வர்க்கத்தின் வேர்ச்சொல் கவிதை – நா.வே.அருள்
வர்க்கத்தின் வேர்ச்சொல்
சடலங்கள் அடுக்கப்பட்ட
அமெரிக்க ஹே மார்க்கட்
சதுக்கம்!
சதுக்கத்தில்
திராட்சை ரசமாகப் பரிமாறப்பட்ட
தேகங்களின் இரத்தம்!
மயங்கி விழுந்த அடிமைகளின்
மயக்கம் தெளிவித்தவர்களுக்குக்
குண்டுகளால் கொடுக்கப்பட்ட
மரணத்தின் கூலிகள்.
இந்த உலகம்
ஏன் இப்படி
கல் நெஞ்சுக்காரர்களின்
கோலிக் குண்டாய் உருள்கிறது?
எப்போதும் இப்படித்தானா?
இறந்தவர்களின் சதைத் துணுக்குகள்
இருப்பவனின்
ரொட்டித் துண்டுகள்
குருதி நிறத்தில் கொடிக்கம்பத்தில்
புரட்சி அசைகிறபோது
இரத்தம் கொதிக்கிறது.
எந்தப் பெரு முதலாளி கைத் துடைக்க
படபடக்கிறது
சிவப்பு நிற டிஷ்யு தாள்?
உலகிலேயே
என் நாட்டில்தான்
உழைப்பைத் திருட உண்டியல்
குழைத்த சேறு
கடவுள் களிமண்.
“நரகம் சொர்க்கம்
பாவம் புண்ணியம்…”
வேலைப் பிரிவினை
விவரப் பட்டியல்.
தொழிலாளியின் மூளை
கடவுளுக்குப் பிரசாதம்.
திருடப்பட்ட வேர்வை
தீர்த்தம்.
இன்னும் தொழிலாளியிடம் மிஞ்சியிருப்பது
இரும்புகுண்டு கட்டிய நூலாய்
இழுத்து இழுத்துவிடும்
இறுதிப் பெருமூச்சு.
எந்த முதலாளியின் துரோகமிது?
ஒரு மனிதன்
மற்றவனுக்கு
எப்போதும்
இசை நாற்காலித் திருடனா?
தொழிலாளிகளின் தசைநார்களில்
தொடர்கிறது
கல்லுரிப்பு.
ஞாபகம் இருக்கிறதா?
சடலங்கள் அடுக்கப்பட்ட
அமெரிக்க ஹே மார்க்கட்
சதுக்கம்!
சதுக்கத்தில்
திராட்சை ரசமாகப் பரிமாறப்பட்ட
தேகங்களின் இரத்தம்!
எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்.
துணிச்சலின் கழுத்தைத்
தூக்குக் கயிற்றில்
மாட்டியிருக்கிறார்கள்.
விரட்டியடிக்கப்படும் தொழிலாளிகளின்
வீடுகளில்
சடை சடையாய்த் தொங்கும்
சிலந்தி வலைகள்.
சுவற்றில்
பசியாறப் பூச்சிகளற்று
இளைத்துப்போன பல்லிகள்
நிலைக்குத்தி நின்றுவிட்டன
நீர்த்திரையிடும் கண்கள்
முன்னோரை மறந்தவர்கள்
கண்ணீரின் வரலாறு.
புரட்சி அசைகிறபோது
இரத்தம் கொதிக்கிறது.
எந்த முதலாளி கைத் துடைக்க
படபடக்கிறது
சிவப்பு நிற டிஷ்யு தாள்?
மெள்ள மெள்ள
ஞாபகத்திற்கு வருகிறது.
மேதின நாயகன்
மெள்ள விழித்தெழுகிறான்…
இப்போது புரிந்து கொள்கிறான்…
அவனது இதயம்
பிரபஞ்சத்தின் பேராலை அல்லவா!