நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -ராஜேஷ் நெ பி

நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -ராஜேஷ் நெ பி


புத்தகம்: ஓங்கூட்டு டூணா.! ஆசிரியர்:தேனி சுந்தர் பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:88 விலை:90

 

 

அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களின் வகுப்பறையில் குழந்தைகளுடனான உரையாடல்களில் இருந்து பலவற்றை தொகுத்து புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம். அவருடைய முந்தைய புத்தகங்களான “டுஜக் டுஜக்-ஒரு அப்பாவின் டைரி” மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” ஆசிரிய பெருமக்களையும்,மாணவர்களையும் மற்றும் பல்வேறு விதமான வாசகர்களின் கவனத்தை பெற்றவர். இந்த முறை அதைவிட அதிகமான கவனத்தை இதன் மூலம் பெறுவார் என்பது உறுதி. ஒவ்வொரு குறிப்புகளும் நம்மை மாணவப் பருவத்திற்கு இட்டுச் செல்வதோடு பல்வேறு நினைவுகளையும், நிகழ்வுகளையும் மலரவிடும் என்று கூறினால் அது மிகையில்லை.

குழந்தைகளை உரையாட விட்டு அவர்களைக் கேள்வி கேட்கச் செய்து அதற்கு உண்டான சரியான பதிலை நாம் தேட ஆரம்பித்தாலே பல்வேறு விதமான அடிப்படைகளை சரியாக எவராலும் புரிந்து கொள்ள முடியும் என்பதை மீண்டும் புத்தகம் வழியாக பெரும்பாலும் நாம் உணரலாம்.
பள்ளிகளில் குழந்தைகளின் மூலமாக நடைபெறும் உரையாடல்களை குறிப்பெடுத்து வைத்தால் நல்லது என்ற சிறப்பானதொரு அறிவுரையை வழங்கிய எழுத்தாளர் மாடசாமி அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார். அதை சரியாக உள்வாங்கி முக்கிய குறிப்புகளை எடுத்து வைத்து தொகுத்து புத்தக வடிவில் செயல்படுத்திய எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களும், புத்தகமாக வெளியிட்ட பாரதி புத்தகாலயமும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
இது போன்ற குழந்தைகளுடனான உரையாடல்களை மற்றும் குறிப்புகளை வாசிக்கும் போதே அந்த தருணம் நாமும் குழந்தைகளாக மாறுகிறோம் என்பதை உணர முடிகிறது. அல்லது குழந்தை பருவத்திற்கு நம்மை இட்டுச் செல்வதை உணர முடிவது இதன் சிறப்பம்சமாகும்.
ஆசிரியர்கள் மாணவர்கள் அல்லாமல் அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்னால் நிச்சயமாக கூற முடியும்.புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தும் கவிதைகள்போல் அல்லது ஹைக்கூ கவிதைகள் போல் உணர்கிறேன்.
ராஜேஷ் நெ பி

சித்தாலப்பாக்கம், சென்னை