மொழி பெயர்ப்புக் கவிதை: T.S.ELIOT ‘ S poem PRELUDE – மொழியாக்கம் தங்கேஸ்

 

T.S.ELIOT ‘ S poem PRELUDE (முன்னுரை)

 

1

 

அழுக்கடைந்த தெருக்களெங்கும்
சேறு படிந்த பாதச்சுவடுகள்
காபிக்கடைகளில் போய் முடிகின்றன
அங்கிருந்து கிளம்பி வரும்
மயக்கமூட்டும் மது நெடியின் வழியே
காலைப்பொழுது புலர்கிறது எனக்கு
அலங்கரிக்கப்பட்ட அலுவலக அறைக்குள் அபத்தமான நிழல்களென உயரும்
ஆயிரமாயிரம் கரங்களில்
அபிநயிக்கிறது காலத்தின் மீது ஏற்றப்படும் நடிப்பு

 

2

 

மெத்தையின் மீது ஒரு போர்வையை விரிக்கிறாள்
அதன் மீது மல்லாந்து வீழ்ந்தபடி காத்திருக்கிறாள்
ஒரு கொட்டாவி
தோன்றும் இரவின்
ஆயிரம் அடர்த்திக்காட்சிகள்
அத்தனையும் மனதின் காட்சிகள் தானோ?
அல்லது பிரமையோ?
மேற் கூரையில் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளம் தான்
அவளது ஆத்மா என்றால்
அதுவும்அபத்தமான காட்சிகளால் வடிவமைக்கப்பட்டது தானே?
பொழுது புலர
அதிகாலை வெளிச்சம் பூட்டியதவிடுக்குகளின் வழியே
ஊர்ந்து வரும் போது
குருவிகளின் இரைச்சல் சாக்கடைப் பக்கமிருந்து கொடூரமாய் கேட்கிறது
தெருவின் தோற்றம் சட்டென
மாற்றம் கொள்ளும்
அத் தெருஅறியுமோ தன் அசிங்கமான தோற்றத்தை வெளிச்சத்தின் முகத்தில்?

படுக்கையின் விளிம்பில் எழுந்து அமர்ந்தவள்
சென்ற இரவில் தலைமயிரில் சிக்கியிருந்த
ஜிகினா காகிதங்களை வழக்கம் போலவே
உருவி எடுக்கிறாள்
பிறகு
தன் மஞ்சள் வண்ணப் பாதத்தில்
ஒட்டியிருக்கும்
அழுக்குகளை எப்பொழுதும் போல
அசுவராசியமாய் விரல்களால்
உருட்டி உருட்டி எடுத்தபடியே இருக்கிறாள்

 

4

 

அவனது ஆன்மா வானத்தில் தன்னை பரப்பிக் கிடக்கும்
சிறிது நேரத்தில் நகரத்தின் உயர்ந்தகட்டிடங்களின் பின்புறம்

மறைந்து விடும்

சில நேரம்
நான்கு ஐந்து ஆறு மணிக்கு
வீடு திரும்பும் எண்ணற்ற பாதங்களின் அடியில்
நசுங்கி சாகும்
குள்ளமான சதுரமான உருவங்கள்
வாயில் புகையும் சுருட்டு
கைகளில் மாலை செய்தித்தாட்கள்
கண்களில் வழியும்விஷமம்
சில விஷமச் செய்திகளை
சொல்லி விடும்
உதாசீனப்படுத்தப்பட்ட இந்த தெருவிற்கு
உலகத்தை பற்றி யோசிக்க நேரமில்லை

இந்தப்  படிமங்களோடும் காட்சிகளோடும்
நான் இடையறாது பிணைக்கப்பட்டிருக்கிறேன்
அல்லது ஒட்டிக் கொண்டு அலைகிறேன்
மிக மென்மையானது என்று நான் எண்ணுவது
மிக மிக துயரமானதும் கூட
உன் விரல்களால் உன் உதடுகளை
துடைத்து விட்டு சிரி
காட்டு வெளிகளில்
காய்ந்த சுள்ளிகளுக்கு அலையும்
ஆதிவாசிப்பெண்னைப்போல்
இந்த உலகம் அத்தனை வேகமாய்
சுற்றிக் கொண்டிருக்கிறது

 

மூலம்: டி .எஸ் .இலியட்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்