தேசாபிமானி – சி.பேரின்பராஜன்
தேசாபிமானி…
“மந்திரி.. முரசம் எங்கே…”
கிழிந்து விட்டது மன்னா…
“தீவிரவாத சதி”.. செய்திபரப்பு..
“கவசம் எங்கே…”
“காணாமல்” போக்கி விட்டோம் மன்னா..
“அமைதிக்கான முன்னெடுப்பு”
தலைப்புச் செய்தி கொடு
*பட்டத்து யானை எங்கே…*
பசியில் தானாக போய்விட்டது மன்னா…
“சிக்கன நடவடிக்கை” .. பேட்டி கொடு.
“நம்மைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்… ”
பலர் குழப்பத்திலும் விரக்தியிலும் இருக்க..
சிலர் மட்டும்
கூவுகிறார்கள் மன்னா..
கூவுபவனை தேசவிரோதி என அறிவி…
“ஊர்தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்…”
சிலர் பெருமை பேச..சிலர் உரிமை கேட்கிறார்கள் மன்னா..
பெருமை முகத்தில் சேறு பூசு..
உரிமை கேட்டவன் ஊர்சபையை விலை பேசு..
மன்னா… புல்லரிக்கிறதே…
தங்கள் குறுமதி கூர்மதியானதன் ரகசியம் என்ன…
சிறுமதிக் காரனே
செய்ததைக் கேளடா….
சாணக்யணிடம் சாணை பிடித்தேன்-
குறுமீசைகாரனின்
குற்றங்கள் பயின்றேன்..
கோயபல்ஸை சிந்தையில் நிறுத்தி..
பாஸிஸத்தில் விந்தை கற்றேன்..
மந்திரி…
அழுத்தப்பட்ட பந்துதான் மேலெழும்பும்..
இழுக்கப்பட்ட அம்புதான் விசையெடுக்கும்..
என் தேசமுன்னேற்றத்தை
விரைவுபடுத்தவே இத்தனையும் செய்கிறேன்…
நம்பு… நான் ஒரு
“தேசாபிமானி…”
– சி.பேரின்பராஜன், கரூர்.