சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம்
வாருங்கள் ! நாம் வாழும் இவ்வுலகைக் காக்க உறுதி ஏற்போம்!
இயற்கை சீற்றங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இன்றைக்குள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அவற்றை முன்னெறியும் திறனை நாம் தற்போது பெற்றுள்ளோம். சமீப காலத்தில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கும் மனித செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராய்வதன் வழியே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மனித இனத்தை நீடித்திருக்க செய்ய இயலும் என்பதே உண்மை.
பொறியாளர், வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், முனைவர், எழுத்தாளர் தோழர் சரவணன் பார்த்தசாரதி எழுதியுள்ள “சுற்றுச்சூழல் தவறுகளும்- பாடங்களும்” எனும் நூல் சமீபத்தில் வந்துள்ள சுற்று சூழல் குறித்த மிக முக்கியமான படைப்பாகும்.
50 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்து கட்டுரைகளுமே மிகுந்த கவனமாக பல்வேறு தகவல்களுடன் நமக்கு வழங்கி இருக்கிறார் நூலாசிரியர். மிக எளிய நடையில் நூலை படைத்திருப்பது மிகுந்த கவனத்திற்குரியது.
எல் நினோ உருவாக்கிய பஞ்சம், அமேசான் நதியில் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், வாழ்வாதாரத்தை பாதிக்கும் தங்கச்சுரங்கங்கள், கடற்சூழ்நிலை சீரழிக்கும் போர்க்கப்பல்கள், சீர்கேடு அடைந்து கொண்டிருக்கும் இமயமலை, கடலுக்குள் கலந்த அணு உலை கழிவு நீர், கவலை அளிக்கும் காட்டுத்தீ நிகழ்வுகள், பனை எண்ணைக்கு மாற்று, கடல் போக்குவரத்தினால் ஏற்படும் கார்பன் உமிழ்வு, கடலுக்குள் இருக்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், தரிசு நிலத்தை சோலையாக்கியவர், மரத்தால் வரும் மாற்றம், சூழலுக்காக போராடும் சட்ட வல்லுனர், மிகப்பெரிய மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், சுற்றுச்சூழல் – கண்டுபிடிப்புகள், கனவுகள் இது போன்ற முக்கியமான தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்று இருப்பது நம்மை வாசிக்க தூண்டுவதோடு சுற்றுச்சூழல் குறித்த புரிதலை நமக்கு உருவாக்கித் தருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் நாம் என்னவற்றையெல்லாம் அழித்துக் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் கேடு விளைவிக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது இதில் உள்ள கட்டுரைகள்.
அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யாமல் எரிசக்தி துறையில் நாம் எதையும் சாதிக்க இயலாது. இல்லையா?
அன்றாட வாழ்வில் நம்மிடையே கலந்து வாழ்ந்து கொண்டுள்ள நுண்நெகிழிகளை எவ்வாறு அழிக்கப் போகிறோம்?
சர்வதேச அளவில் கட்டப்பட்டு உள்ள நீர்த்தேக்கங்களால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக எப்போது குரல் எழுப்பப் போகிறோம்?
500 பேர் மட்டுமே வசிக்கும் கோகோடா தீவு. பசுமையாக இருந்த இந்த தீவில் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டதால் வறட்சியால், குடிநீர் பஞ்சத்தால் மிகவும் பாதிப்படைந்தது. இத்தகைய பாதிப்பை உணர்ந்த முபாரக் மூஸா எனும் தனி மனிதர் 20 லட்சம் மரங்களை தீவில் நட்டு இன்று பசுமையாக மாற்றியதோடு, நீர்மட்டமும் உயர்ந்து விவசாயம் செய்து பெண்களின் வருமானத்தை அதிகரித்ததோடு, பொருளாதாரத்தில் மிகவும் மேம்பட்டு உள்ள தீவாக மாறி உள்ளது.
இதுபோன்று இந்தியாவில் சுற்றுலா சூழலை பாதுகாக்க என்ன செய்யப் போகிறோம்?
எந்த ஒரு பிரச்சனைக்கும் இன்னொரு நாடு தீர்வு கண்டுபிடிக்கட்டும். நாம் அதை பயன்படுத்திக் கொள்வோம் என்று இன்னும் எவ்வளவு நாட்களுக்கு காத்திருக்கப் போகிறோம்?
ஆராய்ச்சியை, அதற்கான மனநிலையை, ஊக்கத்தை உருவாக்க முடியாத ஒரு நாடு எப்படி தன்னுடைய சூழியல் சிக்கல்களை தீர்க்க போகிறது? பெயரளவில் சுற்றுச்சூழல் விழாக்களை கொண்டாடி, கடந்த ஆண்டுகளில் மரம் நட்ட அதே இடத்தில் மீண்டும் மீண்டும் மரம் நட்டுக்கொண்டு இருப்பதால் சூழியல் பிரச்சனைகளை தீர்க்க இயலாது.
இந்திய அரசு, உயர் கல்விக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் பெரும் நிதியை ஒதுக்குவதும், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதும் தான் இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பிரதான பணியாக அமையும். சுகாதாரமான சுற்றுச்சூழலை கொண்டு வருவதற்கும் பேணுவதற்கும் கடுமையான சட்டங்களையும், தண்டனைகளை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளியில் பயிலும் போதே இது குறித்த பாடங்கள் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் பொது இடங்களில் குப்பை போடுவது, சிறுநீர் கழிப்பது, சிகரெட் புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். குழந்தைகளிடம் இவ்வாறு பயிற்றுவிப்பதால் இவர்கள் வளரும் போது இது போன்ற தவறுகளை செய்ய மாட்டார்கள் என்பது உறுதி.
அறிவியல் துணையுடன் சுற்றுச்சூழலுக்கும் மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு விலையை வைக்காத சூழலை உருவாக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் இந்த நூலை படிப்பதன் மூலம் உறுதி எடுத்துக் கொள்வது பொருத்தமான ஒன்றாகும்.
இந்நூலை கல்லூரி பள்ளிகளில் பாடத்திட்டமாக கொண்டுவருவது இன்றைய அரசுகளின் கடமை ஆகும். குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற நூலை வாசிப்பதன் மூலம் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பெரும் பணியைச் செய்து இந்நூலை சிறப்பாக கொண்டு வந்த நூலாசிரியர் முனைவர் சரவணன் பார்த்தசாரதிக்கும் நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் பேரன்பு வாழ்த்துக்கள்.
நூலின் தகவல்கள் :
“சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும்”
நூலாசிரியர் : முனைவர் சரவணன் பார்த்தசாரதி
விலை : ரூபாய் 120/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சென்னை-600018
தொடர்பு எண்: 04424332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.