சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை
கிரேக்க நாட்டுபுறக் கதை
கிரேக்க கடவுள்களுக்குத் தலைவர் ஜீயஸ் என்னும் கடவுள். இந்தக் கடவுள்கள் வசிக்கும் இடம் ஒலிம்பஸ் என்னும் மலை. ஆகவே, கிரேக்க கடவுள்களை ஒலிம்பியன்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.
ஒலிம்பஸ் மலையில் வாசம் செய்கின்ற தெய்வங்கள், இடுகின்ற கட்டளைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதர் ஹெர்ம்ஸ் என்ற கடவுள். இவர் அதிர்ஷ்டத்தின் கடவுள் என்றும் சொல்லப்படுகிறார். ஒரு முறை அர்காடியா நகருக்குச் சென்ற ஹெர்ம்ஸ், அங்கு ஒரு அழகான தேவதையைப் பார்த்து அவள் மீது காதல் கொண்டார். அவளை அடையும் ஆசையில், அவள் தந்தை ட்ரையோபோஸ் பண்ணையில், ஆடு மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்ந்தார். நாளடைவில், அந்த தேவதையை மணந்து கொண்டார்.
ஹெர்ம்ஸ் மற்றும் தேவதைக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு பான் என்று பெயர். பான் ஆடுகளின் பாதங்கள், முடி நிறைந்த கால்கள், நெற்றியில் சிறிய இரண்டு கொம்புகள் ஆகியவற்றுடன் பிறந்தான். எப்போதும், சிரித்த முகத்துடன் இருக்கும் தன் குழந்தையை ஒலிம்பஸ் மலையிலிருக்கும் மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் சென்று காண்பித்தார் ஹெர்ம்ஸ். வித்தியாசமான அமைப்புள்ள பான் குழந்தையை எல்லாக் கடவுளுக்கும் பிடித்தது.
நாளடைவில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கான தெய்வமாக அறியப்பட்டான் பான். அர்காடியாவிலுள்ள செங்குத்தான பாறைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், வளைந்து ஓடும் நதிகள் ஆகிய இடங்களில் தன்னுடைய ஆட்டு பாதங்களைக் கொண்டு நடந்து திரிவது அவனுக்குப் பிடிக்கும். அங்குள்ள மலைகள், நதிகள் எல்லாம் அவனுக்கு நன்றாகத் தெரியும். விலங்குகளை வேட்டையாடுவது, மற்ற விலங்குகளுடன் போட்டி போட்டுக் கொண்டு செங்குத்தான பாறைகளில் ஓடித் தாவிச் செல்வது அவனுக்குப் பிடித்த விளையாட்டு. மாலையில், பசுமை நிறைந்த புல்வெளிகள் அல்லது குளிர்ந்த நீரோடை அருகில் இளைப்பாறி, காடுகளில் வசிக்கும் தேவதைகளின் குரல் கேட்டு ரசிப்பான்.
அழகிய தேவதைகளின் மீது காதல் வயப்பட்டு அவர்களை துரத்திச் செல்வான் பான். ஒரு முறை சிரின்க்ஸ் என்ற அழகிய நீர் தேவதையைப் பார்த்து அவள் மீது காதல் கொண்டான் பான். ஆனால், சிரின்க்ஸ் அவனுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. வேட்டைக் கடவுளான ஆர்ட்டெமிஸ் போல, அவளுக்கு காதல் மற்றும் திருமணத்தில் ஆர்வமில்லை. தன்னுடைய காதலைச் சொல்வதற்காக, பான் அந்த தேவதையை துரத்திச் செல்ல ஆரம்பித்தான். ஆனால், மனதில் காதல் உணர்வில்லாத சிரின்க்ஸ், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக, வேகமாக ஓடி நதிக் கரையை அடைந்தாள்.
பான் ஓடி வரும் வேகத்தைப் பார்த்த சிரின்க்ஸ், அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு மற்ற நதி தேவதைகளின் உதவியை வேண்டினாள். தன்னுடைய அழகிய உருவத்தை மாற்றும்படிக் கேட்டுக் கொண்டாள். அவளை மறைத்து வைக்க நதி தேவதையும் சம்மதித்தாள். நதிக் கரையில் சிரின்க்ஸ் நிற்பதைப் பார்த்த பான், குதித்து அவளைப் பிடிப்பதற்கு கையை நீட்டினான். அதே சமயத்தில் நதி தேவதை அவளை மறைத்து நதியில் ஒளித்து வைத்தாள். எங்கு தேடியும் சிரின்க்ஸ், பான் கையில் சிக்கவில்லை. மாயமாய் மறைந்த சிரின்க்ஸ், எத்திசையில் சென்றாள் என்பது அறியாமல் பான் திகைத்தான்.
சிரின்க்ஸைப் பிடிக்க அவன் நீட்டிய கையில், கிடைத்தது சதுப்பு நிலத்தில் விளையும் நாணல். தேவதையைப் பிடிக்க முடியவில்லை என்று ஏக்க பெருமூச்சு விட்டான் பான். அவனுக்குப் பதில் சொல்வது போல, நாணல் வழியாக ஊடுருவிய அவனுடைய மூச்சுக் காற்று இனிமையான ஒலியை எழுப்பியது.
அந்த இசை பான் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியது. நாணலைக் கையிலெடுத்து, அதன் வழியாக அவன் மெல்லிய காற்றை செலுத்திய போது, மனதிற்கு இனிமையாக ரம்மியமான இசையை வெளிப்படுவதை அவன் இரசித்தான். “சிரின்க்ஸ், நீ எங்கிருந்தாலும் என்னிடம் வா. நாம் இருவருமாக இனிமையான இசையை உருவாக்குவோம்” என்று அழைத்தான் கடவுளான பான். அவனுக்குக் கிடைத்த பதில் நாணலில் ஊடுருவி காற்று எழுப்பிய இசை மட்டுமே.
இசையில் ஆர்வமுள்ள பான், சதுப்பு நிலத்திலிருந்து நாணல்களை எடுத்து, வெவ்வேறு நீளத்திற்கு அவற்றை வெட்டினான். நாணலை ஊதும் போது, அதனுடைய நீளத்திற்கு ஏற்ப, அவை எழுப்பும் ஒலியும் வேறுபடுவதைக் கவனித்தான். அப்படியானால், வெவ்வேறு அளவுள்ள நாணல்களை ஒன்றிணைத்தால், வாயில் வைத்து வாசிக்கின்ற இனிமையான இசைக்கருவியை உருவாக்கலாம் என்று புரிந்து கொண்டான். அவ்வாறு உருவாக்கிய இசைக்கருவிக்கு “சிரின்க்ஸ்” என்ற பெயர் வைத்தான். இந்த சிரின்க்ஸ் “சிரின்க்ஸ் புல்லாங்குழல்” என்ற பெயர் பெற்றது. திருமணங்களில் வாசிக்கப்படும் முக்கியமான இசைக் கருவியாக மாறியது “சிரின்க்ஸ் புல்லாங்குழல்”. மலைச் சரிவுகளில் ஆடு, மாடுகளை மேய்க்கும் இடையர்கள், தென்றல் வீசும் போது மனதை மயக்கும் “சிரின்க்ஸ் புல்லாங்குழல்” இசை கேட்பதாகக் கூறுவார்கள்.
பான், தேவதையின் மீது கொண்ட காதல் ஒரு இசைக்கருவியை உருவாக்கியது.
சிறுகதை எழுதியவர்:

சென்னை வசித்து வரும் இவர், பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது.
கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் – தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு, தீபம், கல்கி ஆன்லைன், பிரதிலிபி, சஹானா, புக்டே இணைய தளங்கள்.
பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம், துகள் ஜெர்மனி, “டாக்டர் அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டி”, பிரதிலிபி கதை கட்டுரைப் போட்டிகள், சஹானா சிறுகதைப் போட்டி.
பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் ஐந்து.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.