திரை விமர்சனம் : தலைக்கூத்தல் – ரமணன்
தலைக்கூத்தல்
ஃபிப்ரவரி 2023 வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம். இப்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ளது. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமுத்திரகனி, கதிர், கலைசெல்வன், வசுந்தரா கஷ்யப், கதா நான்டி, ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கட்டிட பணியாற்றும் முத்து விபத்து ஒன்றில் கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்று விடுகிறார். அவரது மகன் பழனியும் சிறந்த கட்டிட தொழிற்காரன். பகலில் அவனது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக கட்டிட வேலை செய்வதை விட்டுவிட்டு இரவு ஏடிஎம் காவலாளியாக பணி புரிகிறான். அவனது மனைவி தீக்குச்சி ஆலை பணிக்கு செல்ல வேண்டியதிருக்கிறது. முத்து கண்விழிப்பது கடினம் என்பதால் ‘தலைக்கூத்து’ (சாகாமல் நீண்ட நாள் இழுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை என்னெய் தேய்த்து நீராட்டி இளநீர் கொடுத்து இறக்க செய்யும் முறை) செய்து இறக்க வைத்துவிடலாம் என்கிறார் பழனியின் மாமனார். அவனுக்கு அதில் உடன்பாடில்லை. தந்தையிடம் அவன் வைத்திருக்கும் அளவில்லாத பாசம் ஒருபுறம்;எந்த உயிரையும் நாம் சாகடிக்கக்கூடாது என்று அவன் தந்தை கூறியிருந்தது அவன் மனதில் ஆழப் பதிந்திருந்தது இன்னொரு காரணம். அவன் தந்தை கண் விழிப்பாரா என்று சாமியாரிடம் ஜோசியம் கேட்கிறான், கண்விழிப்பார் என்றும் அப்போது சாமிக்கு ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும் என்கிறார் சாமியாரிணி. இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத அவனுடய நண்பன் அவனைக் கண்டிக்கிறான். பழனி தொடர்ந்து தந்தையிடம் அவர் விரைவில் குண்மாகி விடுவார் என்று பேசுகின்றான். ஒருநாள் அவனுடய தந்தை கண் விழித்துப் பார்க்கிறார். ஏற்கனவே கடன் வாங்கியிருக்கும் பழனி மேலும் கடன் வாங்கி ஊருக்கு கறி விருந்து அளிக்கிறான்.
பழனியின் மனைவி வேலை செய்யும் தீப்பெட்டி ஆலை கண்காணிப்பாளன் அவளை பாலியல் சீண்டல் செய்கிறான். மேலும் கணவன் தந்தையையே கவனித்துக் கொண்டிருப்பது, வீட்டை வைத்து கடன் வாங்குவது ஆகியவற்றால் அவளுக்கும் பழனிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அப்பாவா, மகளும் குடும்பமுமா என்று முடிவு செய்யுமாறு கேட்டுவிட்டு அவள் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுகிறாள். மகள்மீதும் அதிகப் பாசம் வைத்திருக்கும் பழனி வேறுவழியில்லாமல் தலைகூத்தலுக்கு ஒத்துக் கொள்கிறான். மச்சினனின் ஆலோசனையை எற்று நகரத்திற்கு செல்கிறான்.தந்தையின் நினைவாக ஒரு மரத்தை வளர்ப்பதுடன் கதை முடிகிறது.
பழனியின் தந்தை முத்துவின் முன்னாள் கதையும் இந்தக்கதையுடன் இணைத்து இணைத்து காட்டப்படுகிறது. அவர் ‘மேல்சாதியை’ சேர்ந்தவர்.அந்த ஊரின் துணி வெளுக்கும் வண்ணார் சாதியை சேர்ந்த பெண்ணை விரும்புகிறார். அவள் எவ்வளவோ மறுத்தும் உறுதியாக நின்று குடும்பத்தை எதிர்த்து அவளை ரகசியமாக திருமணம் செய்துகொள்கிறார். வழக்கப்படி அவருடய குடும்பத்தினர் அவளைக் காயப்படுத்தி துரத்திவிடுகின்றனர்.
பார்ப்பதற்கு வழக்கமான கதை போல் தோன்றினாலும் பல சிறப்புகளை இந்தப் படத்தில் காணலாம். முதலில் கதையின் கருவான கருணைக் கொலை புதியது. ‘கேடி என்கிற கருப்பு துரை’ இன்னும் ஓரிரு படங்கள் கருணைக் கொலை தொடர்பாக இருந்தாலும் இதைப் போல மய்யக் கருவாக வைத்து எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இரண்டாவது கருணைக் கொலை சரி என்றோ தவறு என்றோ சொல்வதில்லை. பழனி மீது வைக்கப்படும் அழுத்தம், அவனது தவிப்பு, அவன் மனைவி,மாமனார், மைத்துனனன் ஆகியோரது நியாயங்கள் எல்லாம் முன் வைக்கப்படுகின்றன. பார்வையாளனும் அதே தவிப்புக்கு உள்ளாகிறான். மூன்றாவது முத்துவின் முன்னாள் வாழ்க்கை இடையிடையே காட்டப்படுவது அவர் மனம் மட்டும் விழிப்பாக உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஒரு விமர்சகர். இது போல் பல விசயங்கள் பார்வையாளனின் சிந்தனைக்கு விடப்படுகின்றன.
ஜோசியத்தை மட்டும் நம்பாமல் பழனி தந்தையிடம் அவர் விரைவில் குண்மாகி விடுவார் என்று தொடர்ந்து பேசும் மனோ தத்துவமும் கண் இமை அசைத்தல் மூலம் அவரது கருத்தை வெளிப்படுத்தும் மருத்துவரின் ஆலோசனையும் பாராட்ட வேண்டும்.
சில நெருடல்களும் ஏற்படுகின்றன. முத்துவின் பழைய வாழ்க்கையை காட்டும்போது பல காட்சிகளில் அவரும் அந்தப் பெண்ணும் சந்திப்பதையையே மீண்டும் மீண்டும் காட்டுவது, அவள் கடித்துப் போட்ட இலந்தப் பழத்தை அவன் ருசிப்பது பொன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பாரதிராஜாவின் பழய படங்கலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. மருமகளுக்கு என்று வைத்திருக்கும் குடும்ப சேலையை அவளுக்கு கொடுக்கும் அவன், அவளை ரவிக்கை அணியவும் சொல்லியிருக்கலாம். கணவனுடன் சண்டையிடும் பழனியின் மனைவி திடீரென்று சுமுகமாக போய் கறி விருந்தை மகிழ்ச்சியாக நடத்துவதாக காட்டுகிறார்கள். ஒரு வேளை தீப்பெட்டி ஆபீசில் நடந்த விசயங்கள் காரணமாக இருக்கலாம். பழனியின் நண்பனின் கிளைக் கதை தவிர்த்திருக்கலாம்.
கதிரின் ஒப்பனை,அவரது கம்பீரமான நடிப்பு, அதேபோல் திருமணத்திற்குப் பிறகே பேச்சியை முத்தமிடுவேன் என்று சொல்வதுடன் ஊரை எதிர்த்து உறுதியாக நிற்பது போன்ற விசயங்கள் அந்தப் பாத்திரத்திற்கு நல்ல காத்திரத்தைக் கொடுக்கிறது. பல இடங்களில் காட்சி மூலமும் மேலும் சில இடங்களில் நமது ஊகத்திற்கு விடுவது போன்ற உத்திகள் பாரட்டப்பட வேண்டும். இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் பாராட்டி எழுதியுள்ளன.