தமிழ்ச் சமூகத்தின் இசைமரபின் உன்னதங்களின் உச்ச பரிமாணமாய் வாய்த்தவர் இசைஞானி. கடந்த 45 ஆண்டுகளாய் தமிழர்கள் அவரது இசையை அருந்தும் சாதகப் பறவையாகவே வாழ்ந்துவருகின்றனர். 1000 படங்கள், 7000 பாடல்கள் என்ற புள்ளிவிவரங்கள் அவரது மேதைமையை புரிந்துகொள்ள உதவாது. அது வெறும் quantitative குறிப்பு மட்டுமே. அவரது ஒவ்வொரு இசைத்துணுக்கும் எண்ணற்ற இசைக்கோளங்களை வரைந்து செல்லும் மாயத் தூரிகைகள். இப்படி அவர் திரை இசையிலும் திரை இசைக்கு வெளியில் வெளியிட்ட இசைத் தொகுப்புகளிலும் ஆழ்ந்து தோய்ந்து அந்த இசையின் வழி தான் கண்ட கவித்துவமான வண்ணமிகு அனுபவத்தை எழுத்தாக்கி தந்திருக்கிறார் சந்திரமோகன் வெற்றிவேல் இதழியலாளரான இவர் தமிழ் இந்து நாளிதழில் தொடராக எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்த ‘காற்றில் கலந்த இசை’. இதில் ஒரு கட்டுரை எம்.எஸ்.வி மறைவை ஒட்டி எம் எஸ் வி , எஸ்.பி.பி கூட்டில் உருவான பாடல்கள் பற்றியது.
இந்தப் கட்டுரையும் அற்புதமான ஒன்றுதான். மற்ற 39 கட்டுரைகள் ராஜாவின் 39 திரைப்படங்களின் பாடல்களைப் பற்றியவை. தமிழ்த் திரை இசையில் ராஜாவின் வருகை புரட்சிகரமானது. இந்த இசைஅசுரன் வருவதற்கு முன் கிராமங்களில் கூட “நா ஷாயர் தோ நகீ”, “மெஹபூபா மெஹபூபா “, மேரே சப்னோக்கி ராணி கப் ஆயே கீ து” என்று இந்தி பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருந்தன. பாபி, ஷோலே என இந்திப்படங்கள் தமிழ்நாட்டில் 200 நாள், 300நாள் ஓடின. தமிழ் படங்கள் 50நாள் ஓடினால் அது வெற்றி என்ற நிலை. ராஜாவின் வருகை இந்த நிலைமையை மாற்றியது.
இளையராஜா நாட்டுப்புற இசை மரபில் முகிழ்ந்துவந்தவர் எனினும் அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரை தமிழ் செவ்வியல் இசை (கர்னாடிக்), இந்துஸ்தானி, கசல், மேற்கத்திய இசை என எல்லாம் வல்வராக ஆக்கியது. தமிழ் மரபின் இசைக் கருவிகளான பறை, குழல், தவில், நாயனம், பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை என எல்லாம் இளையராஜாவால் அவரது ரெக்கார்டிங் தியேட்டர்களில் மின்னிசையாக தங்கள் உற்சாகத்தை புதுப்பித்துக்கொண்டன. ஆயிரம் யுகமாய் நிகழ்த்தப்பட்ட ஒரு பிரபஞ்சத்தவத்தின் வரம்போல ராஜாவின் இசை வியப்பூட்டியது. அவரது இசைவெவ்வேறு தட்பவெப்பங்களுக்கும், பல்வேறு நிலப்பரப்புகளுக்கும், பருவகாலங்களுக்கும் ரசிக மனதை கடத்திச் சென்று சிலிர்ப்பூட்டியது. செவிநுகர் அனுபவமான இசை ராஜாவிடம் இருந்து வரும் போது ஐம்புலன்களையும் ஆக்கிரமித்து கல்லூரச் செய்திட அது தரும் மயக்கத்தை மட்டும் அனுபவித்து கடந்துவிடுபவர்கள் உண்டு. சந்திரமோகன் ஒரு ரசிகராக மட்டும் இல்லாமல் ராஜாவின் இசையை அது தரும் உணர்வு நுட்பங்களையும் உள்வாங்கி அது தந்த – தரும் அனுபங்களை நம்மோடு பகிர் கொள்ள விரும்பியுள்ளார்.
சிறு வயது முதல் ராஜாவின் இசையோடே பயணித்ததை குறிப்பிடும் அவர் ராஜாவின் இசை ‘தூசுகளுக்கு நடுவே மின்னும் பொன்னிறத் துகள் போல் அதுவரை கண்டிராத நிலப்பரப்புகளை மனதுக்குள் கொண்டுவந்து சேர்த்த’ அனுபவத்தை பதிவு செய்கிறார். ஒரு பாமரனின் இசை ரசனை என தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டாலும் இலக்கியத்தரமான உவமைகளோடும் விவரிப்புகளோடும் ராஜாவின் இசைக்கோளங்களை விவரித்து செல்கிறார். ஆராதனை படத்தின், ‘இளம் பனித் துளி விழும் நேரம்’ பாடலில் பல்லவியின் தொடக்க வரிகள் முடியும்போதுஒலிக்கும் வயலின்களின் சேர்ந்திசையை ‘சட்டகம் ஒன்றின் வழியாக, இனிப்புத் துகள்கள் கலந்த காற்று ஊடுருவது போல் தவழ்வதாக’ ரசித்து எழுதுகிறார்.
ராஜாவின் பாடல்களின் தொடக்க இசை, நிரவல் இசை, கூட்டுக்குரல் இசை என ஒவ்வொன்றும் மேதைமையோடு உருவாக்கப்பட்டுள்ள நேர்த்தியை தேர்ந்த ரசிகமனத்தின் வெளிப்பாடாக
விவரித்துள்ளார். “பாடல்களின் மேன்மை, ஒளிந்திருக்கும் வாத்தியக் கருவிகளின் சூட்சுமம், படத்துடன் கதையுடன் இயைந்து போகும் அழகு, வாத்தியக் கருவிகளின் தேர்வு மற்றும் கையாண்ட முறை என அனைத்தையும் உள்ளடக்கி” ராஜாவின் காற்றில் கலந்த இசையை சந்திரமோகன் விவரத்துள்ளதை ராஜாவின் ஆஸ்தான குழல்வாணர் நெப்போலியன் தன் அணிந்துரையில் பாராட்டியுள்ளார். நாம் அதிகமாக அறிந்த ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி, அவள் அப்படித்தான் போன்ற படங்களின் நாம் ரசித்த பாடல்களையே சந்திரமோகன் ரசித்துள்ள அழகு ரொம்பவே அழகானது. நூலின் சிறப்பு என்னவெனில் வெற்றிப்படங்களாக அமையாமல் ஆனால் ராஜாவின் அற்புத இசையை-பாடல்களைக் கொண்ட எனக்காக காத்திரு, ஆராதனை, இது எப்படி இருக்கு, அழுகிய கண்ணே, மகுடி போன்ற படங்களின் பாடல்கள் குறித்தும் சிறப்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளின் தலைப்புகள் கவிதை வரிகள் போல உள்ளன.
‘பனி நிலத்தின் பாடல்’, ‘இசைக்குறிப்புகளால் எழுதப்பட்ட நாட்குறிப்பு’, ‘வானை நோக்கிக் பொழியும் சாரல்’ என தலைப்புகளின் அழகே நம்மை எழுத்திற்குள் அழைத்துச் சென்றுவிடுகின்றன. ராஜாவின் இசை மேதைமைக்கு ஒரு சிறு ஆனால் அழகான வாழ்த்துப்பாவாக தன் காற்றில் கலந்த இசையை சந்திரமோகன் படைத்துள்ளார். இதில் உள்ள 39 படங்கள் தவிர ராஜாவின் மீதியுள்ள படங்களின் பாடல்களையும் இசை அனுபவங்களையும் சந்திரமோகன் எழுதவேண்டும். பிரம்மாண்டமான கோரிக்கை தான். சந்திரமோகனுக்கு அத்தகு வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி. பரிசு பதிப்பாக இந்த நூல் கிடைத்தால் பரிசாக வழங்க இயலும் எனத் தோன்றியது. வாழ்த்துகள் சந்திரமோகன். நன்றியும் கூட.
– தேவிகாபுரம் சிவா
Leave a Reply
View Comments