நூல் அறிமுகம்: ஆழ்கடல் -முனைவர் சு.பலராமன்
ஆழ்கடலுக்குள் பயணம் : நாராயணி சுப்ரமணியன் எழுதிய ’ஆழ்கடல்’ சூழலும் வாழிடங்களும் – நூல் அறிமுகம்
கடல்சார் உயிரின ஆராய்ச்சியாளராக உள்ள முனைவர் நாராயணி சுப்ரமணியன் ஆழ்கடல் குறித்த அறிவியல் சார்ந்த செய்திகள் மற்றும் ஆராய்ச்சிகளில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். சமவெளிப் பரப்பில் கடல் குறித்த உரையாடலே அண்மையக் காலமாகப் பரவலான சூழலில் ஆழ்கடல் உரையாடலுக்கான அவசியம் குறித்த உரையாடலை தீவிரமாக முன்னெடுத்துள்ளார் முனைவர் நாராயணி. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, கடலும் மனிதரும். விலங்குகளும் பாலினம் இவரது படைப்புகளாகும். இப்படைப்புகளின் வரிசையில் 2022இல் ஓங்கில் கூட்டம் மற்றும் புக் ஃபார் சில்ரன் இணைந்து நாற்பது பக்கங்களில் பதிப்பித்த ’ஆழ்கடல்’ சூழலும் வாழிடங்களும் என்னும் படைப்பை வெளியிட்டுள்ளார். இப்படைப்பானது பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டோர் வாசிப்பதற்காகவே ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், இந்நூல் வெளியாகி ஆறு மாதங்களே ஆகின்ற சூழலில் இளையோர் மற்றும் சிறார்களிடம் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்நூலானது பல்வேறு எளிய அடிப்படை வினாக்கள் மூலம் ஆழ்கடல் குறித்த அறிமுகத்தை இளையோர் மற்றும் சிறார் வாசகர்களிடம் அளிக்க முனைந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையை இந்நூல் தாங்கியுள்ளது.
ஆழ்கடல் படைப்பு ஆழ்கடலுக்குள் பயணிக்கப்போகிறோம், கடலுக்கடியில் வெந்நீர் ஊற்றுகள், குளிர்க் கசிவுகள், பவள வாழிடங்கள், உப்புநீர்க் குளங்கள், மலைகளும் பள்ளத்தாக்குகளும், ஒரு திமிங்கலத்தின் வீழ்ச்சி, ஆழ்கடல் வாழிடங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் என எட்டு உட்தலைப்புகளில் பேசுகிறது. மேலும், இத்தலைப்புகள் பக்க எண்களுடன் பட்டியலாகத் தொகுத்து அளித்திருந்தால், வாசகர்கள் எளிதாகச் சம்பந்தப்பட்ட உட்தலைப்பின் பக்கத்தை அடைய உதவியாக இருந்திருக்கும். நேர்காணல் நிகழ்ச்சியில் வினாக்கள் கேட்டு விடையளிப்பதைப்போல ஆழ்கடல் என்னும் இந்நூலிலும் இந்த உத்திமுறையைத் தேர்ந்தெடுத்து நூலாக அமைத்திருக்கிறார் நாராயணி. நீர்முழ்கிக் கப்பலில் பயணம் செய்து கொண்டு ஆழ்கடலைப் பற்றி அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொண்டு பல்வேறு தரவுகளுடன் செய்திகளைப் பகிர்ந்துள்ளது ஆழ்கடல்.
ஆழ்கடல் தொடர்பான செய்திகளில் ஓவியங்கள் மற்றும் இரண்டு முதல் ஏழு வரையிலான உட்தலைப்புகளில் இறுதியில் விரைவுக் குறியீடு மூலம் காணொலிகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறார்களுக்கான அறிவியல்சார் புத்தகங்களில் ஓவியங்கள் இடம்பெறும் போக்குள்ளது. ஆனால் விரைவுக் குறியீடுகளைப் பயன்பாடு புதிய போக்கிற்கான தடமாக உள்ளது. அதேபோல் அறிவியல்சார் நூல்களில் பின்னிணைப்பாகக் கடல்சார் சொல்லாடல் குறித்த கலைச்சொற்கள் பட்டியல் இடம்பெறும் போக்கும் இயல்பாக வேண்டும். அந்தவகையில் ஆழ்கடல் படைப்பில் உள்ள கலைச்சொற்கள் (Seamount – கடல் மலைகள், Submarine Canyon – பள்ளத்தாக்குகள், Hydrotherma Vent – வெந்நீர் ஊற்றுகள், Cold seep – குளிர்க் கசிவுகள், Coral Reef – பவள வாழிடங்கள், Brine Poll – உப்புநீர்க் குளங்கள்) பின்னிணைப்பாக்க வேண்டும் என்பது வாசகர்களின் எண்ணமாக உள்ளது.
பவளப்பாறைகள், எரிமலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், உப்புநீர்க் குளங்கள், குளிர்க் கசிவுகள், வெந்நீர் ஊற்றுகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் செயல்பாடுகளையும் பதிவாக்கியுள்ளது ஆழ்கடல். இவற்றில், வெந்நீர் ஊற்றில் நீர் ஆவியாகாமல் இருப்பதற்கு அதீத அழுத்தம் காரணமாக உள்ளது.
உணவு உற்பத்திற்குச் சூரியஒளி அவசியம் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் சூரியஒளி கிட்டாத ஆழ்கடலுக்குள் வாழும் உயிரிகளுக்குத் தேவையான உணவு பாக்டீரியா மற்றும் உயிரிகளின் தொடர் செயல்பாடுகளால் கிடைக்கின்றன. இதில், குளிர்க் கசிவுப் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் சல்பேட்டை ஹைட்ரஜன் சல்ஃபைட்டாகவும், மற்றொரு வகை பாக்டீரியாக்கள் சல்ஃபைட்டை உணவாகவும் மாற்றுகின்றன.
கடலோரப் பவளங்கள் ’கடலின் மலைக் காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உப்பு நீர் குளங்களில் உள்ள நீர் கடல் நீரில் சேராமல் தனித்து உள்ளன. அக்குளத்தில் கரை ஏற்படுத்தி இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், கடல்நீரோடு ஒப்பிடுகையில் 3 முதல் 8 மடங்கு வரையிலான உப்புத் தன்மையை உப்புநீர்க் குளங்கள் பெற்றுள்ளன. இதன் அடர்த்தி அதிகம் என்பதால் உப்புநீர் கீழே தங்கி விடுகிறது என்கிறது ஆழ்கடலாய்வு.
கடலில் உயிரிழக்கும் ஒரு திமிங்கிலமானது 400 வகை உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. மேலும், இது நான்கு கட்டங்களாகப் பகுக்கப்பட்டு நூற்றாண்டு வரைக்கும் உணவாகும் பதிவும் அதுசார் ஓவியக் காட்சியும் வாசகர்களுக்குப் பெருவியப்பை அளிக்கக்கூடும். ஆழ்கடல் ஆய்வில் எந்திர தானியங்கிகளை (Robo) ஈடுபடுத்தல் என்பது ஆழ்கடல் ஆய்விற்கு உகந்த ஒன்றாக உள்ளது. ஆழ்கடல் உயிரிகளைப் பாதுகாக்க அவசியமான முன்னெடுப்புகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
செறிவும் செழுமையும் கொண்ட ஆழ்கடல் குறித்த ஆய்வை இளையோர் மற்றும் சிறார்களுக்கு ஏற்ற மொழிநடையில் சுருக்கி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்மொழியில் இது போன்ற அறிவியல் நூல்கள் மிகுதியாகி வருவது ஆரோக்கியமானதாகும். இளையோர் மற்றும் சிறார்களிடம் அறிவியல் மனப்பான்மை, அறிவியல்சார் பார்வையை எளிமையாகக் கடத்த இது போன்ற அறிவியல் தரவுகளுடன் கொண்ட படைப்புகள் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.