எஸ்.வி.ராஜதுரை எழுதிய "பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள் புத்தகம் | SV Rajadurai's Paarvailathalum Paarthalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

எஸ்.வி.ராஜதுரை எழுதிய “பார்வையிழத்தலும் பார்த்தலும்” கட்டுரைகள் – நூல் அறிமுகம்

தமிழ்ச்சூழலில் குறிப்பிடப்படவேண்டிய அறிவாளுமை மார்க்சிய – பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை கடந்த 2003 – 2007 முடிய உள்ள காலகட்டத்தில் பல்வேறு இதழ்களிலும் விழா மலர்களிலும் எழுதிய பல்தரப்பட்ட பொருள்களைப் பேசும் 44 கட்டுரைகளின் தொகுப்பு இது (“பார்வையிழத்தலும் பார்த்தலும்” கட்டுரைகள்).

நூல் முழுக்க வாசித்து முடித்ததும், என்னால் மூன்று விசயங்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

1.எஸ்.வி.ராஜதுரையின் புவிசார் அரசியல் தெளிவு
2.பார்க்கும், உணரும், வாசிக்கும், கேட்கும் எல்லாவற்றையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் கூர்நோக்கும் திறன்.
3.அல்-புனைவாக்கங்களை அதிகம் படைத்துள்ளார் என்றாலும் புனைவு/இலக்கியம்/கலை ஆகியவற்றின் மீதான அவரது ஈடுபாடு.

குறிப்பாக, கதை சொல்லும் நேர்த்தி அவருக்கு அழகாகக் கைகூடி வந்துள்ளது. தலைப்புக் கட்டுரையான ‘பார்வையிழத்தலும் பார்த்தலும்’-ல் போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஹோஸே ஸரமாகோ (Jose Saramago) எழுதிய குகை (The Cave), பார்வையின்மை (Blindness) மற்றும் பார்த்தல் (The Seeing) ஆகிய புதினங்களின் கதைச் சுருக்கங்களை அவர் தொகுத்தளித்திருக்கும் விதமானது மேற்படி புதினங்களை முழுமையாக வாசித்த அனுபவத்தை ஏற்படுத்தியது. எஸ்.வி.ராஜதுரை தனது கதை சொல்லும் திறனில் இன்னும் கவனம் செலுத்தி புனைவுகள் பல தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கொடுத்திருக்கலாமோ என்ற ஏக்கம் கொள்ள வைக்கிறது.

பெரும்பாலான நூல் மதிப்புரைகள் (அவற்றை நூல் மதிப்புரை, நூல் விமர்சனம், நூல் அறிமுகம் எனப் பல்வாறாகவும் குறிப்பிடலாம்) தன்னளவில் முழுக் கட்டுரைகளாகவே உருவாகி வந்துள்ளன. பேச வந்த நூல் குறித்த கருத்துகள் மட்டுமின்றி, அந்நூல் பேசும் பொருள் தொடர்பான பிற அரசியல், பண்பாட்டு, சமூகத் தாக்கங்கள் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை வழங்குவதை தனது நூல் மதிப்புரைகளில் ஒரு பாணியாகவே கைக்கொள்கிறார்.

கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ நான்காம் பாகம் பற்றிய கட்டுரையில் தி.மு.க., கலைஞர் பற்றிய ஒரு சிறிய குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் தருகிறார். தேவிபாரதியின் ‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ நூலுக்கான மதிப்புரையில் அவசரநிலை பற்றியும் நக்சல் போராளிகள் பற்றியுமான சில தனித்துவமான தகவல்களை அளிக்கிறார். தீண்டத்தகாத சோளகர்களிடையேயும் நிலவும் சாதியம் குறித்த தனது நுட்பமான பார்வையை ‘சோளகர் தொட்டி’ நாவல் மதிப்புரையில் எடுத்துரைக்கிறார். பா.ராகவனின் ‘டாலர் தேச’த்தின் மொழிநடையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘சௌந்தர்ய லஹரியை சென்னைத் தமிழில் எழுத முடியுமா?’ என்று குறும்புடன் விமர்சிக்கிறார். ஈ.ஹெச்.கார் எழுதிய ‘எது வரலாறு?’ எனும் நூலின் தமிழ் மொழியாக்கத்தினை மதிப்பிட வந்தவர் அதை முற்றிலும் புறக்கணித்து ஆங்கில மூலமான What is Historyயையே படித்துவிடலாம் என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறார்.

பா.ராகவனின் ‘செப்டம்பர் 11, 2001’ நூல் குறித்து எழுதும்போது அந்நிகழ்வு தொடர்பாக புஷ் அரசு நியமித்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைப் புரிந்து கொள்ள அப்போது நிலவிய கள உண்மைகளைப் பட்டியலிடுகிறார். ‘யானைகள்: அழியும் பேருயிர்’ நூல் பற்றிக் கூறுகையில் உலகெங்கும் நிலவும் விலங்கு உரிமைகள் என்பதற்கும் விலங்கு நலன்கள் என்பதற்குமான வேறுபாடு அவற்றின் உள்ளார்ந்த அர்த்தம் யார் அவற்றை முன்னெடுப்பது போன்ற விபரங்களை வாசகருக்கு விரிவாக எடுத்துரைக்கிறார். பிரேம்நாத் பஸாஸின் ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ இரத்தினச்சுருக்கமாக ‘..’பலித்தவரை’ என்பதுதான் பார்ப்பனீயமும் இந்துமதமும் ஆகும்’ என்ற பெரியாரின் கூற்றை ஒப்புமைப்படுத்தி சுருங்க விளக்கிவிடுகிறார்.

‘எதிர்ப்பும் எழுத்தும்’ நூலுக்கான குறிப்பில் மெக்சிகோவின் சியாபாஸ் மலைப்பகுதியும் ஜபாடிஸ்டா இயக்கத்தையும் விரிவாகக் காணத் தருகிறார். பா.ராகவனின் ‘நிலமெல்லாம் ரத்தம்’ நூலுக்கான கட்டுரையில் யூத ஒதுக்கம் ஏற்படுத்திய யூத ஒற்றுமை அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட யூத எதேச்சாதிகாரப் போக்கு எவ்வாறு யூத அடிப்படைவாதமான ‘ஜியோனிசமாக’ மாறியது என்ற வரலாற்று விபரத்தைப் பகிர்கிறார். தமிழ் முஸ்லீம்கள் பற்றிய நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று ஜே.பி.பி.மோரேவின் நூலுக்கான கட்டுரையில் வருத்தப்படும் அவர், தமிழ் முஸ்லீம்களின் வரலாற்று இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘சிக்மண்ட் பிராய்ட்: உளவியல் பகுப்பாய்வு அறிவியல்’ நூல் குறித்த மதிப்புரையில் பிராய்டிசம் பற்றிய ஒரு சுருக்கமான எளிமையான அறிமுகத்தைத் தருகிறார். பழ.நெடுமாறனின் நூல் குறித்துப் பேசுமிடத்தில், நீதிக்கட்சி அமைச்சரவையில் பார்ப்பனர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதா என்பதற்கும் தலித் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பதற்கும் தக்க சான்றுகளுடன் மறுத்து பதில் அளித்துள்ளார்.

இது போன்றே அழகியபெரியவனின் ‘நெரிக்கட்டு’ சிறுகதைத் தொகுப்பு, அருணனின் ‘இந்தியத் தத்துவ மரபு’, பியர் பூர்தியுவின் (Pieree Bourdieu) தொலைக்காட்சி பற்றிய நூலின் தமிழ்ப் பெயர்ப்பு, மர்ஜானா சத்ரபி (Marjane Satrapi)யின் ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை என்ற கிராபிக் கதைப்புத்தகத்தின் தமிழ் ஆக்கம், தியடோர் பாஸ்கரனின் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’, மலபார் இசுலாமிய மாப்பிள்ளைமார் கிளர்ச்சியைப் பேசும் ‘மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்’ போன்று அவர் மதிப்புரைக்கு எடுத்துக்கொண்ட நூல்களின் தளமும் களமும் பன்முகத்தன்மை வாய்ந்ததும் அதிக எண்ணிக்கையிலான வாசகர்கட்கு கொண்டு செல்லப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த நூல்களுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெளிவந்த காலகட்டத்தில் (2003 – 2007) நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள், முக்கிய ஆளுமைகளின் மரணம் போன்றவையும் அவரது கட்டுரைகளுக்கான பேசுபொருளாகியுள்ளது.

காமராசர் பற்றி அவரது நூற்றாண்டு சமயத்தில் எழுதியது (‘அவரது (காமராஜரது) தரிசனம் பூர்ஷ்வா வர்க்கத்தின் வரம்புகளுக்குட்பட்டது’ என்கிறார்), நடிகர் மார்லன் பிராண்டோவின் நாம் அறியாத ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முகம்’, 2003-ல் ஜெயலலிதா அரசாங்கம் கொண்டு வந்த ‘கோயில்களில் உயிர்ப்பலி தடை சட்டம்’ பற்றிய கட்டுரை (‘தெருநாய்களுக்கும் பலியிடப்படும் ஆடுகளுக்கும் கரிசனம் காட்டும் மேனகாவும் ஜெயலலிதாவும் நிச்சயமாக ஹரியானா பண்ணைகளிலோ ஹைதராபாத் திராட்சைத் தோட்டங்களிலோ சுதந்திரமாகப் புகுந்து விளையாடிக் கொட்டமடிக்கும் ‘உரிமை’களைக் குரங்குகளுக்கு வழங்க மாட்டார்கள்’ எனப் பகடி செய்வது இன்றைய தெருநாய்கள் பிரச்சினைக்கும் பொருந்துகிறது), 2004-ல் மறைந்த பியுசிஎல் அமைப்பின் முக்கிய தலைவர் வி.எம்.தார்குண்டே பற்றிய அரிய செய்திகள், 2003 பாரிஸ் ஒலிம்பிக் பற்றிய அரசியல் கட்டுரை, யாசர் அராபத்தின் மரணத்தை ஒட்டிய பாலஸ்தீனிய மக்களின் தன்னெழுச்சி பற்றிய கட்டுரை, கண்துடைப்பான ஐ.நா.அவையும், பாதுகாப்புக் கவுன்சிலின் கண்கட்டு நடவடிக்கைகள் பற்றிய கட்டுரை, கிறித்துவத்தின் ஏகாதிபத்திய ஆதரவு குறித்த ‘மதமும் மமதையும்’ கட்டுரை, மன்மோகன் சிங் அரசுக்கும் புஷ் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட அணுசக்தி உள்ளிட்ட வெளியுறவு ஒப்பந்தத்தின் விளைவாக அமெரிக்கக் காலடியில் இந்தியா விழுந்த நிலை பற்றி விளக்கும் கட்டுரை, 2006ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரெஞ்சு அணியின் – குறிப்பாக – அணித்தலைவர் ஜிடெனின் – இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளைப் பேசுகிறார், 2003-ல் மறைந்த பிரெஸ்ஸன் (Bresson) என்ற புகைப்படக் கலைஞரின் வாழ்வும் சிந்தனையையும் அறிமுகப்படுத்தும் கட்டுரை, இலங்கையின் தர்மஸ்ரீ பண்டாரநாயகவின் போர்களுக்கு எதிரான நாடகமாக்கங்கள் குறித்த தன்னனுபவப் பதிவு (கிரேக்க யூரிபிடிஸின் மெடியா நாடகம் தொடங்கி விரிவான தரவுகளுடனான கட்டுரை இது), பெரியார் மரபுக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. அரசாங்கம் வாக்கு வங்கிக் கணக்குக்காகவே ‘டாவின்சி கோட்’ திரைப்படத்தைத் தடை செய்தது என்கிறார் ஒரு கட்டுரையில், 2006-ல் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேன் வழக்கு பற்றிய உண்மை விபரங்கள், அரசியலின் வரலாற்றுப் பங்களிப்பு அல்லது வரலாற்றில் அரசியலின் வகிபாகம் பற்றிப் பேசும் ஒரு பதிவு, எத்தனை விமர்சனம் இருந்தாலும் லெனின் தலைமையிலான நவம்பர் புரட்சியின் வழியே நமக்கான மிச்சமிருக்கும் பாதை என்று விளக்கும் கட்டுரை, மார்க்ஸின் மூலதனத்தின் முதல் பாகத்திற்கான ஒரு முன்னுரை நூலாக பிரான்சிஸ் வீன் (Francis Wheen) எழுதிய ‘மூலதனம்: ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற நூலைக் கொள்ள முடியும் என்று நிறுவும் கட்டுரை, சோவியத் யூனியனின் ஆதரவாளராக இருந்தாலும் சோசலிச யதார்த்தவாதத்தை ஏற்காத பாப்லா நெருதாவின் கவிதைக் கோட்பாட்டை விரிவாகப் பேசும் கட்டுரை என எஸ்.வி.ராஜதுரை தொடாத பொருளே இல்லை எனும் வகையில் நூல் முழுக்க அரிய தகவல்களும் வரலாற்று நிகழ்வுகளும் மறைக்கப்பட்ட உண்மைகளும் விரவிக் கிடக்கின்றன.

இவை தவிர, தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் கீழ்க்காண்பவற்றைக் குறிப்பிட விழைகிறேன்.

பாரதிதாசனும் பெரியாரும் ஒரே திராவிட/தமிழ்ச் சிந்தனை மரபில் வந்தவர்கள் – ஒத்த கருத்துடையவர்கள் – என்ற கருதுகோளைக் கட்டுடைக்கும் கட்டுரை. தேசம், பெண்ணியம் போன்றவற்றில் இருவருக்குமான நுட்பமான வேறுபாடுகளைக் கட்டுரை தெளிவுறச் சுட்டுகிறது.

மார்க்சிய நாடகாசிரியரான பெர்தோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)-ன் மேதைமை குறித்த கட்டுரை. பிரெக்டின் நாடகங்கள் அதுகாறும் நிகழ்த்தப்பட்டுவந்த துன்பியல் நாடகங்கள் – ‘எல்லாம் விதி’ – வகையறாக்களைக் கடாசிவிட்டு பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்பச் செய்தது எவ்வாறு என்பதை விவரிக்கும் கட்டுரை.

மார்க்சியத்தின் இப்போதைய வளர்நிலை அல்லது வளர்சிதை நிலை, சோவியத் வீழ்ச்சி, உலகெங்கும் மெல்ல முகிழ்த்துவரும் நவதாராளவாத முதலீட்டிய வலதுசாரி எழுச்சி காலகட்டத்தில், இன்னும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் மார்க்சியம் (வறட்டு மார்க்சியம் – அதீதமான நம்பிக்கைவாதம் – அல்ல) பற்றியும் அதனூடாக ஒரு பற்றுக்கோடாக இருக்கக்கூடிய ‘மனித உரிமைகள்’ (அது பூர்ஷ்வா முதலாளித்துவ விளைவென்ற போதிலும்) பற்றியும் வேறு பார்வை தரும் ‘மார்க்சியமும் மனித உரிமைகளும்’ கட்டுரை.

‘அதிகாரபூர்வமான’ வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை நிராகரித்த வால்ட்டேர் பெஞ்சமின் (Walter Benjamin), ‘இயந்திரங்கள் மூலம் பிரதிகள்’ செய்யப்படும் யுகத்தில், உற்பத்தி உறவுகள் குறித்த மரபான பார்வையிலிருந்து விலகி பேசும்படம் (திரையாக்கம் – இங்கு ஜமாலனின் சினிமாத்துவம் நூலின் கருதுகோளை ஒப்பு நோக்க விழைகிறேன்) குறித்தும், கலைப்படைப்பின் சடங்கு மதிப்புக்குப் பதிலாகக் கிடைக்கும் காட்சி மதிப்பு (exhibition value) குறித்து பெஞ்சமினது ‘அறிவு விளக்கங்கள்’ (Illuminations) மற்றும் ‘வரலாறு பற்றிய தத்துவம் மீதான ஆய்வுரைகள்’ (Theses on the philosophy of History) முதலியவற்றின்வழி விரிவாகப் பேசும் கட்டுரை.

எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து தமிழாக்கம் செய்துள்ள ‘அக்மதோவா அக்கரைப்பூக்கள்’ மற்றும் ‘மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்’ ஆகிய மொழியாக்க நூல்களை முன்வைத்து மொழிபெயர்ப்பு என்பது ஏன் இரண்டாந்தர செயல்பாடாக மதிப்பிழந்து கிடக்கிறது – அது படைப்புச் செயல் போல கொண்டாடப்படுவதில்லையே ஏன் என்ற கேள்விகளுக்குப் பதில் தேடும் விரிவான கட்டுரை.

மிகக் குறுகிய ஒரு காலகட்டத்திலேயே (2003 – 2007) இத்தனை வித கருதுகோள்களுடனும் பொருள்களுடனும் – தான் பார்க்க நேர்ந்த, வாசிக்க நேர்ந்த – தன் சூழலில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளின்பால் – என எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றிய ஒரு மனிதனின் அறிவுச் செயல்பாடு இந்நூல். எனில், வாழ்நாள் முழுக்க அம்மனிதனின் இயக்கம் குறித்த பிரமிப்பை இந்நூல் ஏற்படுத்தவே செய்கிறது.

எல்லா நிகழ்வுகளிலும் மானுட மேன்மைக்கான ஒளிக்கீற்றைத் தேடும் பார்வை மார்க்சியம் – பெரியாரியம் மூலமாக எஸ்.வி.ராஜதுரைக்கு வாய்க்கப் பெற்றுள்ளதற்கு இந்நூல் ஒரு சான்று. நூலின் புழங்கு கால வெளியில் நேர்ந்த புவிசார் அரசியல் நிகழ்வுகள் குறித்த ஒரு கோட்டுச்சித்திரத்தையும் நூல் கூடவே தருகிறது.

அறிவார்ந்த சமூகத்தின் தேடல் மிகுந்த வாசகருக்கு இந்நூல் பெரிதும் உவப்பளிக்கும் – வழிகாட்டும் என்றால் அது உயர்வுநவிற்சியல்ல – உண்மை.

நூலின் விவரங்கள்:

நூல்: பார்வையிழத்தலும் பார்த்தலும் – கட்டுரைகள்
நூலாசிரியர்: எஸ்.வி.ராஜதுரை
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
விலை: ரூ.330
தொடர்புக்கு: 044 26241288 / 26251968 –
மின்னஞ்சல்: info@ncbh.in –
வலைதளம்: www.ncbhpublisher.in

எழுதியவர் : 

✍️ – அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *