ஆசிரியரின் எழுத்தை முதல் முறையாக வாசிக்கிறேன்.
நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளைப் பற்றி உரையாடுவது போலவும் அவர்களைப்பற்றி நமக்கு நாமே புதிதாக அறிந்துக் கொள்வதுப் போலவும் அழகான ஒரு கட்டமைப்பு இச்சிறுகதைகள்.
பொதுவாகவே பெண் மனங்களை ஊடுறுவிய காட்சிகளாகவே இக்கதைகள் நம்மை உள்வாங்கிக் கொள்கிறது..
கதைமாந்தர்களும் சரி. அதை லாவகமாக முடிவுக்கு கொண்டுச் செல்லும் மொழி நடையும் மிகவும் அருமை.
பொதுவாகவே குடும்பங்களில் பெண்களின் மீதான சுமையும் அதிகம். அவர்களுக்கான பொறுப்புகளும் அதிகம். ஆனால் ஆண்களின் பார்வையில் அவர்கள் வெறும் பெண் அவ்வளவே. சுரேஷ்பரதன் அவர்கள் பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்தே எல்லா கதைகளையும் படைத்திருக்கிறார்.
🌹சந்நதம் கதையில் வரும் பெரியம்மாவின் பாத்திரம் அவளின் மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான் அவ்வாறு அவளை படுத்துகிறது. அதையே சந்நதம் வந்ததாக நினைத்துக் கொள்கிறார்கள் போல முடிவில் தந்தையின் மனதை உடைக்கும் இக்கதையில் பெரியம்மாவிற்கும் அந்த அப்பாவுக்குமான மௌனம் உடைபடும் நிகழ்வு. அருமை.
🌹 புன்னகையை தொலைத்தவள். இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகள் எத்தனை மென்மையும் ஸ்திரமானதும் என்று பாரதியின் புன்னகைக்காத முகத்தில் தெரியும் வறட்சியும் வெம்பலுக்கும் அவள் கூறும் காரணங்கள். நம்மை கன்னத்தில் அறைவதுப் போன்ற உணர்வு.. பால்யத்தில் இப்படி மாட்டித்தவிக்கும் குழந்தைகளை நினைத்து மனம் கொதிக்கும் ஒருத்தியால் எப்படி புன்னகைக்க முடியும்.
🌹ரோஜாத்தோட்டம்.
இந்தக்கதையில் வரும் கதாநாயகியை நான் சந்தித்திருக்கிறேன். ஆணுக்கு தகுதி இல்லையென்றால் பெண் சகித்துக் கொண்டு அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் சேவை செய்ய வேண்டும். ஆனால் பெண்ணுக்கு குழந்தை பெறுவது தள்ளிப்போனாலே அவளுக்கு எத்தனை பட்டங்கள் உடனே கணவனுக்கு வேறு திருமணம். இதில் வரும்
சாரதா மதினியின் சிறு சபலம் அவளை எப்படி வாட்டி விடுகிறது.சாரதா தன் நிலையை அந்த கோயில் ரோஜாத் தோட்டத்தின் மூலம் சரவணனிடம் கூறுவது மனதை வருத்தி விடுகிறது..சரவணன் கேரக்டர் நன்றாக படைக்கப் பட்டிருக்கிறது.
🌹ஒருவாய்ச்சோறு..
ஒரு ஆண் சம்பாதிக்கும் வரையில்தான் மனைவி மக்களிடம் மரியாதை. மனநிறைவான உணவும் அது இல்லையெனில் எல்லாமே இல்லாமலாகிவிடுகிறது.
ஒரு வேளை நிம்மதியான சாப்பாட்டிற்காக தன் மாமன் மனைவியிடம் அதுவும் மானுக்கு தெரியாமல் வந்து உண்டுச் செல்கிறான் என்பது மூன்று வேளையும் தட்டு நிறைய உண்டாலும் அதை யாரிடம் எப்படி நிறைவோடு உண்கிறோம் என்பதே மனிதனுக்கு முக்கியம். இதில் வரும் மீனாள் கேரக்டர் அருமை.
🌹அப்பாவின் காதல் கதை.
எல்லா அப்பாக்களுக்குமே தன் மகள்களிடம் ஒரு நெருக்கம் இருக்கும். தன் பழைய காதல் கதையை மகளிடம் கூறுபவர் தன் காதலியின் வீட்டை வாங்க பூர்வீக மண்ணுக்கு வந்திருக்கிறார்கள்..
அந்த விசயம் மனைவிக்குத் தெரியாது ஆனால் மகளுக்குத் தெரியும். ஒரு வேளை இதையே அந்த மனைவி செய்தால். ஏற்றுக்கொள்ளப்படுமா.
இறுதியில் அந்தப் பெண் தன் பெயர் என்று சொல்லாமலே போய்விடுகிறாள். என்ன அந்த காதலியின் பெயராகத்தான் இருக்கும்.
🌹பறத்தலும் பறத்தல் நிமித்தமும்.
வழியில் விபத்தில் சிக்குபவனின் பரிதாப நிலையும் அவன் மீண்டு விட்டால் தனக்கு சிக்கல் என்று நினைத்க விபத்தை உண்டாக்கியவன் அவனிடம் கெஞ்சுவதும் கடைசியில் நினைவு தப்பியது அவனைப்பற்றியே தவறாக பேசுவதும் மனிதர்களின் மனம் எத்தனை விதம் இறுதியில் அவன்பறப்பதாக கூறுகிறார். ஆம் அவன் இறந்து விடுகிறான். மகளுக்காக தவிக்கும் உயிர் அவளுக்காக எதைஎதையோ சேமிக்கிறு வானத்தில்.
🌹வெற்றிடம்.
சொல்லாத காதலும் அதன் மீதான வெற்று பிம்பமும் காலம் கடந்து உடைகிறது. .இருவரின் சந்திப்பும் அருகாமையும் சிறிது நேரத்தில் இல்லாமல் ஆகிவிடும் ஆயினும் அந்த நேரம் மகிழ்வை அனுபவித்தல் சுகமே.
🌹மரணம் என்றொரு புள்ளியில்..
குடும்பம் ஒரு பெண்ணிற்கு அன்பையும் அரவணைப்பையும் தரவில்லை என்றால் அவளின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதுப் போலத்தான்.
தான் எப்படி வாழ்கிறோம் என்பதை விட ஒரு பழி உணர்ச்சியுடனே வாழ்ந்து முடிந்து விடுகிறது வாழ்க்கை . பவித்ரா பக்தவச்சலம். அப்படி ஒரு கதாபாத்திரம் தந்தையின் மீதான காழ்ப்புணர்ச்சியே அவள் வாழ்க்கையை சுதந்திரமாக எதிர்கொள்வதும் அதன் பொருட்டு மடிவதும்..
🌹செக்மேட்
இக்கதையில் வரும் கோமா. நல்ல அறிவாளி ஆனால் ஏன். பித்தன் போலானான் புரியவில்லை .ஆனால்
தன் சகோதரனை கட்டையால் தாக்குவதில் இருந்து, அவனுக்கான பெண்ணை சகோதரனுக்கு கட்டி வைப்பதும் அவனை உள்ளுக்குள் ஏதோ ஒரு ஓரத்தில் வன்மம் தலைத் தூக்கி விடுகிறதோ .. அதே சமயம் அவனின் உடையை கட்டிவிடும் அந்தப் பெண் அகிலா
எல்லாம் கடந்த ஒரு மனநிலையை. கொண்டவளாகவே தோன்றுகிறது..
🌹நிசியிலெழும் பசி
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு வேளையும் உணவு என்பது ஒரு கனவாகவே இருந்து விடுகிறது. அதுவே அவர்களை எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டி விடுகிறது..
இதில் வரும் சுந்தரேசன், செம்பகம் ஏதோ ஒரு நிர்பந்தத்தில் இணைந்து தொழில் செய்கிறார்கள்
ஆக இங்கே என்ன செய்கிறார்கள் என்பதை விட பசியின் வலிமையே ஓங்கி நிற்கிறது.
🌹சரணாலயம்..
அக்கா புருசனுக்காக புலிநகம் தேடி ராஜஸ்தான் போயிருக்கும் மச்சானின் நிலை கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும் அக்காவும் தம்பியும் பேசிக்கொள்ளும் அந்த உரையாடலும் அவளை தம்பி திட்டிவிட்டு பிறகு அவனே நம்மிடமே இவ்வளவு பேசுபவள் புருசனை கேக்காமலா இருந்திருப்பாள் என்று சமாதானப்படுத்திக் கொள்கிறான்.
இன்றும் நிறைய வீடுகளில் மாப்பிள்ளைகளை என்னமோ வானத்தில் இருந்து இறங்கிவந்தவன் போலவே கவனிப்பார்கள். மகள்களும் இன்னும் கொஞ்சம் உயரத்தில் வைத்து பேசி தன்கணவனை கொண்டாடத் தூண்டும் நிகழ்வெல்லாம் உண்டு. இதில் மாதவனின் அலைச்சலும் மாத்தோப்பூரைப் பற்றிய வர்ணனைகளும் நன்றாக இருந்தது.
🌹பூரண பொற்கொடி
தேவையற்று மீண்டும் மீண்டும் கர்ப்பமாவதும் அதை கலைத்தலும் ஒரு பெண்ணுக்கு எத்தனை வலியும் வேதனையும் என்பதை விட மன உளைச்சலைத் தரும் என்பதை புவனா கதாபாத்திரமும்
வேண்டியும் தனக்கு வாய்க்கவே இல்லையே என்று ஏங்கும் அவளின் நாத்தனார் பூரணத்தக்காளின் மனத்தாங்கலும் அருமையான விதத்தில் நகர்த்தப்பட்டுள்ளது இக்கதையில்.
இல்லாத கர்ப்பத்திற்கு எத்தனை ஆர்பாட்டம்
முடிவில் சித்த வைத்தியரின் ஆறுதல் மொழி புவனாவை மூச்சு விடச்செய்கிறது.
கதாபாத்திரங்களுடனான நெருக்கமும் யதார்த்தமும் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கி விடுகிறது..
புத்தகம்: சந்நதம்
ஆசிரியர்: சுரேஷ் பரதன்
வெளியீடு: சுவடு பதிப்பகம்
வே.சுகந்தி
வாணியம்பாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.