சூரியமித்திரனின் ஐந்து கவிதைகள்

Suryamithran Five Poems in Tamil Language. Book Day And Bharathi TV are Branches of Bharathi Puthakalayam Publication.1
எட்டு வயதில்
என்னை
என் அன்னை
எட்டி உதைத்தாள்.
பக்குவமாய்
பாட்டி எனை
மார்பில்
அணைத்தாள்.

வற்றிய மார்பில்
தாய்ப்பால்
தேடினேன்.
இல்லேடா கண்ணூ
என
தன் தாம்பூல எச்சில்
தெறிக்க
முத்தமிட்டாள்
கன்னக்கதுப்பில்.

அதன்வாசம்
இன்னும்
மனதில்
மணக்க
என்
பெருந்தேவி பாட்டியை
நினைவுகள்
நெருட
எனக்கேது
அன்னைதினம்??2. நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு

பேட்டரி அடைத்த
செல்கூட்டை
பிய்த்தெறி.
டிக் டாக்கும்
மீம்ஸ்களுமா
உனது பரந்த
படிப்புலகை ஆள்வது?

எந்நேரமும்
காதுக்கவசமும்
விரல் நுனி பதிதலும்.
தானே பேசி
தலைகீழ் நடத்தலும்.

தொடர்பு சாதனம்
என்ன~ உனது தொப்பூழ்கொடியா?
தாய் தந்த ஆதிப்பாலா?
விட்டெறி சனியனை..
அதன் விதி முடியட்டும்.

உனது
அக்னி சிறகுகளின்
வெளிச்சம்
வான்நோக்கியே
பரவட்டும்..
நல்லறிவை நெறிப்படுத்தி
சமூகத்திற்கு
அறிவு சமை.
தீதும் நன்றும்
செல் தருமே எனினும்
கைபேசியின்றி
தனித்திரு~விழித்திரு.

நீ விழித்தெழும்
திசையே
பூமிக்குக் கிழக்கு.3

எனது
இரவுகனவுத்தேர்தலில்
முகக்கவசம்
அணிந்து
ஓட்டுப்போடவந்தாய்.

என் பெயருக்கு
நேரே
எனது
ரோஜா சின்னத்தில்
வாக்களிக்காமல்
நோட்டாவை
அழுத்திய
“பீப்”சப்தம்
எனது’லப் டப்’
உடன்
இன்னும்
ஒலித்துக்கொண்டு
இம்சை செய்கிறது.4

பால்யவயது
நினைவுகள்
கீறல் விழுந்த
இசைத்தட்டுகளாய்
ஈனக்குரலின்
அபஸ்வரங்கள்.
பக்கத்து பெஞ்ச்
சந்திரா
எட்டிப்பார்த்து
என்னிடம்
ஈயடிச்சான் காப்பி
பண்ணுவாள்.

நான்
மறைக்கையிலே
பலகையைக்காட்டுடா
வாட்ச் தர்றேன்
என்பாள்.

பெரும்பாலான
குப்புராஜ் ஆசிரியரின்
கூர்முஷ்டி
குத்துதலின் வலியை
நான்மறப்பேன்.
அவள்தந்த
வாட்ச்மிட்டாய்
கரைதலில்.5. ஜீவ அமுதம்

நதிமூலம்
போல்
என்
கவிதையை
பார்க்காதீர்கள்.
ஓடும்
அழகின்
யெளவனத்தை
தரிசியுங்கள்.
வளைவு~நெளிவுகளில்
இடிபடும்
நேர்பட்டு ஓடும்
ஓட்டத்தை
கவனியுங்கள்.

காற்றுக்குமிழ்கள்
தோன்றுவதும்
உடைவதுமான
நிலையற்ற
கொப்புளங்களை
உள்வாங்குங்கள்.

மண்சார்ந்த
மரம் சார்ந்த
மருத்துவ குணம்
ஊறும்
மூலிகை நீரை
ஆராதியுங்கள்.

மிதக்கும்
வாசனை மலர்கள்
வத்திகள்
இலை சருகு
மனித -மிருக
சடலங்களின்
தரிசனத்தில்
முகம்
சுழிக்காதீர்கள்.

ஜீவ அமுதம்
என என்னைப் புகழப்பட்ட பிறகு
இந்தக் கவிதா நதியில்
குளித்தெழ
ஆசை உள்ளதா?

அப்படியே
படித்துறைக்கு வாருங்கள்.
உங்கள்
கரம் பற்ற
காத்திருக்கிறேன்.

சூர்யமித்திரன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.