ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஆக்காண்டி” – கு.ஹேமலதா
நூல் அறிமுகம்: அறவி {நாவல் } – மஞ்சுளா
நூல் அறிமுகம்: “மீட்சி” நாவல் – கு. ஹேமலதா
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்
நூல் அறிமுகம்: சைக்கிள் நாவல் -செ. தமிழ்ராஜ்
காலச்சக்கரத்தை பின்னிருந்து சுழற்றி அதன் வழியாக தான் வாழ்ந்த கிராமத்தின் வெள்ளந்தி மனிதர்களை கதாபாத்திரங்களாக புழுதி படர்ந்த செங்காவி மண்ணில் உலவவிட்டு நவீன மனிதர்களுக்கு காட்சிபடுத்தியுள்ளார் நாவலின் வழியே கவிஞரும் இயக்குநருமான தோழர் ஏகாதசி. நாவலின் தலைப்பையே சைக்கிள் என்று வைத்துள்ளார். அது கதையின் கடைசிவரை ஒரு உயிருள்ள கதாபாத்திரமாய் நம்மோடு உருண்டு வருகின்றது. காலத்தையும் கண்ணீரையும் இழுத்துக்கொண்டு எளிய மனிதர்களுக்கான காவியத்தை சுமந்து வந்திருக்கின்றது.
ஒரு காலத்தில் சைக்கிள் என்பதுதான் ஒரு மனிதனின் அதிகபட்ச ஆடம்பரம். சைக்கிளை புதுமனைவியோடு ஒப்பிடலாம் அவ்வளவு அழகுபடுத்துவார்கள். டைனமோவிற்கு கூட மஞ்சள் வெல்வெட் துணி கட்டுவார்கள். ரிம் கம்பிகளில் பிளாஸ்டிக் முத்துக்களை கோர்ப்பார்கள். இரண்டு ஹேன்ட் பார்களிலும் பெண்கள் தலைக்கு மாட்டும் குஞ்சம் போல் கட்டி தொங்கவிடுவார்கள். குஷன் வைத்த சைக்கிள் சீட்டும் சின்ன சின்ன பாகங்களுக்கு கூட பிளாஸ்டிக்கால் மூடி வைப்பார்கள். ஊருக்குள் இரண்டு சக்கர தேரொன்று உருண்டு ஓடுவது போலிருக்கும். அதெல்லாம் ஒரு கனாக்காலமாகிவிட்டது.
இன்று வீட்டில் இருக்கும் நண்டு சிண்டுகள் கூட பைக் எடுத்துக்கொண்டு பறக்கின்றார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் போல் சைக்கிளையும் மதிப்பற்ற பொருளாய் காலம் உருமாற்றி வைத்திருக்கின்றது. நவீனம் நமது வாழ்வில் மனிதர்களையே உதிர்த்துவிட்டு போய்க்கொண்டிருக்கையில் பாவம் பழஞ்சைக்கிள்கள் என்ன செய்யும். அந்த சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு ஒரு காதலையும் அதன் பின் ஒரு விபரீத முடிவையும் அழகாக பின்னியுள்ளார். ஊர்த்திருவிழா, வள்ளி திருமண நாடகம், இளசுகளும் பெருசுகளும் பண்ணும் களேபரங்கள், வீடுதோறும் ஆடுரித்து விருந்துண்ணும் காட்சிகள், எல்லா ஊரிலும் இருக்கும் கேலியும் கிண்டலுமான ராமாயி கிழவிகள், நாட்டாமைகள், ஊர்ப்பெரிசுகள், மண்ணின் கலாச்சாரங்கள், சடங்கு சாத்திரங்கள் என அத்தனையும் வஞ்சனையில்லாமல் காட்சிபடுத்தியிருக்கின்றார்.
நாவலாசிரியர் கிராமத்து சொற்களையும் சொலவடைகளையும் செயற்கையற்று இயற்கையாகவே தூவி உள்ளார் பணியானை முன்வைத்து கருமாத்தூர், செக்காணுரணி, உசிலம்பட்டி, நாகமலை, சோழவந்தான், மேலக்கால் என சுற்றி உள்ள அத்தனை கிராமங்களின் புவியியல் வரைபடத்தை கதாபாத்திரங்கள் வழியாகவே காட்சிபடுத்தியுள்ளார். ஆசிரியர், கணேசன், பூமயில், பிச்சை, அனிதா, சீனி, பவுன்ராசு, அய்யாவு, தங்கையா, வெள்ளத்துரை, சமுத்திரம் என அத்தனை கதைமாந்தர்களும் சைக்கிளின் வீல் போல் சுற்றிவருகின்றனர். சின்ன சின்ன கிளைக்கதைகளும் சுவாரசியத்தோடு மணியடித்துக்கொண்டே ஒட்டி வருகிறார். நல்லதொரு கவிஞராகவும் இருப்பதால் ஆங்காங்கே கவித்துவ மொழியையும் தூவி நூலை அர்த்தப்பூர்வமாக்குகிறார்.
நான்கு கொலைகளை செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு ஊருக்கு வரும் கணேசனின் பார்வையிலிருந்து கதை விரிகிறது.துவக்கத்தில் காற்று போன சைக்கிளை எதிர்காற்றில் அழுத்தி செல்வதுபோல் நாவலுக்குள் பொருத்திக்கொள்ள சற்று கடினமாக இருந்தாலும் 10 அத்தியாயத்திற்கு பின் கதையும் அதன் வட்டாரவழக்கு சொற்களும் எளிதில் பிடிபட்டுவிடுகின்றன.இறுதி 10 அத்தியாயங்கள் விறுவிறுப்பு ரகம் சினிமா கிளைமாக்ஸ் போல் அத்தனை பரபரப்பு நாவலிற்கான வாசிப்புச் சுகம்தான் சற்று குறைவாக உள்ளது. கணேசனின் கதாபாத்திரம் சற்று குழப்பமாக வார்க்கப்பட்டுள்ளது நல்லவனென்று நாவல் முழுக்க சொல்லிவிட்டு கடைசியில் கோப வெறியேறி சக வியாபார நண்பர்களை விசாரிக்காமல் கொலை செய்வதென்பது ஏற்க இயலாதது முன்கோபியென்று எந்த இடத்திலும் காட்சிப்படுத்தாமல் திடீரென கதையை செயற்கையாக முடிப்பதென்பது நம்பும்படியாக இல்லை. உயிருக்கு உயிரான நண்பர்களை கொன்றுவிட்டு பாவமன்னிப்பு பரிகாரம் தேடுவதும் ஏற்புடையதாக இல்லை. நாவலாசிரியர் வேறு முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏனெனில் வியாபாரிகள் நால்வரும் சாகும்வரை நல்லவர்களாகவே பயணித்து வந்திருக்கின்றார்கள். கணேசனின் உண்மையான எதிரிகள் எவரும் தண்டிக்கப்படாமல் அப்பாவிகள் பலியானது முரணாக உள்ளது. எது எப்படியோ முதல் நாவல் என்று சொல்லமுடியாத வகையில் அவரது கவிதை மொழி அவருக்கு கைகொடுத்திருக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான கதைகளை படைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089