஏராளமாக இருப்பதாலேயே அவர்களுக்கிடையிலான உரையாடல் தொடர்கிறது. சுவாசிக்கும்போது கூட நாம் பல சிறிய உயிரினங்களைக் கொல்கிறோம் எனும் போது மனிதர்களாகிய நம்மால் எப்படி தார்மீகமான செயல்களைப் பற்றி பேச முடியும்? ஆரம்பத்தில் அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலைத் தொடர்ந்து வருகின்ற அத்தியாயங்கள் அனைத்தும் இந்தக் கேள்வி மீதான ஆழ்ந்த பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. ஒருபோதும் செயலைத் துறந்து விட முடியாது, கர்மாவிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது என்ற பதில் அப்போது வெளிப்படுகிறது. எளிமையாக இருப்பது, வாழ்வதின் மூலம் நீங்கள் கர்மாவில் ஈடுபடுகிறீர்கள். அதேபோன்று உங்கள் செயல்களில் எப்போதும் நெறிமுறையுடன் இருக்க வேண்டும்.  இதை எப்படி உங்களால் செய்ய முடியும்? உண்பது, சுவாசிப்பது, போரில் உங்கள் சகோதரர்கள், மாமாக்களைக் கொல்வது என்று செயல்களில் ஈடுபடும் போது தார்மீகத் தூய்மையுடன் எவ்வாறு உங்களால் இருக்க முடியும்? ஆசை இல்லாமல், பேராசை இல்லாமல், கோபம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் செயல்படுகின்ற ‘நிஷ்காம கர்மா’வையே அதற்கான பதிலாகக் கூறுகிறோம். ‘அந்த இடத்தில் கோவில் கட்டப்படும்’ என்ற முழக்கம் கோபத்தை, பழிவாங்கலைத் தவிர வேறெதையும் தன்னிடம் கொண்டிருக்கிறதா?

தவறை எதிர்த்துப் போராடுவது பற்றி ஹிந்து மதம் என்ன சொல்கிறது? மகாபாரதத்தில் ‘கோபத்தை அமைதியாலும், கெட்ட நடத்தையை நல்லது கொண்டும் வெற்றி கொள்ளுங்கள். அற்பத்தனத்தை தாராள மனப்பான்மையால் வெல்லுங்கள், பொய்யை உண்மையால் வெல்லுங்கள்’ என்றே கூறப்பட்டிருக்கிறது.

மிகவும் விரும்பி காந்திஜி மேற்கோள் காட்டிய ‘அகிம்சையே உயர்ந்த தர்மம்’ என்ற மேற்கோளை  நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

சாதி அமைப்பை விவரிக்கும் மனு ஸ்மிருதியை நிராகரிக்கும் போக்கு இன்றைக்கு காணப்படுகிறது. அனைத்து ஹிந்து மத நூல்களிலும், இதிகாசங்களிலும் சாதிக்கான இடம் உள்ளது. அது ஒரு காரணமாக இருக்கும் என்றால் கீதை, வால்மீகி ராமாயணம் என்று அனைத்தும் ஒழிக்கப்பட்ட வேண்டியவையாகும். மனு ஸ்மிருதியைப் பின்பற்றுபவர்கள் அதில் உள்ள அனைத்தையும் பின்பற்றுங்கள் என்றே நான் கூற வருகிறேன். தர்மத்தின் பத்து கொள்கைகளாக பொறுமை, மன்னிப்பு, சுயகட்டுப்பாடு, பிறருடையதை அபகரிக்காமல் இருத்தல், தூய்மை, துறவு, நேர்மையான செயல், அறிவின் மீதான நாட்டம், உண்மை, கோபத்தைத் துறத்தல் என்று அது கூறுவதைப் பாருங்கள்.

இtஹுபோன்ற அனைத்துக் காரணங்களுக்காகவும் நான் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் அயோத்தியில் நடக்கப் போகின்றவை பொய், அக்கிரமத்தின் கொண்டாட்டம், ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, நமது நாகரிகத்தின் பாரம்பரியத்தை அவமதிப்பது என்று இருப்பதாகவே கூறுவேன். அதற்கான  கண்டனம், வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையிலேயே நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். என் உடல்நிலை சீராக இருப்பதற்காக திரவங்கள், சிறிதளவு சர்க்கரை, உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்வேன். எனது வீட்டிற்கு வெளியே சில குடும்ப விஷயங்களில் கலந்து கொள்ள  வேண்டியுள்ளது. அதை என்னால் செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அப்படி எதுவும் வேலை இல்லாவிட்டால் நான் வீட்டிலேயே இருப்பேன். அவ்வப்போது லாக் ஆன் செய்து கொள்வேன்.

C:\Users\Chandraguru\Pictures\LosingSwaraj1.jpg

இருள் மண்டிக் கிடக்கும் இந்த நம்பிக்கையற்ற காலத்தில் நம் அனைவருக்கும் மார்க்க தரிசனத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் தாகூர், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் என்று இந்த மண்ணிலிருந்து வந்த, இந்த மண்ணின் மக்களால் ஈர்க்கப்பட்ட பெரிய மனிதர்களை நான் வாசிப்பேன்.

ஜெய் ஹிந்த்.

 

C:\Users\Chandraguru\Downloads\GFKAwaxWAAAxObM 01.jpeg

1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசியல் சாரா அமைப்பு 

ஜெவா

ஜங்புரா விரிவாக்கப் பகுதி நலச் சங்கம் (பதிவு செய்யப்பட்டது) 

 (தில்லி குடியிருப்பாளர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்)

ஜங்புரா விரிவாக்கப் பகுதி, புது தில்லி-110014

நாள்: 27/01/2024 

பெறுநர்:

திரு. மணி சங்கர் அய்யர் & திருமதி.சுரண்யா அய்யர் 

ஜி-43, ஜி.எஃப். புது தில்லி-110014

அன்புள்ள திரு.அய்யர், திருமதி.சுரண்யா அய்யர்

ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய முஸ்லீம் சக குடிமக்களிடம் அன்பை, துக்கத்தை வெளிப்படுத்துகின்ற வகையிலும், ஹிந்து மதம், தேசியத்தின் பெயரால் அயோத்தியில் நடத்தப்படும் செயல்களைக் கண்டித்தும் 2024ஆம் ஆண்டு ஜனவரி இருபதாம் நாள் முதல் இருபத்தி மூன்றாம் நாள் வரை மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்த திருமதி.சுரண்யா அய்யரின் சமீபத்திய நிலைப்பாடு/பேச்சு/கூச்சல் குறித்து குடியிருப்பாளர்கள் எங்களை அணுகினர்.

குடியிருப்போர் நலச் சங்கம் என்ற முறையில், இங்கே குடியிருப்பவர்கள் அனைவருக்குமிடையில் நல்லுறவு நிலவுவதைக் கவனித்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பாகும். இங்கே குடியிருக்கும் ஒருவரின் கூச்சல் இந்தக் காலனியின் அமைதியைச் சீர்குலைப்பதை அல்லது மற்ற குடியிருப்பாளர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் 5-0 உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் கட்டப்படுவதை நன்கு அறிந்து வைத்திருக்கும் கற்றறிந்த ஒருவருக்கு திருமதி.அய்யர் சமூக ஊடகங்கள் வழியாகக் கூறியிருப்பது தகுதியற்ற பேச்சாகவே உள்ளது.

நீங்கள் பேச்சு சுதந்திரத்தின் பின்னால் மறைந்து கொள்ளலாம், ஆனாலும் இந்திய உச்சநீதிமன்றம் பேச்சு சுதந்திரம் என்பது முற்று முழுதாக இருக்க முடியாது என்று கூறியிருப்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தங்கள் செல்வம், நல்வாய்ப்புகள் என்று அனைத்தையும் இழந்து பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்ற, அமைதியை விரும்புகின்ற இந்த இடத்தில் மூன்று நாள் உண்ணாவிரதத்தை அறிவித்த திருமதி.அய்யரைப் போன்ற குடிமகளின் வெறுப்பூட்டும் பேச்சு துரதிர்ஷ்டவசமானதாகவே இருக்கிறது.

நல்ல குடிமக்களுக்கான நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், மக்கள் மத்தியில் வெறுப்பை, அவநம்பிக்கையை உருவாக்கி யாரையும் தூண்டிவிட வேண்டாம் என்றும் நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டின் நலனுக்காக அரசியலில் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் எதைச் செய்வதானாலும் உங்கள் செயல்கள் இந்தக் காலனிக்கு நற்பெயரை அல்லது கெட்ட பெயரைக் கொண்டு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,. எனவே தயவுசெய்து இதுபோன்ற பதிவுகள்/கருத்துகளை இடுவதைத் தவிர்க்குமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

குடிமக்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்ற ராமர் கோவில் பிரதிஷ்டை குறித்து உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்றால், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம். ஆனால் இன்னொரு முறை இந்தக் காலனியைச் சுற்றிலும் வெறுப்பை, பதற்றத்தை உருவாக்குகின்ற இதுபோன்ற செயல்களை ஆய்ந்து பார்த்து விடாதீர்கள்.

நாட்டின் நீதித்துறை மீது கொண்ட அதிருப்தியால் தனிப்பட்ட முறையில் சீர்திருத்தங்கள், தீர்வுகளுக்கு அழைப்பு விடுக்கின்ற வகையில் ​​பிளாக் ஜஸ்டிஸ் என்ற இணையத் தொடரை எந்தவொரு வெறுப்பையும் உருவாக்கிடாமல் நான் உருவாக்கியுள்ளேன்.

மக்களின் மத உணர்வுகளைப் பாதிக்கின்ற உங்களுடைய விரக்தியை இந்தச் சங்கம் ஒருபோதும்  ஏற்றுக் கொள்ளாது.

மேலும் திரு.மணிசங்கர் அய்யருக்கு எனது வேண்டுகோள். உங்கள் மகள் திருமதி.சுரண்யா அய்யரின் செயலை நீங்கள் கண்டிப்பதை குடியிருப்போர் நலச் சங்கம் நிச்சயம் பாராட்டும். ஏற்கனவே இங்கே குறிப்பிட்டுள்ளதைப் போல அவரது செயல் இந்தக் காலனிக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்லதல்ல.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை எதிர்த்து நீங்கள் செய்திருப்பதை சரியென்றே நீங்கள் இன்னும் கருதுவீர்கள் என்றால் இங்கே உள்ள மக்களும், குடியிருப்போர் நலச் சங்கமும் உங்களுடைய வெறுப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும் வகையில் தயவுசெய்து வேறொரு குடியிருப்பிற்குச் சென்று விடுங்கள். அதையே நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

இந்தக் கடிதத்தை சரியான மனநிலையுடன் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

டாக்டர் கபில் கக்கர்

தலைவர் – ஜெவா 

சுரண்யா அய்யர் நேரலையில் இருந்து 

2024 ஜனவரி 31

இது பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நான் விடுக்கும் அறிக்கை. எனது உண்ணாவிரதம் குறித்து ஒரு தொலைக்காட்சிச் செய்தி இருந்து வருவதாக நான் கேள்விப்படுகிறேன். முதலாவதாக சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கம் நான் வசிக்கும் காலனியைச் சேர்ந்ததல்ல! இரண்டாவதாக தற்போது இந்தியாவில் உள்ள ஊடகங்கள் நஞ்சை, குழப்பத்தை மட்டுமே பரப்பி வருவதால், இப்போதைக்கு ஊடகங்களிடம் பேசுவதில்லை என்றே நான் முடிவு செய்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் என்னை நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் அனைத்து அரசியல் பின்னணியில் உள்ளவர்களுடனும் படித்து, வேலை செய்து, செயல்பட்டு வருகிறேன். எனவே நீங்களே சுயமாகச் சிந்தித்துக் கொள்ளும் வகையில் நான் என்னை எனது முகநூல், யூடியூப் பக்கங்களில் மட்டும் வெளிப்படுத்திக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியாவில் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று நம்புவதால் இந்த ஊடக சர்க்கஸைத் தவிர்த்திடவே நான் முயல்கிறேன். ஒருவரையொருவர் இழிவுபடுத்துவதை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக கொஞ்சம் சிந்திக்க முயல்வோம்.

ஜெய் ஹிந்த்!

எனது அறிக்கை

காலை வணக்கம், நான் ஏற்கனவே பேசியவாறு என்னுடைய வீட்டில் உண்ணாவிரதம் இருந்ததற்காக குறிப்பிட்டதொரு குடியிருப்போர் நலச் சங்கம் எனக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி ஒரு தொலைக்காட்சி சேனலிடமிருந்து இப்போதுதான் எனக்கு அழைப்பு வந்தது. எனது எழுத்தும், பேச்சும் இணையத்தில் இருக்கிறது.

சுருக்கமான பதில் கூறுமாறு என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் விவாதங்களே இல்லாமல் விவாதங்கள் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் விதம், அந்தச் சேனல்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவையே நாட்டின் சூழலில் நஞ்சு கலந்திருப்பதற்கான காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியாவில் உள்ள நம் அனைவருக்கும் சிறந்த உரையாடல், சிறப்பான ஈடுபாடு தேவைப்படுகிறது என்று கருதுகிறேன். அதைக் காட்டிலும் சிறந்தவர்களாகவே நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஒருவேளை நமக்கிடையே உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். நான் முன்பே எனது உரையில் எனது கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களைத் தெரிவித்திருந்தேன். என்னிடம் ஏற்பட்ட வலி, அதுகுறித்து என் வீட்டில் அமைதியாக உண்ணாவிரதம் இருப்பது பற்றி நான் ஆன்மீக விளக்கத்தையும் அளித்திருந்தேன்.

ஏற்கனவே நான் கூறியவற்றிற்கு அப்பாற்பட்டு எந்தவொரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் குரல் பதிலை அளிப்பது அல்லது வேறு எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என்று  முடிவு செய்திருக்கிறேன். அந்த நோட்டீஸ் எனக்கே இன்னும் வந்து சேரவில்லை. அதுகுறித்து நான் பத்திரிகையாளர்களிடமிருந்து மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதைப் பார்க்கின்ற அனைவரிடமும் எனக்கு நாற்பத்தொன்பது வயதாகிறது, வெளிநாட்டில் படித்த காலத்தைத் தவிர, என் வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டிலேயே நான் வாழ்ந்திருக்கிறேன். பல்வேறு துறைகளில் நான் பணியாற்றியுள்ளேன், நீங்கள் அனைவரும் என்னை  நன்கு அறிவீர்கள் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அரசியலில் இரு தரப்பிலிருந்தும் நீங்கள் அனைவரும் என்னை அறிவீர்கள். நாம் இவ்வாறு ஒருவரையொருவர் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன். நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, என்னை அறிந்திருப்பவர்களும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் படித்தவர்களும் நாம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று நினைப்பார்கள் என்றும் கருதுகிறேன்.

நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், எப்படிப் போய்க் கொண்டிருக்கிறோம், இப்படித்தான் ஆக  வேண்டும் என்று விரும்புகிறோமா என்பதைப் பற்றி சிந்திக்க அனைவருக்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தித் தரும் என்றும் நம்புகிறேன்.

உரையாடலைத் தவிர்ப்பதற்காக தொலைக்காட்சிகளிடம் இருந்து நான் விலகியிருக்கவில்லை. மாறாக உரையாடலை மேற்கொள்ள விரும்புவதாலேயே எனது கருத்தை நான் அவ்வாறாக வெளிப்படுத்தியிருந்தேன்.

தனித்தனியாக கூச்சல் போட்டியில் யாருடனும் ஈடுபடவும் நான் விரும்பவில்லை. அரசியல் குடும்பம் ஒன்றிலிருந்து வருவதால் எங்களைப் பொருத்தவரை அரசியல் மிகவும் தீவிரமானது என்பதை நான் நன்கு அறிவேன். மேலும் எந்தவொரு அரசியல் சார்ந்தவராக இருந்தாலும் இவை நம்பிக்கைகள், அறிவுசார் சிந்தனைகள் சார்ந்தவையாக மட்டுமல்லாமல்  ஒருவருடைய உணர்வுகள்,  மனப்பான்மை குறித்த பிரச்சனைகளாகவே இருக்கின்றன.

மக்கள் இந்த உரையாடலை மேலும் எடுத்துச் சென்று, தங்கள் சொந்தக் கருத்தை, அதன் எதிர்முனையை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளும் நான் அது நடக்க வேண்டும் என்றே கருதுகிறேன். ஆனால் அதைச் செய்து முடிக்க நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பார்த்து கூச்சலிடுவதற்கான அவசியம் எதுவும் இருக்கவில்லை. நம்மை நாகரீகமான, சிந்தனையுடனான, பிரதிபலிக்கின்ற பல வழிகளில் நாம் வெளிப்படுத்திக் கொள்ளலாம். என்னுடைய பார்வையில் இருந்து நீங்கள் வேறுபட்டு இருந்தால், நான் வற்புறுத்தப்படுகிறேனா அல்லது தனிப்பட்ட முறையில் நீங்கள் வற்புறுத்தப்படுகிறீர்களா என்பது இங்கே முக்கியமில்லை.

எந்தக் கண்ணோட்டத்தை முன்வைத்தாலும் அதில் உள்ள சில உணர்வுகளை மக்களால் பார்க்க முடிகிறதா என்பதே முக்கியம். இப்போது விஷயங்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதால், இந்தியாவில் இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் நாகரீகமாக, அதிக சிந்தனையுடன் பேசுவதற்கு, உணர்வதற்கான நேர்மையான வழியை நாளின் முடிவில், இந்த செயல்முறையின் இறுதியில் நம்மால் காண முடியுமென்றால், நாம் உண்மையில் எதையாவது சாதித்திருப்போம் என்று சொல்வேன். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.

பத்திரிகைத் துறையை நான் நம்புகிறேன். அது நான்காவது தூணாக இருக்க வேண்டும். அது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் காலகட்டத்தில் அது குழப்பம், நச்சுத்தன்மையை உருவாக்குவதைத் தவிர வேறெதையும் செய்யும் வகையில் செயல்படவில்லை. அதனால்தான் இந்த மேடையில் இருந்து உங்களுடன் எளிமையாகப் பேச முடிகின்ற வரையில் பிரதான பத்திரிகைகளைத் தவிர்ப்பதே என்னைப் பொருத்தவரை சிறப்பாக இருக்கும்  என்றே நான் கருதுகிறேன்.

சுரண்யா அய்யர் மீது வழக்கு பதிவு செய்க

பத்திரிகைச் செய்தி

சமூக வலைதளங்களில் ஆட்சேபணைக்குரிய கருத்தை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் மகள் சுரண்யா அய்யர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஜய் அகர்வால் தில்லி சைபர் கிரைம் காவல்துறையிடம் 2024 பிப்ரவரி மூன்றாம் நாள் சனிக்கிழமையன்று அளித்த புகாரில் வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் 2024 ஜனவரி இருபதாம் நாள் மற்றும் பிற நாட்களில் சுரண்யா அய்யர் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி இருபதாம் நாள் சுரண்யா அய்யர் வெளியிடப்பட்ட வீடியோ துணுக்கிற்கான இணைப்பை வழங்கியுள்ள அவர் ‘இந்த 36 நிமிட வீடியோ துணுக்கை தயவுசெய்து முழுமையாகப் பார்த்து விட்டு, 153-Aஆவது பிரிவு (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டத்துடன் தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு பதிவு செய்ய வேண்டும்’  என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சுரண்யா முகநூல் பதிவு

2024 ஜனவரி 05

சில எண்ணங்கள்…

வணக்கம் நண்பர்களே… இங்குள்ள சூழ்நிலை இப்போது எந்த அளவிற்கு அபத்தமாக, சோகத்தை ஏற்படுத்துவதாக, வெறுப்புடன் இருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். என்னுடைய உண்ணாவிரதத்தை, பேச்சை மேற்கொண்ட போது இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பவற்றிற்கு எதிராக போதுமான அல்லது பயனுள்ள காரியத்தை எந்த வகையிலும் செய்வதாக   நான் நினைக்கவில்லை. அந்த உண்ணாவிரதம் வெறுமனே ஒரு குறியீடாக மட்டுமே இருந்தது. அனைத்து குடிமக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள இந்தியா என்ற கருத்தாக்கத்திலிருந்து வெட்கமின்றி விலகி அதற்கு எதிராக நாடு சென்றிருக்கும் நிலையில் மீண்டும் அந்தக் கருத்தாக்கத்தை நோக்கித் திரும்புவதற்கான விருப்பமாக மட்டுமே என்னுடைய அந்த முடிவு இருந்தது.

இந்த மாபெரும் துரோகத்தை மாற்றியமைத்திட என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற  போதிலும், குறைந்தபட்சம்  அதை ஒப்புக்கொண்டு என்னால் அதற்குச் சாட்சியமளிக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் எனது செயல் அதிகார சக்திகளிடம் என்னைச் சிக்கலில் சிக்க வைக்கும் என்று என் மனதில் தோன்றியது. என்னைப் பொருத்தவரை அது என்னுடைய வாழ்க்கை முறையாகும். யாருடைய அதிகாரத்தையும் – அது நல்லது அல்லது கெட்டது என்று எவ்வாறாக இருந்தாலும் – என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. யாருக்கும் கீழ்ப்படிவது என்பது எனக்கு எளிதில் வராது. மேலும் கொடுமைப்படுத்தப்படுகின்ற வகையில்  இருப்பவற்றை அல்லது யாரோ ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதைக் காண்பதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

என் வாழ்நாள் முழுவதும்  அதன் விளைவுகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். இது பள்ளியில் நான் இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகின்ற கதையாகும். நல்ல குணம் என்று அதனைக் குறிப்பிட்டுக் நான் முன்வரவில்லை. ஏனென்றால்  வேறொருவரின் அதிகாரம் ஏற்படுத்தித் தருகின்ற பரிசோதனைகள், கூத்து, ஏற்கனவே இருக்கின்ற பதில்கள் மீதான தனிப்பட்ட தேடுதல் மற்றும் பிரபஞ்சத்தால் மிகவும் கனிவுடன் தயாராக எனக்குத் தரப்பட்ட நல்ல விஷயங்களைக்கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை என்பதை நான் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

ஹிந்து வெற்றிச் செருக்கு, பெரும்பான்மைவாதத்தை 1990களில் இருந்து நான் பார்த்து வருகிறேன், எனக்கு அதனுடன் எந்தவொரு உடன்பாடும் இல்லை. குறிப்பாக என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்த்த அந்த வெற்றிச் செருக்கு, பெரும்பான்மைவாதத்தை வழிபடும் சமீபத்திய நிகழ்வுகளையும் நான் ஏற்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்ய முடியாது.

அது தவறு என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன், ஆனால் இப்போதைய இந்தியாவில் என்னால் அமைதியாக இரவைக் கழிக்க முடியாது. என்னால் முடியாது, நான் அவ்வாறு இருக்க மாட்டேன்.

நான் வீணாகிப் போவதாக, தியாகியாக விரும்புவதாக மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். என்ன தியாகம் செய்திருக்கிறேன்? மூன்று வாரங்களுக்குப் பிறகும் எனது பேச்சு எட்டாயிரம் பார்வைகளை மட்டுமே பெற்றிருக்கிறது. அதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையான முட்டாள்தனத்துடன் இருக்கின்ற பல இடுகைகளுக்கும் லட்சக்கணக்கில் பார்வைகள் கிடைப்பதை நான் பார்த்திருக்கிறேன். நேற்று காந்தியின் நினைவாக எனது நாடகத்தை அரங்கேற்றினேன், நூற்றைம்பது இருக்கைகளைக்கூட என்னால் நிரப்ப முடியவில்லை.

என்னை நம்புங்கள், யாரையும் என்னுடன் இழுத்துச் செல்லக் கூடிய திறன் என்னிடம் இருப்பதான மாயை எதுவும் என்னிடம் நிச்சயமாக இல்லை. ஆனாலும் இன்னும் எனக்குள் தங்கள் உயிரைக் கொடுத்த நமது ஸ்தாபக பிதாக்களின் இந்தியா என்ற உன்னதமான சிந்தனைக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது.

ஹிந்துத்துவவாதிகளாக தங்களைக் கருதாத மக்களிடத்தும் – எனக்குப் பதிலளிக்கும் விதமாக – முஸ்லீம்கள் ஹிந்துக்களை ஒடுக்கினர், கோவில்களை உடைத்தனர். சரி செய்யப்பட வேண்டிய வரலாற்று அநீதி நடந்துள்ளது என்பது போன்றிருந்த உறுதியான கருத்து, பரவலான நம்பிக்கை என்னை அதிகம் பாதிப்பிற்குள்ளாக்கியது, வேதனைப்படுத்தியது. அவையனைத்தையும் கேட்ட போது என்னிடம் காந்தி, நேரு, கான் அப்துல் கஃபர் கான், சரோஜினி நாயுடு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனைவரின் இந்தியா ஒருவித கற்பனை நாவலா என்ற ஆச்சரியமே எழுந்தது.

நூறு சதவிகிதம் என்னுடன் உடன்பாடு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை ஒரு கையில் உள்ள விரல்களைக் கொண்டே என்னால் எண்ணி விட முடியும். எனது உரையின் யூடியூப் பகுப்பாய்வுகளைப் பெற்றிருக்கிறேன் – அற்புதமான அந்த எட்டாயிரம் பார்வையாளர்களில் ஏழு சதவிகிதம் பேர் மட்டுமே இறுதி வரை அதைப் பார்த்திருக்கிறார்கள்! அது ஒரு ‘ஜே’ வளைவாக இருக்கிறது. முதல் இரண்டு நிமிடங்களுக்கு அப்பால் முப்பது சதவிகிதம் பேர்கூட அதைப் பார்க்கவில்லை. மம்மா சுரண்யா, என்ன ஒரு வேடிக்கை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்….

காந்தி சொன்ன, செய்த விஷயங்கள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, அவர் ஒரு கிறுக்கர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ‘வெளியே சென்று நீங்கள் நம்புவதைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுடன் வந்து சேருவார்கள் அல்லது உங்களுடன் சேர மாட்டார்கள்’ என்றார் (அவர்கள் அவருடன் சேர்ந்தனர் – பின்னர் அவரை மறந்து விட்டதாகவே தெரிகிறது. என்னிடம் அதற்கான விளக்கம் எதுவுமில்லை…). அதுதான் ஒரே வழி.

சட்டத்தின் செயல்முறைகளுக்கு உட்பட வேண்டிய வாய்ப்பை நான் இப்போது எதிர்கொண்டிருக்கிறேன். தான் விரும்பும் எந்தவொரு விளக்கத்தையும் இந்த  அமைப்பால் அங்கே என் மீது திணித்து விட முடியும். சட்ட வழக்கு என்று வரும் போது ஒரு சமூகமாக நாம், நீதியின் மீதான இறுதி நம்பிக்கையை பொறுப்பில் உள்ள காவல்துறை, நீதித்துறை அதிகாரிகள் மீது கொண்டிருக்கிறோம். சட்டம் அநியாயமாக இருந்தால், அதனைச் செயல்படுத்துவதும் அநீதியாகவே இருக்கும். சட்டத்திற்கான விளக்கம் அநியாயமாக இருந்தால், அதன் பயன்பாடும் அவ்வாறாகத்தான் இருக்கும். எனக்கு அது நன்கு தெரியும். இவையனைத்திற்கும் மேலாக நான் இதற்கு முன்பு வழக்கறிஞராகவும் செயல்பட்டிருக்கிறேன். என்னை அது எங்கே கொண்டு சென்று விடும் என்பது குறித்து எனக்கு எந்தவொரு மாயையும் கிடையாது.

இந்த சூழ்நிலைக்கான ஒரே எதிர்வினையாக நீங்களே மனமுவந்து அநீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டு உங்கள் எதிர்ப்பை நிரூபிப்பதே இருக்கும் என்று காந்தி கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த போது அது எனக்கு நன்கு புரிந்தது. அதையே நான் செய்தும் வருகிறேன். வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது. அவ்வளவுதான்.

கடவுள் இந்தியாவை ஆசீர்வதிக்கட்டும். இந்தப் பைத்தியக்காரத்தனமான தருணம் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை இன்னமும் என்னிடம் இருக்கிறது. கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

தமிழில்: தா.சந்திரகுருஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *