நூல் : ஆசிரியர் நாட்குறிப்பு
வெங்களத்தூர் பள்ளி
ஆசிரியர் : தோழர் உதயலட்சுமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : மார்ச்-2023
விலை : ரூ.140
“மாணவர் மனசு தபால்பெட்டியெல்லாம் சிலந்திப்பூச்சிகள் குடியிருக்கத்தான்…- ஆசிரியர் #உதயலட்சுமி.”
‘மலர்களைத் தொடுக்கும் விரல்கள் தேவை- பேராசிரியர் ச. மாடசாமி ;
எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகள். அவர்களைக் கவனித்து, அவர்களின் சிக்கல்களை களைந்து கற்றலின்பால் கவனம் செலுத்தச் செய்வது பெரும் தவம்- விழியன் உயிர்த்துடிப்பு உள்ள குழந்தைகளை இயந்திரமாக ஆக்குவதா வகுப்பறை?- சிவா கலகலவகுப்பறை .’
ஆளுமைகளின் சிறப்பான அணிந்துரைகளுடன் நாட்குறிப்பு தொடங்குவது இந்நூலுக்கு மிகுந்த வலு. ஓர் ஆசிரியரின் வெற்றி குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது.
ஆசிரியர் உதயலட்சுமி அவர்கள் குழந்தைகளை தனது அன்பால் கட்டிப்போட்டு குழந்தைகளின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளித்து அவர்களை சமூகத்தின் ஆணிவேர் என்பதை ஆழப் புரிய வைத்திருக்கிறார் தனது ‘ஆசிரியர் நாட்குறிப்பு’ மூலம். வகுப்பறைகள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
எங்கெல்லாம் உரையாடல் நடக்கிறதோ அங்கெல்லாம் கற்றல் நிகழும் என்பதை தனது வகுப்பறை அனுபவங்களின் பல குறிப்புகள் மூலம் நம்மை அசத்துகிறார்.
தனது அம்மாவின் மரணம் மற்ற அம்மாக்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக ஒரு பெண்குழந்தை மருத்துவராக ஆக விருப்பம் தெரிவித்தது;
வகுப்பறை ஆண்/பெண் சமத்துவமாய் இயங்கக் கூடிப் பணியாற்றுவது;
வகுப்புத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வகுப்பறை சனநாயகம்;
ஆசிரியர்களின் உணர்வை மதிக்கும் சக ஆசிரியர் பண்பு;
ஆசிரியர் என்பவர் சாமானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான உரிமைகளுக்கான பார்வையில் அரசியல் பேசும் அழகு;
குழந்தைகளின் தேவைகளுக்காக உதவும் மனப்பான்மை உள்ளவர்களை அணுகிப் பெற்று குழந்தைகளின் மனதில் ஒளிவிளக்காய் திகழும் பாசம்;
கல்வித்துறையில் இருக்கும் முரண்பாடுகளை அச்சமின்றி இடித்துரைக்கும் பண்பு’ இப்படி நிறைய அவருடைய பணிகளை, பண்புகளை இந்நூலை வாசிக்கும்போது அறியமுடியும்.
உதாரணம் ஒன்றிரண்டு மட்டும் –
அம்பேத்காரின் படத்தை குடியரசு நாளில் கூட வைக்கக்கூடாதா? என்கிற அவருடைய அறச்சீற்றம்;
மாணவர் மனசு தபால்பெட்டியெல்லாம் சிலந்திப்பூச்சிகள் குடியிருக்கத்தான்…’
இப்படி ஆங்காங்கே நமக்கு கோடிட்டுக் காட்டிக்கொண்டே தனது நாட்குறிப்பை பூர்த்தி செய்திருப்பார்.
ஆசிரியர்கள் வாசிப்பதே சில சதவீதம் மட்டுமே. அதில் சில சதவீத ஆசிரியர்கள் வாசிப்புடன் அடுத்தகட்ட நகர்வுக்கு அதாவது எழுத்தாளர் என்கிற படிகட்டிற்கும் காலை வைத்துவிடுகின்றனர். அப்படித்தான் ஆசிரியர் உதயலட்சுமி அவர்களும் தனது இந்நூலின் மூலம் எழுத்தாளர் என்கிற நகர்வுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
நாட்குறிப்பில் பல பயன்விளைவுகளாகவும், பல எதிர்பார்ப்புகளாகவும் முடித்திருப்பார். அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா என்பதை அவர் தனது அடுத்த நூலில் வழங்குவார் என எதிர்பார்ப்போம்.
அவருடைய இந்நூலை வாசித்ததன் மூலம் “கடந்த 26 ஆண்டுகளாக நாமும் நாட்குறிப்பு எழுதியிருக்கலாமே ஏன் விட்டுவிட்டோம்?” என்கிற எண்ணத்தை என்னுள் எழுப்பி விட்டார்.
ஆசிரியர்களை எழுதத் தூண்டிய தோழர் உதயலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நூலை வாங்கவேண்டுமென்று காத்திருந்த வேலையில் தோழரே என் முகவரிக்கு அனுப்பி வைத்தார். தோழருக்கு மனமார்ந்த நன்றி!
நூலின் உள்ளடக்கத்தை வாசித்தறிய வேண்டுகிறேன்!
நாமும் நாட்குறிப்பு எழுதத் தொடங்குவோம் ஆசிரியர் பெருமக்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்
தோழர்களே!!