பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கல்வி கற்று மிகச்சிறந்த ஆளுமைகளாக வளர்ந்துள்ள எட்டு சாதனைப் பெண்களின் வரலாறு.
பெண்கள் சமூகத்தில் தங்கள் உரிமைகள் மற்றும் அந்தஸ்துக்காக போராடுகின்றனர். மீண்டும் மீண்டும் சமத்துவத்தை வலியுறுத்திக் கொண்டே உள்ளனர். ஆனாலும் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடக் கூடிய வாழ்க்கையையே வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் பெண்கள் சமமாகவோ அல்லது சமமான அந்தஸ்து பெற்ற சம்பவங்கள் நம் வரலாற்று பக்கங்களில் காணவே முடியாது.
பல பெண்கள் பாலின பாகுபாடு, பாலின துஷ்பிரயோகம், குழந்தை திருமணம், பெண் கல்வி மறுப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டே வருகிறார்கள்.
இது போன்ற சூழலுக்கு மத்தியில் சாதனைப் பெண் தோழர்களும் வளர்ந்துள்ளார்கள் என்பதை பறைசாற்றுகிறது எழுத்தாளரும் ஆசிரியருமான முனைவர் ரமாதேவி ரத்தினசாமி எழுதியுள்ள “சுயம்பு” (தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்) நூல்.
இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள் ஏராளமானோர்.
குறிப்பாக அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், அஞ்சலை அம்மாள், சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்க தேவர், வ.உ சிதம்பரம் பிள்ளை, வாஞ்சிநாதன், இம்மானுவேல் சேகரன், திருப்பூர் குமரன், பாரதியார், ஐ.மாயாண்டி பாரதி, கே.பி ஜானகி அம்மாள் ம.பொ. சிவஞானம், பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம், பகுத்தறிவுத் தந்தை பெரியார், சத்தியமூர்த்தி, கே.டி.கே தங்கமணி, ஓமாந்தூர் ராமசாமி, சங்கரலிங்கனார் போன்றவர்கள் ஆவார்கள்.
அதுபோன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நமது பாரத்தந்தை மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், உத்தம் சிங், சுபாஷ் சந்திரபோஸ், கோபாலகிருஷ்ண கோகலே, சந்திரசேகர் ஆசாத், லால் பகதூர் சாஸ்திரி, லஜபதி ராய், அன்னி பெசன்ட் அம்மையார், லட்சுமிபாய், சரோஜினி நாயுடு போன்ற வரலாற்று நாயகர்களை நாம் நம் பாடப் புத்தகத்தில் படித்துக் கொண்டே இருக்கிறோம்.
அந்த வரிசையில் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டியவர்கள் என எட்டு பெண் தோழர்களின் வரலாற்று பதிவை பதிவிட்டுள்ளார் நூலாசிரியர் ரமாதேவி ரத்தினசாமி.
இந்த சமுதாயம் இன்றும் ஆண்களை மட்டுமே கொண்டாடி வருவதை நாம் அறிவோம். ஆனால் ஆண்களை விட சாதனை படைத்த ஏராளமான பெண்கள் இவ்வுலகில் குறிப்பாக இந்தியாவில் ஏன் தமிழகத்திலும் உள்ளார்கள் என்பதே உண்மை. சாதனைப் பெண்களை நாம் வரலாறாக பதிவு செய்யவில்லை. அந்த வகையில் மாற்றத்தை கொண்டு வந்து தமிழகத்தில் வாழும் எட்டு சாதனைப் பெண் தோழமைகளை மிக அருமையாக நம் கண் முன் காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் ரமாதேவி ரத்தினசாமி.
பெண்கள் எப்போதும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை ஆனால் அடையாளப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.
பெண்கள் தங்கள் வீட்டை கவனித்துக் கொண்டு, தான் பணி புரியும் வேலையை செய்து கொண்டு வருகின்றனர்.
இப்போது தங்கள் நாட்டையும் கவனித்துக் கொள்ள தொடங்கி விட்டார்கள் என்பதை உண்மை. ஒரு வேலையை மட்டுமே கவனிப்பது என்பது சிரமம். அதைவிட இரண்டு வேலைகளையும் சேர்த்து செய்வது கடினமோ கடினம். இன்றைய பெண் தோழர்கள் ரெண்டு வேலைகளையும் செய்ய பழகிய அனுபவத்தோடு மூன்றாவது வேலையும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
குறிப்பாக நாட்டையும் சமுதாயத்தையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ரெண்டு வேலையும் திறம்பட கையாண்ட அனுபவம் மூன்றாவது வேலை செய்வது இவர்களுக்கு மிக எளிமையாக ஆகிவிட்டது. உலகம் வியக்கும் அளவிற்கு உயர்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடப்பட்ட வேண்டியவர்களாக உருவாகிவிடுகின்றனர்.
எனவே இவர்களின் வரலாற்று பதிவுகளை அவசியம் மக்களிடம் குறிப்பாக பெண் தோழர்களிடமும், மாணவிகளிடமும், குறிப்பாக குழந்தைகளிடமும் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது.
இந்த நூலினை வாசிப்பதன் மூலம் ஏராளமான சாதனை பெண்கள் உருவாவதற்கான கருவாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆண்களும் அவசியம் இந்நூலினை படிப்பதன் மூலம் தங்களுக்குள்ளும் தங்களது குடும்பத்திற்குள்ளும் பெரும் மாற்றத்தை கொண்டுவர இந்த நூல் பேரு உதவியாக அமையும் என்பது உண்மை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கெடுத்துள்ளனர். ஆனால் அந்த வரலாறு எங்குமே பதிவு செய்யப்படாமல் மறைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் நாம் இதுபோன்ற பெண் ஆளுமைகளை பதிவு செய்து வரலாறாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள எட்டு பெண் ஆளுமைகளும் மிகக் கடுமையான காலகட்டத்தில் இருந்து மீண்டு தாங்களாகவே தங்களது முயற்சியில் கல்வி பெற்று வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளர்கள்.
குறிப்பாக ரயில்வே துறை பணியை உதறி விட்டு சமூகப் பணியை செய்து கொண்டு, மிக சிறந்த பெண் எழுத்தாளர்களை உருவாக்கி வரும் தோழமை, எழுத்தாளரும் பெண்ணிய செயல்பாட்டாளருமான நிவேதிதா லூயிஸ். கலையும் கல்வியும் நமக்கு மிக அவசியம் என்பதோடு இந்தியாவின் பழம் பெரும் கதை சொல்லியுமான ஜீவா ரகுநாத். தான் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வி அறிவு பெறுவதற்காக தன்னுடைய வீட்டிலே நூலகம் வைத்துள்ளதும், மேக் வெல் கண்டைனர் கேர் நிறுவனத்தின் இயக்குனர், முதன்முதலாக கண்டைனரில் அலுவலகம் செய்த ஆளுமை, பாவையர் மலர் மாத இதழின் ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் வானதி மணிகண்டன்.
மன நல ஆலோசனை, பெண் தொழில் முனைவோருக்கான வழிகாட்டல், இயற்கை பேரழிவு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் இவரது பணி அயராது இருக்கும், பெண்களால் முடியாது என்ற பிரம்மத்தை உடைத்து அனைவருக்கும் முன்னோடியாய் வாழ்ந்து வரும் சமூக செயல்பாட்டாளர் கீர்த்திகா. அரசு பணியை உதறிவிட்டு சமூகப் பணிதான் முக்கியம் என்று கருதி, உற்சாகத்தின் ஊற்றுக் கண், தன்னம்பிக்கை வார்த்தைகள் பெண்ணியம் குறித்தான புதிய பார்வைகள் குறித்தும், பெண்கள் மத்தியில் உரக்க சொல்லி வரும் தோழமை, ஆவணப்பட இயக்குனர் மற்றும் தனது எழுத்துக்கள் மூலம் சமூகத்தை மாற்றுவதற்கு களமிறங்கியுள்ள எழுத்தாளர் கீதா இளங்கோவன்.
பேராசிரியர் பணி முடிந்தவுடன் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து அறிவியல் சிந்தனைகளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சென்று இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி வரும் தோழமை, இரும்புப் பெண்மணி பேராசிரியர் மோகனா. இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கை விதையை குறிப்பாக கம்ப்யூட்டர் யுகத்தில் ஒவ்வொருவரும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எந்த வகையில் புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி வருபவர், ஊடகவியலாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமா ராக்கேஷ்.
மனிதர்களுக்கு அடிப்படைத் தேவை என்பது உண்ண உணவும் வசிக்க இருப்பிடமும் என்று தான் சொல்லிக் கொடுக்கிறோம் ஆனால் காமமும் அடிப்படைத் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். தனது வாழ்வில் கிடைத்த சோகமான சூழலின் அனுபவத்தை எழுத்து மூலம் பதிவு செய்து கழிவறை இருக்கை எனும் நூலாக்கி தனது எழுத்துக்கள் மூலம் மிகப்பெரிய வரலாறைப் படைத்து வரும் தோழமை லதா ஆகியோரின் வரலாற்று பதிவுகளே இந்த சுயம்பு நூல் ஆகும்.
எனவே இந்த நூலை கொண்டாடும் அதே தருணத்தில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் தோழர்களின் வரலாற்றையும் நாம் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மிக அவசியமாகிறது.
இந்த நூலினை பதிவு செய்த எழுத்தாளர் ஆசிரியர் முனைவர் ரமாதேவி ரத்தினசாமியை பேரன்புடன் வாழ்த்துவதோடு இன்னும் பல நூல்கள் படைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம்.
இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் ஆளுமைகள் போன்று அதே ஆளுமை வட்டாரத்தில் உள்ளவர் தான் முனைவர் ரமாதேவி ரத்தினசாமி அவரது வரலாற்றையும் நாம் பதிவு செய்ய வேண்டும்.
“சுயம்பு” (தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்)
முனைவர். ரமா தேவி ரத்தினசாமி
விலை ரூபாய் : 160/-
வெளியீடு : வேரல் புக்ஸ்
சென்னை-600093
தொடர்பு எண்: 9678764322
மின்னஞ்சல் : veralbooks2021@gmail.com
“சுயம்பு” நூல் அறிமுகம் எழுதியவர்:

MJ. பிரபாகர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
