மூத்த இலக்கியவாதியும், திறனாய்வாளருமான தி.க.சி. மொழிபெயர்த்துள்ள படைப்புகளின் மொத்த தொகுப்பு நூல் இது. ‘லெனினும் இலக்கியமும், பாப்லோ நெரூடா, காரல்மார்க்ஸ் இல்வாழ்க்கை, எது நாகரீகம்..?, கலாச்சாரத்தைப் பற்றி, குடியரசுக் கோமான்’ ஆகிய ஆறு கட்டுரைகள், ‘ஆப்பிள் மலர், விசுவகர்மா’ என்கிற இரண்டு சிறுகதைகள், ‘வசந்த காலத்திலே, சீனத்துப் பாடகன், போர்வீரன் காதல்’ ஆகிய மூன்று நாவல்கள், ‘நெரூடாவின் இறுதிக் கவிதை, வேர்களைக் கூட நேசிக்கிறேன்’ ஆகிய இரண்டு கவிதைகள்,  பிரபல செக்கோஸ்லோவேகிய பேராசிரியர்  டாக்டர். கமில் ஸ்வெலெபில் எழுதிய கடிதம், 1950ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போது எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர் ஆற்றிய உரை என அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக தி.க.சி  மொழிபெயர்த்துள்ள படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

சோவியத், சீன நாவல்கள் மற்றும் மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள் தவிர்த்து, இன்ன பிற அவரது மொழியாக்கங்கள் அனைத்தும் இத்தொகுப்பின் வழியாக முதன்முறையாக நூல் வடிவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். 1941வாக்கில் தனது கல்லூரிப் பருவக் காலத்தின் போதே எழுத்துலகத்துள் பிரவேசித்துவிட்ட தி.க.சி.யினுடைய முதல் மொழிபெயர்ப்பு கட்டுரையான ‘லெனினும் இலக்கியமும்’ திருச்சி – துறையூரிலிருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன் – ஏப்ரல் 1-15, 1946’ இதழில் வெளிவந்துள்ளது. பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஸ்டீபனோவ் எழுதிய மூலத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை இது. அவரது அடுத்த மொழிபெயர்ப்பு கட்டுரையான பாப்லோ நெரூடாவின் வாழ்க்கைச் சித்திரம், அவர் சார்ந்திருந்த இந்திய பொதுவுடைமை கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சித் தலைமை ரகசியமாக வெளிக்கொண்டு வந்த ‘புதுமை இலக்கியம் – ஜனவரி – பிப்ரவரி 1950’ இருமாத இதழில் வெளியானது. ‘சோவியத் இலக்கியம்’  (Soviet Literature) பத்திரிகையில் சோவியத் எழுத்தாளர் ‘இலியா எரன்பர்க்’ எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. 1951இல் தி.க.சி மொழிபெயர்த்துள்ள ‘காரல் மார்க்ஸ் இல்வாழ்க்கை’ என்கிற கட்டுரையே அவரது முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். நூல் வடிவம் பெற்ற அவரது படைப்புகளில் இம்மொழிபெயர்ப்பு நூலே முதலாவதாகும். காரல் மார்க்ஸின் மகள் வயிற்றுப் பேரனான டாக்டர். எத்-கார்-லொங்கே எழுதிய ஆங்கில மூலத்தை கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை இது.

1950ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அறிவுறுத்தலின் பேரில், சோவியத், சீன நாவல்களையும், மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார் தி.க.சி. இவற்றுள் ரஷ்ய எழுத்தாளர் ஜார்ஜிகுலியாவின் ‘வசந்த காலத்திலே’ நாவல் ஸ்டாலின் பரிசு பெற்ற நாவலாகும். 15-02-1951இல் எழுதிய இந்நூலின் முதற் பதிப்பிற்கான முன்னுரையில் தி.க.சி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தி க சிவசங்கரன் என்ற தி க சி ...

“சுமார் நான்கு மாதங்களுக்கு முன் தமிழ்ப் புத்தகாலயத்தாரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. “ஒரு முக்கியமான விஷயமாக பேச வேண்டும்” என்று அதில் கண்டிருந்தது. நான் அங்கு சென்றதும், அவர்கள் ஒரு புத்தகத்தை என்னிடம் தந்து, அதை உடனே தமிழாக்கித் தர வேண்டும் என்றனர். புத்தகத்தை திறந்து பார்த்தேன். ஜார்ஜிகுலியா எழுதிய ‘ஸ்டாலின் பரிசு பெற்ற நாவல்’! “உண்மைத் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் இது மிக முக்கியமான விஷயம் தான்..” என்ற முடிவுக்கு வந்தேன். அதன் விளைவே, இதோ உங்கள் கையிலிருக்கும் “வசந்த காலத்திலே” (Spring Time in Saken) என்ற நாவல்…”

அவர் மொழிபெயர்த்துள்ள மற்றொரு நாவலான ‘சீனத்துப் பாடகன்’ நாவலுக்கு, 10.11.1951இல் எழுதிய முன்னுரையில் இந்நூலை மொழிபெயர்த்ததன் அவசியம் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“சீனத்துப் பாடகன் (Rhymes of Li-Yu-Tsai) என்ற இந்நூலை உங்கள் முன் படைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மா -சே -துங்கின் சீனத்தைப் பற்றி இன்று அறியாதவர் ஒருவரும் இல்லை. மக்கள் சீனம் இன்று ஆசியாவின் ஜோதியாக, காலனி மக்களின் கலங்கரை விளக்கமாக நமது கண்ணையும், கருத்தையும் கவர்ந்து நிற்கின்றது. சீனப் புரட்சியின் வெற்றி முழக்கம், அடிமைப் பட்டு கிடக்கும் ஆசிய மக்களின் விடுதலை ஆர்வத்தை உந்தித் தள்ளுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு இந்தியனின் நாடி நரம்பையும் முறுக்கேற்றி, அவனது அவல வாழ்வை அகற்றத் தூண்டும் போர்ப் பறையாக விளங்குகிறது. இன்று இந்திய மக்கள் நவ சீனத்தின் அரசியல், கலை, இலக்கியம் ஆகியவற்றை அறியத் துடிக்கின்றனர். இந்தத் துடிப்பின் விளைவாகவே நானும் இந்நூலை தமிழாக்கத் துணிந்தேன். ‘சீனத்துப் பாடகன்’ என்ற இந்நூல் 1943இல் எழுதப் பெற்றது; இந்நூலாசிரியருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. இவரைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் இங்குச் சொல்லியாக வேண்டும். இந்நூலாசிரியரான சோஷு-லி இன்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வடசீனாவில், ஷான்சி மாகாணத்தில், ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, லஞ்சலாவண்யம் நிறைந்த பள்ளித் தலைமையாசிரியரை எதிர்த்து நடந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்; அதனால் பள்ளியை விட்டு விரட்டப்பட்டார். அன்று முதல், ஜப்பானுடன் யுத்தம் துவங்கும் வரை, பள்ளி ஆசிரியர் முதல் நாடோடி வரை, பற்பல தினுசான வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்.

ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது, இவர் ஜப்பானிய அணிகளுக்குப் பின்னுள்ள கொரில்லாத் தளங்களில் நிர்வாக அதிகாரியாகவும், அரசியல் ஊழியராகவும், பிரச்சார அதிகாரியாகவும் இருந்துள்ளார். இறுதியில், சீனாவின் தலைசிறந்த பிரசுராலயமான சின் ஹுவா பதிப்பகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். இச்சமயத்தில் தான் இவரது இலக்கிய சிருஷ்டிகள் வளர்ந்து உரம் பெற்றன. இவர் இரண்டு மூன்று நாவல்களும்,  ஏழு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாடகங்களும், இரண்டு குட்ஸுக்களும் (சிந்துச் சரிதைகள்) எழுதியுள்ளார்.

‘புகழ் பெறுமுன்பே, பழுத்துக் கனிந்த ஆசிரியன்; தனக்கெனத் தனிநடை வகுத்துக் கொண்ட சுயம்பான கலைஞன்; மக்களின் எழுத்தாளன். இவரது கதைகளின் வெற்றி தோழர் மா-சே-துங்கின் இலக்கியக் கொள்கையின் வெற்றியாகும்..’ என்கிறார் பிரபல விமர்சகரும், மக்கள் சீனத்தின் கலாச்சார உதவிப் பிரதம மந்திரியுமான சௌ-யாங். இதற்கு மேல் இவரைப் பற்றி கூறிவிட முடியாது..”

Image

இன்னொரு சீன நாவலான ‘போர்வீரன் காதல்’, சீன எழுத்தாளர் ஷிஹ்-யென் எழுதிய ‘It happended at Willow Castle’  நாவலின் மொழிபெயர்ப்பாகும். ஒரு நாட்டின் வாழ்க்கையை, மக்களின் ஆசைக் கனவுகளை பிரதிபலிப்பது தான் நல்ல இலக்கியம். நவ சீன மக்களின் வாழ்க்கையை, லட்சிய வெற்றிகளைப் பிரதிபலிக்கின்ற பல இலக்கியங்களில் ஒன்று தான் இந்நாவல். உறுதியான கட்டுப்பாடும், சிறந்த ஒழுக்கமுமுள்ள சீனச் செம்படையிலே மனித உணர்ச்சியும் வாழ்வின் அபிலாஷைகளும் எவ்வாறு கௌரவிக்கப் படுகின்றன என்பதை இச்சிறு நாவல் ஒளியிட்டுக் காட்டுகிறது.

மார்ச் 1951இல் முற்போக்கு இலக்கியத்தின் தந்தையான மாக்ஸிம் கார்க்கியின் ‘எது நாகரிகம்?’ ‘கலாச்சாரத்தைப் பற்றி’ ஆகிய இரண்டு கட்டுரைகளையும், 1952இல் ‘One of the King of Republic’ கட்டுரையினை ‘குடியரசு கோமான்’ என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார் தி.க.சி.

“மாக்ஸிம் கார்க்கி மிக நன்றாகச் சொன்னார்: சோவியத் இலக்கியம் மருத்துவச்சியாகவும், கல்லறைத் தோண்டுவோனாகவும் ஒருங்கே வேலை செய்கிறது என்று. ஆம்..! புதிய மனிதனை சிருஷ்டிக்க உதவுவதும், புதிய சமுதாயத்தைச் சமைப்பதில் மக்களின் நல்வாழ்விற்கு தடையாக உள்ள எல்லாவற்றையும் அழிப்பதும் தான் சோவியத் இலக்கியத்தின் இலட்சியம். ‘மனிதன்..! ஆஹா.. இந்த வார்த்தையிலே தான் எத்தனை கம்பீரம்..!’ என்றார் கார்க்கி. மனிதனின் புகழைப் பாடுகின்ற, அவனது உழைப்பைப் போற்றி இசைக்கின்ற, ‘பாட்டாளியே உலகின் எஜமானன்’ என்று சங்கநாதம் செய்கின்ற கார்க்கியின் எழுத்துக்கள் ஒரு புதிய தமிழகத்தை, புதிய தமிழ் இனத்தை, புதிய தமிழ் இலக்கியத்தை உருவாக்க துணை செய்வனவாகும்..” என கார்க்கியை தி.க.சி. புகழ்ந்து கொண்டாடுவது ஏன் என்பதை இம்மூன்று கட்டுரைகள் வாசித்தலின் முடிவில் வாசகன் உணர முடியும்.

சிறுகதைகளை பொறுத்தமட்டில்,  செஞ்சீன எழுத்தாளர் ஜென்-சிங்-போ எழுதிய ‘ஆப்பிள் மலர்’, தெலுங்கு எழுத்தாளர் சூர்யராவ் எழுதிய ‘விசுவகர்மா’ ஆகிய இரண்டு கதைகளும் எளிய மக்களின் வாழ்வையும், அன்றைய காலகட்ட சூழ்நிலையையும் பிரதிபலிக்கின்றன. கவிதைகள் பிரிவில், அவர் மொழிபெயர்த்துள்ள இரண்டு கவிதைகளும் பாப்லோ நெரூடாவினுடையவை. நண்பரும், ‘சாந்தி’ இதழாசிரியருமான தொ.மு.சி.ரகுநாதனின் வேண்டுதலின் பேரில் தி.க.சி மொழிபெயர்த்துள்ள செக்கோஸ்லோவேகிய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமில் ஸ்வெலெபில் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பானது ‘செக் நாடும் தமிழும்’ என்ற தலைப்பில் ‘சாந்தி – ஆகஸ்ட்-1955’ இதழில் வெளிவந்துள்ளது. தொகுப்பின் நிறைவாக இடம்பெற்றுள்ள, 1950ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போது எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர் ஆற்றிய உரையின் மொழியாக்கமானது, ‘ஒரு எழுத்தாளனின் லட்சிய சாசனம்’ என்கிற தலைப்பில் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து – நவம்பர் 1962’ இதழில் வெளிவந்துள்ளது. .

அரை நூற்றாண்டுக்கு முன்பாக வெளிவந்துள்ள இம்மொழிபெயர்ப்பு படைப்புகளின் தன்மை குறித்து பேசுகிற போது, இந்நூல் தொகுக்கப்பட்டுள்ள முறைமை குறித்தும், தொகுப்பாசிரியரும் எழுத்தாளருமான வே.முத்துக்குமார் குறித்தும்  பேசுவது சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக படுகிறது. அவரெழுதியுள்ள சற்றே நீண்ட தொகுப்புரையின் மூலம் நூல் தொகுக்கப்பட்டதற்கான சிரத்தையினை நன்கு உணர முடிகிறது. ‘தி.க.சி மொழிபெயர்த்திருந்த பிரபல சீன எழுத்தாளர் ஸோ-மிங்கின் நாவலை, ‘உத்வேகம்’ என்ற தலைப்பில் வெளியிட முன்வந்தார் அவரது நண்பர் ‘சரஸ்வதி’ வ.விஜயபாஸ்கரன். இந்நாவல் வெளிவருவது குறித்த விளம்பரமொன்றை அப்போது அவர் ஆசிரியராக இருந்து வெளிக்கொண்டு வந்த ‘விடிவெள்ளி’ இதழிலே வெளியிட்டார். ஆனால் அந்நாவல் வெளிவராமல் போய்விட்டது. அந்நாவலின் கையெழுத்துப் பிரதியும் இந்நாள் வரையில் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல, ஹனுமான்’ மற்றும் ‘இந்துஸ்தான்’ இதழ்களில் தி.க.சி மொழிபெயர்த்து வெளிவந்துள்ள  கதைகளும் கிடைக்கப்பெறவில்லை..’ என தொகுப்புரையில் வே.முத்துக்குமார் குறிப்பிட்டிருப்பது அவரது விரிந்த தேடலை முன்னிறுத்துகிறது. இந்நூல் தொகுப்பிற்கு முன்னதாக வே.முத்துக்குமார் அவர்கள் தி.க.சி.யின்  நூல் வடிவம் பெறாத போது படைப்புகள் பலவற்றைத் தொகுத்துள்ளார். தி.க.சி.யின் ‘கடல் படு மணல் (2010), தி.க.சி நேர்காணல்கள் (2011),  காலத்தின் குரல் (2011), தி.க.சி.யின் நாட்குறிப்புகள் (2014), தி.க.சி நாடகங்கள் (2017), தி.க.சி திரைவிமர்சனங்கள் (2017), தி.க.சி கவிதைகள் (2017),  நினைவோடைக் குறிப்புகள் (2018) என அந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்நூல் முகப்போவியத்தினை பிரபல ஓவியரும், நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன் வரைந்துள்ளார். தி.க.சி.க்கே உரித்தான சிரிப்பு ஓவியத்தில் அப்படியே பிரதிபலித்துள்ளது. அதேபோல, நேர்த்தியான வடிவமைப்பிலும், வாசிக்கத் தகுந்த எழுத்துருவிலும் சிறப்பான முறையில் இந்நூலினை வெளிக்கொண்டு வந்துள்ள சந்தியா பதிப்பகதாரும் பாராட்டுக்குரியவர்கள்.

 

தி.க.சி மொழிபெயர்ப்புகள்

(தொ.ர்) வே முத்துக்குமார் 

சந்தியா பதிப்பகம் 

அசோக் நகர்,   சென்னை -28

044-24896979

விலை ரூ. 400/-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *