சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்) எழுதிய "ஓர் ஆசிரியர்" புத்தகம் | Sylvia Ashton-Warner (G. Rajendran in Tamil) Oor Aasiriyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்) எழுதிய “ஓர் ஆசிரியர்” – நூல் அறிமுகம்

“ஓர் ஆசிரியர்” – நூல் அறிமுகம்

இது புத்தகம் அல்ல.. கல்விக்கான விடுதலை சாசனம்.

ஆயிஷா இரா.நடராசன்

       தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மத அடிப்படைவாத தனியார்மய பிரிவினைவாத கல்வியை திட்டமிட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக திணித்து வருகிறது ஒன்றிய சனாதன ஆட்சி. கல்வியில்  கடுமையாக போராடி இந்த நாட்டில் நாம் பெற்ற பல மனிதநேய விழுமியங்கள் தகர்க்கப்பட்டு வருவது மட்டுமல்ல இந்திய பாரம்பரிய கல்வி என்று அறிவு துறையை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற பிற்போக்கு  ஆதிக்க கொடூரத்தை திணித்து இருள் மிகு எதிர்காலம் நோக்கி கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு பெயர் புதிய கல்விக்கொள்கை. கார்பரேட் காவி முதலாளித்துவ கள்ள கூட்டணி கல்வி இப்போது நமக்கு என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மிக அவசியம் அனைத்துவகைகல்வி போராளிகளுக்கும் தேவைப்படும் ஒரு ஆவணத்தை தான் தற்போது நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அறிவொளி இயக்க ஆண்டுகளில் நாங்கள் வாசித்த எதிர் மேலாதிக்க அரசியல் கல்வி நூல்களில் மிக முக்கியமான புத்தகமாக நீங்கள் கையில் இப்போது வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் என்ற இந்த நூல் எங்களுக்கு அறிமுகமானது. பாலோ பிரேயர்.. அன்டோனியோ கிராம்ஷி பாதையில் விடுதலை அளிக்கும் கல்வி என்பது வெறும் தகவல் பரிமாற்ற மல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் செயலாற்ற இணக்கத்தன்மை நிலையிலிருந்து   விமர்சன பூர்வமான அணுகுமுறை மற்றும் செயல்பாட்டை நோக்கி கொண்டுவரும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளை மாற்றுவதற்கான கோட்பாட்டை முன்மொழிந்த புத்தகங்களில் ஒன்று இது.

பாலோ பிரேயர் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட அறிவைப் பெறுவதற்கு பதிலாக கற்பவர்களும் ஆசிரியர்களும் இணைந்து தங்கள் சொந்த யதார்த்தத்தைப் பற்றிய சிக்கல்களை முன்வைத்து விவாதித்து இந்த உலகை மாற்றக்கூடிய விமர்சன பூர்வ சிந்தனையாளர்களாக மாறும் ஒன்றை தான் கல்வி என்று அழைத்தார். விமர்சனப்பூர்வ உணர்வு என்பது ஒடுக்குமுறையை உருவாக்கும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகள் குறித்து ஆழமான விமர்சன விழிப்புணர்வை வளர்ப்பதன் அடிப்படையை மையமாகக் கொண்டது.. பணிந்து போ.. வாயை மூடு.. நான் பேசுவதை கவனி.. பாட புத்தகத்தில் இருப்பதைக் கற்றுக் கொள்.. தேர்வில் தேர்ச்சி பெற்று விடு அல்லது அழிந்து போ.. என்று கட்டளை இடுகின்ற கல்விக்கு எதிராக இந்த உலகில் நடந்த பிரம்மாண்ட கல்வி புரட்சியின் ஆவணத்தை தான் உங்கள் கையில் இப்போது வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது பாலோ பிரேயர் புரட்சிக்கு முந்தைய ஒரு பெண் போராளியின் வாக்கு மூலம்.

எழுத்தறிவு என்பது வெறும் இயந்திர தனமான கணக்கெடுப்பு அல்ல ஒருவரது இருப்பின் சூழலைப் புரிந்து கொள்ளும் வேர்கள் எழுத்தறிவு என்கிற சொல்லுக்குள் அடங்கி உள்ளது.. என்றார் அல்தூசர். கிராம்ஸி ஒரு படி மேலே போய் குடிமை சமூகத்தில் கல்வி என்பது ஒரு போராட்ட தளம் என்று அறிவித்தார். அங்கு அடித்தட்டு வர்க்கம் அதன் சொந்த புத்தி ஜீவிகளை வளர்த்துக் கொள்ளவும் மேலாதிக்க சித்தாந்தத்தை சவால் செய்யும் அளவிற்கு போராடி தூக்கி எறியவும் கல்வி ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்பது அவருடைய கருத்து.

கிராம்ஸி இன்னும் ஒரு படி மேலே சென்றார்.. அறிவுசார் தலைமை உடலுழைப்பு தொழிலாளர் அமைப்பு இது இரண்டுக்கும் இடையிலான பிரிவினையை தகர்த்து எறியும் வகையில் மனிதநேய கல்வியை தொழில்நுட்ப கல்வியுடன் இணைக்கின்ற ஒரு பள்ளி அமைப்பை கிராம்ஸி முன்மொழிந்தார்.. விடுதலை என்பது அடித்தட்டு வகுப்பினர் தங்கள் சொந்த ஆற்றல் மற்றும் சக்தியை பற்றி அறிந்துகொள்வதோடு நேரடி தொடர்பு கொண்டது என்பதை உலகம் புரிந்துகொள்ள.. கல்விதான் விடுவிப்பதற்கான ஆயுதம் என்பது முன்மொழியப்பட்டது.

எப்போதுமே அதிகாரம் தரம் என்கிற சொல்லைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கும்.. தர அடிப்படை சமூகம் என்பது.. பிரிவினைவாதத்தின் உச்சம். தமிழகத்தில் அதை நாம் கண்கூடாக பார்த்தோம். சமச்சீர் கல்வி என்று அனைவருக்கும் ஒரே கல்வி என்கிற அடிப்படையை அரசு அறிமுகம் செய்த பொழுது(அது சரியான கல்விதானா என்பதன் மீதான முரண்பாட்டை விட்டு விடுங்கள்) என்னுடைய குழந்தைகளும் என் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் குழந்தைகளும் ஒரே கல்வியை கற்பதா.. கல்வியில் தரம் போய் விட்டது என்று அலறிய மேல் தட்டு சமூகம் எப்படி எல்லாம் சூழ்ச்சிசெய்து அதை தகர்த்து எறிந்தது என்பதைக் கண்டோம்.

இப்போது தரம் என்கிற பெயரில் மூன்றாம் வகுப்பில் இருந்தே நீ பாஸ் நீ பெயில்.. என்று சொத்தை கத்தரிக்காய்கள் கண்டுபிடிப்பது போல .. குழந்தைகளை தரம் பிரிக்கும் கொடூரத்தை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்து இருக்கிறது. தேசிய தேர்வு முகமை என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் UDISE யூடைஸ்.. எனப்படும் தேசிய அளவிலான. விவர சேகரிப்பு சாளரம் ஒன்றை உருவாக்கி ஒரு குழந்தையை பிறப்பில் இருந்து கண்காணிக்கின்ற அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவர அதிகார அமைப்பு பள்ளியில் நுழைகின்ற ஒரு குழந்தைக்கு அடையாள எண் ஒன்றை தருகிறது.. இந்த அடையாள எண்  பள்ளிக் கல்வி முடிந்த பிறகு குழந்தை  கல்லூரிக்கு செல்லுகின்ற பொழுதும் தொடருகிறது .. இந்திய கார்ப்பரேட் காவி அதிகார வர்க்கத்தின் நோக்கம் மிக எளிமையானது.. நாலாம் வகுப்பில் ஒரு குழந்தை தேர்ச்சி பெறவில்லை என்று பதிவாகி இருந்தால் எதாவது ஒரு கல்லூரியில் அவர் விரும்பி சேர விண்ணப்பிக்கும் பொழுது அதையே காரணமாக காட்டி வடிகட்டுதல்.. இது மாதிரியான ஒரு கண்காணிப்பு கொடூர அமைப்பு முசோலினி அல்லது ஹிட்லரின் ஆட்சியில் கூட இருந்ததில்லை.

பாட புத்தகங்களில் பிற்போக்கு வலதுசாரி சிந்தனைகள் கொண்டுவரப்படுகின்ற அதேசமயம் சார்லசு டார்வினும் ஏன் வேதி அட்டவணையும் கூட மூட்டை கட்டி தூக்கி எறியப்பட்டு விட்டது.. வேத கால கணிதம் முதல் புராண கால ரசாயனம் வரை.. மோடி முதலை பிடித்த வரலாறு.. என்றெல்லாம் சேர்க்கப்பட்டது ஒருபுறம் என்றால் விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமார் தான் என்பன போன்ற பிற்போக்கு பேத்தல்.. கல்வி வளாகங்களுக்குள் நுழைகின்ற.. மூட கலாச்சாரம் மறு புறம்.

இந்த சூழலில்தான் நாம் சில்வியா ஆஷ்டன் வார்னர் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. நியூசிலாந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கல்வியைக் கட்டமைத்து உருவாக்கிய அற்புத பெண் கல்வியாளர்.. பெண் கல்வியாளர் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெரும்பாலான நம்முடைய கல்வியின் இடது சாரி அது முற்போக்கு கல்வியாளர்கள் கூட ஆணாதிக்க சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதை பல கல்வி ஆய்வாளர்கள் சுட்டி காட்டியது உண்டு எனவே முதல் முறையாக மரியா மாண்டிசோரி க்கு பிறகு இன்னொரு பெண் கல்வியாளர் தமிழிலேயே அறிமுகமாகிறார்

நியூசிலாந்தில் மௌரி பழங்குடியினர் குழந்தைகளுக்கு.. கல்வி சேவையில் ஈடுபடுவதன் மூலம் தன்னுடைய சொந்த கல்விக்கொள்கையை இந்த உலகிற்கு அறிவித்தவர் அறிஞர் சில்வியா அம்மையார். காலனித்துவ அரசாங்கம் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தி இருந்த கல்விக்கும் இந்திய பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்திய கல்விக்கும் பெரிய வேறுபாடு இல்லையென்றாலும் காலனித்துவ கல்வி முறையின் கீழ் மௌரி பழங்குடி இன குழந்தைகளின் மொழி பண்பாடு உணர்வு ஆகியவை புறக்கணிக்கப்பட்டதை அறிஞர் சில்வியா உணர்ந்தார்..

தற்போதும் இருப்பது போலவே அரசு பாடத் திட்டம் என்பது குழந்தைகளின் வாழ்வியலை பொருட்படுத்தவில்லை.. முரட்டுத்தனமான கேள்வி பதில்கள் மூலம் தேர்வுகளை முன்வைத்து கல்வி முறை இயங்கிக்கொண்டிருந்தது.. தங்களுக்கு புரியாத ஒரு மொழியில் தங்களுக்கு தொடர்பில்லாத அறிவு என்று அரசாங்கம் நம்பிய திணித்த விஷயங்களை மனப்பாடம் செய்து அன்னியப்பட்டு கொண்டிருந்த குழந்தைகளிடையே அவர்களுக்கான கல்வியை அற்புதமாக வார்த்து எடுத்து கொடுத்தவர் அறிஞர் சில்வியா..

Amazon.com: Teacher: Ashton-Warner, Sylvia: ספרים

தன்னுடைய அனுபவங்களை தான் கண்ட, அடைந்த கல்விக் கொள்கையை, கல்வி பாதையை மிக சிறப்பாக ஒரு புத்தகமாக எழுதினார் அவர். அதுதான் இப்போது உங்கள் கையில் இருக்கும் ஒரு ஆசிரியர் என்கிற புத்தகம். இது ஒரு சுயசரிதை மட்டுமல்ல.1963 ஆம் ஆண்டு வெளிவந்த கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஆவணம்.. ஒரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய பைபிள்.

அடிப்படை சொல்லாக்க கல்வி முறை (KEY VOCABULARY METHOD), அறிஞர் சில்வியா அறிமுகம் செய்த கல்வி முறை இதுதான். இதை கையகப்படுத்த வேண்டிய அவசியம் நம்முடைய தமிழக தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் மிக முக்கிய கடமையாக நான் கருதுகிறேன்.. நம் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக விதைக்கும் ஏனென்றால் சில்வியா அம்மையார் அவர்கள் தான் விஜயம் செய்த வகுப்பறைகளில் இருந்த பழங்குடியின குழந்தைகளிடையே நிலவிய சொற்களிலிருந்தே தனக்கான கல்வி முறையை வளர்த்துக் கொண்டார்..

பாலோ பிரேயர் சொல்வது போல உலகிற்கு நாம் சொந்தமாக கண்டுபிடித்து பெயரிடுதல் என்பது தான் கல்வி..NAMING THE WORLD.. என்று அதை அவர் அழைத்தார்.. இந்த நூலை வாசிக்கிற பொழுது எப்படி இந்த இரு கல்வியாளர்களின் மனமும் ஒரே போல வேலை செய்தது என்பதை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.. குழந்தைகளின் உள்ளார்ந்த உலகத்தை புரிந்து கொள்ளும் உளவியல் பதிவாக சில்வியா அம்மையாரின் புத்தகம் மலர்கிறது. கட்டுப்பாட்டை மையமாக கொண்ட கல்விக்கு எதிராக திறந்தமனதோடு தேடலில் ஈடுபடுகின்ற குழந்தைகளின்.. சிறகு முளைத்த உலகத்தை அது முன்வைக்கிறது. காலனித்துவ அதிகார பாடத் திட்டத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகளை சில்வியா அம்மையாரின் புத்தகத்தில் நாம் பார்க்க முடியும்.

மனிதநேய கல்விக்கான ஒரு கலை பூர்வ அறிக்கை என்று நான் இந்த புத்தகத்தை அழைப்பேன். குழந்தைகளை பார்த்து பழகி அவர்களோடு பேசி அவர்கள் மனதிலேயே இயல்பாக உருவான சொற்களை அவர் பதிவு செய்தார்.. கல்வி என்பது செத்துப்போன வாக்கியங்கள் கொண்ட பாட புத்தகங்களுக்குள் இல்லை.. மாறாக குழந்தையின் உணர்ச்சியிலிருந்து பிறந்த சொற்களின் ஊடாக கல்வி பயணிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தவர் சில்வியா அம்மையார். கல்வி அறிவு உணர்ச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அவருடைய ஆழமான நிலைப்பாடு. சொற்களை அவர் இரண்டாக பிரிக்கிறார்…ORGANIC WORDS அதாவது உயிர்ப்புள்ள சொற்கள்.. இவைதான் குழந்தைகளின் உள்ளார்ந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் சொற்களாகும்.. மற்றொன்று INORGANIC WORDS.. அதாவது மரணித்த உயிரற்ற சொற்கள்.. இவை பாடப்புத்தகத்தில் அச்சான அதிகார பூர்வமாக திணிக்கப்படும் சொற்கள் ஆகும்.. உயிருள்ள சொற்களிலிருந்து தேடலின் வழியே உருவாகும் கல்வி என்பதுதான் உண்மையானது நிலையானது என்பது சில்வியா அம்மையாரின் பாதை.

இன்றைய கால சூழலில் மிக முக்கியமான வேலையை இந்த புத்தகம் செய்யும். இன்றைக்கு நாம்.. பழங்குடி குழந்தைகள் மட்டுமல்ல சமூகத்தின் மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைத்துவகை குழந்தைகளின் கல்வியையும் TRAUMA-INFORMED EDUCATION.. என்று அழைக்கின்றோம்.. ஆனால் இதனை1940 களிலேயே நடைமுறைப்படுத்தியவர் சில்வியா அம்மையார் அவர்கள்.. இன்றைக்கு நாம் காலனித்துவ கல்வியை முடிவுக்கு கொண்டு வர..DECOLONISING CURRICULUM.. என்று தனியாக பேசுகிறோம் ஆனால் இந்த கருத்தை அன்றைக்கே முன்மொழிந்து சாதித்தவர் அவர். மூன்றாவது விஷயம் மாணவர் மையப்படுத்தப்பட்ட கற்றல்.. கட்டமைப்பியல் கல்வி(CONTRUCTIVISM) ஆய்வு அடிப்படையிலான கல்வி..(EXPERIMENTAL LEARNING) வளர்ச்சி மனநிலை கல்வி(GROUTHG MIND SET- THEORY) என்றெல்லாம் பேசுகின்ற எல்லா கோட்பாடுகளுக்கும் முன்னோடியாக அவரை நாம் முன்மொழிய முடியும். பொதுத்தேர்வு நுழைவுத் தேர்வு என்று அலறுகின்ற ஒன்றிய அரசினுடைய புதிய கல்விக்கொள்கை தரவரிசை அடிப்படை கல்வி.. மதிப்பெண் மைய கல்வி.. போட்டி தேர்வு மைய கல்வி.. என்று இந்த மூன்று அம்சங்களுக்கு எதிராக மனித வளர்ச்சிக்கான கல்வி.. மனிதநேய சிந்தனைக்கான கல்வி என்கிற ஒன்றை முன்வைக்கின்ற சில்வியா அம்மையாரின் கல்வியை வாசித்து புரிந்து கொண்டு நம்முடைய கல்வி போராட்டத்தை முன்னெடுப்பது இன்னும் சிறப்பாக புரிதலுக்கு உதவியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் இந்த புத்தகம் வெளி வந்த கையோடு இந்த நூல் குறித்த வாசிப்பு முகாம்களை தமிழகமெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது நம் அனைவரின் கடமை என்று முன் மொழிகிறேன்.

ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்.. என்கிற அதிகார மனப்பான்மைக்கு எதிராக சில்வியா அம்மையார் செயல்பட்டார். அதிகாரத்திற்கு எதிரான கல்வியை அவர் முன்வைத்தார். அவருடைய வகுப்பறைகள் அறிவை மேலிருந்து கீழ் கொண்டு வருவதில்லை மாறாக மாணவர்களிடம் இருந்து ஆசிரியர் கற்றுக்கொண்டு தேனிக்கள் எப்படி தேனை உருவாக்குகின்றனவோ அதுபோல மாணவர்களுக்கு அதை அறிவாக திரும்ப கொடுக்கின்ற ஜனநாயக வகுப்பறைகள் அவருடையவை. பாலோ பிரேயர் கூறிய வங்கி முறைக்கல்விக்கு எதிரான ஒரு கல்வியை அவருக்கு முன்னதாகவே நடைமுறை படுத்திய பெருமை சில்வியா அம்மையாருக்கு உண்டு. ஜனநாயக கல்வியை வலியுறுத்தி அனுபவ அடிப்படையிலான கற்றலை.. உண்மையிலேயே நடைமுறை படுத்திய பெருமை சில்வியா அம்மையாருக்கு தான் உண்டு.

அப்படியே தமிழக சூழலில் முதல் தலைமுறை பள்ளி குழந்தைகள் அரசு பள்ளி மாணவர்கள் பன்முக தன்மை மொழி அடிப்படை கொண்ட சமூகங்கள் அவர்களிடம் இருக்கின்ற கால காலமான உணர்ச்சிபூர்வமான காயங்கள், தேர்வு அழுத்தம் போன்ற அனைத்துக்கும் எதிராக இந்த ஒரு புத்தகத்தை நாம் முன்வைக்க முடியும்.. குழந்தைகளின் அன்றாட சொற்களை வாசிப்பவனே சிறந்த ஆசிரியன் .. இதில் இருந்து கற்றுக்கொண்டு குழந்தைகளின் அனுபவத்தை பாடமாக மாற்றும் ஒருவனே சிறந்த கல்வியாளன்  .. குழந்தைகளின் உணர்வு அடிப்படையில் தேடலை விதைக்கும் கல்வியை முன்மொழியும் ஒருவரே.. சில்வியா அம்மையாரின் வழியில் வந்த கல்வி போராளியாக இருக்க முடியும்.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயின்று ஒரு ஆசிரியையாக 24 ஆண்டுகள் பழங்குடியின குழந்தைகளோடு ஒன்றி கலந்து குழந்தைகள் அடிப்படையிலான எழுத்தறிவு என்கின்ற சொற்களஞ்சிய கல்வி நுட்பத்தை அறிமுகம் செய்த ஒரு மாமேதை சில்வியா அம்மையார். போலராடோ பல்கலைக்கழகத்தின் கல்வி குறித்த வாசிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அவர் அழைக்கப்பட்ட பொழுது.. என்னுடைய கல்வி கொள்கையை சரியான ஆழமான ஒரு பெரும் கட்டுரையாக அனுபவ தொகுதியாக அவர் வெளியிட்டார்.. ஒரு ஆண்டு கழித்து  டீச்சர் அல்லது ஒரு ஆசிரியர் என்கிற தலைப்பில் அது புத்தகமாக வெளிவந்தது.

சில்வியா அம்மையாரை நினைக்கும் பொழுதே அவரது இணையரான ஹண்டர்சன் அவர்களும் நமக்கு நினைவுக்கு வர வேண்டும்.. பெரும்பாலும் இருவரும் இணைந்தே கல்வியில் ஈடுபட்டார்கள் ஹண்டர்சன் தலைமை ஆசிரியராகவும் சில்வியா அம்மையார் குழந்தைகளின் ஒப்பற்ற கல்வியாளராகவும் ஒரே பள்ளியில் பழங்குடியினரின் வளர்ச்சிக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.. தன்னுடைய 60 ஆவது வயதில் 1969 ஆம் ஆண்டு ஹண்டர்சன் இறந்த பிறகு.. தன்னுடைய கல்வியின் பணிகளை நிறுத்தாமல் அயராது பாடுபட மேலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சில்வியா அம்மையார்.

2008 ஆம் ஆண்டு சில்வியா அம்மையாரின் கல்வி கொள்கை குறித்த  ஒரு மாநாடு நடத்தப் பட்டது.. நியூசிலாந்து அரசாங்கம் அவருடைய குழந்தை சொற்களஞ்சியம் வெளியிடுவதற்கான அடிப்படைகளை ஒரு திட்டமாக வகுத்து வெளியிட்டது

பாவுலோ பிரேயர் போன்ற கல்வியாளர்கள்க்கு இணையாக போற்றப் பட வேண்டிய சில்வியா அம்மையாரின் ஒப்பற்ற கல்வி ஆவணத்தை மிக சிறப்பாக மொழிபெயர்த்து அனைத்து ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மற்றும் கல்வி போராளிகளுக்கு இதை கொண்டு வந்திருக்கக்கூடிய பண்ணரம் நூல்வெளி மற்றும் குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பினருக்கு தமிழக கல்வி என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “ஓர் ஆசிரியர்” (Oor Aasiriyar)
ஆசிரியர்: சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்)
வெளியீடு:
தன்னறம் நூல்வெளி
விலை: ₹.300
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 ஆயிஷா இரா.நடராசன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *