ஈரானில் ஏகாதிபத்திய எல்லை மீறல் (American Imperialist transgression in Iran) - சூவ்ரத் ராஜு (தமிழில்: எலெக்ட்ரா) | www.bookday.in

ஈரானில் ஏகாதிபத்திய எல்லை மீறல் – ஆங்கில மூலம்: சூவ்ரத் ராஜு (தமிழில்: எலெக்ட்ரா)

ஈரானில் ஏகாதிபத்திய எல்லை மீறல்

ஆங்கில மூலம்: சூவ்ரத் ராஜு
தமிழில்: எலெக்ட்ரா

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த2019ஆம் ஆண்டின்ஜூன் மாதக்கடைசி வாரத்தில், ​​அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் தொற்றியிருந்தது. 2019ஆம் ஆண்டுஜூன் மாதம் 20ஆம் நாளன்று, ராணுவம்,கடற்படை மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கானதுருப்புக்களை அணிதிரட்டிய அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரானியஎல்லைக்கருகே பறந்து கொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதை ஒரு சாக்காகப்பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அரசு, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியது. ஒரு பெரும்போருக்கு இட்டுச் செல்லக்கூடிய இத்தகைய அச்சுறுத்தலை அமெரிக்கா எதிர்காலத்தில் செயல்படுத்திவிடக் கூடும்.

இந்தப் பதற்றங்களின் தோற்றுவாய் பெரும்பாலும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் பிணக்கிலிருந்து தொடங்குகின்றது. இருப்பினும், ஈரான் அரசை வீழ்த்துவதற்கும் மேற்கு ஆசியாவின் மீது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்குமான அமெரிக்காவின் நாற்பதாண்டுகால முயற்சியின் பின்னணியிலிருந்து, இந்த ஈரானிய அணுசக்தி விவகாரத்தையும் தற்போதைய போர்-பதற்றங்களையும் பார்க்கவேண்டும்.

இத்தகைய கண்ணோட்டத்திலிருந்துதான் ஈரானிய அணுசக்தி விவகாரத்தின் வரலாற்றை இக்கட்டுரையில் ஆய்வு செய்கின்றேன். அமெரிக்காவிலும் ஈரானிலும் உள்ள அரசியல் போக்குகள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதால்,இந்த வரலாறு ஒரு படிப்பினையாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் ஆயுதக் கட்டுப்பாட்டு விவகாரங்களைத் தங்களுக்குச் சாதமாக இல்லாத நாடுகளைச் சீர்குலைப்பதற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றன என்பதையும் இக்கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இவ்விவகாரத்தில் இந்திய அரசின் நிலப்பாடுகள் குறித்த சில கருத்துகளுடனும், இந்நிகழ்வுகள் எங்கே இட்டுச்செல்லக் கூடும் என்பது குறித்த சுருக்கமான கண்ணோட்டத்துடனும் நான் இக்கட்டுரையை இறுதி செய்யவுள்ளேன்.

பின்னணி

ஈரானிய அணுசக்தித் திட்டம், அமெரிக்கா-ஈரான் இடையிலான பெரும் முரண்பாடு- ஆகியவற்றின் தோற்றுவாய்களை அமெரிக்க அதிபர் ட்வைட் ஐசனோவர் எடுத்த இரண்டு தனித்தனி முடிவுகளிலிருந்து கண்டறியலாம். 1953ஆம் ஆண்டில் ஐசனோவர் தலைமையிலான நிர்வாகம் ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மொசாடக் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு ஷா முகமது ரேசா பஹ்லவியை ஆட்சியில் அமர்த்தியது.

அதே ஆண்டில், ஐசனோவர் ‘அமைதிக்கான அணுக்கள்‘ (Atoms for Peace) என்ற திட்டத்தைத் துவங்கினார். இத்திட்டத்தில் அமெரிக்க அரசு, பனிப்போரில் உத்திரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட நாடுகளுடன் அணுசக்தி தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொண்டது. அணுசக்தி மூலப்பொருட்கள் ‘மனிதகுலத்தின் ஆக்கப்பூர்வ நோக்கங்களுக்குப் பயன்படும்’ என்று ஐசனோவர் இக்கொள்கையை நியாயப்படுத்திய போதிலும், மேற்கத்திய உத்திரீதியான பகுப்பாய்வாளர்களைத் தவிர வேறு எவரும் இந்தச் சொல்லாடலைத் தீவிரமாக எடுத்துக்கொள்வது கடினம். அணுசக்தி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் அதே பிளவுறு-மூலக்கூறுகளைக் கொண்டுஅணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் இயலும் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தின் ’இரட்டைப் பயன்பாட்டுத் தன்மை’ குறித்து அக்காலத்திலேயே நல்ல புரிதல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய நாடாளுமன்ற விவாதங்களில் அணு-சக்தி ஆராய்ச்சியையும் அணு-ஆயுத ஆராய்ச்சியையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை’ என்று ஜவஹர்லால் நேரு ஒப்புக்கொண்டிருந்தார்.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட சில வெளிநாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான “அணு ஆயுத வரம்புநிலையை அடைவதற்கு வாஷிங்டன் எடுத்த ஒரு திட்டமிட்ட முடிவாகவே “அமைதிக்கான அணுக்கள்” கொள்கையைக் கருதவேண்டும். அதாவது தம்மிடம் உண்மையில் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லையென்றாலும் கூட,தேவைப்படும்பட்சத்தில் அவற்றைமிகத் துரிதமாக உற்பத்தி செய்துகொள்ளக்கூடிய நிலை. இதன் மூலம் அந்நாடுகளின் விசுவாசத்தைப் பெறலாம் என்றும், அதே நேரத்தில் அந்நாடுகள் மீது ஒருவிதக் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் அமெரிக்கா நம்பியது. அணுக்கரு தொழில்நுட்பத்தில் இருந்த அமெரிக்கத் தலைமையை,தங்களுக்குச் சாதகமான வணிக நலன்களுடன் ஒத்துப்போகக்கூடிய, அணு உலைகளை உலகளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பாக வளர்ந்து வரும் அணுசக்தி விநியோகஸ்தர்களும் கருதினர்.

“அமைதிக்கான அணுக்கள்” திட்டத்தின் கீழ், அமெரிக்காவும் அதன் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஷா மன்னரின் ஆட்சி கால ஈரானுடன் தொடர்ந்து அடுத்தடுத்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன. 1967ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈரானுக்குத் தனது முதல் அணு உலையை வழங்கியது — இதுவே தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, ‘உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ பயன்படுத்தப்படக்கூடிய ‘தெஹ்ரான் அணு ஆராய்ச்சி உலை‘.  மேலும், ஷா மன்னர் யூரோடிஃப் (Eurodiff) எனும் ஐரோப்பிய அணு உலை எரிபொருள் நிறுவனத்திடமிருந்து 10 விழுக்காடு பங்குகளைப் பெற்றார். அத்துடன் பிரான்சில் உள்ள ‘ட்ரீகாஸ்டன்’ (Tricastin) அணுமின் நிலையக் கட்டுமானத்திற்கு உதவுவதற்கான ஒரு பில்லியன் டாலர் கடனுக்கும் ஒப்புதல் அளித்தார்6. அதே காலகட்டத்தில், மேற்கு ஜெர்மன் நிறுவனமான ‘கிராஃப்ட்வர்க் (Kraftwerk) யூனியன்’ ஈரானில் ‘புஷெர்’ (Bushehr) அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கத் துவங்கியது7.

1968ஆம் ஆண்டில் ஈரான் ‘அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில்’ (Non Proliferation Treaty-NPT) கையெழுத்திட்ட போதிலும், அப்போதைய ஷா மன்னரின் ஆட்சி தனது அணு ஆயுதப் பேராசைகளை மறைக்க முற்படவில்லை. அமெரிக்கா மற்றும் கனடாவின் உதவியுடன் இயங்கிய ‘சைரஸ்’ (CIRUS) ஆராய்ச்சி அணு உலையிலிருந்து பெறப்பட்ட பிளவுறுப் பொருட்களைக் கொண்டு 1974ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்திய உடனேயே, ஷா ஒரு நேர்காணலில், “சந்தேகத்திற்கிடமின்றி, எவரும் நினைப்பதை விடவும் மிக விரைவாக ஈரான் அணு ஆயுதங்களைப் பெறும்”  என்று கூறினார். சில நாட்களுக்குப் பிறகு, ஷாவின் தலைமையிலான அரசு அந்த நேர்காணலின் உள்ளடக்கங்களை மறுத்தது. மேற்கத்திய அரசுகள் அந்த மறுப்பை ஏற்றுக்கொண்டதோடு, ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் மக்கள்-நலப் பயன்பாட்டு நோக்கங்களை மட்டுமே கொண்டது என்ற பாசாங்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தன.

இஸ்லாமியப் புரட்சி

1979ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி இரு தரப்பினரின் அணுகுமுறையிலும் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஈரானின் புதிய அரசு அணுசக்தித் திட்டத்தைக் குறைப்பதற்கு முடிவு செய்ததுடன், இருபதுக்கும் மேற்பட்ட அணு உலைகளைக் கட்டுவதற்கான ஷா மன்னரின் முந்தைய திட்டங்களையும் ரத்து செய்தது. அயதுல்லா கமேனி அணுசக்தித் திட்டத்தை “சாத்தானின் வேலை” என்று கூறியதாகவும் பின்னர் இந்த நிலப்பாட்டிற்கிணங்க, அணு ஆயுதங்களுக்கெதிராக ஒரு ஃபத்வா-வை பிறப்பித்தாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம், மேற்கத்திய நாடுகளுக்கு அணுசக்தித் தொழில்நுட்பத்தின் ‘இரட்டைத் தன்மை’ குறித்துத் திடீரென மீண்டும் நினைவுக்கு வரவே, எதிர்கால அணுசக்தி ஒத்துழைப்புக்கான திட்டங்கள் எப்படியும் ரத்து செய்யப்பட்டதாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் மேற்கத்திய நாடுகளும் நிறுவனங்களும் ஏற்கனவே இருந்த வணிக ரீதியான அணுசக்தி ஒப்பந்தங்களைக்கூட மதிப்பதற்கு மறுத்துவிட்டன. ஏற்கனவே ஈரான் சுமார் 8 பில்லியன் ஜெர்மன் மார்க்குகளை முதலீடு செய்திருந்த ‘புஷெர்’ அணுமின் நிலையப் பணிகளை முடிப்பதற்கு ஜெர்மனி மறுத்துவிட்டது.தெஹ்ரான் ஆராய்ச்சி அணு உலையை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு அமெரிக்காவும் மறுத்து விட்டது. ‘ட்ரீகாஸ்டன்’ ஆலைக்காக வழங்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது அந்த ஆலையின் உற்பத்தியில் ஒரு பகுதியைக்கூட ஈரானுக்கு வழங்கவோ பிரான்ஸ் மறுத்துவிட்டது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சிகள் வெறும் ஒப்பந்த மீறல்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அமெரிக்க ஆதரவுடன் ஈராக், ஈரானைத் தாக்கியபோது, அதன் விமானப்படை புஷெர் அணுமின் நிலையத்தின் மீது பலமுறை குண்டுவீசித் தாக்குதல் தொடுத்தது.

ஈரானிய ஆய்வாளர்களின் வாதத்தின் படி, வர்த்தகரீதியான காரணங்களுக்காக மட்டுமே புஷெர் மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை முடிப்பதும், மருத்துவப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த தெஹ்ரான் அணு ஆராய்ச்சி உலைக்கான எரிபொருள் ஆதாரத்தைக் கண்டறிவதும் ஈரானுக்கு இன்றியமையாததாக இருந்தது. பல ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜனவரி 1995ஆம் ஆண்டில், ஏற்கனவே இருந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி புஷெர் அணுமின் நிலையத்தைக் கட்டி முடிப்பதற்கு ரஷ்ய நிறுவனமான ஆட்டம் ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் (Atoms troy export), ஒப்புக்கொண்டது. இருப்பினும், அந்த மின் நிலையத்திற்கான எரிபொருள் குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 2005ஆம் ஆண்டில்தான் முடிவுக்கு வந்தன. இக்காலகட்டத்தில், அணு-எரிபொருள் பயன்படுத்தும் பொருட்டு யுரேனியத்தைச் செறிவூட்டுவதில் ஈரானிய அரசு தனது சொந்த நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டது. சர்வதேச வழிகளில் தங்கள் உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவது தடுக்கப்பட்டதால், ஒரு மாற்றுத்திட்டமாக இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவது அத்தியாவசியமானது என்று ஈரான் உரிமை கோரியது.

 அணு ஆயுத திட்டமா?

2002ஆம் ஆண்டில், ஈராக்கிடம் “அழிவை ஏற்படுத்தும் பேராயுதங்கள்” இருப்பதாக ஒரு பொய்க் கதையாடலை உருவாக்கி, அதன் போர்வையில் ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகிக் கொண்டிருந்தபோது, அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ஈரான் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் துவங்கியது. நட்டான்ஸ் (Natanz) பகுதியில் யுரேனியம் செறிவூட்டும் வசதியை ஈரான் அமைத்திருப்பதை செயற்கைக்கோள் தரவுகள் சுட்டிக்காட்டின. இவ்விஷயத்தை ‘சர்வதேச அணுசக்தி முகமையிடம்’ (International Atomic Energy Agency-IAEA) தெரிவிக்கவில்லை என்பதே ஈரான் மீதான முதல் கட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையாக இருந்தது.

நட்டான்ஸ் அணுசக்தி மையம் சட்டவிரோதமானது அல்ல என்று ஈரானிய அரசு சுட்டிக்காட்டியது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (Non Proliferation Ttreaty-NPT) கீழ், யுரேனியத்தைச் செறிவூட்டும் வசதிகளைக் கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளது என்பதோடு, சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) தான் கையெழுத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கையின்படி, “அணுசக்திப் பொருட்கள் அந்த மையத்திற்கு முதன்முதலில் வருவதற்கு 180 நாட்களுக்கு முன்பு வரை” அத்தகைய வசதிகளைப் பற்றி IAEA-விடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் ஈரானுக்கு இல்லை. எனவே, அந்த மையம் செயல்படத் தொடங்குவதற்குச் சற்று முன்பு வரை, அதன் கட்டுமானத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஈரானுக்கு இல்லை.

இந்தக் கட்டுமானத்தை ரகசியமாக வைத்திருந்ததற்கு ஈரானிடம் ஒரு நியாயமான விளக்கமும் இருந்தது. ஏற்கனவே ஈரானுடன் அணுசக்தி வர்த்தகம் செய்வதற்குத் தடை விதித்திருந்த அமெரிக்கா, ஈரானின் விநியோகத் தொடர்புகளைச் சீர்குலைப்பதன் மூலம் இக்கட்டுமானத்தைத் தடுக்க முயலக்கூடும் என்பதே அந்த விளக்கம்.

2004ஆம் ஆண்டில், தன்னிடம் மடிக்கணினி ஒன்று சிக்கியதாகவும்  அதில் ஈரானின் அணு ஆயுத ஆய்வுகள் குறித்த விரிவான ஆவணங்களும், உயர்-வெடிபொருள் சோதனைகளும் அணு ஆயுதங்களுக்கான வடிவமைப்புகள் இருப்பதாகவும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) கூறியது. ஆனால், அந்த ஆவணங்கள் தங்களுக்குக்கிடைத்த விதம் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு CIA மறுத்துவிட்டது.

உலகின் மிகக் கொடிய அமைப்புக்களுள் ஒன்றாக CIA-வின் கடந்தகாலச் செயல்பாடுகள் இருக்கும்போது, இந்த “ஆதாரம்” தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது வியப்பிற்குரியது. அந்த ஆவணங்களில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ CIA-வே உருவாக்கி ஒரு மடிக்கணினியில் ஏற்றியிருக்கலாம் என்பது ஒரு வெளிப்படையான சாத்தியக்கூறு. இருப்பினும், அந்த மடிக்கணினியிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் தான், ஈரானிய அணுசக்தித் திட்டத்தின் ராணுவ அம்சம் குறித்த ஒட்டுமொத்த விவாதத்தின் போக்கையும் தீர்மானித்தன என்பது உலகளாவிய தூதரக உரையாடல்களின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வெளிப்பாடு.

அக்காலகட்டத்தில் எகிப்தைச் சேர்ந்த முகம்மது எல்பராடேய் IAEA-வின் தலைவராக இருந்தார். அவர் அந்த அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தபோதிலும், CIA-வின் குற்றச்சாட்டுகளை உடனடியாக அப்படியே ஏற்றுக்கொண்டு தனது அமைப்பின் ஆதரவை வழங்கவில்லை. எல்பராடேய் தனது நினைவுக் குறிப்புகளில், தனக்கிருந்த சந்தேகங்களை விவரிக்கும்போது, “இத்தகைய தரவுகளை என்னாலும் போலியாக உருவாக்க முடியும். இது பார்வைக்கு அழகாகத் தெரிந்தாலும், சந்தேகத்திற்குரியதுஎன்பதே பொதுவான எதிர்வினையாக இருந்தது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் பதவியிலிருந்து எல்பராடேய் விலகியபோது, ஜப்பானைச் சேர்ந்த யூகியா அமானோ அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.தனது நியமனத்திற்கு முன்பே “உயர்மட்டப் பணியாளர் நியமனங்கள் முதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான கையாளுகைகள் வரை அனைத்து முக்கிய உத்திரீதியான முடிவுகளிலும் அமெரிக்காவின் பக்கமே உறுதியாக நிற்பேன்” என்று வியன்னாவிற்கான அமெரிக்கத் தூதரிடம் அமானோ வெளியிட்ட ஒரு இரகசியத் தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.18அமானோவின் தலைமையின் கீழ் IAEA தனது போக்கை மாற்றிக்கொண்டது வியப்புக்குரிய விஷயமல்ல.அவர் பொறுப்பேற்றவுடன் ஆட்சிக் குழுவிற்குஅளித்த அறிக்கையில், (CIA-வின் மடிக்கணினியில் இருந்ததாகக் கூறப்படும்) “உறுதிப்படுத்தப்படாதஆய்வுகள்” தொடர்பான தகவல்கள் தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் “பெருமளவில் மாறாதவை, நம்பகமானவை” என்று தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

2003ஆம் ஆண்டுக்கு முன்பாக, ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை ஈரான் நடத்தியது என்ற கூற்றைநடுநிலையாக மதிப்பீடு செய்வது கடினம். உதாரனமாக, “ஈரான்-ஈராக் போரின் மத்தியில்”, “ஈராக் ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தபோது” “பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்டபோது, ஈரானியர்கள் ஆரம்பத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க உத்தேசித்திருக்கலாம் என்று 2012ஆம் ஆண்டுஎல்பராடேய் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில், அநேகமாக போர் முடிந்த பிறகு, 1990களின் நடுப்பகுதியில் அல்லது CIA தனது விசாரணைகளைத் துவங்கிய பிறகு, ஈரான் தனது திட்டத்தை அணு எரிபொருள் சுழற்சியை மேம்படுத்துவதோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கலாம்”. மேலும், “மறைக்கப்பட்ட உண்மைகள் அநேகமாக முக்கியமற்றவையாக இருந்திருக்கலாம். அல்லது ஆதாரங்கள் இன்னும் கூடுதலாகவும், மறைப்பதற்குக் கடினமானவையாகவும் இருந்திருக்கலாம்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாகிலும், 2003ஆம் ஆண்டுக்குபிறகு ஈரானிடம் அணு ஆயுதத் திட்டம் இருந்தது என்ற வாதத்தைத் தக்கவைப்பதற்கு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கே கடினமாக இருந்தது. 2008ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “2003ஆம் ஆண்டின்இலையுதிர் காலத்தில் ஈரான் தனது அணு ஆயுத வடிவமைப்பையும் ஆயுதமாக்கல் நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டது” என்று குறிப்பிட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ஆம் ஆண்டில் அமானோ தலைமையிலான IAEA-வும் இதேபோன்றதொரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: ஒருவேளை ஈரானிடம்அணு ஆயுதத் திட்டம் ஏதேனும் இருந்திருந்தால் கூட, அது ஆரம்ப நிலையிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. “இந்த நடவடிக்கைகள் சாத்தியங்களுக்கான ஆய்வுகளுக்கும் அறிவியல் ஆய்வுகளுக்கும் அப்பால் எதுவும் நடக்கவில்லை” என்று IAEA முடிவு செய்தது. மேலும், 2003ஆம் ஆண்டுக்கு முன் சில ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், “2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்தவொரு நம்பகமான அறிகுறியும் இல்லை” என்று IAEA ஒப்புக்கொண்டது.

ஆட்சி மாற்றத்திற்கான கருவியாக ஆயுதக் கட்டுப்பாடு

ஈரானில் எந்தவொரு தீவிரமான அணு ஆயுதத் திட்டமும் இல்லை என்பதற்கு விரிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், புஷ்ஷும் ஒபாமாவும் ஆட்சி செய்த காலத்தில் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்கா இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்காவின் உத்தி எளிமையானது: தெஹ்ரானால் நிறைவேற்ற முடியாத இரண்டு சாத்தியமற்ற கோரிக்கைகளை அது முன்வைத்தது.

முதலாவதாக, ஈரான் தனது தற்போதைய யுரேனிய-செறிவூட்டல் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும். ஈரானில் “ஒரு செறிவூட்டும் கருவி கூட இருக்கக்கூடாது” என்பதுவாஷிங்டனின் நிலைப்பாடு. இந்தக் கூற்றுக்கு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்பதோடு, ஈரானின் இறையாண்மையை முற்றிலுமாக விட்டுக்கொடுப்பதற்குச் சமமான இக்கோரிக்கையை ஈரானின் எந்தவொரு அரசும் ஏற்றுக்கொள்வது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது.

இரண்டாவதாக, சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படும் எந்தவொரு வசதியையும் ஆய்வு செய்வதற்கு சர்வதேச ஆய்வாளர்களுக்குத் தடையற்ற அனுமதியை வழங்க வேண்டும் என்று வாஷிங்டன் கோரியது. இதில் பார்ச்சின் (Parchin)போன்ற மரபார்ந்த இராணுவத் தளங்களும் அடங்கும். இருப்பினும், ஈராக்கிற்குச் சென்ற ஐநா சபையின் ஆயுத ஆய்வாளர்களுக்கிடையே அமெரிக்க உளவாளிகளும் ஊடுருவி, ஈராக்கின் மரபார்ந்த படைகள் பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்த முன்னுதாரணத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானிய அரசால் இத்தகைய கோரிக்கைக்கு இணங்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது.

இத்தகைய கோரிக்கைகளுக்கு ஈரான் “ஒத்துழைக்க” மறுத்தபோது, 2005ஆம் ஆண்டில்  ஈரானை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பரிந்துரைப்பதற்கு IAEA ஆட்சிக் குழுவை அமெரிக்கா வற்புறுத்தியதும் பாதுகாப்பு கவுன்சில் ஈரானுக்கு எதிராக அடுத்தடுத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண். 1737ன் படி ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த “அறிவில் உள்ள இடைவெளிகள்” பற்றித் தனது கவலையைத் தெரிவித்ததுடன் “ஆராய்ச்சி உட்பட அனைத்து செறிவூட்டல் தொடர்பான மறுசுழற்சி நடவடிக்கைகளையும்” , ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியது. ஈரான் இணங்க மறுத்தபோது, பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண். 1747-ஐ நிறைவேற்றி ஈரானுக்கு எதிராகத் தடைகளை விதித்தது.

அடுத்த பத்தாண்டுகளில், அணுசக்திப் பிரச்சினையை எளிதில் தீர்த்திருக்கக்கூடியப் பல வாய்ப்புகளை அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் நிராகரித்தன. உதாரணமாக, 2010ஆம் ஆண்டில் பிரேசிலும் துருக்கியும் ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்க வைத்தன. அதன்படி ஈரானின் 80 விழுக்காடு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானுக்கு வெளியே வைக்கப்படும், அதற்குப் பதிலாக ஈரான் அணு உலைக்கான எரிபொருள் ராடுகளைப் பெறும். உண்மையில், சில மாதங்களுக்கு முன்பு மேற்கத்திய நாடுகள் ஈரானிடம் கோரிய நிபந்தனைகள் இவைதான். “அவர்கள் கேட்டதை நாங்கள் வழங்கியுள்ளோம்… இதற்கு நேர்மறையான எதிர்வினை கிடைக்காவிட்டால்  உண்மையில் அது ஏமாற்றமாக இருக்கும்” என்று அமெரிக்காவிற்கான துருக்கிய தூதர் கூறினார்.24

ஆனாலும், அதுதான் நடந்தது. ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அப்போதைய ஒபாமாவின் நிர்வாகம், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக ஈரானுக்கு எதிராக மற்றொரு சுற்றுத் தடைகளை விதிப்பதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களுடன் ஒப்பந்தத்தை அறிவித்தது.

இந்த இராஜதந்திரத் தாக்குதல்களுடன் கூடவே ஈரானின் அணுசக்தி நிலையங்களின் மீதும் விஞ்ஞானிகள் மீதும் நேரடித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. 2010ஆம் ஆண்டில், “ஸ்டக்ஸ்நெட்” (Stuxnet) என்ற வைரஸைப் பயன்படுத்தி ஈரானின் நட்டான்ஸ் செறிவூட்டல் ஆலையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றது. பல ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர், இவை இஸ்ரேலின் ஆதரவுடன் நடந்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள பகுதியளவிலான காலக்கோட்டு வரிசையும் ஒரு விஷயத்தைத் தெளிவாக்குகிறது: 2002 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலும், ஈரானின் அணுசக்திப் பிரச்சினையைத் தீர்ப்பதில் வாஷிங்டன் குறிப்பிடும்படியாக எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. மாறாக, தெஹ்ரான் அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழியாக இப்பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலேயே ஆர்வம் காட்டியது.

விரிவடைந்தகூட்டு செயல் திட்டம்

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே 2015ஆம் ஆண்டில் ஈரானிய அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இது ‘விரிவடைந்த கூட்டு செயல் திட்டம்’ (Joint Comprehensive Plan of Action-JCPOA) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த ஊடகக் கருத்துக்களில் பெரும்பகுதி அதன் தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்தினாலும், அதன் அரசியல் அம்சங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

ஈரானில் ஏற்பட்ட மாற்றமடைந்த அரசியல் சூழலும், அமெரிக்காவின் உத்தியில் ஏற்பட்ட பெயர்வும் JCPOA உருவானதற்கான முக்கிய காரணங்களாகும்.

2013ஆம் ஆண்டில், மஹ்மூத் அஹமதிநெஜாத்திற்குப் பதிலாக “சீர்திருத்தவாதப்” பிரிவைச் சேர்ந்த ஹசன் ரூஹானி ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூஹானி 2003 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும்ஈரானின் தலைமை அணுசக்தித் தூதுவராக இருந்தவர். அவர் ஈரானிய அணுசக்தி விவகாரத்தில் முன்னேற்றம் காண்பதாக உறுதியளித்து அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். “மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சுமூகமாகச் சுழல வேண்டுமானால், செறிவூட்டும் கருவிகள் சுழல்வதும் நல்லது” என்பது அவரது முழக்கங்களில் ஒன்று. ஐநா விதித்த தடைகளால்அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை உட்பட, ஈரானியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல சிரமங்கள் உருவானதைக் குறிப்பிட்டு ரூஹானி இவ்வாறு பேசினார்.

இருப்பினும், ஈரானின் எளிய மக்களின் மீது தடைகள் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாமல், அக்காலகட்டத்தில் செயல்பாட்டில் இருந்த மற்றொரு சக்தியையும் அங்கீகரிக்க வேண்டியது முக்கியமாக இருந்தது. ஈரான் ஆழ்ந்து வேரோடிய வர்க்கப் பிரிவினையைக் கொண்ட சமூகங்களைக் கொண்டது. அங்குள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்களில் ஒரு பிரிவினராவது மேற்கத்திய நாடுகளுடன் கூட்டணி வைத்திருக்கவே விரும்புகின்றனர். ஈரானிய செல்வந்தர்களிடமிருந்து இக்கட்டுரையாளர் நேரடியாகக் கேட்டுப் பெற்ற தகவல்:”ஷாப்பிங் செய்வதற்கு பாரிஸுக்குச் செல்ல முடியாமல்”தவறவிட்ட நாட்களுக்காக ஏங்குகின்றனர் என்பதுதான். இதுவே இத்தகைய போக்கின் ஒரு எளிய ஆனால் பயனுள்ள வெளிப்பாடு.  இன்றும் பெரும் செல்வாக்குடன் உள்ள ஈரானின் இத்தகைய வர்க்கமே ஈரானிய அணுசக்தி விவகாரத்தைத் தீர்ப்பதற்காகப் பல சலுகைகளை வழங்குவதற்குத் தயாராக இருந்தது.

இரண்டாவதாக, ஈரானிய மேல்தட்டு வர்க்கத்தை மாற்றுவதற்குப் பதிலாக, அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதே வாஷிங்டனுக்குச் சிறந்தது என்று கருதும் ஒரு சிந்தனையோட்டம் அமெரிக்க உத்திமுறை-நிர்வாக அமைப்பிற்குள் தொடர்ந்து இருந்து வருகிறது. உதாரணமாக, 2006ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் லீ ஹாமில்டன் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட “ஈராக் ஆய்வுக் குழு” அறிக்கையில் இக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டது. “ஈராக் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் ஈரான் மற்றும் சிரியாவின் திறனையும், ஈராக்கில் குழப்பத்தைத் தவிர்க்கும்பொருட்டான அவர்களின் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களாலும் ஜெர்மனியாலும் தொடர்ந்து கையாளப்பட வேண்டும்” என்றும் அந்த அறிக்கை கூறியது.

மேற்கு ஆசியாவின் அரசியல் சூழ்நிலை காரணமாக, ஒபாமா தலைமையிலான நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இக்கொள்கைக்கு மாற வேண்டியிருந்தது. உண்மையில், 2011-13ஆம் ஆண்டுகள் வரை ஒபாமாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லியோன் பனெட்டா ஈராக் ஆய்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

இக்கொள்கை மாற்றத்தின் உடனடியானஉத்திசார்ந்த தேவைகள் தெளிவாக இருந்தன. 2011ஆம் ஆண்டில், துனிசியாவிலும் எகிப்திலும் அமெரிக்காவின் ஆதரவுடன் நீண்டகாலமாக இருந்த ஆட்சிகள் “அரபு வசந்தக் கிளர்ச்சிகளின் போது சரிந்தன. 2013ஆம் ஆண்டில் எகிப்திய இராணுவப் புரட்சியை ஆதரிப்பது உட்பட, இந்த ஜனநாயக எழுச்சிகளை அடக்குவதற்குப் பாரம்பரிய அரபு மேல்தட்டு வர்க்கத்தின் முயற்சிகளை வாஷிங்டன் முழுமனதுடன் ஆதரித்த போதிலும், இந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் கொள்கையை நிலைகுலையச் செய்தன.

மற்றொரு புறம், 2014ஆம் ஆண்டில், ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கெதிராக ISIL (ISIS) அமைப்பு தாக்குதல்களைத் தொடுத்ததோடு, 2015ஆம் ஆண்டிற்குள் இவ்விரு நாடுகளின் முக்கியப் பகுதிகளையும் கைப்பற்றியது. ISIL-க்கு எதிரான போரில் தெஹ்ரானின் உதவியை வாஷிங்டன் பகிரங்கமாகவே கோரியது. உதாரணமாக, ஈராக் வான்வெளியைப் பயன்படுத்தி ISIL-க்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதல்களை வரவேற்ற ஒபாமாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, “ஈரான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ISIL-ஐ எதிர்கொண்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால்… அதன் நிகர விளைவு நேர்மறையானது என்பது தெளிவானது” என்று கூறினார்.

இதன் விளைவாக, யுரேனிய-செறிவூட்டலைஈரான் முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையிலிருந்து வாஷிங்டன் பகிரங்கமாக பின்வாங்கியதுடன், அணுசக்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியது. இது 2013ஆம் ஆண்டில் ஒரு ‘கூட்டு செயல் திட்டத்திற்கு’ (Joint Plan of Action) வழிவகுத்தது. ஈரான் மற்றும் P5+1 நாடுகளுக்கிடையே (பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி) சரியாக பேக்கர்-ஹாமில்டன் அறிக்கையின் தொலைநோக்கின்படி இருபது மாதங்களாக நடந்த மேலதிக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2015ஆம் ஆண்டில் JCPOA வெளியிடப்பட்டது.

தொழில்நுட்பம் சார்ந்த கண்ணோட்டத்தில், ஈரான் ஏற்கனவே முன்வைத்திருந்த, P5+1 நாடுகள் ஏற்றுக்கொண்ட, திட்டத்தை JCPOA ஏற்றுக்கொண்டது. அதாவது, சர்வதேச அணுசக்தி முகமையின் விரிவான சரிபார்ப்புடன் கூடிய, குறைக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அணுசக்தித் திட்டம். JCPOA-வின் கீழ், ஈரான் தனது சுமார் 80 விழுக்காடுசெறிவூட்டும் கருவிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கும், அவற்றை 15 ஆண்டுகளுக்கு இருப்பில் வைத்திருப்பதற்கும் தனது செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை 300 கிலோவாகக் குறைப்பதற்கும் ஒப்புக்கொண்டது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியும் பிரேசிலும் பேச்சுவார்த்தை நடத்திய அதே அளவாகும்.

ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிடுவதையும் JCPOA ஒப்பந்தம் முறைப்படுத்தியது, இது எப்படியாகிலும் ஈரானின் நீண்டகாலக் கொள்கைக்கு இணங்கவே இருந்தது. JCPOA-வின் உரை, “எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைத் தேடவோ, உருவாக்கவோ அல்லது வாங்கவோ மாட்டாது என்று ஈரான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்ற பிரகடனத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ஈரான் வாக்களித்தது. P5+1 உறுப்பு நாடுகள் எதுவும் அந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது இதிலுள்ள ஒரு முரண். மேலும் அமெரிக்கா, ப்ரிட்டிஷ் ஐக்கிய அரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் “கையெழுத்திடவோ, அங்கீகரிக்கவோ, ஒருபோதும் அதில் சேரவோ மாட்டோம்” என்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டன.

JCPOA பேச்சுவார்த்தையின் போது, புவிசார் அரசியல் சூழல் மாறினாலோ அல்லது ஈரானிய மேல்தட்டு வர்க்கத்தை வளைக்கும் திட்டம் தோல்வியடைந்தாலோ, ஈரானில் மீண்டும் ஆட்சி மாற்றத் திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை வாஷிங்டன் தந்திரமாகத் தன்னிடம் வைத்துக்கொண்டது. தாமஸ் ஃப்ரீட்மனுக்கு அளித்த ஒரு நேர்காணலில் “ஈரான் மாறக்கூடும்… அப்படி மாறாவிட்டால், எங்களது இராணுவ மேலாதிக்கம் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்.” என்று ஒபாமா கூறினார். (ஃப்ரீட்மன் கண்ட பேட்டியின் [28.30] காணொளியைக் காண்க) மிகக் குறுகிய காலத்திலேயே தடைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற விதிகளாக இக்கொள்கைகள் JCPOA-வில் எழுதப்பட்டன. “சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்குச் சிறு சந்தேகம் வந்தாலும் கூட, உண்மையைக்கண்டறிய IAEA-விற்குத் தேவையான அனுமதி வழங்கப்படும், அல்லது ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்பட்டு அணுசக்தி தொடர்பான தடைகள் மீண்டும் உடனடியாக அமலுக்கு வரும்” என்று ஜான் கெர்ரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார். அமெரிக்க அரசு ஏற்கனவே அறிந்த ஒன்றை மீண்டும் மிகையாக விளக்கும் விதமாக, எந்த நேரத்திலும் ஒரு நியாயமற்ற ஆய்வு கோரிக்கையை முன்வைத்து, அத்தடையை மீண்டும் விதிப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தலாம் என்பதே இதன் பொருள்.

அமெரிக்காவின் உள்நாட்டு விவாதங்களிலும் இதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்படையாகப் பேசப்பட்டன. உதாரணமாக, அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து ஒபாமாவுக்குக் கடிதம் எழுதிய அமெரிக்காவின் 29 முக்கிய விஞ்ஞானிகள்”நீங்கள் குறிப்பிட்டது போலவே, இந்த ஒப்பந்தம் உங்களுடைய அல்லது வருங்கால அதிபருடைய எந்தவொரு வாய்ப்பையும் (நடவடிக்கைகளையும்) தடுத்துவிடாது… இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அது ஒரு தலையீட்டிற்கான வலுவான மற்றும் சர்வதேச ஆதரவுடனான நியாயத்தை வழங்கும்.” என்று விளக்கினர்.

மறுபுறம், ஈரானியத் தலைமை JCPOA-வைச் சாத்தியமாக்குவதற்குக் குறிப்பிடத்தக்கப் பல சலுகைகளை வழங்கியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூஹானி முன்வைத்த முன்மொழிவுகளிலிருந்து JCPOA பெரிய அளவில் வேறுபடவில்லை என்பது உண்மையாக இருந்தாலும், இது ஒரு வகையில் தவறாக வழிநடத்துவதாகும். ஏனெனில், இடைப்பட்ட பத்தாண்டுகளில் தனது செறிவூட்டல் திறன்களைக் கட்டமைப்பதற்குஈரான் ஏற்கனவே கணிசமான முயற்சிகளைச் செய்திருந்தது; எனவே JCPOA என்பது வெறும் முடக்கம் மட்டுமல்ல, ஈரானிய அணுசக்தி திட்டத்தைப் பின்னோக்கித் தள்ளுவதும் ஆகும். மேலும், பார்ச்சின் (Parchin) ராணுவ-வளாகத்தை ஆய்வு செய்யவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஈரான் பணிந்ததும் அந்த இடத்தைப் 2015ஆம் ஆண்டில் IAEA ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.

இச்சலுகைகள் யாவும் ஈரானுக்கு ஒரு பாரதூரமான பிழையாகிப் போனதைஅதன்பிறகு நிகழ்ந்தவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்கஹாக்கிஷ்[5] (Hawkish) கண்ணோட்டம்

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க அதிகார வர்க்கத்திற்குள் இருக்கும் ஹாக்கிஷ் பிரிவினரால்தொடர்ந்து எதிர்ப்புக்குள்ளானது. 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர்கள், ஈரான் ஒப்பந்தத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டிலேயே “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மோசமான ஒன்று. இது ஈரானைப் பணக்கார நாடாக்குவதைத் தவிர வேறொன்றையும் செய்யாது” என்று டிரம்ப், அறிவித்தார்.37 மேலும் தனது பிரச்சாரங்களில் எல்லாம் இந்த நிலைப்பாட்டைத் திரும்பத் திரும்ப முன்வைத்தார்.

இந்த ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுத லட்சியங்களுக்கு வழிவகுப்பதாகப் ஹாக்கிஷ் பிரிவினர்கூறினாலும், ஆயுதக் கட்டுப்பாட்டு ரீதியாக இந்த வாதம் செல்லாது. “ஈரானின் உலகளாவிய பயங்கரவாதப் பிரச்சாரம் உள்ளிட்ட அதன் பரந்த அளவிலான தீய செயல்பாடுகளைக்” கையாள்வதை இந்த ஒப்பந்தம் தவறிவிட்டது என்பதே அமெரிக்க ஹாக்கிஷ் பிரிவினரின் மிகவும் நேரடியான கூற்று. இந்தக் கூற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன ஹமாஸ் மற்றும் ஏமனின்ஹூதீஸ் உள்ளிட்ட மேற்கு ஆசிய ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் அளிக்கும்ஆதரவை அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கான ஈரானிய ஆதரவு” என்று குறிப்பிடுகின்றது. ஆனால், இத்தகையக் குழுக்களுக்கு ஈரான் அரசு, வரையறுக்கப்பட்ட சில ஆதரவுகளை வழங்கினாலும், இக்குழுக்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு அரசியல் சக்திகளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் மிகவும் வலிய சக்தியென்றாலும், அவர்களை ஒட்டுமொத்த அரசையும் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பது மதப்பிரிவுகளின்அடைப்படையில் அமைந்த அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே. ஹமாஸ் அமைப்பு 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி பாலஸ்தீனத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், இஸ்ரேல் ஆதரவுப் படைகளால் வெஸ்ட் பேங்கில் இருந்து அவ்வமைப்பு வெளியேற்றப்பட்டிருந்தாலும், 2007ஆம் ஆண்டு முதல் காசா பகுதியை ஆட்சி செய்து வருகிறது. அதேபோல், சனாவில் செயல்பட்டு வரும் ஹூதி அரசு, ரியாதிலிருந்து இயங்குகின்றஅமெரிக்க அங்கீகாரம் பெற்றஅப்த்ரபு மன்சூர் ஹாடியின்அரசை விட அதிக மக்கள் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது.

அமெரிக்க நட்பு நாடுகளின் இராணுவத் தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்த்து நின்றுள்ளன என்பதே இம்மூன்று அமைப்புக்களுக்குமான பொதுவான அம்சம். 2000ஆம் அண்டில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தை வெளியேற்றுவதில் ஹிஸ்புல்லா முக்கிய பங்கு வகித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக காசாவின் பொருளாதாரத்தை முடக்கியும், பல இராணுவத் தாக்குதல்களை நடத்தியும் கூட இஸ்ரேலால் ஹமாஸை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. சவூதி தலைமையிலான, அமெரிக்க ஆதரவு பெற்ற ஏமன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களும், ஏமன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பட்டினிச் சூழலும் இதுவரை ஹாடியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த விடவில்லை.

லெபனான், பாலஸ்தீனம் மற்றும் ஏமனைத் தவிர, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும், சிரியாவின் பஷர் அல்-அசாத் அரசை அகற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சியும், பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய இரு நாடுகளின் அரசுகளுடன் ஈரான் அரசு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்துள்ளன என்பது ஒரு முரண்பாடான உண்மை.

அமெரிக்க இராணுவம் அல்லது அமெரிக்க நட்பு நாடுகளின் பலப்பிரயோகத்தை எவர் எதிர்த்தாலும் அது சட்டவிரோதமானது என்பதில் அமெரிக்க நிர்வாகத்தின் அனைத்துப் பிரிவினரும் உடன்படுகின்றனர். உதாரணமாக, ஒபாமாவின் தேசிய உளவுத்துறை இயக்குனர் அமெரிக்க நாடாளுமன்றத்தில்” ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான நாடாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது” என்றார். இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. அமெரிக்க அதிகாரத்தின் தொடர்வீழ்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது, மேற்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்திற்கு வரும் அனைத்து சவால்களையும் அகற்றுவதற்கான இலக்கில் அமெரிக்காவிற்கு வெற்றியை உறுதிப்படுத்தக்கூடிய தெளிவான வழி எதுவும் இல்லை என்பதே இந்த கருத்து வேறுபாட்டிற்கான ஆழமான காரணம்.

எத்தனை முடியுமோ அத்தனை ஆக்ரோஷமாக இருப்பதே அமெரிக்காவிற்கான சிறந்த வாய்ப்பு என்பதே ஹாக்கிஷ் பிரிவினரின் கண்ணோட்டமாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஈரானின் வரலாறு, பிராந்தியங்களுக்கான அமெரிக்கத் திட்டங்களுக்கு ஒரு தீர்க்க முடியாத தடையாக இருக்கிறது; எனவே ஈரானை வளைக்க முடியாது, மாறாக ஒரு நேரடி மோதலின் மூலம் அந்நாட்டை நசுக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கக் கொள்கை

அமெரிக்காவின் உள்நாட்டு விவாதங்களில் டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஹாக்கிஷ் பிரிவினருக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டது.

டிரம்ப் பதவியேற்றவுடன், ஈரானுடன் மோதலைத் தொடங்குவதற்கான செயல்முறைகளைத் துரிதமாகத் துவங்கினார். 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்ட்டன் நியமிக்கப்பட்டார். போல்ட்டன் ஈரானில் ஆட்சி மாற்றத்தை நீண்டகாலமாக ஆதரித்து வருபவர் மட்டுமல்லாமல் அவர் முஜாஹிதீன்-இ-கல்க் (MEK) என்ற ஈரானிய எதிர்ப்பு குழுவிற்கு பகிரங்க ஆதரவும் அளிப்பவர். அமெரிக்க வெளியுறவுத்துறையும் MEK அமைப்பை 2012ஆம் ஆண்டு வரையிலும் ஒரு அயல் பயங்கரவாதக் குழுவாகவே வகைப்படுத்தியிருந்தது.

2018ஆம் ஆண்டு மே மாதத்தில் ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா முறையாக விலகியது. சில வாரங்களுக்கு முன்புதான், அமெரிக்க ஆதரவாளரான அமானோ, “இன்று வரை, ஈரான் தனது அணுசக்தி தொடர்பான கடமைகளை நிறைவேற்றி வருகிறது என்று என்னால் கூற முடியும்” என IAEA குழுவிடம் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வெளியிட்டகோமாளித்தனமான சில ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இம்மதிப்பீடுகளை முறியடிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் சில பலவீனமான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஈரானுடன் மீண்டும் பகைமையைத் வளர்ப்பதற்காகவேஇந்த அணுசக்தி ஒப்பந்தத வெளியேற்றம் என்ற உண்மையை மறைப்பதற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் முயலவில்லை.

கடந்த ஆண்டுகளில், வாஷிங்டன் தனது ஆக்கிரமிப்புக் கொள்கைகளைப் படிப்படியாகத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன், டிரம்ப் நிர்வாகம் முதலில் எளிய மக்களைத் துன்பப்படுத்தும் வகையில் ஈரான் மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானுடனானத் தங்களது வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கேற்ப நிறுவனங்களுக்கு 90-180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.42 குறிப்பாக, ஈரான் அரசு தனது வருவாயில் பெரும்பகுதியை எண்ணெய் ஏற்றுமதி மூலமே பெறுகின்றது என்பதால் அந்நாட்டின் எண்ணெய்த்தொழிலைச் சேதப்படுத்தும் வகையில் அமெரிக்கத் தடைகள் வடிவமைக்கப்பட்டன.

பொருளாதாரத் தடைகளின் முதல் சுற்றில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத காலத்திற்கு அப்பாலுமான ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தைத் தொடர்வதற்கு டிரம்ப் நிர்வாகம் விலக்களித்தது. இந்த விலக்குகள் 2019ஆம் ஆண்டு மே மாதத்தோடு முடிவடைந்தன. இத்தகையத் தடைகளின் கணிக்கக்கூடிய விளைவாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் ஐந்து மடங்கு குறைந்தது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பேரல்களாக இருந்த எண்ணெய் ஏற்றுமதி 2019ஆம் ஆண்டு மேமாதத்தில் சுமார் 5 லட்சம் பேரல்களாகக் குறைந்தது.

“விலக்குகளுக்கான” இம்முடிவு அமெரிக்க உத்தியின் இரண்டாம் கட்டத்தின் துவக்கத்தைக் குறித்தது, இதில் நேரடி இராணுவ மிரட்டல்களும் அடங்கும். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், “பாதுகாப்பு நோக்கங்களுக்காக” மேற்கு ஆசியாவிற்கு 1,000 கூடுதல் வீரர்களை அனுப்பியதாக பென்டகன் அறிவித்தது. ஓமன் வளைகுடா வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஜூன் இரண்டாம் வாரத்தில் சேதமடைந்ததே இந்த நடவடிக்கைக்குக் கூறப்பட்ட காரணங்களுள் ஒன்று. இத்தகையத் தாக்குதல்களுக்கு ஈரானியப் படைகளே காரணம் என்று வாஷிங்டன் குற்றம் சாட்டியிருந்தாலும், இக்குற்றச்சாட்டுகள் நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை.

உதாரணமாக, ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் ஒன்றில் குண்டு வைத்திருந்ததாக அமெரிக்க இராணுவம் குற்றம் சாட்டியதுடன், கப்பலின் பக்கவாட்டிலிருந்து அடையாளம் தெரியாத படகு ஒன்றில் அடையாளம் தெரியாத ஒரு பொருளை அகற்றுவதைக் காட்டுகின்ற தெளிவற்றகாணொளி ஒன்றையும் வெளியிட்டது. இருப்பினும், அந்த எண்ணெய் கப்பலின் ஜப்பானிய உரிமையாளர், “கப்பலின் பக்கவாட்டில் வெடிகுண்டோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ பொருத்தப்பட்டிருந்தது என்பதை நான் நம்பவில்லை” என்று கூறி இந்த வாதத்தை நிராகரித்தார். மேலும், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீப் சுட்டிக்காட்டியது போல, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, அயதுல்லா கமேனியுடன் பரந்துபட்ட, சுமூகமான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போதே ஜப்பான் தொடர்பான கப்பல்கள் மீது இத்தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்பட்டது. பொதுவாக அமெரிக்க எதிர்ப்பு நாடுகளைத் தீயசக்திகளாகச் சித்தரிப்பதில் அமெரிக்க அரசிற்கு ஆதரவாக இருக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூட, ஒபாமா காலத்து அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, “டிரம்பின் நம்பகத்தன்மை ஒரு லேகிய விற்பனையாளருக்குரியதைப் போன்றது” என்று குறிப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

சுமார் ஒரு வாரம் கழித்து, ஈரானின்எல்லைக்கருகே அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தின. அந்த ட்ரோன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தது தெளிவானதோடு அந்த விமானத்தின் பாதை ஈரானிய எல்லைக்குள் நுழைந்ததைக் காட்டும் வரைபடத்தையும் ஈரான் வெளியிட்டது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அரசு அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் ஜூன் மாதம் 21ஆம் நாளன்று டிரம்ப், “தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அதை நான் நிறுத்திவிட்டேன்”, ஏனென்றால் அத்தாக்குதலில் “150 பேர்” இறந்திருக்கக்கூடும் என்றும் அறிவித்தார்.

சில வேளைகளில்,டிரம்பின் இத்தகைய அறிக்கைகள் “(பிறநாட்டு விவகாரங்களில்) தலையீடற்ற கொள்கை” கொண்ட அதிபருக்கும் அவரது ஹாக்கிஷ் பிரிவு ஆலோசகர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் அடையாளமாக விளக்கப்படுகின்றன. உதாரணமாக, டிரம்பின் வெளியுறவுத்துறை அமைச்சரும்உறுதிமிக்க ஹாக்கிஷ் பிரிவினருமான மைக் போம்ப்பியோவை “ஈரான் மீதான நடவடிக்கைகளுக்கு தயக்கம் காட்டும் டிரம்பைத் தூண்டி விடுபவர்” என்று நியூயார்க் டைம்ஸின் தலைப்புச்செய்தி ஒன்று குறிப்பிட்டது. இருப்பினும், இத்தகைய விவரிப்பை அப்படியே நம்புவதும் இதில் ஏதோ ஆழமான அர்த்தம் இருப்பதாகத் தேடுவதும் வெறும் அப்பாவித்தனமே.காரணம், போரின் போது ஈரானை “சுவடே இல்லாமல் அழித்தொழிப்பேன்” என்று டிரம்ப் பகிரங்கமாகவே எச்சரித்துள்ளார். மேலும், தனது கொள்கைகளுக்கு முரணாக இருந்து, தனக்குப் பயனளிக்காத அமைச்சரவை உறுப்பினர்களை அவர் ஈவிரக்கமின்றி பதவி நீக்கமும் செய்துள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் டிரம்பின் சிந்தனைப்போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு, அவரது நம்பகத்தன்மையற்ற, முரண்பட்டஅறிவிப்புக்களைக் காட்டிலும், அவர் யாரைப் பதவியில் அமர்த்தினார் என்பதைத் தெரிந்துகொள்வதே, சிறந்த வழிகாட்டி. போம்ப்பியோ, போல்டன் மற்றும் எலியட் ஆப்ராம்ஸ் போன்ற குடியரசுக் கட்சியின் ஹாக்கிஷ் பிரிவைச் சேர்ந்தவர்களையே அவர் உயர்மட்ட வெளியுறவுப் பதவிகளுக்குத் தொடர்ந்து நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஈரானைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கக் கொள்கைகள் யாவும், விடாப்பிடிக் கடுமையுடனும் படிப்படியாகத்  தீவிரமடைந்தவையாகவுமே இருந்துவந்திருக்கின்றன. அமெரிக்க அதிகாரத்திலுள்ளதனிநபர்களுக்கிடையே சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், அல்லது தான்ஆடுகின்ற”நல்லவன்-கெட்டவன்” என்ற நயவஞ்சக நாடத்தின் பலன்களை டிரம்ப் உணர்ந்திருந்தாலும், அது ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் விரிவான கொள்கை ஆய்வுக்குப் பெரிய மாற்றங்கள் எதையும் தரப்போவதில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் இந்திய அரசின் நிலைப்பாடும் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இப்பிரச்சனைகள் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குச் சேதம் விளைவிப்பதாக இருந்தாலும் கூட, அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்குவதற்கு இந்திய அரசு எத்தனை தூரம் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உள்நாட்டுப் பொருளாதார நலன்களை ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்யும் இந்த மனப்பான்மை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகிய இரு அரசுகளாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 2005ஆம் ஆண்டில் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர் குழுவில், ஈரானை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில், இந்திய அரசு ஒரு தெளிவான இராஜதந்திர சமிக்ஞையை வழங்கியிருக்கின்றது. உடனடிப் பார்வையில், இந்திய அரசின் இந்த வாக்கு, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்ட “கைம்மாறு” என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே, இந்திய அரசின் நிலைப்பாடு வஞ்சகமானது மட்டுமல்ல, எந்தவொரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பிற்குள்ளும் நியாயப்படுத்த முடியாததுமாகும்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே, நடைமுறையில் இந்தியா ஒரு அணுஆயுத வல்லரசு என்ற நிலையைச் சட்டப்பூர்வமாக்குவதையும், இந்திய அரசு தனது குடிமைப் பயன்பாட்டு அணுசக்தித் திட்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்பதில் தான் அந்த நயவஞ்சகம் அடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கேள்விகளை இதைவிட மிகச்சிறிய ஈரானிய அணுசக்தித் திட்டம் எழுப்புகிறது’ என்று இந்திய அரசு அறிவித்தது, சர்வதேச இராஜதந்திரத் தரநிலைகளின்படியே இது ஒரு நகைப்புக்குரிய அபத்தம்.

மேலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் நாட்டிற்குப் பெரிய அளவில் உருப்படியான பலன்கள் ஏதுமில்லை என்பது ஒரு நடுநிலையான ஆய்வாளருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கக் கூடும். கையெழுத்தாகி பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு புதிய அணு உலை கொள்முதலுக்குக் கூட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (ரஷ்யாவுடனான பழைய உடன்படிக்கையின் கீழ் நடந்த கூடங்குளம் விரிவாக்கத்தைத் தவிர).

அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தினால், ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய் திட்டத்திலிருந்தும் இந்தியா பின்வாங்கியது. மேலும், ஈரானில் மேம்படுத்தப் போவதாகத் தான்ஒப்புக்கொண்ட சாபஹர் துறைமுக முதலீடுகளையும் இந்தியா குறைத்துக்கொண்டது. இவை இரண்டுமே இந்திய வணிகங்களுக்குப் பெரும் வாய்ப்புகளைக் கொண்டிருந்த திட்டங்கள்.

ஈரானுடன் அமெரிக்கா தற்காலிகமாக இணக்கமான போக்கைக் கடைப்பிடித்த காலத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே அது சாபஹர் துறைமுக ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கி, 2016ஆம் ஆண்டு 500 மில்லியன் டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தவுடன், மோடி அரசுபணிவுடன் மீண்டும் தனது போக்கை மாற்றிக்கொண்டது. மிகச் சமீபத்தில், இந்தியாவிற்கான “எண்ணெய் இறக்குமதி விலக்கை” அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வந்தபோது, மோடி அரசு ஈரானிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொண்டது. 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் 13 விழுக்காடு இறக்குமதியுடன் ஈரான் இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்குநிலை

மேற்கத்திய நாடுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து ஈரானிய மேல்தட்டு வர்க்கத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், டிரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷப் போக்கு ஈரான் அரசிற்கு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. தற்போதைய பதற்றங்களுக்கு முன்பாகவே, அமெரிக்கக் கொள்கைகள் ரூஹானி தலைமையிலான அரசை ஒரு இக்கட்டான சூழலில் கொண்டு நிறுத்தின. நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், பல சலுகைகளை வழங்கியும், மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவைப் பெறுவதற்கான தோல்வியுற்ற முயற்சியில் ரூஹானி ஈரானின் நலன்களைப் பலிகொடுத்துவிட்டார் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கூட தனது உரையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் தனக்கிருந்த அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். எனவே, எதிர்காலத்தில் வாஷிங்டனின் கட்டளைகளை எதிர்ப்பதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை.

மறுபுறம், டிரம்பின் போர்வெறிக் கொள்கைகள் நீண்டகால அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஹிலாரி கிளிண்டன் மற்றும் நான்சி பெலோசி போன்ற மூத்த குடியரசுக் கட்சியினர் இதை நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் ஈரானின் மேல்தட்டு வர்க்கத்தை வளைப்பதற்கான உரையாடலைத் தொடர்வதற்கோ அல்லது போரை அறிவிப்பதற்கு முன் ஒரு ஏகாதிபத்தியக் கூட்டணியை உருவாக்குவதற்கோ விரும்புகின்றனர். ”ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது ஒரு பெரிய தவறுஆயுதப்போர்தான் இதற்குத் தீர்வு என்று நினைப்பவர்கள் மிகவும் தவறான புரிதலைப் பெற்றுள்ளனர்என்று 2018ஆம் ஆண்டு மே மாதம்ஹிலாரி கிளிண்டன் ட்வீட் செய்திருந்தார்மிகச் சமீபத்தில்ட்ரம்ப்தீவிரத்தைக் குறைக்கவேண்டும், தீவிரத்தைக் குறைக்கவேண்டும், தீவிரத்தைக் குறைக்கவேண்டும், இழுத்து மூச்சுவிட்டு தீவிரத்தைக் குறைக்கவேண்டும்என்று பெலோசி கூறியுள்ளார். இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கக் கோரும் இவர்களது கோரிக்கைகள் அமைதிக்கான விருப்பத்திலிருந்து வந்தவையல்ல; மாறாக ஈரானுடன் போர் புரிவது இராணுவரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்அமெரிக்காவிற்குப் பெருத்த அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான்.

இராணுவ ரீதியாக, அமெரிக்கா பல நாடுகளில் போர்களில் ஈடுபட்டு ஏற்கனவே சோர்வடைந்துள்ளது என்பதால் ஈரானுடன் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபடுவதென்பதுஅதனால் முடியாத காரியம். ஒரு மதிப்பீட்டின்படி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்காக அமெரிக்கா கிட்டத்தட்ட ஆறு டிரில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. மேலும், இத்தகைய போர்களில் 15,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வியட்நாம் போரைப்போல இது மிகப்பெரிய உள்நாட்டு எதிர்ப்பை உருவாக்கவில்லை என்றாலும், ஊனமுற்ற மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான “முன்னாள் ராணுவ வீரர்கள்” பற்றிய பாதிப்பு அமெரிக்கப் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் ஈரான் அமெரிக்க இராணுவத்திற்கு மிகப் பெரிய சவாலாக விளங்கும். பல்லாண்டு கால பொருளாதாரத் தடைகளாலும் முந்தைய போரினாலும் பலவீனமடைந்திருந்த ஈராக் இராணுவத்தைப் போலல்லாமல் ஈரானிய இராணுவம் ஒரு வலிமையான படையாக இருப்பதே இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் ஈரானின் முக்கிய பலங்களில் ஒன்று அரசியல் சார்ந்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும், அந்தந்தச் சமூகங்களுக்குள் இருந்த ஆழமான உள்நாட்டுப் பிளவுகளை அமெரிக்கா இரக்கமின்றித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால் ஈரானுக்குள் அத்தகைய எந்தவொரு பிடிமானத்தையும் அமெரிக்காவால் கண்டறிய முடியவில்லை. ஈரானிய அரசியலுக்குள் எத்தனை பிரிவினைகள் இருந்தாலும், அமெரிக்காவின் பக்கபலத்துடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அங்கு எவ்வித ஆதரவும் கிடையாது. அமெரிக்க அதிகார மையத்தில் உள்ள ஹாக்கிஷ் பிரிவினர், ஈரானுக்குள் எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாத மொஜாஹிதீன்–இ-கல்க்’ (MEK) போன்ற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் உதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு நிற்கும் ஒரு மக்கள்திரளை எதிர்கொண்டு ஈரானில் இராணுவ ரீதியாக வெற்றி பெறுவோம் என்று அமெரிக்கா நம்பிக்கொண்டிருக்க இயலாது.

பொருளாதார ரீதியாகவும்அமெரிக்கா கடும் நெருக்கடியில் உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமான தடைகளை விதித்துள்ளது. உலக வங்கி முறையிலும், எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திலும் அமெரிக்கா கொண்டுள்ள பிடியினாலேயே இத்தகைய தடைகள் செயல்படுகின்றன. ஈரான்மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளின் எண்ணெய்க்கு வெளிநாடுகள் பணம் செலுத்துவதை அமெரிக்காவால் தடுக்க முடிகிறது. அமெரிக்கத் தடைகளை மீறும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க வங்கி முறையிலிருந்து விலக்கப்படக் கூடும் என்று மிரட்டப்படுகின்றன. இது “எந்தவொரு சர்வதேச வங்கிக்கும் விதிக்கப்படும் மரண தண்டனை” என்று ஒரு அமெரிக்க அதிகாரி பெருமையாகவே கூறுகின்றார்.

ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவைப் போன்ற நாடுகளும் தற்போது அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், இந்த உத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மைத் தூண்களில் ஒன்றிற்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மற்ற பெரிய நாடுகளை அமெரிக்க நிதி முறையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இத்தகைய நிலை உருவாக்கத் தூண்டுகிறது. உதாரணமாக, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ப்ரிட்டிஷ் ஐக்கிய அரசு ஆகிய நாடுகள் அமெரிக்கத் தடைகளைத் தவிர்த்து ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்கு “வர்த்தக பரிமாற்றங்களுக்கான ஆதரவு கருவி” (Instrument in Support of Trade Exchanges-INSTEX) என்ற அமைப்பை நிறுவின. இந்திய அரசும் ஈரானிய எண்ணெய் கொள்முதலுக்கான தொகையை இந்திய ரூபாயில் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையை அமைப்பதில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீன அரசும்அமெரிக்காவிற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக, டாலருக்குப் பதிலாக சீன யுவானைப் பயன்படுத்தி சிறப்புப் பணப் பரிமாற்ற வழிமுறைகள் மூலம் ஈரானுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் தொடர்ச்சியான உலகளாவிய நிதி மேலாதிக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதுவரை எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் தற்காலிகமானவையாகவும், பெரும்பாலும் பயனற்றவையாகவுமே உள்ளன. இருப்பினும், அமெரிக்க அரசு தனது பொருளாதாரத்தைத் தொடர்ந்து ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினால், அது மற்ற அரசுகள் மாற்று வழிகளைத் தீவிரமாகத் தேடுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். இத்தகைய நகர்வுகள் பலனளிக்கத் துவங்கினால், அவை அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க வங்கி முறையின் மேலாதிக்கத்திற்குச் சவாலாக அமைந்து,அமெரிக்க அரசு உலகளவில் தனது அதிகாரத்தைச் செலுத்தும் திறனில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஈரானுடன் மோதலில் இறங்குவதன் மூலம், அமெரிக்க அதிகார வர்க்கத்தின் ஹாக்கிஷ் பிரிவினர் மெதுவாகச் சிதைந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அதிகாரத்தின் அடித்தளத்திற்குத்தங்களை அறியாமலேயே ஆபத்தான சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

ஜூலை 01, 2019,

மன்த்லி ரிவ்யூ

(ஜூன் 27, 2019 அன்று அரசியல் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் ஆராய்ச்சிப் பிரிவுகளால முதலில் வெளியிடப்பட்டது)

சூவ்ரத் ராஜூ – பெங்களூருவில் உள்ள கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையத்தின் (International Centre for Theoretical Sciences) இயற்பியலாளரும் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கான கூட்டணியின் (Coalition for Nuclear Disarmament and Peace) உறுப்பினரும் ஆவார். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அவர் சார்ந்த நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவன அல்ல.

குறிப்புகள்

  1. “Iran’s Revolutionary Guard Shoots down U.S. Drone,” Al Jazeera, June 20, 2019, www.aljazeera.com
  2. Martin Matishak, “Trump Warns Iran of ’obliteration like You’ve Never Seen before’,” POLITICO, accessed June 25, 2019, politi.co
  3. Andrew Glass, “Eisenhower Approves Coup in Iran, Aug. 19, 1953,” POLITICO, accessed June 25, 2019, politi.co
  4. Dwight D. Eisenhower, “Atoms for Peace Speech,” Text, International Atomic Energy Agency, July 16, 2014, iaea.org
  5. Itty Abraham, The Making of the Indian Atomic Bomb: Science, Secrecy and the Postcolonial State (Orient Longman, 1999).
  6. Ivanka Barzashka, “Iran Owned Part of Eurodif–Document Posted,” Federation Of American Scientists (blog), accessed June 25, 2019, fas.org
  1. NTI, “Bushehr Nuclear Power Plant,” accessed June 25, 2019, www.nti.org
  2. Suvrat Raju, “India’s Atomic Energy Programme: Claims and Reality,” Aspects of India’s Economy, no. 48 (January 2010), www.rupe-india.org
  3. George H. Quester, “The Shah and the Bomb,” Policy Sciences 8, no. 1 (March 1, 1977): 21–32, doi.org
  4. Robert Fisk, “We’ve Been Here before–and It Suits Israel That We,” The Independent, January 25, 2012, www.independent.co.uk
  5. Gareth Porter, “When the Ayatollah Said No to Nukes,” Foreign Policy, October 16, 2014, foreignpolicy.com
  6. eyed Hossein Mousavian and Mohammad Mehdi Mousavian, “Building on the Iran Nuclear Deal for International Peace and Security,” Journal for Peace and Nuclear Disarmament 1, no. 1 (January 2, 2018): 169–92, doi.org
  7. Paul Lewis, “Iran Curbed On French Atom Plant,” The New York Times, December 4, 1979, sec. Archives, www.nytimes.com
  8. Mousavian and Mousavian, “Building on the Iran Nuclear Deal for International Peace and Security.”
  9. Paul Kerr, “Iran, Russia Reach Nuclear Agreement,” Arms Control Association(blog), April 2005, www.armscontrol.org
  10. David Ensor, “U.S. Has Photos of Secret Iran Nuclear Sites–Dec. 13, 2002,” CNN, December 13, 2002, edition.cnn.com
  11. Mohamed ElBaradei, The Age of Deception: Nuclear Diplomacy in Treacherous Times (New York: Metropolitan Books, 2011).
  12. Fredrik Dahl, “U.N. Atom Agency Head ‘Solidly in U.S. Court’: WikiLeaks,” Reuters, December 1, 2010, www.reuters.com
  13. Paul Reynolds, “Tougher IAEA Line Reflects New Management,” February 19, 2010, news.bbc.co.uk
  14. Mohamed ElBaradei, The Age of Deception: Nuclear Diplomacy in Treacherous Times.
  15. Director of National Intelligence, “Iran: Nuclear Intentions and Capabilities,” November 2007, www.dni.gov
  16. Yukiya Amano, “Final Assessment on Past and Present Outstanding Issues RegardingIran’s Nuclear Programme” (International Atomic Energy Agency, December 2, 2015), www.iaea.org
  17. Mohamed ElBaradei, The Age of Deception: Nuclear Diplomacy in Treacherous Times.
  18. Trita Parsi, “Analysis: Iran’s Nuke Deal Irritates Washington,” ABC News, May 18, 2010, abcnews.go.com
  19. Ellen Nakashima and Joby Warrick, “Stuxnet Was Work of U.S. and Israeli Experts, Officials Say,” Washington Post, June 2, 2012, sec. National Security, www.washingtonpost.com
  20. Alan Cowell and Rick Gladstone, “Blaming U.S. and Israel, Iran Reports Killing of Nuclear Scientist,” The New York Times, January 11, 2012, sec. Middle East, www.nytimes.com
  21. Mousavian and Mousavian, “Building on the Iran Nuclear Deal for International Peace and Security.”
  22. Sogol Setayesh and Tim K. Mackey, “Addressing the Impact of Economic Sanctions on Iranian Drug Shortages in the Joint Comprehensive Plan of Action: Promoting Access to Medicines and Health Diplomacy,” Globalization and Health 12 (June 8, 2016), doi.org
  23. James A Baker et al., “The Iraq Study Group Report,” 2006, www.iraqsolidaridad.org
  24. Tim Arango and Thomas Erdbrink, “U.S. and Iran Both Attack ISIS, but Try Not to Look Like Allies,” The New York Times, December 3, 2014, sec. World, www.nytimes.com
  25. “Iran Nuclear Deal: Key Details,” June 11, 2019, sec. Middle East, www.bbc.com
  26. Thomas L. Friedman, “Iran and the Obama Doctrine,” The New York Times, April 5, 2015, sec. Opinion, www.nytimes.com
  27. John Kerry, “Remarks on Nuclear Agreement With Iran,” U.S. Department of State, September 2, 2015, 2009-2017.state.gov
  28. “Scientists’ Letter to Obama on Iran Nuclear Deal,” The New York Times, August 8, 2015, www.nytimes.com
  29. Mousavian and Mousavian, “Building on the Iran Nuclear Deal for International Peace and Security.”
  30. Noam Chomsky, “Rogue States and Nuclear Dangers,” Tom Dispatch (blog), August 20, 2015, www.tomdispatch.com
  31. Donald J. Trump, “Tweet,” Tweet, Twitter; @realdonaldtrump, April 3, 2015, twitter.com
  32. “President Donald J. Trump Is Cutting Off Funds the Iranian Regime Uses to Support Its Destructive Activities Around the World,” The White House, May 8, 2019, www.whitehouse.gov
  33. James Clapper, “Senate Armed Services Committee Hearing –IC’s Worldwide Threat Assessment. Opening Statement,” February 9, 2016, www.dni.gov
  34. Jason Rezaian, “John Bolton Wants Regime Change in Iran, and so Does the Cult That Paid Him,” Washington Post, March 24, 2018, www.washingtonpost.com
  35. “Iran Is Implementing Nuclear-Related JCPOA Commitments, Director General Amano Tells IAEA Board,” International Atomic Energy Agency, March 5, 2018, www.iaea.org
  36. S. Treasury Department, “Frequently Asked Questions Regarding TheRe-Imposition of Sanctions,” May 8, 2018, www.treasury.gov
  37. “Iran’s Crude Exports Slide to 500,000 Bpd or Less: Sources,” Reuters, May 17, 2019, www.reuters.com
  38. Amanda Macias, “Japanese Oil Tanker Owner Disagrees with U.S. Military That a Mine Caused Blast near Iran,” CNBC, June 14, 2019, www.cnbc.com
  39. Javad Zarif, “Tweet,” Tweet, Twitter; @JZarif, June 13, 2019, twitter.com
  40. Peter Baker, “As Trump Accuses Iran, He Has One Problem: His Own Credibility,” The New York Times, June 14, 2019, sec. U.S., www.nytimes.com
  41. Toluse Olorunnipa et al., “‘I Stopped It’: Inside Trump’s Last-Minute Reversal on Striking Iran,” Washington Post, June 21, 2019, sec. Politics, www.washingtonpost.com
  42. Edward Wong and Michael Crowley, “Pompeo, a Steadfast Hawk, Coaxes a Hesitant Trump on Iran,” The New York Times, June 22, 2019, sec. World, www.nytimes.com
  43. Matishak, “Trump Warns Iran of ’obliteration like You’ve Never Seen before’.”
  44. “India and the Iran Vote in the IAEA–FPIF,” Foreign Policy In Focus, October 27, 2005, fpif.org
  45. Bloomberg, “India Slow to Develop Chabahar Port as China Races Ahead at Rival Hub,” Economic Times, October 5, 2016, economictimes.indiatimes.com
  46. “India and Iran in ‘historic’ Port Deal,” May 23, 2016, sec. India, www.bbc.com
  47. PTI, “US Deadline Ends, India Stops Purchasing Iranian Oil -,” The Economic Times, May 24, 2019, economictimes.indiatimes.com
  48. India Today Web Desk, “Iran Is Now India’s 2nd Biggest Oil Supplier Ahead of Saudi Arabia, but for How Long?,” India Today, July 24, 2018, www.indiatoday.in
  49. Juan Cole, “Iran’s Leader, Khamenei, Blasts Pres. Rouhani for Negotiating Nuclear Deal with US,” Informed Comment, May 23, 2019, www.juancole.com
  50. Hillary Clinton, “Tweet,” Tweet, Twitter; @hillaryclinton, May 8, 2018, twitter.com
  51. Mike DeBonis and Karoun Demirjian, “War-Weary Republicans and Democrats Express Relief after Trump Calls off Strike on Iran,” Washington Post, June 21, 2019, sec. Politics, www.washingtonpost.com
  52. Neta C Crawford, “United States Budgetary Costs of the Post-9/11 WarsThrough FY2019:$5.9 Trillion Spent and Obligated,” November 14, 2018, watson.brown.edu
  53. Neta C Crawford, “Human Cost of the Post-9/11 Wars: Lethality and the Need for Transparency,” November 2018, watson.brown.edu
  54. Nilo Tabrizy, “M.E.K.: The Group John Bolton Wants to Rule Iran,” The New York Times, May 7, 2018, sec. World, www.nytimes.com
  55. David S Cohen, “Iran Nuclear Negotiations: Status of Talks and the Role of Congress: Written Testimony” (U.S. Senate Committee on Foreign Relations, January 21, 2015), www.foreign.senate.gov
  56. “Europe Sets up Iran Trade Mechanism to Bypass U.S. Sanctions,” France 24, January 31, 2019, www.france24.com
  57. PTI, “India to Pay in Rupees for Iranian Oil from November,” Economic Times, September 20, 2018, economictimes.indiatimes.com
  58. “Iran, China Resolve Banking Problems for Oil Payments,” Fars News, November 28, 2018, en.farsnews.com

[1] இஸ்லாமிய மார்க்கப்படி வழங்கப்படும் கட்டளை

[2] 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துனிசியாவில்தொடங்கி, 2011ஆம் ஆண்டில் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பரவிய ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் ஆயுதமேந்திய கலகங்களின் ஒரு அலையே அரபு வசந்தம். சர்வாதிகார ஆட்சி, ஊழல், வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவற்றின் மீதான பரவலான அதிருப்தியால் உந்தப்பட்ட இத்தகையக் கிளர்ச்சிகள், துனிசியா, எகிப்து, லிபியாமற்றும் யேமன் ஆகிய நாடுகளில் நீண்டகாலமாக ஆண்டுகொண்டிருந்த தலைவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன

[3] Islamic State of Iraq and Levant / Islamic State of Iraq and Syria

[4] சீனா, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ப்ரிட்டிஷ் ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா

[5] அமெரிக்க அதிகார வர்க்கத்தினரிடையே அரசியலிலும் பொருளாதாரத்திலும் காணப்படும் Hawkish (பருந்து-போன்ற தீவிரவாத) மற்றும் Doveish (புறா-போன்ற மிதவாத) என்ற இரு கண்ணோட்டங்கள் மிகவும் முக்கியமானவை. Hawkish ஆதரவாளர்கள் ராணுவ பலத்தையும் Doveish ஆதரவாளர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் நம்புவர்.

[6] கட்டுரை வெளியான ஆண்டு 2019.

📚 எழுதியவர்:

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *