குடிசையின்
சிம்னி விளக்கொளியில்
சிறுமிகளும் சிறுவர்களும்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்
தன் கனவுகளில் எளியோரின்
நாடித்துடிப்பு கணித்து
மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி
விண்வெளி ஓடம் ஒன்றுக்கான தயாரிப்புக் கனவில் மிதந்தபடி பாட நூலின் முன்னமர்ந்திருக்கிறாள் இன்னொருத்தி
சிறுவனொருவன் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தின் விண்ணப்பப் படிவம் நிரப்பியபடி ஒரு விஞ்ஞானியாய்க்
கனவில் திளைத்தபடி
படித்துக் கொண்டிருக்கிறான்
இவர்கள் எல்லாருக்குமான
புதிய தற்கொலைக் கயிறொன்றைத்
தன் கொள்கையாய் நெய்தபடி
நமட்டுச் சிரிப்புடன்
வீற்றிருக்கிறது அதிகாரம் .
நன்றி –
கல்விக் கொள்கைக்கு எதிரான கவிஞர்களின் குரல்களாக ஒலிக்கும் தமுஎகச கவிதைத் தொகுப்பான
“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்”