சம கால சுற்றுச் சூழல் சவால்கள் தொடர் -12 – முனைவர். பா. ராம் மனோகர்.


               இயற்கை வாழிடத்தில் செய்யும் மாற்றம்!

             மனித குல  வாழ்வின் எதிர்கால  ஏமாற்றம்!

        

                  

நம் நவீன வாழ்க்கை முறை மாற்றம் காரணமாகவும், மக்கள் தொகை பெருக்கம், நகர மயமாதல், புதிய  தேவைகள், தொழிற்சாலை  பெருக்கம்,அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி போன்றவற்றால்   தானாகவே இயற்கை பல்வேறு மாற்றங்கள், அடைந்து வருகிறது. மேலும் பருவ கால மாற்றம், புயல், வெள்ளம், வறட்சி,வெப்பம் உயர்வு ஆகியவையும் இயற்கை பேரிடர்களுக்கு முக்கிய காரணிகளாகும். எனினும் குறிப்பிட்ட நல்ல வளம் பொருந்திய, பல்வேறு உயிரினங்கள் இயற்கையாக வசிக்கும் வாழிடங்கள், நவீன மனித வாழ்வின் வசதிகளின் உருவாக்கத்திற்காக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவற்றில் செயற்கை மாற்றங்கள் செய்யும் நிலை நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து இருந்து வருவது  மிகவும் வருத்தம் தரக்கூடியது.

இயற்கைப் பகுதிகளான வன சரணாலயங்கள், தேசிய பூங்கா, ஏரிகள், மலை, ஆகிய இடங்கள், பல்லாண்டுகளாக, அரசு பாதுகாத்து வந்துகொண்டுள்ளது. ஆனால், நவீன வசதி, மக்கள் ஆர்வம், விருப்பம், வளர்ச்சி, பொருளாதாரம், வருவாய் பெருக்கம் என்ற பெயரில், இந்த அரிய இயற்கை சூழல் மாற்றம் பெற திட்டங்கள் வருகின்றன. சுற்றுச் சூழல் அறிவியல் அறிஞர்கள்ஆகியோரின் ஆய்வு முடிவுகள்,ஆலோசனைகளும் , இயற்கை ஆர்வலர்கள்எழுப்பும் குரலும் கூட அப்போது, தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வழக்கம் ஆகிவிட்டது. எதிர் காலத்தில் வரப்போகும்  மனித தலைமுறை, அதிகம் பாதிக்கப்படும்  என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் அந்த வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலை உள்ளது.

இவ்வாறு பல்வேறு சூழல் அமைப்புகள் வெவ்வேறு பகுதிகளில், பாதிக்கப் பட்டாலும், நாம் இங்கு எடுத்து காட்டாக இரண்டு “இயற்கை சூழல்களில் சமீபத்தில் அடைந்து வரும், அல்லது அடைய உள்ள மாற்றம் “பற்றி பார்ப்போம்! ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள,பரத்பூர் பறவை சரணாலயம், உட்பகுதியில், செயற்கையான விலங்கு காட்சியகம் அமைத்தல் மற்றும் இமாலய  லடாக் பகுதியில் புகா பள்ளதாக்கு அருகில் புவி வெப்ப ஆற்றல் உற்பத்தி செய்ய ONGC எண்ணெய், இயற்கை எரிவாயு ஆணையம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலை ஆகியனவாகும். 

          

பரத்பூர்  பறவைகள்  சரணாலயம்  ராஜஸ்தான் மாநிலத்தில், உள்ளது. ஆக்ரா நகரிலிருந்து மேற்கு திசையில் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இயற்கையான ஏரிகள் நிறைந்த, வனப் பகுதி 1956 ஆம் ஆண்டு சரணாலயம் ஆக  அரசால் அறிவிக்கப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு தேசிய பூங்கா மற்றும் உலக பாரம்பரிய மையம்(WORLD HERITAGE SITE )ஆக ஐ நா சபையினாலும் மேம்படுத்தப்பட்டு அறிவிக்க பட்டது. ஏன்!? இந்த சரணாலயம் இவ்வாறு புகழ் பெற்றது!? உலகம் முழுவதிலிருந்தும்  350 சிற்றின வகை  நீர், நில பறவைகள், ஒவ்வொரு ஆண்டு குளிர் காலத்திலும் வருகை தருவது மிகுந்த வியப்பு ஆகும்.  இங்கு அரிய சைபீரியன் கொக்கு ரஷ்ய பகுதியில் ஆண்டுவருகை, ஒரு மகிழ்ச்சி கரமான திருவிழா போல், பறவை ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் எண்ணுகின்றனர். மும்பை இயற்கை வரலாற்று சங்கம் (BOMBAY NATURAL HISTORY SOCIETY ) இங்கு பறவை அறிஞர் டாக்டர். சலீம் அலி தலைமையில்  ஒரு குழு  1980 ஆம் ஆண்டு முதல் 1990 வரையில்  பல்வேறு, கொக்குகள், வாத்துக்கள், உள்ளான்கள், நாரைகள் போன்ற பறவைகள், சதுப்பு நில, மீன்கள், பாலூட்டி,  ஊர்வன் தாவர வகைகள்  ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இக்கட்டுரை ஆசிரியர் ஆகிய நானும் அதில் ஒருவராக பங்கு பெற்ற போது, ஈர நில பாதுகாப்பு  அவசியம் உணர, இந்தியா முழுவதும் இத்தகைய சதுப்பு நிலங்களை பாதுகாக்க, ஒரு எடுத்து காட்டு போல் விளங்கிய நிலை இருந்து  வந்தது. எனினும் இந்த இயற்கை பகுதியில், செயற்கை விலங்கு காட்சியகம் உருவாக்க மாநில  அரசு  வனத்துறை திட்டம் கொண்டு, பன்னாட்டு நிதி  ரூபாய் பதினைந்து கோடி செலவிடப்பட உள்ளது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.

உலகெங்கும்  வசிக்கும் பல்வேறு பறவைகள் ஈரக்கப்படும் பகுதியில், மாற்றம் செய்து வருமானம், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கட்டிடங்கள் உருவாக்க தீர்மானம் செய்யப்பட்டு வருவது கவலை அளிக்க கூடியது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இயற்கை மாற்றங்கள் வருவதால் பரத்பூர்  சரணாலயத்தில் பாதிப்புகள்,மாற்றங்கள் ஏற்படும் நிலையினை தவிர்க்க வேண்டும். மேலும் பறவை ஆர்வலர்கள் பலரும் இதனை எதிர்த்து குரல் எழுப்பியதால், இந்த திட்டம் அப்பகுதியிலிருந்து  2 கிலோமீட்டர், தொலைவில் உள்ள வன பகுதியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து இயற்கை பறவை சரணாலயம் அழிந்து விடக்கூடாது.

              மற்றொரு இயற்கை  வள மையம் , புகா பள்ளதாக்கு, இமாலய லடாக் பகுதியில்,  வலசை பறவைகள்  அதிகம் வரும்  இடம் ஆகும். மேலும் இங்கு சுடு கந்தக நீர் ஊற்றுகள் அமைந்திருக்கின்றன. இங்கு யாக் எருமைகள், மலை ஆடுகள், பனிசிறுத்தை போன்ற அரிய பாலூட்டி வன விலங்குகள் காணப்படுகின்றன. ஆனால் இந்திய எண்ணெய் இயற்கை எரி வாயு ஆணையம்,(ONGC) புவியியல் ரீதியாக  ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டு, புவி வெப்ப ஆற்றல் எடுத்து நம் நாட்டின் ஆற்றல் குறைபாடு நீக்க முயற்சி செய்கிறது. எனினும் அவற்றின் பக்க  விளைவுகளான  மாசு, கழிவு பொருட்கள் அங்குள்ள நீர் பகுதியில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி, அதிகம் வெளியேற்றப்படுவது இயற்கை ஆர்வலர்கள் பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது எனில் மிகையில்லை.

                

                   நாம் இங்கு அறிந்த இரண்டு பகுதிகளில் மட்டுமே அல்லாமல், நம் நாட்டின் பல்வேறு இயற்கை பகுதிகளில் வளர்ச்சி, வருவாய், சுற்றுலா என  காரணங்கள்  கூறப்பட்டு பல  பாதிப்புகள்  மனித  செயல்பாடுகள் ஏற்படுத்துகிறது. மனித குலம் வளர்ச்சி அறிவியல் தொழில் நுட்பம் பயன்பாட்டு முறையில் முன்னேற்றம் அடைவது தேவைதான். ஆனால் அவை  அடிப்படையான ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் அல்லவா!? அதற்கான ஆழ்ந்த ஆய்வுகள் மேற்கொண்டு இயற்கையாளர்கள், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் குழு இணைந்து தீர்வுகள், இயற்கை பாதிக்கச் செய்யாதநிலையில் ,காணப்படவேண்டும்.நீடித்த நிலையான  தொடர் வளர்ச்சி (SUSTAINABLE DEVELOPMENT )என்ற கோட்பாடு பின் பற்றினால் மட்டுமே எதிர் கால தலைமுறை ஓரளவிற்கு நலமுடன் இந்நாட்டில் வாழ இயலும்!இது பற்றிய சிந்தனை, அரசு, அலுவலர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், பொது மக்கள் அனைவரும் பெறவேண்டும். நம்பிக்கை கொள்வோம்!!!!!!