நூல்: சுதேசி கப்பல் (Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire)
ஆசிரியர்: ஆ.இரா. வேங்கடாசலபதி (A.R. Venkatachalapathy)
வெளியீடு: பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penquin Random House India)
“ஆவணப் பதிவுகளை மீளக் கொணர்வதிலும், வரலாற்றை இயம்புவதிலும் ஓர் உடைப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்று ‘சுதேசி கப்பல்’ (Swadeshi Steam) என்ற நூல் குறித்துப் புகழாரம் சூட்டுகிறார்” வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ண காந்தி. ‘சுதேசி கப்பல்’, “சலபதியின் நாற்பதாண்டு கால உழைப்பின் விளைச்சல்’ என்கிறார், எழுத்தாளர் பெருமாள்முருகன். தனக்கெதிரான அரசியல் பழிவாங்கும் புயலையும், நிலைகுலைய வைக்க வல்ல பொருளாதாரத் தடைகளையும் கண்டு “அஞ்சேன் சோர்ந்திலேன்” என்று சொன்ன கப்பலோட்டியத் தமிழன் வஉசி, அவற்றை எவ்வாறு எதிர் கொண்டார் என்ற கதையை நெகிழ வைக்கும், மறக்கவியலாத எழுத்துக்களில் (ஆங்கில) படைத்திருக்கிறார், ஆ. இரா. வேங்கடாசலபதி.
புத்தகத்தில் ஆங்காங்கே காணப்படும் கவி நயத்தைப் பற்றி முதலில் ஓரிரு உதாரணங்களோடு சொல்ல வேண்டியுள்ளது. sea change, floating a company, choppy waters, marooned என்று அத்தியாயத்தின் தலைப்புக்கள் யாவும் கடல் சார்ந்த சொற்களைத் தாங்கி நிற்பது ஓர் அழகு. தூத்துக்குடி வர்த்தகர்கள் சுதேசி கப்பலில் முதலீடு செய்கிற போது கடுமையான சூழலும் நிச்சயமற்ற எதிர்காலமும் அதன் இருந்ததை “ when the horizon was not visible, the winds were uncertain and the undercurrent treacherous” என்று கவிநயத்தோடு சொல்கிறார் ஆசிரியர்.
சுதேசி கப்பல் (Swadeshi Steam) கம்பெனி உருவாவதற்கான இந்திய விடுதலை அரசியல் பின்புலத்தை விவரிப்பதோடு கதை தொடங்குகிறது. ஆம்! இந்த வரலாற்றுப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது என்று சொன்னால் அது வெறும் புகழ்ச்சியல்ல, உண்மை.
ஆங்கில ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக வங்காளப் பிரிவினையை அறிவித்தது. அதற்கெதிரான விடுதலை போராட்டம் சுதேசி இயக்கமாக, சுயாட்சி உரிமை முழக்கமாக நாடெங்கும் விரிந்தது. வங்கப் பிரிவினைக்கு எதிரான சுதேசி இயக்கம், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை, தஞ்சை, சேலம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் வெடித்தன. வஉசி, சுப்ரமணிய சிவா, சர்க்கரைச் செட்டியார், பாரதி போன்ற பல திறன்மிகு இளைஞர்களை அடையாளம் கண்டது, தமிழக சுதேசி இயக்கத்தின் ஒரு சிறப்பு. சுதேசமித்திரன் போன்று, சுதேசி என்ற அடைமொழி கொண்ட, பல இதழ்கள் வெளிவரத் தொடங்கியது மற்றொரு சிறப்பு. இன்னுமொரு முக்கியமான சிறப்பும் அதற்குண்டு. வங்கத்தில் இருந்ததைப் போல தேசிய இயக்கங்களிலிருந்து இஸ்லாமியர்களைப் பிரித்து வைத்த மத அடையாளங்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு விடுதலை இயக்கங்களில் இல்லை.

இந்த விடுதலை இயக்கப் பின்புலத்தில்தான் சுதேசி கப்பல் (Swadeshi Steam) நிறுவனம் களம் கண்டது; கப்பலோட்டும் வணிகத்தில் இருந்த ஆங்கிலேய ஏகபோகத்திற்கும் இந்தியாவை காலனி நாடாக மாற்றிய ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் வந்துபார் என்று சவால் விட்டது. வீறு கொண்டெழுந்த சுதேசி இயக்கத்தால் கப்பல் வணிகம் என்ற கரு வ உ சி உள்ளத்தில் சூல் கொண்டது; அக்கரு வளர்ந்து செயலாக்கம் பெற உள்ளூர் சூழலைச் சாதமாக, சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார், வஉசி. தூத்துக்குடியில் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை ஆங்கில கப்பல் நிறுவனங்களும் அவற்றின் தரகர்களும் இழிவாக நடத்தினர்; இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் உள்ளத்தில் அந்நிய நிறுவனத்திற்கு எதிரான கனல் குடி கொண்டிருந்தது; அந்நியனிடம் ஏன் கையேந்த வேண்டும், மூலதனம் திரட்டுவோம், நாமே கப்பலோட்டுவோம் என்று சொல்லி வஉசி அக்கனலில் நெய் வார்க்க, சுதேசி கப்பல் என்ற நிறுவனம் உயிர் பெற்றது. அதற்கு முன்னரே ரவீந்திரநாத் தாகூரின் தம்பி, டாட்டா உள்ளிட்ட பலரின் இந்திய கப்பல் வணிக நிறுவனங்கள் பிறந்தன, இறந்தன. அந்நிறுவனங்களுக்கும் வஉசி-யின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கும் ஒரு பெரிய வேறுபடாடு இருந்தது; அவர்களின் கப்பல்கள் நீராவியில் ஓடின; சுதேசி கப்பல் வெறும் நீராவியால் மட்டும் ஓடவில்லை, தேசப்பற்றாலும் ஓடியது. சுதேசியம் அதன் DNAவாக இருந்தது.
வங்கப் பிரிவினையின் முதலாண்டு நினைவு நாளான 16-10-1906ல் சுதேசி கப்பல் (Swadeshi Steam) நிறுவனம் ஒரு பங்கு வர்த்தக நிறுவனமாகப் பதிவு பெற்றது. வணிகம் மட்டுமின்றி ‘இந்தியர்களுக்கும் சிங்களர்களுக்கும் கப்பலோட்டக் கற்றுக் கொடுப்பது, கப்பல் கட்டும் பயிற்சி அளிப்பது’ போன்ற, தொலைநோக்குப் பார்வை கொண்ட பல நோக்கங்களை தன் நோக்கங்களாக அந்நிறுவனம் அறிவித்தது. அதன் அனைத்து விளம்பரப் பலகைகளிலும் அறிவிக்கைகளிலும் ‘வந்தே மாதரம்’ என்ற இலட்சினை இடம் பெறத் தவறவில்லை. இவ்வாறு, சுதேசி கப்பல் வெறும் வணிக நிறுவனமாக இயங்கவில்லை; அது ஓர் அரசியல் இயக்கமாக இயங்கியது. அவ்வியக்கத்தில் சாமானிய மக்களும் இடம் பெறும் வகையில் ஒரு பங்கின் விலை 20 ரூபாயாக வைக்கப்பட்டது.
ஆறே மாதத்தில் – 1907 ஏப்ரல் மாத வாக்கில் – 12472 பங்குகள் விற்கப்பட்டன; மூலதனமாக 2.5 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது; காலியா மற்றும் தாவோ என்ற இரு கப்பல்கள் வாங்கப்பட்டன; 1908 பிப்ரவரி மாதம் 28ம் நாள் தொடங்கி மார்ச் மாதம் 12 ம் நாள் வரையிலான இடைப்பட்ட நாட்களில் தூத்துக்குடி-இலங்கை கடலில் ஆங்கில கப்பல் ஏதும் ஓடாத அளவிற்கு சுதேசி கப்பல் வெற்றி நடைபோட்டது. இந்த வெற்றிக்காக வ உ சி செலுத்திய அயராத உழைப்பை இப்புத்தகம் விரிவாகப் பேசுவதை வாசிக்கிற போது நூலாசிரியரின் அயராத உழைப்புப் புலப்படுகிறது. வ உ சி யால் ஈர்க்கப்பட்டு, அரசியல் இயக்கத்திலும் சுதேசி கப்பல் நிர்வாகத்திலும் செயலாற்றியவர்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.
சிறையில் வஉசி தன் சுயசரிதையை எழுத உதவிய நெல்லையப்பபிள்ளை, அவரின் இரு சகோதரர்கள், சுதேசி கப்பல் (Swadeshi Steam) நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த சோமசுந்தர பாரதி, காவலர் பணியை உதறிய குருநாத ஐயர், என்று அவர்களின் பட்டியல் நீள்கிறது. அவர்களைப் பற்றிய குறிப்புக்கள், சுதேசி நிறுவனத்தின் தொடக்க கால இயக்குநர்கள், பின்னர் வந்த இயக்குநர்களின் குறித்த வாழ்க்கைக் குறிப்புக்கள், பங்கு விற்பனைக் குறித்தத் தரவுகள், கப்பல் வணிகம் குறித்த விளக்கங்கள் என்று இப்புத்தகம் தரும் தகவல்கள் – இல்லையில்லை – தகவல் குவியல் கண்டு மலைத்துப் போகிறோம்.

காங்கிரஸ் கட்சியில் எப்போதும் இரு குழுக்கள் உண்டு. 1907ல் நடைபெற்ற அதன் சூரத் மாநாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து பாரதி, சர்க்கரைச்செட்டியார் உள்ளிட்ட 18 பேர் கொண்ட தீவிரவாத குழு வஉசி தலைமையில் செல்ல, குருசாமிஅய்யர் தலைமையில் மிதவாத குழுவும் சூரத் சென்றது. கோபாலகிருஷ்ண கோகுலே தலைமையிலான மிதவாத குழுவிற்கும் திலகர் தலைமையிலான தீவிரவாத குழுவிற்கும் இடையிலான போட்டி சூரத் மாநாட்டில் உச்சத்தைத் தொட, தனியாகக் கூடிய தீவிரவாத குழு அதன் சென்னை மாகாண செயலராக வ உ சியைத் தேர்ந்தெடுத்தது. இந்திய விடுதலை இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வஉசி தமிழ்நாடெங்கும் சுற்றி மக்களைத் திரட்டினார் அவர் பேசுகிற கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் வந்தனர். பொதுவெளியில், அரசியல் பரப்புரைகளில் தமிழில் பேசிய முதல் தலைவன் என்ற பெருமை அவருக்குண்டு.
ஆக, சூரத் மாநாடு அரசியல் புயலைக் கிளப்ப இந்திய அரசியல் வானில் மின்னத் தொடங்கிய வ உ சியின் எழுச்சி, அவரின் சிறைவாசத்தால் சிதறுண்டு போனது. சூரத் மாநாட்டிற்கு முன்பு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளிகளின் கூலிஉயர்வு போராட்டம் வ உ சி தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஞ்சின் மிரட்டலையும் மீறி நடந்த வேலை நிறுத்தப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. அம்மில் முதலாளிகளான ஹார்வி சகோதரர்கள் தான் BI என்ற ஆங்கில கப்பல் நிறுவனத்தின் தூத்துக்குடி ஏஜென்ட். வஉசி-யின் இந்த இரட்டைத் தாக்குதலைக் கண்டு அந்நிய நிர்வாகம் அச்சமுற்றது; வளர்ந்து வந்த அவரின் மக்கள் செல்வாக்குக் கண்டு அந்நிய அரசு கலக்கமுற்றது; கொடிய அடக்குமுறையாலும் வஞ்சகத்தாலும் வஉசி-யை வீழ்த்தத் திட்டமிட்டது.
அத்திட்டத்திற்கான உள்ளடிவேலை சுதேசி கப்பல் (Swadeshi Steam) நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான குருசாமி அய்யரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1907 ம் ஆண்டிலேயே தன் வஞ்சகப்பணியைத் தொடங்கி, மெல்ல மெல்ல பிற இயக்குநர்களையும் தன் வலைக்குள் இழுத்துக் கொண்ட குருசாமி அய்யரின் வசம் சுதேசி கப்பலின் நிர்வாகம் வந்தது. 1908 மார்ச் மாதம் 8ம் நாள் கூடிய இயக்குநர்கள் வஉசி-யை அழைத்து சுதேசி கப்பலோடு தொடர்ந்து இயங்க அரசியல் கூட்டங்களில் பேசக் கூடாது என ஆணையிட்டது. அதற்குப் பதிலடியாக அன்றிரவே தூத்துக்குடியில் 4000 பேர் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வ உ சி அனல் தெறிக்க உரையாற்ற, மாவட்ட நிர்வாகம் அடக்குமுறை படலத்தைத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக வஉசி-யும், சுப்ரமணி சிவாவும் கைது செய்யப்பட்டதும், அதை எதிர்த்து வெடித்த நெல்லை எழுச்சியும் துப்பாக்கிச் சூடும் யாவரும் அறிந்த வரலாற்றுப் பதிவுகள். அந்நிகழ்வைத் தொடர்ந்து நெல்லையில் சிறப்புக் காவல் படையொன்று நிறுத்தப்படது. அதற்கான செலவுகளை ஈடுகட்ட நெல்லை மக்களிடம் தண்டனை வரி ஒன்று (Punitive Tax) வசூலிக்கப்பட்டக் கொடுமையை இப்புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வஉசி சிறையில் செக்கிழுத்து வாடிய போது, 22 வயதே நிரம்பியிருந்த அவர் மனைவி மீனாட்சி நேர்கொண்ட துயரை இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. கணவன் சிறையில், சித்தம் கலங்கிய கணவனின் தம்பி, மாமனாரின் மரணம், ஆயுள் தண்டனையை எதி்ர்த்த வழக்கிற்காக பணம் திரட்டவும் அலையவும் வேண்டிய சிரமம், சிறு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பப் பாரம் என்று நீள்கிற கண்ணீர் கதையை வாசிக்கப் போது மனம் சற்றுக் கலங்கி விடுகிறது. 1912ல் வஉசி விடுதலையானாலும் அவர் வழக்கறிஞராகத் தொழில்புரிய தடை தொடர்ந்தது.
சென்னையில் குடியேறிய அவரை ஒரு புறம் வறுமை வாட்டியது; மறுபுறம் அன்றைக்கு முன்னுக்கு வந்த காந்திய அரசியலை அவர் மனம் ஏற்கவில்லை. அவருடன் சுதேசி இயக்கத்தில் பங்கேற்ற பாரதி சிவா உள்ளிட்ட நெருக்கமான நண்பர்கள் சிலர் காந்தி வழியில் செல்ல, வேறு சிலர் இந்து மகாசபை பக்கம் செல்ல, வஉசிக்கு இரண்டிலும் பிடித்தம் இல்லை. பிராமண ஆதிக்கத்தின் கீழிருந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் அவரை ஓரம் கட்டியது. ஆக, அரசியலிலிருந்து ஒதுங்கிய வஉசி தொழிற்சங்கப் பணியில் கவனம் செலுத்தினார். திருக்குறளுக்கு உரை, சிவஞானபோதகத்திற்கு உரை என்று அவரின் இலக்கியப் பணி விரிகிறது.
சிறையிலிருந்து விடுதலையான பின்னர் 24 ஆண்டுகள் வாழ்ந்தும், பல புத்தகங்களை வெளியிட்டும், தொழிற்சங்கப் பணி ஆற்றியும் வந்த அந்த வேளையிலும் வ உ சி தனது பெரும் சாதனைகளை எங்கும் பேசவில்லை. என்ன காரணம்? அடக்கமா? ஏமாற்றமா? குடும்பமே சிதறுண்டு போன சோகமா? துரோகத்தைக் கண்ட வெறுப்பா? சுயராஜியம் பெற முடியாத அரசியல் தோல்வியா? இப்படி பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலோடு நூல் நிறைவு பெறுகிறது. அந்த பதில்……
நிறைகுடம் தளும்பாது, ஆழமான கடலில் அலைகள் ததும்புவதில்லை என்ற பொருள்படும் ஒற்றை வரி……
Still waters run deep.
நூல் அறிமுகம் எழுதியவர்:
பேரா.வ. பொன்னுராஜ்
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


When this book is available in Tamil,
Swadeshi streme