சிந்திய குருதியில் வந்த சுதந்திரம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
ஆசிரியர் : கவிஞர் பாரதன்.
பதிப்பகம்: நேஷநல் பப்லிஷர்ஸ்.
பக்கம் : 192
விலை : ரூ 190
சுதந்திரப் போராட்டத்தின் உள்ளும் புறமும்
அந்நிய ஆதிக்கத்தில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற்றது நூற்றுக்கணக்கான வீரத் தியாகிகளின் கடுமையான உழைப்பாலும் மரணத்தின் பெருவெளிதான் தான் அடையப் போகும் இறுதி எல்லை என்று தெரிந்தும் தயங்காமல் உள் நுழைந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் தமது வீராவேசத்தை நிலைநிறுத்தி எதிர்வந்த மரணக் கயிறுகளை முத்தமிட்டு ஏற்றுக் கொண்டும் செயல்பட்ட அளப்பரிய தியாகத்தினாலும்தான் என்பதை இந்நூல் பிரகடனப் படுத்துகிறது. அஹிம்சையால் அந்நியர்களை அடிபணிய வைக்க முடியும் என்று நம்பிய அண்ணல் காந்தியடிகளைத் திணறடித்து, காந்தியடிகளின் அனுதாபிகளை வன்முறைப் பக்கம் இழுத்துவந்தது ஆங்கில அரசு. இது அவர்களின் கௌடல்ய சூழ்ச்சி என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது..
”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்த அடுத்த நொடி காந்தியடிகள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அரசு கூறிய காரணம் “அவர்கள் வன்முறையைத் தூண்டினார்கள்” என்பது. துப்பாக்கிகளை ஏந்திப் போர் புரிய காந்தியடிகள் அழைப்பு விடுத்தார் என்று ஆங்கில ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்ததை நம்பியது இளைஞர் படை. வன்முறை செய்யத் தூண்டியதால்தான் அவர் கைது செய்யப்பட்டார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
காந்தியடிகள் சொல்லாததை அறிவிப்பது காந்தியின் அஹிம்சா தர்மத்தின்மீது பற்றுக் கொண்ட மக்களை, அவருக்கு எதிராகத் திருப்பும் என அரசு நம்பியது. ஆனால் என்ன துயரம் என்றால் “காந்தியடிகளே சொன்ன பிறகு நாம் ஏன் வாளா இருக்கவேண்டும்? தூக்குங்கள் ஆயுதத்தை என இளைஞர் பட்டாளம் வீறுகொண்டு எழுந்தது. இதைக் கண்டு தனது ராஜ தந்திரம் பொய்த்துவிட்டது எனப் புரிந்துகொண்ட ஆங்கில அரசு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. அஹிம்சையின் நியாயங்கள் கூட பாய்ந்தோடிய குருதி வெள்ளத்தின் மீதுதான் நிர்மாணிக்கப்பட்டது.
“வெள்ளையனே; வெளியேறு” என்ற அஹிம்சாவழிப் போராட்டம், “செய்; அல்லது செத்துமடி” என்ற பிரகடனத்தின் வழியாக ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் அடைந்தது.
ஆங்கில அரசு இங்கிலாந்தில் இருந்து கப்பல் கப்பலாய் இந்தியாவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தத்து. அது கெடாமல் இருப்பதற்காக மீன்பெட்டிகள் மேல் உப்பு மூடைகளை ஏற்றிவிட்டது. மீன் விற்பனையோடு சேர்த்து உப்பு விற்பனையையும் இந்தியர்கள் தலையில் சுமத்தியது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நம் நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட போது இங்கிலாந்து உப்பை வாங்க இந்தியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறைந்த விலையிலும் நிறைந்த தரத்திலும் நம் நாட்டில் உப்பு கிடைத்தது. உப்பு உற்பத்தியாளர்களும் பயனாளிகளும் கோபமடைந்து, அந்நிய உப்பை நிராகரித்து உள்நாட்டு உப்பையே விற்கவும் பயன்படுத்தவும் செய்தனர்.
இந்த எழுச்சியை அடக்கும் நோக்கோடு உப்புக்கு வரி விதித்தது அங்கில அரசு. சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த அநியாயத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
இதற்குத் தலைமைதாங்கி அண்ணல் காந்தியடிகள் தண்டி யாத்திரையை ஆரம்பித்தார். ”அது உப்பு சத்தியாகிரகப் போராட்டம்” என்று வரலாறு பதிவு செய்துள்ளது. இந்தப் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கணக்குப் போட்ட அரசு உப்பு சத்யாகிரகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. எந்த ஒரு போராட்டமும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும் என்பதே போராட்ட இயக்கத்தின் வரலாற்று இயங்கியல். மீனைப் பதப்படுத்திய கழிவு உப்பை நிராகரித்து இந்த்கிய உப்பைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்; உப்பு வரியை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு வைஸ்ராயைப் பேச்சு வார்த்தைக்கு வரச் செய்வதற்காக, புரட்சி இயக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினர்.
சந்திரசேகர ஆசாத் என்ற புரட்சியாளரும் அவரது குழுவினரும் கூடி ஆலோசனை நடத்தி ஆங்கில அதிகாரிகள் மேல் குண்டு வீசுவது என முடிவெடுத்தனர். அப்படிச் செய்தால்தான் மைய அரசு பேச்சுவார்த்தைக்கு வரும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். களத்திலும் இறங்கினார்கள். விளைவாக; “நாள்தோறும் வெள்ளைத் துரைமார்களின் குருதி நிலத்தில் சிந்தியது; பஞ்சாப் மாநில ஆளுநர் சுடப்பட்டார்; அடுத்த குண்டு பம்பாய் ஆளுநர் மீது பாய்ந்தது. வங்க மாநில ஆளுநருக்கும் துப்பாக்கித் தோட்டாக்கள் வரவேற்பளித்தன; உத்திரப் பிரதேசக் காவல்துறை அதிகாரி துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.” இந்த நூலில் உள்ள “பாம்புல் புக்காராவுக்குச் சொந்தக்காரன்” என்ற கட்டுரை இப்படிப் பதிவு செய்கிறது.
ஆங்கில அதிகாரிகள் ரத்தச் சகதியில் வீழ்ந்து புரள்வது கண்டு அரசு பதட்டமடைந்தது. புரட்சியாளர்களின் கை ஓங்காமல் இருக்க அஹிம்சாமூர்த்தியிடம் சரணடைந்தது ஆங்கில அரசு. அதாவது உப்பு சத்தியாகிரகத்துக்குப் பேச்சுவார்த்தை மூலம் முற்றுப் புள்ளி வைக்க ஒப்புக் கொண்டதோடு உப்பு வரியையும் நீக்கியது. ஆளும் அதிகார வர்க்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு வரவைக்கவே துப்பாக்கித் தோட்டாக்கள் தேவைப் படுகின்றன.
இன்னொரு முக்கியக் கட்டுரை “எப்படிச் சாவது எனக் கற்றுக் கொடுத்தவன்.”
இன்று தொலைக்காட்சிகளிலும் அச்சு ஊடகங்களிலும் அதிகம் விவாதிக்கப் படுவது இந்திய அரசியல் விடுதலைக்காக யார் அதிகம் போராடினார்கள் என்பதுதான். ஆர் எஸ் எஸ் என்ற மதவாத அமைப்பின் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் தாங்கள்தான் உண்மையான தேசபக்தி உடையவர்கள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் உரத்துப் பேசுகிறார்கள். சாவர்க்கர் என்பவரை உதாரணம் காட்டுகிறார்கள்.
அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் அந்தமான் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தது உண்மை. அந்த சித்திரவதை தாங்காமல் மூன்றுமுறை ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையானது இன்னோர் உண்மை. அதன்பின் அவர் இந்துத்துவா சனாதனவாதியாக மாறி ஆங்கில அரசுக்குச் சேவகம் செய்யத் தொடங்கினார். ஓய்வூதியத் தொகையும் பெற்றார்.
1925ல் ஆர் எஸ் எஸ் முழு வடிவம் பெற்ற இயக்கமாக மாறியது. ஆனால் அதற்கான முன்னோடிகள் பல்லாண்டு காலமாகத் தனித்தனியாக இயங்கி, ஆங்கில அரசுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் முக்கியமானவர் பஞ்ஜாப் மாநிலத்தில் வாழ்ந்த செல்வந்தரான பியாரிலால் திங்க்ரா. ஆங்கில அரசுக்கு விசுவாசமாகச் செயல்பட்டுத் தன் வாழ்வை வளப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு சனாதனவாதி என்பதும் மதவாத அமைப்பு ஒன்று உருப்பெறுவதற்கு ஆதிப் புள்ளி வைத்தவர்களில் ஒருவர் என்பதும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று ஏடுகளில் அழுத்தமாய்ப் பதிந்திருக்கிறது.
ஆனால் அவரின் இளைய மகன் மதன்லால் திங்க்ரா இங்கிலாந்துக்குப் படிக்கப் போன இடத்தில் சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்களோடு பழகி, தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னைத் தியாகம் செய்ய முன்வந்தார். ஏகாதிபத்திய சித்தாந்தத்தை வேரறுப்பது ஒருவகைப் போராட்டம் என்றால் அதை அமல்படுத்துகிற அதிகார பீடத்தை, அந்த பீடத்தில் அமர்ந்திருப்பவர்களைப் போட்டுத் தள்ளுவது இன்னொரு வகைப் போராட்டம்.
லெஃப்டினெண்ட் கரனல் கர்சான் வில்லி இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில அதிகாரி. இந்திய சுதந்திரப் போராட்ட சமஸ்தான மன்னர்களைக் கொடுமைப் படுத்தி, ஆங்கில அரசுக்கு அடிபணிய வைத்தவர் வரி அதிகம் போட்டு அவர்களைச் சுரண்டினார் என்பதை அறிந்து வைத்திருந்தார் மதன்லால். கர்சான் வில்லி பதவி உயர்வு பெற்று இங்கிலாந்து சென்று இந்தியாவுக்கான அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.
இந்தியாவில் இருந்து படிக்க வரும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆங்கில விசுவாசிகளாக மாற்றினார் என்பதோடு சுதந்திர எண்ணம் கொண்ட இளைஞர்களோடு பழகவிட்டு, இந்திய மாணவர்களை இந்தியர்களுக்குத் துரோகம் செய்யத் தூண்டினார். இதையறிந்த மதன்லால் அவரைத் தீர்த்துக் கட்டுவது என முடிவெடுத்தார். இவர் குடும்பம் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமானது என்பதால் மேல்மட்ட அதிகாரிகளோடு பழகும் வாய்ப்பைப் பெற்றார் மதன்லால் திங்க்ரா. 1909ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்சன் வில்லி வெளியில் வந்த்போது அவரைக் கத்தியால் குத்திவிட்டுச் சரணடைந்தார். இந்திய ஆன்மாவுக்குத் துரோகம் இழைத்த ஆங்கில ஆன்மா சரிந்ததுகண்டு திங்க்ராவின் முகம் பூத்துக் குலுங்கியது.
மதன்லால் திங்க்ராவுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டு அது 11-09-1909 அன்று நிறைவேற்றப் பட்டது. அப்போது அவருக்கு வயது 26. மதவாதிகளான அவரின் தந்தையும் சகோதரனும் திங்க்ராவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். “ஆங்கில அதிகாரியைக் கொன்ற அவன் என் மகன் இல்லை” எனப் பிரகடனம் செய்தார். “அவன் ஒரு தேசத்துரோகி” என்றார். கள்ளிக்காட்டில் முளைத்த அகில்போல மதவாதக் குடும்பத்தில் உதித்த புரட்சிவாதி மதன்லால் திங்க்ரா. பியாரிலால் திங்க்ராவின் வழித்தோன்றல்களாகிய ஆர் எஸ் எஸ் இயக்கவாதிகள் இன்றைக்கும் மதன்லால் திங்க்ராவை “நம்பிக்கை துரோகி” என்றே பேசுகின்றனர்.
இந்தக் கட்டுரையையும் மதன்லாலின் வாக்குமூலத்தையும் வாசிக்கும்போது குருதி கொதிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த நூலில் 13 கட்டுரைகள் இருக்கின்றன. உயிரைத் தியாகம் செய்த இளைஞர்கள் பற்றிய அத்தியாயங்கள் அதிகம்.
போராளியாய் இயங்குவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று உணர்ச்சியை மையச் சிந்தனையாகக் கொண்டு போரிட்டு மாய்வது; இன்னொன்று அரிவியல்பூர்வமாகச் சிந்தித்து, அதிகச் சேதாரம் இல்லாத போராட்டப் பாதையை வகுத்து அதன்வழியில் பயணிப்பது. அப்படிச் சிந்தித்துச் செயல்பட்ட மகத்தான தலைவர் நரேந்திரநாத் என்ற இயற்பெயர் கொண்ட “மனவேந்திர நாத் ராய். (எம் என் ராய்.) இந்த நூலில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள பக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட அத்தியாயம் அவருடையது.
அவர் சீனாவிலும் மெக்சிகோவிலும் நடந்த புரட்சி இயக்கங்களை நேரில் சென்று கண்டு போராட்ட இயல்புகளை உள்வாங்கி அதை இந்தியாவில் அமல்படுத்த சபதம் கொண்டார். அவர் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம், இந்திய சுதந்திரத்துக்குத் துணைவர்களாக ஃபாசிஸ்டுகளோ ஏகாதிபத்திய சுரண்டல்வாதிகளோ இருக்க முடியாது என்பதுதான். அதனால்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஹிட்லரையோ ஜப்பான் அரசையோ நாடாமல் சோஷலிச அரசு என்ற புதுமையான அரசை நிறுவிய வ்ளாடிமிர் இலியிச் லெனின் அவர்களைச் சந்தித்தார்.
ஜோசஃப் ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியோரையும் கண்டு பேசி ஆலோசனை கேட்டார். இந்திய நில அமைப்புக்கும் மக்கள் மனோபாவத்துக்கும் தகுந்து போராட்ட இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அந்தத் தலைவர்கள் அறிவுறுத்தினர். அதிகார வர்க்கத்தில் மூழ்கிக் கிடக்கும் மனித உயிர்களைக் கொல்வது முக்கியமல்ல; புரட்சிக்குத் தேவையான பொருளாதாரத்தைத் திரட்டுவதுதான் முதல் தேவை.
இதை உள்வாங்கிய எம். என் ராய் 1907 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டார். அதுதான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த முதல் கொள்ளைச் சம்பவம். உத்திரப் பிரதேசம் சிக்கிரிப் போட்டா என்ற புகைவண்டி நிலயத்தில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரைத் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு, அந்த அறையில் இருந்த இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த முழுப் பணமும் கொள்ளையய்டிக்கப் பட்டது. கொள்ளையடித்தவர்கள் ராய் தலைமையிலான குழுவினர்தான் என்ற சந்தேகம் போலிசுக்கு வந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் குற்றம் நிரூபிக்கப் படவில்லை. அதனால் ராய் விடுதலை செய்யப்பட்டார்.
எம் என் ராய் இந்தியாவின் அரசியல் விடுதலையும் பண்பாட்டு விடுதலையும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும் என விரும்பினார். அதற்கு அடித்தட்டு மக்களின் கூட்டு இயக்கம் அவசியம். ஒவ்வொரு தனிமனிதரும் சோஷலிச சிந்தனை பெறுவதற்கான புறச்சூழலை உருவாக்க முயன்றார். அவருடன் வேறுசில புரட்சி இயக்கத் தோழர்களும் ரஷ்யா சென்று பாடம் படித்து, கம்யூனிசக் கொள்கைகளை ஆழமாய் உள்வாங்கி, பல முற்போக்கு நூல்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து மக்களைப் படிக்கத் தூண்டி அணிதிரட்டினர். சோஷலிச சித்தாந்தவாதிகளைக் கண்டு அரசு அஞ்சியது. புறவெளிப் போராளிகளைவிட அகமுகப் போராளிகள் ஆபத்தானவர்கள் என்று அர்சு கருதி, கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகளைச் சோடித்து சிறையில் தள்ளியது. கட்சியைத் தடை செய்தது. ஆனாலும் அவர்கள் அசரவில்லை. காங்கிரசோடு ஐக்கியமாகிக் களத்தில் இறங்கிப்போராடினர்.
”புறவெளிப்புரட்சி, சோஷலிசம், ஜனநாயகம் என அனைத்துத் துறைகளிலும் கால் பதித்த எம் என் ராய் சுதந்திர இந்தியாவில் 1954ஆம் ஆண்டு தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்” எனக் குறிப்பிடுகிறது நூல்.
மேலும் பல போராளிகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது நூல். சாதாரண மனிதரான மயிலண்ணன் ஆங்கிலக் கோட்டைக்குள் நுழைந்து அவர்களின் கண்களில் விரவிட்டு அலசிய பாங்கை மயிர்க்கூச்செரியும் விதமாய்ச் சித்தரித்துச் செல்கிறது. கல்கி போன்ற எழுத்தாளர்களுக்கு மயிலண்ணன் பற்றிய சாகசக் குறிப்புகள் கிடைத்திருக்குமானால் இன்னொரு நெடுநீளமான வரலாற்று நாவல் தமிழ் வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைத்திருக்கும்.
நாம் போராடிப் பெற்ற அரசியல் சுதந்திரத்தை அன்னிய சித்தாந்தவாதிகளிடம் இழந்துவிடாமல் இருக்க இதுபோன்ற நூல்களை அனைத்து இளைஞர்களும் அவசியம் வாசிக்க வேண்டும். எழுத்தாளர் பாரதன் பாராட்டுக்குரிய
தேனிசீருடையான்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.