Suryamitran Three Poems in tamil language. Book Day (Website) And Bharathi TV (YouTube) are Branch of Bharathi Puthakalayam.



நீச்சல்பழக
நீரில் குதித்தேன்.
மீன்களை நம்பி.

நீர்ப்பரப்பின் மீது
போட்ட பொரிக்காக
அவை அலைந்து
எனக்கு
அனுமதி மறுத்துவிட்டன.

கால்களற்ற
யானையாய்
காதுகள் உள்ள
சிறகுகளில்
அநாயச
ரவுண்டு அடிக்கும்
திமிங்கலத்திடம்
நீந்தக்கேட்டேன்.

என்னைப்
பிடிச்சுக்கோ என்றது.

நூறு கிலோ மீட்டர்
வேகத்தில்
பிடிமானம்
தளர்ந்து
ஆழ்கடலில்
இலக்கற்றுப்
பயணிக்கிறேன்.

பவளப்பாறை
அருகே
என் சிரசு
முட்டப்போகிறது.

விழித்துப்பார்க்கிறேன்.கனவின்
ஆக்டோபஸ் கரங்கள்
மோதாமல்
என்னை
இழுத்துக்கொண்டது.



காட்சி

பரந்த
ஜவுளிக்கடல்.
பாற்கடலைக் கடைந்து
அமிர்தம்
எடுக்கப் போனவள்
மக்களோட்டத்தில்
கரைந்தாள்.

பக்கவாதத்திலிருந்து
அப்போதுதான்
மீண்டு
மீட்சியின் கைகளில்
நான்.

தாமதமாகும்
எனத்தெரிந்தே
இருக்கை கேட்டேன்
தாலிபோல்
அடையாள அட்டை
அணிந்த
அங்காடிப்பெண்ணிடம்.

அமரச்சொன்ன
இடம்
பெண்கள்
ஆடை சரிபார்ப்பு
அறை முன்புறம்.

சந்தேகக்கண்கள்
பல ஜோடிகள்
முறைத்தே
உள்சென்று மீள
யுவதிகளின்
மருண்ட முகம்
நாகரீகம் அறிந்த
மனதாலும்
காமம் அணியாத
என்னை
எதுவோ பண்ணியது.

அத்தனை
காமமும்
குத்தகை
எடுத்தவன்
ஆணா??



*பாரதியின் கனா*

பாடியவன்
பாட்டைக்கெடுத்தான்
எழுதியவன்
ஏட்டைக்கெடுத்தான்
எதுசரி புலவனே?

பாடாமலும்
எழுதாமலும்
சும்மாக் கிடந்த
சோம்பேறிப் பண்டிதர்கள்
உன் காலத்திலும்
அடிவருடிகளாய்
கிடந்தார்கள்.

கோழைகளாய்
புன்மைத் தேரைகளாய்
இருந்த
சுதந்திர சொரணையற்ற
மக்களை நினைந்து
நெஞ்சு பொறுக்குதில்லையே
என
நிலைகெட்ட மனிதர்களைப்பாடி
பாட்டுசரித்திரம்
படைத்தாய்.

கண்ணம்மாவைக்
காதலித்தாய்
பாஞ்சாலியைப்
பாதுகாத்தாய்
மொழிக்கான
உயிர்மூச்சு
உன்பாடலில்
இன்னமும்
எங்கள் செவிகளில்
எதிரொலிக்க..

ஜெயபேரிகை
கொட்டடா
என்றாய்.

ரோஸ்நிற
பஞ்சுமிட்டாய்
எல்லோர் கைகளிலும்
ஏந்தி நிற்கிறோம்
சுதந்திரம்
எனும் பெயரில்.

பட்டவலிகளை
துறந்த தியாகங்களை
செய்த மறவர்களை
போற்றாத
இந்த தேசம்
நீ கண்ட கனாவைக்
கண்டுகொள்ளாத
இந்த
பாரத மணித் திருநாடு
இன்னும்
பழம் பெரும் நாடுதான்.

நான் அதன்
புதல்வன் இல்லை..

சூர்யமித்திரன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *