Posted inPoetry
சட்டை கவிதை -கலையரசி
சட்டை
1.
கசங்கி போய் இருக்கிறது.
சுருக்கங்களில்
அப்பாவின் முகம்.
2.
வியர்வையில் நனைந்த
இரண்டு ரூபாய்
எடுக்கும் பொது
கூசுகிறது கைகள்.
3.
அழுத்தமாய் அப்பாவை போலவே
விறைப்பாய் இருக்கிறது
கழுத்துப் பட்டை
4.
ஐந்தாறு குட்டித் துளைகளை
வட்டப் பொட்டில்
வைத்தபடி சிரிக்கின்றன
பொத்தான்கள்
5.
தொங்க விட்டதும்
மூச்சு வாங்குகிறது
நாளெல்லாம் உழைத்ததில்.!
6.
ஒளித்து வைத்திருந்த
ஒற்றைப் பீடியை
அழுத்திப் பிடிக்கின்றன
அம்மாவின் கைகள்.
7.
நீலத்தில் முங்கி
வெள்ளைக் காதலன்
நிறம் மாறுகிறான்
அவளுக்காக!
8.

அழுக்குடன் பேசும்
மௌன மொழிகளை
துவைத்து விடுகிறது
சோப்பு.
இரா. கலையரசி.