(இன்று சுவாமி சகஜானந்தர் பிறந்த நாள் 27/01/1890)

1915 வாக்கில் பெரியவர் வ.உ.சி. சென்னையில் வாழ்ந்த போது அவர் அடிக்கடி செல்லும் இடம் சென்னை பிராட்வே தம்புச்செட்டி தெருவில் அமைந்திருந்த புகழ் பெற்ற ரிப்பன் பிரஸ் அச்சுக் கூட நிறுவனம். சாது சைவ இரத்தின் செட்டியாரால் ஆரம்பிக்கப் பட்ட மிக முக்கியமான வேதாந்த தமிழ் இலக்கிய நூல்களினை வெளியிடும் நிறுவனம் அன்று.

ஒருநாள் தற்செயலாக பெரியவர் வ.உ.சி. வித்தியாசமான முக உருவம் கொண்ட மாணவரைக் காண்கிறார். நெற்றியில் அழகிய திருநாமம் இட்டு கழுத்தில் உருத்திராட்சை அணிந்திருந்தார். அன்றைய நாளில் சிறப்புடன் இயங்கிய தமிழ் குருகுல வேதாந்தப் பள்ளியான வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் வேதாந்த சிரவணம் செய்து கொண்டிருந்த மாணவர் அவர். “உன் பெயர் என்ன “ என கேட்கிறார் பெரியவர் வ.உ.சி. அதற்கு முனுசாமி என்கிறார்.

உன் குலம் என்ன என கேட்கிறார். சிறிதும் தயங்காமல் நந்தனார் திருக்குலத்தைச் சேர்ந்தவன் என்றார். உடனே வ.உ.சி. தன் அருகில் வரச்சொல்லி கேட்டதும் தயங்காமல் உண்மை சாதியை ஓங்கி அறைந்த அந்தச் சிறுவனை அன்புடன் ஆரத்தழுவி கட்டி அணைத்துக் கொள்கிறார். என்னுடன் வருகிறாயா என கேட்கிறார் பெரியவர் வ.உ.சி. வர சம்மதம் தெரிவிக்கிறார் அச்சிறுவன் முனுசாமி. இந்த முனுசாமியைத்தான் பின்னாளில் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் திருநாமம் இட்டு ”என்றும் ஆனந்தமாய் இருக்க கடவாயாக” என்று பொருள்படும்படி அழைக்கப்பட்ட சுவாமி சகஜானந்தர்.

பெரியவர் வ.உ.சி. தன் வீட்டின் ஒரு அங்கத்தினராகவே சகஜானந்தர் போற்றப்பட்டார். பின்பு சகஜானந்தருக்கு குருவாகவும் ஆனார். திருக்குறளையும், தொல்காப்பியத்தையும்,விசார சாகரம் வேதாந்த நுலினையும் சகஜானந்தருக்கு கற்பித்தவர் பெரியவர் வ.உ.சி. வழக்காடு மன்றத்திற்கு போகும் வேளையில் சுவாமி சகஜானந்தரையும் பெரியவர் வ.உ.சி. உடன் அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் சக வழக்கறிஞர்கள் சுவாமி சகஜானந்தரை நோக்கி சாதி குறித்து விசாரிக்க முற்படுவார்கள். பெரியவர் வ.உ.சி அருகில் இருக்கும் போது சகஜானந்தரிடம் சாதியை கேட்க பயப்படுவார்கள்.இவர் முரட்டு வக்கீல் பிள்ளையல்லவா. ஆகையால் வ.உ.சி. இல்லாத சமயம் பார்த்து எப்படியும் சாதி குறித்து விசாரிப்பர் என்பதை புரிந்து கொண்ட பெரியவர் வ.உ.சி. சகஜானந்தரை நோக்கி யாராவது சாதி குறித்து விசாரித்தால் துறவிக்கு ஏது சாதி” என்று கேட்டவரிடம் திருப்பிக் கேள் என்று கூறச் சொன்னார். அப்படியே சகஜானந்தரும் சாதியைக் கேட்பவர்களிடம் முகத்தில் அறைந்தவாறு “துறவிக்கு ஏது சாதி “ என்றார்.



திருக்குறள் மணக்குடவார் உரையை பெரியவர் பதிப்புப் பணியில் ஈடுபட்டபோது சகஜானந்த சுவாமிகளை துணையாக கொண்டு அச்சிடச் செய்தேன் என்று பதிப்புரையில் கூறியிருக்கிறார் வ.உ.சி. கண்ணனூர் சிறையில் பெரியவர் வசித்தபோது சாமான்ய சிறைக் கைதிகளும் புரியும் வண்ணம் திருக்குறளுக்கு வழிநூலாக எழுதப்பட்ட வழிநூல் மெய்யறம். இந்த நூலிற்கு சிறப்புபாயிரம் அளித்தவர் சுவாமி சகஜானந்தர். அந்த பதிப்புரையில் பெரியவர் வ.உ.சி. சுவாமி சகஜானந்தரை கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“கல்வி கேள்வி ஒழுக்கங்களால் நிறைந்த மெய் அந்தணன் சுவாமி சகஜானந்தர்” என்று குறிப்பிடுகிறார். மெய்யறத்தின் பாயிரத்தில் “மெய்யறமியற்றினோன் வையமோர் சிதம்பரம் வள்ளுவரெல்லையிம் மறைக்குமெல்லையாம் என்று தொடங்குவார் சுவாமி சகஜானந்தர். சுவாமி சகஜானந்தர் வ.உ.சி.யை குறிப்பிடுகையில்
“சாவாமருந்தெனவே தற்பரனார் வள்ளுவர் செய்
பாவால் அறிவெனக்குப் பாவித்து தேவா சிதம்பரமென் சற்குருவே” என்றார்.

இன்று பல புரட்டுவாதிகள் வ.உ.சி.யை சாதி பிடிப்பாளர் என்று பிதற்றி அலைகின்றனர். சிறையில் கொடுத்த சைவ உணவைக் கொண்டு வந்தவரிடம் சாதி பார்த்தார் என்று. சிறைக்காவலர்களால் திட்டமிட்டு அவரை ஏமாற்ற நினைக்கையில் பெரியவர் வ.உ.சி. அதனை சூட்சுமமாக புரிந்து கொண்டு வேசம் கட்டி உணவு கொண்டு வந்தவனை ஒரு மிரட்டு மிரட்டி அனுப்பி விடுவார். இதனைப் பெரியவர் சிறையில் நான் செய்த குறும்பு விளையாட்டு என்றே குறிப்பிடுவார். இதன் முன் பின் வரலாறு தெரியாமல் உளறிக் கொட்டுகின்றனர் சிலர்.

பெரியவர் வ.உ.சி. செட்டிநாட்டுச் சொற்பொழிவில் ஒரு தடவை பேசுகையில் “சிதம்பரம் சுவாமி சகஜானந்தரை எல்லோரும் அறிவீர்கள். அன்னார் குடும்பங்களில் அனைவரும் புலால் உண்பதில்லை. சுத்த சைவர்கள். சகஜானந்தர் இல்லத்தில் புசிப்பதற்கு ஆட்சேபமென்ன? நானே சகஜானந்தரிடம் உணவு தரும்படி வலியக் கேட்டதுண்டு. மனிதனுக்கு மனிதன் வேற்றுமையில்லை என்றார்.

சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் ஆதி திராவிடர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக நந்தனார் பெயரில் கழகம் நிறுவ முற்படுகையில் பெரியவர் வ.உ.சி. ஒரு கடிதம் எழுதி இந்த நிறுவனம் தொடங்க நினைக்கும் சகஜானந்தருக்கு எல்லோரும் நிதி உதவிட ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு தம் நெருங்கிய நண்பர்களுக்கு கடிதம் கொடுத்து வ.உ.சி. உதவினார். வ.உ.சி.யின் மறைவிற்கு பிறகு சுவாமி சகஜானந்தர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மறக்காமல் வ.உ.சி.யின் குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார்.

இப்பதிவை எழுத தூண்டிய நந்தனம் தமிழ் துறை விரிவுரையாளர் திரு. ஜெயபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *