சூர்யா சேவியர் எழுதிய "திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு" புத்தகம் | Surya Xavier's Thiruparangkundram Muzhu Varalattru Aaivu (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

சூர்யா சேவியர் எழுதிய “திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு” – நூல் அறிமுகம்

“திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு” – நூல் அறிமுகம்

தீபத்தூணா? சர்வேகல்லா?

– எழுத்தாளர் பொன் விக்ரம்

தீபத்தூணா? சர்வே கல்லா? என்ற ஒற்றைக் கேள்விக்காக உள்புகுந்த தேடத்தொடங்கிய நூலாசிரியருக்குள், இன்னொரு கேள்வி, இந்த உலகில் எந்த நாடு முதன் முதலாய் தனது நாட்டு நிலத்தை அளந்தது? எகிப்தியர்கள் அளந்திருக்கிறார்கள். அளந்ததோடு இல்லாமல் நிலப்பதிவேடும் தயாரித்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால் பாபிலோனியர்கள் தான் என்று முடிவு செய்கிறார். அவர்கள்தான் கி.மு. 2300 இல் நிலங்களை அளந்ததோடு பச்சைக் களிமண்ணில் வரைந்து அதன் பின் அதை நெருப்பில் சுட்டு ஆவணமாக ஆக்கி இருக்கிறார்கள். இந்த உலக உருண்டையை நிலவரையில் வரைந்தவர் யார்? தேடலையும் தொடங்குகிறார்.

கிரேக்க வானியல் அறிஞர் கிளாடியஸ் டாலமி. அவர் தான் முதல் முதலில் பூமியை கோள வடிவில் தனது நிலவரையில் வரைந்தவர். உலகை அளப்பதிலும் உலகத்தை வரைவதிலும் கி.பி. 90. கி.பி. 149 இல் வாழ்ந்த தாலமியின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறுகிறார். இப்படியே பல நாடுகளிலும் நிலவரை வரைகின்ற, வரைந்த முறைகளையும், அந்தத் துறையில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களையும் நமக்கு தெளிவாகப் புரிய வைத்துக் கொண்டே வருகிறார்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பகுதிகளை, எல்லைகளை நிலவரை செய்வது அவசியம் என்று புரிந்து கொண்டது. 1800 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியில் இராணுவ அதிகாரியாக இருந்த கர்னல் வில்லியம் லாம்ப்டன் என்பவரை நியமிக்கிறது. அவர் சரியாக 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் நாள் சென்னை புனித தோமையார் மலையில் ( ஜேம்ஸ் தாமஸ் மவுண்ட்) முதல் முதலாக நில அளவைக்கான ஆதாரக் கோட்டினை லாம்டன் நிறுவினார். அங்கிருந்துதான் இந்தியாவின் நில அளவை தொடங்குகிறது.

அதாவது சென்னை பரங்கி மலையில் தொடங்கிய நிலவரை இமயமலை எவரெஸ்டில் நிறைவடைகிறது. புனித தோமையர் மலையில் ஊன்றப்பட்ட முதல் சர்வே கல்லின் புகைப்படத்திலையும் பதிவிட்டு இருக்கிறார்.

இரவு பகல் காடு மலை என 22 ஆண்டுகள் மாபெரும் திரிகோண நில அளவையில் ஈடுபட்ட லாம்ப்டன் களப்பணியிலேயே 1823 ஆம் ஆண்டு உயிர் துறந்தார். லாம்டன் மறைவுக்குப் பிறகு, அவரிடம் உதவியாளராக பயின்று வந்த ஜார்ஜ் எவரெஸ்ட் நில அளவை மேற்பார்வையாளராக பொறுப்பேற்றார். இவர் இரவிலும் கூட தீப்பந்தத்தைக் கொண்டு நில அளவையில் ஈடுபட்டார். இப்படியே தொடர்ந்து அளந்து கொண்டே கி.பி. 1834 இல் இமயமலை அடிவாரத்தில் உள்ள டோரடூனை அடைந்தார். டோரடூனில் கி.பி. 1846 இல் நேபாள மலையில் பல முக்கோணங்களை நிறுவினார்கள். இதன் உதவியால் இமயமலையில் இருந்த 79 சிகரங்களின் உயரங்களை முதன் முதலாக அளந்தனர்.1843 இல் ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்றார் எனினும் 29002 அடி உயரம் கொண்ட அந்த பனி படர்ந்த மலைக்கு 1856 ல் ஜார்ஜ் எவரெஸ்டின் பெயரைச் சூட்டினார்கள்.

இவைகளோடு சங்ககாலத்திற்கு முன்னும் பின்னுமாக தமிழ் மன்னர்கள் நிலவரை செய்த வரலாறுகளையும் பதிவு செய்கிறார். இப்படி நிலவரை செய்த மேற்கண்ட வரலாற்றுப் பின்னனியிலிருந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் குறித்து அறிய வேண்டும் என்கிறார்.

சென்னை ராஜதானி அரசாங்கத்தால் மத்திய நில அளவை அலுவலகம் 1932 ஆம் ஆண்டு வெளியிட்ட அட்லாஸ் ஆஃப் தி மெட்ராஸ் பிரசிடென்சி எனும் நூலில். த கிரேட் ட்ரிக்னாமெட்ரி சர்வே ஆஃப் இந்தியாவின் சர்வே நடந்ததற்கான GTS குறியீடு இருக்கிறது. இதில் சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. வைகை ஆறு பிறக்கும் மலைகளில் ஒன்றான வெள்ளி மலையிலும் இத்தகைய GTS ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மலை சார்ந்து அரசு கோயில், தர்கா சார்ந்த வழக்குகள் பல்வேறு காலங்களில் லண்டன் உச்ச நீதிமன்றம் தொடங்கி சென்னை உயர்நீதிமன்றம் வரை நடந்த வழக்குகளும் தீர்ப்புகளும் வெளிவந்துள்ளன. லாம்ப்டன் ஊன்றிய சர்வே கல்லா? சமணர்கள் ஊன்றிய கல்லா? என்ற விவாதமும் நடக்கிறது”.

அது சர்வேக்கல் தான் என்பது உள்ளூரைச் சேர்ந்த எனக்குத் தெரியும். இவர்கள் விளக்கு போடச் சொல்கிறா அந்தத் தூணில் 100 மில்லி எண்ணெய் கூட ஊற்ற முடியாது. அப்படியே 100 மில்லி எண்ணெய் ஊற்றி ஒரு சிறிய திரியைப் போட்டு விளக்கை எரித்தாலும், கீழிருந்து பார்க்கும் எவருக்கும் விளக்கும் தெரியாது. அதோடு அந்த விளக்கு அரை மணி நேரம் கூட எரியாது. இப்படி 100 மில்லி எண்ணெய் கூட ஊற்றி எரிக்க முடியாத சர்வேக்கல்லைத் தான் இவர்கள் தீபத்தூண் என்கிறார்கள்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் செம்பினாலான கொப்பரை மட்டுமே 5.5 அடி உயரம். அதில் ஊற்றி எரிக்கப்படும் நெய்யின் அளவு 2500 கிலோ. அங்கே எரிக்கப்படும் திரியின் அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் 350 மீட்டர் முதல் 450 மீட்டர் நீளம் கொண்ட பருத்தி துணியினாலான திரியை பயன்படுத்துகிறார்கள். இப்படிப் போடும் விளக்கானது சுமார் 11 நாட்கள் வரை எரியக்கூடியது.

அதுபோல் திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படும் கொப்பறையின் அளவு 3.5 அடி உயரம் மற்றும் 2.5 அடி அகலம் கொண்டதாகும். இங்கே பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு சுமார் 300 கிலோ, 100 முதல் 150 மீட்டர் வரை நீளமுள்ள காடாத் துணியே இங்கே திரியாகப் பயன் படுத்தப்படுகிறது. இந்த அளவில் திருப்பரங்குன்றத்தில் போடப்படும் விளக்கானது சுமார் மூன்று நாட்கள் எரியும். நிலைமை இப்படி இருக்க சர்வே கல்லில் தீபத்தை ஏற்றி யாரை எரிக்கப் பார்க்கிறார்கள்.

மேலும் இந் நூலில் 13 விதமான தலைப்புகளை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து ஆழம் காண விளைகிறார். அதில் ‘சனாதானம் வரலாறு’ என்கிற ஒரு தலைப்பு. அந்த தலைப்பை எடுத்தவர், அந்த சனாதனம் என்கிற சொல் எங்கிருந்து வந்தது, எங்கிருந்து தொடங்குகிறது, யார் அந்த சொற்களை முதன் முதலில் பயன்படுத்தியது, அந்த சொற்களுக்குள் என்ன இருக்கிறது? வரலாற்றில் இலக்கியத்தில் யாராவது அந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்களா? என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடுகிறார். தேடலில் கைப்பிடியாக நம்மையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி எங்கும் தேடுகிறார். “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம்.

இச்சொல்லைத் தேட வேண்டிய அவசியமே இல்லை ஆனாலும் தேடுகிறார். ஏன் தேடுகிறார் என்றால், இச்சொல்லை யாராவது தமிழில் பயன் படுத்தியிருக்கிறார்களா? அப்படி பயன் படுத்தியிருந்தால் எத்தகைய பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே தேடுகிறார். இதற்காகவே பழந் தமிழ் இலக்கியங்கள்,பதிணெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உலக பொதுமறையாம் திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றப்படும் சிலப்பதிகாரம் மணிமேகலையிலும் தேடி இல்லையென கண்டடைகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் சனாதனம் என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான் இருந்தாலும் இல்லை என்று பதிவிடும் முன் முறைப்படி தேடி பார்த்தேன் என்கிறார் தோழர் சூர்யா சேவியர்.

சங்க இலக்கியங்கள் எந்த ஒரு தனி சமையத்தையும் தனி ஒரு கடவுளையும் முன்னிறுத்தவில்லை எனினும் திணை சார்ந்த கடவுள்கள் ஆண், பெண் தெய்வங்கள் நம்பிக்கை மரபுகளுக்கான சான்றுகள் சங்க இலக்கியங்கள் இடம் பெறுவதால் சனாதனம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெற்று இருக்கிறதா? என்று தேடிப் பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. அவ்வாறு தேடிப் பார்த்ததில் கிடைத்த விடை ‘இல்லை’ என்பதுதான். திருமுருகாற்றுப்படையிலும் கூட இல்லை.

இப்படித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் இது தேவையில்லாத தேடல் என்று நினைத்து விட வேண்டாம். ஒரு அறிஞன் ஆயிரம் மூலிகைகளைத் தேடியலைந்து சோதனை செய்து விட்டார். அவர் தேடியது கிடைக்கவில்லை. குறிப்பிட்ட அந்த மருந்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவரது நண்பர் கேட்டார், “ஆயிரம் மூலிகைகளில் தேடியும் நீ தேடிய மருந்து கிடைக்கவில்லையே! உன் ஆயுளில் பாதியை இதற்காகவே செலவிட்டிருக்கிறாய்! இது உனக்கு பெரும் தோல்வி அல்லவா ” என்று சொல்லி வறுந்தியிருக்கிறார். ஆனால், அந்த அறிஞர் புன்னகை செய்தபடி,

“அப்படியென்றால் ஆயிரம் முறை நான் தோல்வி அடைந்ததாக நீ கருதுகிறாயா? ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. நான் தேடியது கிடைக்கா விட்டாலும் அந்த மூலிகையில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்திருக்கிறேன். எனவே நான் ஆயிரம் முறை வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். ஆயிரம் மூலிகைகளை அறிந்த அனுபவசாலியாக நான் இருக்கிறேன். எனக்கு பின்வரும் சந்ததிகள் நான் விட்ட பணியை 1001 லிருந்து தொடங்குவார்கள்” என வெற்றி பெருமிதம் கொண்டு கூறினார் . அது போல் தான் தோழர் சூர்யா சேவியரின் ஆய்வும். தேடுதலும். முடிந்த முடிவாய் இல்லை. முடிந்த அளவு தேடி ஆராய்ந்து இருக்கிறார். மேற்கொண்டு ஆயிரத்தி ஒன்றிலிருந்து நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும். ஆராயும் மனப்போக்கையும் நமக்குள் தூவி இருக்கிறார்.அதுபோல்

‘சனாதானம்’ என்கிற சொல் தமிழ் இலக்கியப் பரப்பில் எந்த இடத்திலும் இல்லை. தமிழக மக்கள் புரிந்து தெளிந்து கொள்ளலாம். சனாதானம் என்கிற சொல் இங்கே எங்கே இருக்கிறது என்று கேள்வியும் எழுப்பலாம்.

இப்படி இல்லை.. இல்லை என்று சொல்லி வருபவர், சனாதனம் என்று சொல் இருக்கும் ஒரு தமிழ் பாடலையும் கண்டுபிடிக்கிறார். அதாவது கம்பராமாயணத்தில் இல்லை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் இல்லை. திருவருட்பாவிலும் இல்லை தாயுமானவர் பாடல்களிலும் இல்லை இப்படி எதிலுமே இல்லாதது பாரதியாரின் பாடல்களில் இருக்கிறது.

சதுர் வேதம், சந்திரமௌலி, சர்க்கார், சக்கரம், சக்தி, சங்கரன், சங்கராச்சாரியார் என்ற சொல்லாட்சிகளோடு ‘சனாதனம்’ என்ற சொல்லையும் மகாகவி பாரதியார் தனது கவிதைகளில் பயன்படுத்தி இருக்கிறார். சனாதான, சனாதானமும் ஆகிய பதங்களை பயன்படுத்தி இருக்கிறார். தோத்திரப் பாடல்கள் ஒன்றில் “சத்திய சனாதான ராமா சரணம் சரணம் உதாரா” என்று ராமரை சனாதானா என்று விளிக்கிறார் பாராதியார். “சாமி என இயேசு பதம் போற்றும் மார்க்கம் சமாதானமும் ஹிந்து மதம் இஸ்லாம் மதம் என்று சுயசரிதையிலும் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் சநாதானமும், ஹிந்து மதமும் ஆகிய இரண்டும் ஒன்றே என்று பாரதியார் கருதுவதை அறிந்து கொள்கிறோம். என்றும் கூறியிருக்கிறார். மேலும் தோழர் சூர்யா சேவியர் தேடியதாகக் கூறும் நூல்களின் பட்டியல் மிக நீளமானது.

இந்து சமய அறநிலையத் துறை எப்போது தோன்றியது? அப்படி தோன்றுவதற்கு முன் அது என்னவாக இருந்தது என்னவெல்லாம் செய்தது. என்பதை எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை வரலாறு என்கிற தலைப்பில் தெளிவாக விவரிக்கிறார். தமிழகத்தில் தர்காக்கள் தோன்றிய வரலாறு மிகவும் சுவையாக எழுதியிருக்கிறார். அதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம் இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான வரலாறு, எழத்தென்ற வாகன ஏறா வரலாறு சுப்பிரமணிய வழிபாட்டை புறக்கணித்த பிரமலைக்கள்ளர்களின் எதிர் சமய வரலாறு.

கழுவ நாதன், பொன்னாங்கன், கடசாரி நல்ல குரும்பன் என கருமாத்தூரில் இருக்கும் முனுசாமி கோயிலுக்கும் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்கும் அப்படி என்ன வாய்க்கா தகராறு இருக்க முடியும்? நான் அந்த கதையைக் கூறுவதை விட வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த இனத்திற்கும் இல்லாத சுன்னத் செய்கின்ற வழக்கம் எப்படி கள்ளர்களிடம் வந்தது? முஸ்லிம்களிடம் இருந்த இந்த வழக்கம் கள்ளர்களிடம் வந்ததா? அல்லது கள்ளர்களிடமிருந்த இந்த வழக்கம் முஸ்லிம்களுக்கு சென்றதா? ஆப்பிரிக்க மக்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது, நெல்சன் மண்டேலா சுன்னத் செய்து கொண்டதாக தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

கவரு அருப்பு கல்யாணம் என்பதை கள்ளர்கள் வெகு விமரிசியாக கொண்டாடுவார்கள். இப்போது காது குத்து விழாவை எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதே அளவு கொண்டாடி இருக்கிறார்கள்.

லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஆதித் தந்தையின் முதல் குழுவில் இருந்து வந்த Y- DNA குறியீடு M 130, கிட்டத்தட்ட 55,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவை வந்தடைந்தது.இந்த M130 அடையாளத்தைச் சேர்ந்த தொல் வாரிசுகள் அனைவரும் தற்போது மற்ற ஹேப்லோ குழுவினருடன் குருதி கலப்பிற்கு உள்ளாகி விட்டார்கள். இருப்பினும் தென்னிந்திய மக்கள் தொகையில் சுமார் ஐந்து விழுக்காடு ஆண்களிடம் இந்த 130 அடையாளம் இன்னும் எஞ்சியிருப்பது, தமிழ்நாட்டில் மதுரை அருகே உசிலம்பட்டியில் கண்டறியப்பட்ட விருமாண்டி ஆண்டிதேவரின் மரபணுவோடு M 130 அடையாளம் காணப்பட்டது. இது “விருமாண்டி மரபணு” என்றே அறியப்படுகிறது. மரபணு அறிவியல் மொழியில் Ct-mt168 > c-m130 என்பதே இந்த மரபணுவின் பரிணாம வழித்தடம். என்று மரபணு ஆய்வு கூறுகிறது. இந்த கூற்றின் படி பார்த்தால்

எனவே பழங்குடியின மக்களான கள்ளர்களிடமிருந்தே முஸ்லிம்களுக்கு சுன்னத் என்ற வழக்கம் வந்திருக்கலாம்! இப்படி வந்த பழங்குடியின மக்கள் தங்களுக்கான வரலாறுகளை மறந்து தங்களை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்து என்ற சொல்லுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்து இல்லை, இந்துவாக ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இதற்குத்தான் வரலாறு அறிய வேண்டும் என்பது.

திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் இந்த காலகட்டத்திற்கு மிக மிகத் தேவையான ஆய்வு நூல். உண்மைகளைத் தேடித் தேடி ஆராய்ந்து இந்நூலை அவசர அவசரமாகத் தொகுத்திருப்பதாகவே தெரிகிறது. அந்த அவசரம் என்பது நூலின் நடையில் தெரிகிறது. தோழர் சூர்யா சேவியர் அவர்கள் எழுதிய காவேரி நீரோவியம் நூலின் சிறப்பான நடை இந்நூலில் இல்லை. அவசரமும், சுருக்கமாக எழுதிச் சொல்ல வேண்டும் என்கிற அக்கறை மட்டுமே தெரிகிறது. எனினும் அனைவரும் அறிந்து கொள்ளத்தக்க ஆய்வு நூலைத் தந்த தோழர் சூர்யா சேவியர் அவர்களை வாழ்த்துகிறேன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு 
ஆசிரியர்:
வெளியீடு:
விலை:₹.200
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பொன் விக்ரம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *