செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. இத்தொழில்நுட்பம் வந்தால் ஏராளமானோருக்கு வேலைபோகும் என்று அஞ்சப்படுகிறது. 2015ல் வெர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் என்ற அமைப்பை நிறுவிய பேராசிரியர் க்ளாஸ் ஸ்வாப், 2015ல் நான்காவது தொழில்புரட்சி என்ற நூலை எழுதியிருக்கிறார். எந்தெந்த வேலைகள் செய்ய மனிதர்கள் இனிமேல் தேவைப்பட மாட்டார்கள் என்றெல்லாம் அந்த நூல் பட்டியலிட்டிருந்தது. யாருக்கு இதனால் ஆபத்தில்லை என்றும் பட்டியிலிடப்பட்டிருக்கிறது. (விபரம் அறிய நூலின் 39ம் பக்கத்தைப் பார்க்க) இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலையிழப்பவர்கள் பட்டியலில் சாமியார்கள், பாதிரிமார்கள், மௌல்விகள் கிடையாது.
இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பணியையும் எளிதில் நாம் செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திரமயமாக்க முடியும். இவர்களை எந்த நிறுவனமும் பணியில் அமர்த்துவதில்லை என்பதால் லாபத்திற்காக இவர்கள் பணியை தானியக்கம் செய்ய வேண்டிய அவசியமும் எந்த நிறுவனத்திற்கும் இல்லை. எனவே இவர்கள் வேலைக்கு செயற்கை நுண்ணறிவால் ஆபத்து கிடையாது. அத்துடன் இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் திறன் இவர்களிடம் அதிகம் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தாகிய கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இந்த நிர்ணயிப்பும் தவறு என்று தற்போது நிகழ்ந்துவரும் நிகழ்வு ஒன்று கூறுகிறது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் லுசர்னே நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவாலயம் செயின் பீட்டர் சப்பல். இது பிரசித்தி பெற்றதற்கு காரணமே இங்கு பாவமன்னிப்பு கோருபவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது என்ற நம்பிக்கைதான். பாவமன்னிப்பு கோருபவர்கள் கூண்டில் அமர, கூண்டின் அடுத்த அறையில் பாதிரியார் அமர, பாவமன்னிப்பு கோருபவர் தன்னுடைய பாவங்களை எடுத்துக் கூற பாதிரியார் அப்போது தேவனாகி அவருக்கு மன்னிப்பளித்து பிராயச்சித்தமாக செய்ய வேண்டியதைக் கூறுவார். பாவமன்னிப்பின் கிறிஸ்தவ ஐதீகமிது. பாதிரியார் இடத்தில் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை வைத்தால் என்ன என்று தேவாலய நிர்வாகிகளுக்கு தோன்றியிருக்கிறது.
இறுதியில் பாதிரியார் என்ன இயேசு கிறிஸ்துவையே செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலமாக பாவமன்னிப்பு வழங்க கொண்டு வரலாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஆக இயேசு கிறிஸ்து செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து பாவமன்னிப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார். செயற்கை இயேசுவை மக்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்பதற்காக இந்த பரிசோதனையைச் செய்கிறோம் என்று தேவாலயத்தின் இறையிலாளர் மார்க்கோ ஸ்மிட் கூறியிருக்கிறார். எனினும் அடுத்த அறையில் தேவன் பாதிரியார் வடிவில் இருக்கிறாரா அல்லது இயந்திரத்தின் வடிவில் இருக்கிறாரா என்பது பாவமன்னிப்பு கோருபவர்களுக்குத் தெரியாது. செயற்கை இயேசுவும் இயற்திரப் பயிற்சி மூலமாக பாவமன்னிப்பு கோருபவரின் மனோநிலையை அறிந்து கொள்வோர். அதற்குத் தகுந்தாற்போல் பேசவும் பிராயச்சித்தம் கூறவும் செய்கிறார். மூன்று மொழிகளில் பிராயச்சித்தம் கூறுவதற்கு செயற்கை இயேசு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு நாட்களில் 230 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனுவத்தையும் தேவாலயம் பின்னூட்டமாக பெற்றிருக்கிறது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆன்மீக உணர்வுநிலைக்கு சென்றதாக கூறியிருக்கிறார்கள் என்கிறார் ஸ்மிட்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. ஸ்மிட் கூறும் பின்னோட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கூறும் ஆன்மீக உணர்வுநிலை என்பது மருந்தியலில் கூறப்படும் பிளாஸிபோ எஃபெக்ட்-ஐ மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது என்பதை நாம் கூறலாம். இது அறிவியலடிப்படைவில் நிகழ்வுகளை பார்ப்பவர்களுக்கு தோன்றும்.
இன்னொருபுறம், சரிந்துவரும் இறைநம்பிக்கையானது தேவாலயங்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குரியாக்கிவிடும் என்ற அச்சம் தேவாலயங்களுக்கு எப்பொழுதுமே இருந்து வருகிறது. டான் பிரௌனின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலை படித்தவர்களுக்கு, தேவலாயத்தின் செயற்கை இயேசு நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியும். டான் பிரௌன் நாவல் ஒரு புனைக்கதையாக இருந்தாலும் தேவலாயத்தின் செல்வாக்கு சரிகிறது என்ற யதார்த்தம் அதன் பின்னணியில் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில் சிரமம் இல்லை.
செயற்கை இயேசுவை வைத்து செல்வாக்கை தூக்கிப்பிடிக்க முடியுமா என்ற முயற்சியில் தேவலாயம் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம், செயற்கை நுண்ணறிவு சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் ஊடுறுவியிருக்கிறது. அது வெறும் உற்பத்தி மற்றும் சேவையோடு நிற்பதில்லை என்பது நிச்சயம். இனிமேல் செயற்கை இயேசு கிறிஸ்து உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. இதன் வாயிலாக தேவாலய செல்வாக்கு உயருமா என்பது போகபோகத்தான் தெரியும்.
மூலக்கட்டுரை: https://www.theguardian.com/technology/2024/nov/21/deus-in-machina-swiss-church-installs-ai-powered-jesus
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.