உதயசங்கர் - யார் அந்த மர்ம மனிதன் | Yar Antha Marma Manithan?

உதயசங்கர் எழுதிய “யார் அந்த மர்ம மனிதன்?” – நூலறிமுகம்

வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் நூல் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இளையோருக்கான வரலாற்று புதினம் இந்த நாவல். "கேப்டன் பாலு" - உதயசங்கர் அவர்களின் எழுத்தில் உருவான கதாபாத்திரம். பதின்பருவ வயதை ஒட்டிய இளைஞன், இன்னும் சுருக்கமான சொல்லப்போனால் - இன்றைய தலைமுறையின்…
பிறிதொரு மரணம் - உதயசங்கர் | Udhayasankar - Pirithoru Maranam

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

  ‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது. ஒரு உண்மையான சமூக ஆர்வலர், கட்டுரையாளர் தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக…
சாதிகளின் உடலரசியல் Saadhigalin Udalarasiyal உதயசங்கர் Udhayasankar

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “சாதிகளின் உடலரசியல்” – ச. சுபாஷிணி

      சாதிகளின் உடலரசியல் என்னும் இப்புத்தகம் அன்றாடம் நம் வீட்டில் காலை முதல் இரவு வரை கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களான வாசல் தெளிப்பது, கோலம் போடுவது, விளக்கேற்றுவது, நல்ல நாள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் பார்ப்பது…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  “ஆதனின் பொம்மை”[சிறுவர் நாவல்] – தே.ச. மங்கை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஆதனின் பொம்மை”[சிறுவர் நாவல்] – தே.ச. மங்கை

      2023ல் பால புரஸ்கார் விருது பெற்ற 'ஆதனின் பொம்மை' என்ற இளையோர் நாவலை இங்கு அறியத் தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதை ஆதாரமாக வைத்து புனையப்பட்ட நூல். இந்தத் 96 பக்க சிறிய…
அசைவற்று மிதக்கும் நிழல்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அசைவற்று மிதக்கும் நிழல் – அ. ஷம்ஷாத்

      புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது முதல் குறுங்கதை "அழைப்பு மணி" படிக்க ஏதோ மாயாஜால…
Children's Story: Sarrak....Sarrak Story By Udhaya Sankar. *சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை - உதயசங்கர். Book Day And Bharathi Puthakalayam

*சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை – உதயசங்கர்



மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கதை. மேப்புலியூர் ஒரு காட்டு ஸ்டேஷன். அத்துவானக்காட்டுக்குள் அந்த ஸ்டேஷன் இருந்தது. சுற்றிலும் ஆள் நடமாட்டமும் இருக்காது. எப்போதாவது ஆடு மேய்க்கும் பையன்கள் வந்து தண்ணீர் குடித்து விட்டுப் போவார்கள். அவ்வளவுதான். அப்புறம் எதுக்கு அந்த ஸ்டேஷன் இருக்கிறது என்ற சந்தேகம் வரும். ரயில்கள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்வதற்காக அந்த ஸ்டேஷனை வைத்திருந்தார்கள்.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அவருடைய உதவியாளரிடம் கேட்டார்.

“ நீ பார்த்தியா ராமு..

ஆமா சார்.. நான் சிக்னலுக்கு எண்ணெய் ஊத்த போனப்ப அதைப் பார்த்தேன்..

எப்படி இருந்துச்சி? “

“ கன்னங்கரேலென்று இருந்துச்சி.. கடவாய்ப்பல்லு வெளியே நீட்டிக்கிட்டிருந்திச்சி.. ஒரே ரத்தக்கவிச்சி வாடை…

யப்பா பயங்கரமா இருக்கே..

அது சர்ரக் சர்ர்ர்ர்க் என்ற சத்தத்துடன் நடந்து போனிச்சு சார்.. ரத்தக்காட்டேரி சார்.. மாட்டுனோம் அவ்வளவுதான் “

“ உன்னிய ஒண்ணும் பண்ணலையா..

சார்.. நான் அதைப் பார்த்ததுமே பக்கத்திலிருந்த வேப்பமரத்துக்குப் பின்னாலே போய் ஒளிஞ்சிகிட்டேன். வேப்பமரம்னா அது வராதுல்ல.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அன்று இரவுப்பணிக்கு வந்திருந்தார். ராமு சொன்னதைக் கேட்டபிறகு ஸ்டேஷனுக்கு வெளியில் பார்த்தாலே ஏதேதோ உருவங்கள் நடமாடுகிற மாதிரி தெரிந்தது. பகலிலேயே ஒரு சுடுகுஞ்சி கூட இருக்காது என்றால் ராத்திரி எப்படி இருக்கும்? இரவில் கேட்கவே வேண்டாம். அருகில் நின்றால் கூட ஆள் தெரியாதபடி இருட்டு கருங்கும்மென்று இருக்கும். ஸ்டேஷனில் எரியும் விளக்குகளைத் தவிர தூரத்தில் கூட ஒரு பொட்டு வெளிச்சம் தெரியாது. பூச்சிகளின் சத்தம் கொய்ங் கொய்ங் என்று காதைத்துளைக்கும். திடீர் திடீரென்று காட்டுப்பூனைகளின் சத்தம் குழந்தை அழுவதைப்போல ஞ்ஞ்யா ஞ்ஞ்ய்யா என்று இழுவையாகக் கேட்கும். குள்ளநரிகளின் ஊளைச்சத்தம் ஊஊஊஊஊஊ என்று தூரத்தில் கேட்ட மாதிரி இருக்கும். படாரென்று மிக அருகில் கேட்கும். ஸ்டேஷன் வெளிச்சத்திற்கு வந்து விழும் பூச்சிகளைத் தின்பதற்குப் பாம்புகள் அடிக்கடி வருகை தரும்.

அந்த ஸ்டேஷனுக்கு எதிரே ஒரு ஆலமரம் தலைமுடியை விரித்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணைப்போல நின்று கொண்டிருந்தது. காற்று வீசும்போது அந்த ஆலமரத்தின் கிளைகளும் விழுதுகளும் பேயாட்டம் போடும். இரவில் அந்த ஆலமரத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.

அந்த ஸ்டேஷனுக்கு யாரும் விரும்பி வந்து வேலை பார்க்க மாட்டார்கள். வேறு வழியில்லாமல் தான் வேலைக்கு வருவார்கள். அங்கே ஏராளமான பேய்க்கதைகள் உலவிக் கொண்டிருந்தன. எல்லா ஊழியர்களும் ஏதாவது ஒரு பேயைப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். ஆண் பேய், பெண் பேய், குழந்தைப்பேய், கிழவிப்பேய், கிழவன் பேய், என்று எல்லாவயதிலும் பேய்கள் அந்த ஸ்டேஷனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. அடிக்கடி பேய்க்கதைகளைப் பற்றித்தான் பேச்சு நடக்கும்.

ரயில்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். திடீரென்று அந்த சத்தம் கேட்டது.

சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ரக்

ஸ்டேஷன் மாஸ்டர் துரை, அரைத்தூக்கத்திலிருந்த உதவியாளர் ராமுவை எழுப்பினார். அவரும் அந்தச் சத்தத்தைக் கேட்டார்.

சர்ர்க் சர்ர்ர்ரக் சர்ர்க் சர்ரக்..

“ ஆமா சார்.. ஏதோ வாடை கூட வருது ..என்று ராமு சொன்னார். அப்போதுதான் ஸ்டேஷன் மாஸ்டர் துரையும் கவனித்தார். ஒரு நீர்க்கவிச்சை வாடை அதாவது பாசி வாடை அடித்தது.

“ ஆமா.. நீர்க்கவிச்சை வாடை அடிக்குது..

இல்ல சார் ரத்தக்கவிச்சை வாடை  அடிக்குது.. “ என்று ராமு சொன்னான். அவன் சொன்னபிறகு அது ரத்தக்கவிச்சை வாடை மாதிரியே தெரிந்தது.

உடனே ராமு ஒரு கையில் விளக்குமாற்றையும் ஒரு கையில் செருப்பையும் எடுத்துக் கொண்டான். செருப்பையும் விளக்குமாற்றையும் பார்த்தால் பேய் ஓடி விடும் என்று பொதுவான நம்பிக்கை. ஸ்டேஷன் மாஸ்டர் துரை அங்கிருந்த இரும்பு கடப்பாரையை எடுத்துக் கொண்டார். இரண்டுபேரும் தயாராக இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு எந்த சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. திடீரென ஸ்டேஷன் வாசலுக்கு முன்னால் அந்தச் சத்தம் சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ர்ரக் என்று கேட்டது. அப்புறம் எந்தச் சத்தமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் துரையின் இதயம் படபடவென அடித்தது. கைகளில் லேசான நடுக்கம் வந்தது. ராமுவின் முகம் வெளிறிப்போய் விட்டது.

இன்னும் சில நிமிடங்களில் அந்த ரத்தக்காட்டேரி வரப்போகிறது. இதோ. இதோ.

மறுபடியும் சத்தமில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாசலுக்கு இரண்டுபேரும் வந்து எட்டிப்பார்த்தார்கள். எங்கும் இருள். வேறு ஒன்றும் தெரியவில்லை. வீணாகப்பயந்துட்டோமோ என்ற சந்தேகத்துடன் மறுபடியும் மறுபடியும் இருட்டுக்குள் கூர்ந்து பார்த்தார்கள்.

இரண்டு பேரின் ஈரக்குலை பதறும்படி மறுபடியும் அந்தச் சத்தம் இன்னும் அருகில் கேட்டது. நாற்றமும் அடித்தது.

சர்ர்க் சர்ர்ரக்

சத்தம் வந்த இடத்தில் முதலில் எதுவும் தெரியவில்லை. சற்று கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார்கள். அங்கே சிமெண்ட் தரையில் மெல்ல சர்ரக் சர்ர்ர்க் என்று தன் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஒரு கிணற்று ஆமை நடந்து போய்க் கொண்டிருந்தது. அதனிடமிருந்து தான் அந்த நீர்க்கவிச்சி வாடையும் வந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டர் துரைக்கு வெட்கமாகி விட்டது. அவர் அதை மறைப்பதற்காக ராமுவிடம்,

“ ராமு.. உன்னோட ரத்தக்காட்டேரி.. போகுது பாரு.. “ என்று சொல்லிச் சிரித்தார். ராமுவும் அந்தச் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

நீ எப்போ வர்றே? குறுங்கதை Nee Eppo Varra Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayam.

*நீ எப்போ வர்றே?* குறுங்கதை – உதயசங்கர்



போன மாதம் இறந்து போன அவனுடைய நண்பன் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அலைபேசித்திரையில் தெரிந்த அவனுடைய படத்தைப் பார்த்ததும் முதலில் திடுக்கென்றிருந்தது. அப்புறம் அவனுடைய பிள்ளைகள் யாராவது தெரியாமல் அழைத்திருப்பார்கள் என்று நினைத்தான். கொஞ்சநேரம் கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது. இப்போது யோசிக்காமல் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான். மறுமுனையில் பதிலில்லை. திரும்பவும் ஹலோ என்றான். எந்த சத்தமுமில்லை. சரி. குழந்தைகள் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தான். அதன்பிறகு அன்று முழுவதும் தொந்திரவில்லை.

இரவில் மூன்று மணியிருக்கும். மறுபடியும் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இந்த முறை அவனுக்குக் கடுப்பாகி விட்டது. விளையாடுவதற்கும் அளவு வேண்டாமா? அலைபேசியை எடுத்து,

“விளையாடறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா.. ராத்திரியில என்ன வேடிக்கை?“ என்று கத்தினான். ஒருகணம் அமைதியாக இருந்த மறுமுனையில் லேசாக மூச்சு விடும் சத்தம் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “ என்ற வேலுவின் குரல் கேட்டது. அவனுக்கு அப்படியே விக்கித்துப்போய் வியர்த்து ஒழுகியது. அவனுக்குக் குரலே வெளியே வரவில்லை. குழற ஆரம்பித்தபோது,

“என்னடா பதிலேயில்ல.. நீ எப்ப வர்றே? “ என்ற சத்தம் மறுபடியும் கேட்டது. அது வேலுவின் குரலே தான். அதே பெண்மை கலந்த கீச்சுக்குரல். அவன் உடல் நடுங்க,

“யாரு? யாரு? “ என்றான். பதிலில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவன் உடனே வேலுவின் மகனை போனில் கூப்பிட்டான். வேலுவின் மகன் போனை எடுக்கவில்லை. காலையில் கூப்பிடலாமென்று நினைத்து படுக்கையில் புரண்டான். தூக்கம் வரவில்லை. யாராக இருக்கும்? அச்சுஅசல் வேலுவின் குரலைப் போலவே இருந்ததே. 

காலையிலே வேலுவின் மகனை அழைத்தான்.

“அப்பாவோட நம்பரிலிருந்து எனக்குப் போன் வந்ததுப்பா? யாராச்சும் போனை எடுத்து விளையாடுறாங்களா..

இல்லியே மாமா.. அப்பா இறந்த பிறகு அந்த சிம்மைக் கழட்டி ஒடிச்சுப் போட்டாச்சு.. அவரோட போனை எங்கேயோ பழைய எலக்டிரானிக் சாமான்கள் வைக்கிற பையில் போட்டாச்சே.. வேற யாராச்சும் இருக்கும் மாமா..

என்று தெளிவாகப் பதில் சொன்னான். ஒருவேளை நாம் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று மனம் ஆறுதலடைந்தது. ஆனால் அந்த ஆறுதல் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கவில்லை. மத்தியானம் போல திரும்பவும் அழைப்பு வந்தது. அவன் எடுக்காமல் அந்தத் திரையையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து வந்த அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்தான். ஒரு நேரத்தில் தாங்க முடியாமல் போனைச் சுவிட்ச் ஆப் செய்தான்.

கொஞ்சநேரம் எதுவுமில்லை. நிம்மதியாக இருந்தது. ஆனால் அவனே அதிர்ச்சியடையும் படி சுவிட்ச் ஆப் செய்த போனிலிருந்து அழைப்பு வந்தது. திரையில் தெரிந்த வேலுவின் உருவம் சற்று ஒளி மங்கியிருந்தது. அவ்வளவுதான். திகிலுடன் ஏதோ அமானுஷ்ய சக்தி அங்கே இருக்கிறதென்று அவன் பயந்து போனைத் தொடவில்லை. ஆனால் வேலுவின் குரல் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “

பயத்தில் அவன் ஊளையிட்டான். இதயம் வேகவேகமாகத் துடித்தது. ரத்தவோட்டம் வேகமாக ஓடியது. உடலெங்கும் வியர்த்து ஒழுகியது. அப்படியே கட்டிலில் உட்கார்ந்த அவன் கண்முன்னால் வேலு நின்று கொண்டிருந்தான்.

“வா.. போகலாம்..என்றான் வேலு. அந்த அறையெங்கும் சாராய வாடை வீசியது. அவன் எழுந்து பேசாமல் வேலுவின் பின்னால் போனான்.

Children Village Story: Coffee Thaniyum Kalani Thanniyum Story By Udhaya Sankar. சிறார் கிராமியக்கதை: காப்பித்தண்ணியும், கழனித்தண்ணியும் – உதயசங்கர்

சிறார் கிராமியக்கதை: காப்பித்தண்ணியும், கழனித்தண்ணியும் – உதயசங்கர்



அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக. அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக. வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது.

கடைசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப் போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… சும்மானாச்சுக்கும் அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.

அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க, தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான் தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும். அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.

அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப் போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும் இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.

நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும் மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.

மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு. அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை. இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும் பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த முடியல.

சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி.

அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.

டவுனில நல்லாச்சூடா கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா என்னசெய்ய?

தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?