noolvimarsanam : romila thaappar oru eliya arimugam - se.thamizhraj நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

காலத்தை புலனாய்வு செய்வதென்பது மிக கடினமானது. புனைவுகளாலானது உலகம் என்பதை வரலாற்றின் நெடுங்கதைகளில் இருந்து கற்க முடியும். சரித்திரத்தின் மீது படிந்து கிடக்கும் காலக் குப்பைகளை ஊதித்தள்ளியபடி அதிகபட்ச உண்மைகளைத் தேடி வரலாற்றின் இருள் நிறைந்த நெடும்பக்கங்களில் கைவிளக்கேந்திய அறிஞராய் தடம்பதித்துள்ளார்…
நூல் விமர்சனம்: நெருப்புச் சொற்கள் -செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம்: நெருப்புச் சொற்கள் -செ. தமிழ்ராஜ்



நெருப்புச் சொற்கள்

தோழர் பாண்டிச்செல்வி அவர்கள் காட்டுச்செடி போன்றவர். தன்னியல்பான தனது
படைப்பாற்றல் மூலமாக செயற்கை பூச்சுகளற்று, போராட்ட களமான வாழ்வியலிலிருந்து, தவிப்பும் தகிப்புமாய் சொற்களை தேடியதில் அவரது காடெங்கும் நெருப்பு சொற்களாய் விளைந்துள்ளது. கோபக்கார கவிதாயினிடம் இருந்து பூத்த கவிதைகள் யாவும் சமூகத்தின் புன்னகையேந்தி இருக்கின்றன. நூல் வெளியீட்டு விழாவில் திரண்ட கூட்டமென்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடியது. தமுஎகசவின் நகர் புறநகர் தோழர்களோடு இலக்கிய அமைப்புகளின் நண்பர்களும் பெருமளவு திரண்டிருந்தனர். அன்பு சூழ் உலகில் யாவரும் அணிதிரள்வது இயற்கைதானே. தொலைதூர பேருந்து பயணங்களில் சிறுநீர் உபாதையென்பது ஆண்களுக்கே மிகவும் அவஸ்தையானது. இதில் பெண்களின் நிலை பெரும்பாடானது. மூத்திரம் வழியும் நிலையில் கூட வக்கிர ஆண்களின்  பார்வையை தோலுரித்து காட்டுகிறது இக்கவிதை.

அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையைவிட
மூத்திர வாடையே மேலானது

இளம் விதவைகளின் வாழ்வியல் துன்பம் சகிக்கமுடியாதது. எந்நேரமும் கண்கொத்தி
பாம்பாய் காமுகர்களின் பார்வையிலிருந்து பெண்மையை பாதுகாக்க
வேண்டியிருக்கின்றது. உளப்பூர்வமாக பதிவு செய்திருக்கின்றார் தோழர்.

வம்பாக படர்கிறார்கள்
காலணா தராதவர்கள்
தெருவில விழுந்து கிடந்த
கணவனெனும் தறுதலப்பயலே
தேவலமாய் இருக்கின்றது"
அருவெறுப்பூட்டும் ஆடவர் செயல் பதிவாகிறது.
தரித்திரம் மண்டிக்கிடக்கும் வீடுகளில் கூட ஆண்கள் அடுத்த வீடுகளில்
கையேந்துவதில்லை. பெண்களே பிச்சை பாத்திரம் தூக்குகிறார்கள். அந்த யதார்த்தமும் கவிதையாகிறது…

கவி பாரதி
அண்டைவீட்டில் அரிசிக்கு நின்றதில்லை.
செல்லம்மாக்களே குருவிக்கு சோறிடக்கூட
பக்கத்துவீட்டுகதவை தட்டுகிறார்கள்

என மிக அருமையாய் பாரதியை கூட குற்றவாளி கூண்டிலேற்றுகிறார் புதுமை கவிஞர் பாண்டிச்செல்வி.
கோபக்காரியென்றதொரு கவிதையில் தன்னிலை விளக்கமொன்றை தந்திருக்கின்றார்.

கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. துணிச்சலுள்ளோர் வாசித்து கடப்பர்.
ஆண்களின் பார்வை எங்கெல்லாம் பெண்களின் மீது தவறாக படிகின்றது என்பதை
அவதானித்து ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். காமுக ஆணினம் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்ள வேண்டிய தருணமிது.
பெண்களின் மனக்குமுறலை இந்த மூன்று வரிகளே உணர்த்திவிடுகிறது. காலந்தோறும் குடும்பத்திற்காக வடித்து கொட்டி வாடிப்போய் நிற்கும் ஒட்டுமொத்த பெண்களின் மனசாட்சியாய் குரல் எழுப்பி நிற்கிறார்.

ஆக்கி பொங்கி போட்டே
காச்சுப்போயின கைகள்
மரத்துப்போயின நாக்கு
நன்றியற்ற உலகு
காசற்ற சிறுமியாய் வாயில் எச்சிலூற ஜவ்வு மிட்டாய் காரனின் கூட்டத்தில் ஏங்கிப் போய் நிற்கும் அனுபவத்தை காட்சிப்படுத்தியிருக்கின்றார். ஏழைகளின் நிலையென்பது ஏக்கமொன்றுதானே.

ஐந்துக்கும் பத்துக்கும் வீதிதோறும் குறி சொல்லி பிழைக்கின்ற ஜக்கம்மாக்களைப்
பற்றியும் கவலைப்படுகிறார். எதிர்காலத்தை சொல்கிறவர்களின் நிகழ்காலப்பாடுகள் எவ்வளவு பரிதாபகரமாய் இருக்கின்றன எனும் கவலையில் ஆழ்ந்து போகிறார் கவிஞர்.

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குதென
குறிசொல்லும் ஜக்கமாக்களுக்கு
எப்ப பிறக்கும் நல்லகாலம்

இப்படி தொகுப்பு முழுவதும் வாசித்து மகிழ சமூக, யதார்த்த, அரசியல், அழகியல்
கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரு சில கவிதைகள் முடிவுறாமலும் வெற்று
வார்த்தைகளாகவும் தொக்கிநிற்கின்றன. ஜென் கதைகளைப் போல வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும் என விட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. நூல் வடிவமைப்பில் அழகியல் பார்வை குறைவாக இருக்கின்றது. மூன்று வரிக்கவிதைகளை பொருத்தமில்லாமல் ஆங்காங்கே தூவியிருக்கின்றனர். தலைப்பை கூட கவித்துவமாய் யோசித்திருக்கலாம். 80களில் வந்த திரைப்பட தலைப்பு போல் செயற்கையாக இருக்கின்றது. அவிழ்க்கப்படாத முடிச்சு கவிதை நூலை தொடர்ந்து நெருப்புச் சொற்கள்  இரண்டாவது தொகுப்பாய் மலர்ந்திருக்கிறது தொடரட்டும் இன்னும் காத்திரமாக தோழர் க.பாண்டிச்செல்வியின் கவிதைப்பயணம் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089.

 

நூல் விமர்சனம்: கேள்வி கேட்டுப் பழகு -து.பா.பரமேஸ்வரி

நூல் விமர்சனம்: கேள்வி கேட்டுப் பழகு -து.பா.பரமேஸ்வரி



மனித வாழ்வில் மூடநம்பிக்கைகள் அடர்த்தியான நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
நம்பிக்கை என்பதைத் தாண்டி மனித அறிவின் சிந்தனை ஆற்றலை சிதைக்கக்கூடிய
அமிலமாக பாகுபடுகளை ஊக்குவிக்கும் சிடுக்குகளாக காலங்களாக மனிதகுலத்தில்
புரையோடிக் கிடக்கும் கருவேலமே மதமூடநம்பிக்கை. யாரோ ஒருவர்
ஏதோவொன்றைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்ற ஒன்றை எந்தவித
கேள்விமுறையின்றி அப்படியே பொத்தாம் பொசிலித்தனமாக நம்பிய
தலைமுறைகளைக் கடந்து தான் வருகிறோம். இதுவரை மனித மொழியில் புழங்கிய
பல அர்த்தமற்ற வழக்கங்களுக்கும் அனாவசிய சம்பிரதாயங்களுக்கும் அறிவியலற்ற
மூட நம்பிக்கை செயல்களுக்கும் ஒருபோதும் விளக்கம் கேட்டதுமில்லை கேட்க
முனைந்ததுமில்லை. குருட்டுத்தனமாக ஆட்டுமந்தைகளைப்போல பிறர் தள்ளிவிட்டு
நகரும் ஒருவித கடிவாளக்குதிரையாய் நம்மை வளர்த்தெடுத்துள்ளது நமது சமூகம்.
அதன் பொருட்டே இன்றும் அறிவியலற்ற அறிவேயற்ற உடலியக்கத்திற்கு முற்றிலும்
புறம்பான கூற்றுகளை தத்துவங்களை விஞ்ஞானம் என்று அறியாமையில்
அடையாளப்படுத்தும் மருத்துவங்களை சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டு  இன்று கண்மூடித்தனமாக நம்பி உடல் ஆரோக்கியத்தைத் தொலைத்தும் மனித உயிர்களை இழந்தும் வருகிறோம்.அடிப்படை இப்படியான மூடநம்பிக்கைகளில் பிராய முதலே கேள்வி கேட்காமல் அப்படியே நடைமுறைப்படுத்த போதிக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

புழங்கி விட்டோம் என்பதை விட பழகி விட்டோம் என்பது அதிபொருத்தும். வீட்டில்
பெரியவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது.. பள்ளியில் ஆசிரியர் சொல்வதே மந்திரம்.
கேள்வி கேட்கக் கூடாது. சமுதாயத்தில் கண்முன் நிகழும் அநீதிகளை கண்டும்
காணாமல் கடந்து விட வேண்டும். தட்டிக்கேட்கவோ எதிர்த்துப் பேசவோ
பயிற்றுவிக்கவில்லை. மீறி கேட்டால் அது நமக்கே விளைவாகி விடும். நமக்கென
வந்தது நாம் சுகமாய் இருக்கிறோமா. யார் எப்படி போனால் எவன் செத்துக்கிடந்தால்
நமக்கென்ன.. வீண் வம்புக்குள் சிக்கி தேவையற்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்
கொள்ளக்கூடாது என்கிற சுயத்தைத் தற்காத்துக் கொள்ளும் சுயவிரும்பிகளாகவே
இருந்து பழகிவிட்டோம்.

சுயநலம் என்பதில் தவறொன்றுமில்லை. மனிதர் ஒவ்வொருவரும் சுயநலவாதிகளே.
சுயநலத்தைப் பேணாமல் பொதுநலத்தை மேம்படுத்த முடியாது. ஆனால் சுயத்தின்
நலனை மட்டுமே விரும்பும் ஒடுங்கியவர்களாக மனிதர்கள் பரிணமித்ததற்கு இந்த
மூடநம்பிக்கைகளே இன்றியமையாத காரணமாகி விட்டது என்று கூறலாம். . ஆனால்
காலங்கள் இப்படியே போய்விடுமா என்ன… இரவு ஒன்று நீண்டால் அதன் எல்லைவெளிச்சத்தைத் தரதரவென இழுத்து வந்து விடும் அது தானே பிரபஞ்ச நியதி.
எந்தவொரு இயல்பற்ற போக்கும் மாற்றத்திற்காட்படாமல் இருப்பது சாத்தியன்று..
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..  என்பதே நிதர்சனம். இதுவே ஆரோக்கியமான சமுதாயத்தை வளமான தேசத்தைப் பெருகச் செய்யும். பொதுபுத்தியை பகுத்து சீரான அறிவைச் செதுக்கச் செய்த பல பகுத்தறிவியலாளர்கள் காலங்களாகப் புகட்டிய ஆத்திச்சூடிகள் ஏராளம். அதையெல்லாம் புறந்தள்ளி பாடப்புத்தகப் புழுக்களாய் பல தலைமுறைகளைத் தாரை வார்த்துள்ளோம் முடங்கிய தேசத்திற்கு. இனி இதற்கு எப்போதுமே வாய்ப்பில்லை..‌

உள்ளுக்குள் கிறுக்கல்கள் வரிக்கோடுகள் கீறல்கள் கேள்விகளாக சந்தேகங்களாக
சமகாலத் தலைமுறையினரின் மனதிற்குள் முளைக்கத் துவங்கிவிட்டன பல கால
போராட்டங்களுக்குப் பிறகு.
முத்துக்கண்ணன் முத்துக்குமாரி போன்ற நல்லாசிரியர்கள், பிள்ளைகளின் அறிவு
வளர்ச்சியில் முன்னுரிமைத் தர முனைப்பெடுக்கும் ஏராளமான அரசுப்பள்ளி
ஆசிரியர்கள், அறிவியல் இயக்கங்கள் கல்வி நிறுவனங்கள் என பிள்ளைகளின்
நலனில் அக்கறைக் கொண்டோர் முனைப்புக் காட்டத் துவங்கியுள்ளனர். அதன்
விளைச்சலாகபிள்ளைகளின் மனதில் குடும்பத்தினராலும் சமூகத்தாலும் தொன்றுதொட்டுநடைமுறைப்படுத்தப்ட்ட ஆயிரக்கணக்கான மதமூடவாத வழமைகளை இன்றைய பிள்ளைகள் ஏற்க மறுக்கின்றனர். தடுப்புச்சுவரைத்தாண்டிய அவர்களின் கேள்விகள்தீக்கணைக்களின் அனல் கங்குகள், பெற்றோரையும் ஆசிரியர்களையும் சமூகத்தையும் சுட்டெரிக்கின்றன.

கக்கும் அனலைப் பொறுக்க மாட்டாது இன்று சமூகம் புரண்டு
வருவதைக் காண முடிகிறது. இதற்கான அடித்தளமாக சில நல்லாசிரியர்களின்
பாடங்கள் தொடர்ச்சியான போதனைகள் நல்ல புத்தங்கள் பகுத்தறிவு இலக்கியங்கள்
பிள்ளைகளின் பார்வைக்குள்ளும் அறிவிற்குள்ளும் விழுந்துள்ளன. பிள்ளைகளைக்
கேள்வி கேட்க உற்சாகப்படுத்தியும் அறிவியலுக்குப் புறம்பான சங்கதிகளில்
உடன்படாமல் அதற்கான போதிய விளக்கங்கள் கையகப்படும் வரை இப்படியான
மூட நம்பிக்கையின் குரல்வளையில் கால் பதித்து அழுத்தி வைக்கக்
கற்றுத்தருகின்றனர். பிள்ளைகளும் தங்களின் மூளைக்குள் சுடர் விடும் கேள்விகளை
அணையாமல் பாதுகாத்து வருகின்றனர். ஆணவப்படுத்தியும் வைக்கின்றனர்.
தேடலின் நிமித்தமாகப் பலரையும் பாடுபடுத்தி எடுக்கின்றனர். விளக்கங்களின்
விளிம்பில் நின்றுக் கொண்டு தமது அறிவு தாகம் தீரும் வரை அடம் பிடிக்கின்றனர்
பிள்ளைகள் என்பதை  கேள்வி கேட்டுப் பழகு  நூல் நமக்குப் புலப்படுத்துகிறது.

அறியாமையை விலக்க அல்ல பொசுக்க நினைக்கும் பிள்ளைகளையே இந்த நூல்
அறிமுகப்படுத்துகிறது. இப்படியான பிள்ளைகளின் கூட்டம் நிறைய உண்டு நமது
தேசத்தில். அடையாளப்படுத்த தோழர் முத்துக்கண்ணனும் தோழர் முத்துக்குமாரியும்
போன்ற உள்ளங்களின் போதாமையே காரணம்.
”கேள்வி கேட்டுப் பழகு” நூலில் அணிவகுக்கும் பிள்ளைகள் அன்றாடம் சந்திக்கும்
பெரியமனிதர்களின் பெரியத்தன புழங்கு மொழியில் விழும் மூடநம்பிக்கைகளில்
குழம்புகின்றனர். குழம்புகிற குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும். குழப்பம் ஒன்று
ஏற்படுகின்றதென்றால் தெளிவு அங்கே பிறக்கப் போகிறது விரைந்து தீர்வு கிடைக்கப்போவது உறுதி என்பதே நித்தியம். கேள்விக் கேட்க முன்வந்த நமது நூலின்
நட்சத்திரங்கள் இப்படியான பல சம்பிரதாய பழமொழிகள் பாரம்பரிய நம்பிக்கைகளின் வழியாகத் தங்களின் தேடலை துவங்குகின்றனர். வெறும் செவிவழி
வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வந்து விடைதெறியா பல புதிர்களுக்கு
அறிவியலற்ற அறியாமைகளுக்கான அறிவார்த்தத்தைத் தேட முனைகின்றனர்.
அனைத்து சமூக முடங்களையும் களைந்தொழிக்க அத்தனையையும்
ஆவணப்படுத்துகின்றனர் எழுத்து வழியாக.. பின் விடைகளுக்கான தங்கள்
பயணங்களில் பவானி டீச்சர்,சாந்தி அக்கா,சிலம்பம் மாஸ்டர்,பன்னிரண்டாம் வகுப்பு சேது அண்ணன், சைக்கிள் கடை மாரி,நூலகர் இராமசாமி தாத்தா என பாமர
பகுத்தாளர்களிடமிருந்து அவர்களுக்கான விடை கிடைக்கப்பெறுகிறது.
மூடநம்பிக்கை என்கிற முடவாதத்திலிருந்து இந்த நூலின் வாணி, மாதவன், பாபு,ரகு,
இனியா என பிள்ளைபெரியார்களும் மழலை அம்பேத்கர்களும் குழந்தை ஆதம் ஸ்மித்
களும் வரிசைக்கட்டும் பிள்ளைப்பட்டாளங்கள் பகுத்தறிவு பெறுகின்றனர்.
வழிக்காட்டிகளாக இந்த முற்போக்குவியலாளர்களும் இவர்களை சமூகத்திற்கு
அடையாளப்படுத்திய ஆசிரிய ஆளுமைகளும் நூலின் வழியே சமூகத்தின்
பிற்போக்குதனத்தை இந்தத் தலைமுறையிலிருந்தே களைய மேற்கொள்ளப்படும்
முயற்சியாகவே இந்நூலை நான் காண்கிறேன். நூலாசிரியர்கள் இருவரும் மூட
நம்பிக்கையை ஒழித்துக் கட்ட புரட்சி போராட்டம் பெரிய இலக்கிய படைப்புகள்
ஊடகங்களில் பிரச்சார தொனி மேடைகளை அலறச்செய்வது மக்கள் கூட்டத்தில்
முழங்குவது என எந்த அபரீத மெனக்கிடலுமின்றி மிகச் சாதாரணமாக எங்கு அவைகள்  துவங்கப்பட்டதோ எதில் திருத்தமும் திருப்பமும் தேவைப்படுகிறதோ நிகழ்காலத்தின் துரிதமான பரிணாமத்தில் அடிவைத்து எதிர்காலத்தில் துலங்கி நிற்கக் கூடுமோ அந்த புள்ளியை கண்டுபிடித்து விட்டனர். அதன் நிமித்தமே பிள்ளைகளின் வழியாக தமது கற்றலின் நூலிழையில் சிறார் இலக்கியத்தைக் கையிலெடுத்து பிள்ளைகளின் மனதிற்குள் பெரியவர்களின் அசட்டுநம்பகங்கள் புகுந்து ஊடுபாவி ஆக்கிரமிப்பதற்குள் தங்கள் கைங்கர்யத்தை விரவச் செய்துள்ளனர். விஷம் உடலில் பரவுவதற்குள் எதிர்ப்புச்சக்தி அரணை பதப்படுத்தியுள்ளனர் நூலாசிரியர்கள். எதை யார் மூலமாகச்
செய்தால் புரட்சி ஏற்படும் என்று ஆசிரியர்களாக நன்கு அறிந்துள்ளனர்.

அதன் விளைவாக மத வழக்கங்களைப் பறைசாற்றும் பழமொழிகள் சொல்வடைகள்
வழிபாடுகள் அனைத்தின் துவாரங்களையும் பிள்ளைகளின் கேள்வித் தாள்களைக்
கொண்டு அடைத்துவிட்டனர். அசலில் தோழர் முத்துக்கண்ணன் எழுத்துத் தளத்தில்
ஒப்பற்ற படைப்பாளி. மூடநம்பிக்கைகள் பற்றிய நூலொன்றை எழுதி பெயர்
வாங்கியிருக்கலாம். சமூக விழிப்புணர்வு அறியாமை நீக்கும் நூலாக ஒரு இலக்கியப்
படைப்பைக் கொடி கட்டி பறக்கவிட்டிருக்கலாம். அது ஒருபுறம் இருந்தாலும்
இதையெல்லாம் எத்தனை ஆளுமைகள் செய்து மாற்றத்தைக் கொணர்தனர் என்பதே
இங்கு கேள்விக்குறி… இன்றைய பிள்ளைகளின் எதிர்கேள்விகளே முற்றிலும்
அபத்தமான நமது பழம்பெரும் முடவாத நம்பிக்கைகளை உடைக்க முடியும்.
சமூகத்தைச் சீர்த்திருத்தமுடியும் என்பதை இந்தத் தொகுப்பு கவனப்படுத்தியுள்ளது.
சிறுபிள்ளையில் எனக்குள்ளும் இப்படியான பல கேள்விகள் சந்தேகங்கள் எழும்பி
அரட்டும்.கேட்டால் எதிர்த்துப் பேசுவதாகத் தவிர்த்தும் தெய்வகுற்றமாகக் கூட
கடிந்துள்ளனர் பெற்றோரும் மூத்தோரும். பிராயத்தில் அழுந்திய எனது ஆர்பரிப்பு பின்பு நானும் இந்தக்குட்டைக்குள் கண்ணிழந்தும் மொழி தொலைத்தும் பாரம்பரியம்
பண்பாடு இறைமை என்கிற போக்கில் ஊறி அடுத்த தலைமுறைக்கு எனையறியாமலே சுயசிந்தனைன்றி அப்படியே கடத்திவந்தேன். எது புகட்டப்பட்டதோ..‌அது தானே ஊட்டப்படும்..

சந்தானம் ஒரு படத்தில் சொல்வது போல ரூமுக்குள்ள கூட்டி போய் கும்கும்முனு
குனிய வச்சு சொன்னாங்க.. நான் தான் டாக்டர்.. நான் தான் டாக்டர் .. என்பது
போலவே என்னையும் அப்படியே குனியபோட்டுப் பழக்கினர் பல காலங்களாக.
கேள்விமுறையின்றிய பிற்போக்குத்தனத்தில் தான் எனது பால்ய காலங்களும்.
வாழ்க்கையின் பிற்பகுதி அறிவுத் தெளிவிற்காண முற்போக்குச் சிந்தனை
விதைக்கப்பட்டு இப்படியான குருட்டு நியாயங்களிலிருந்து விடுபட்டேன். ஆனால்
நமது தலைமுறைக்கு வாய்க்கப்பட்ட வரமாக இந்நூல் சிறார் இலக்கியத்திற்குள்
புகுந்து மூடநம்பிக்கைகளை வேறோடு களைதல் என்பதை நிதர்சனமாக்கியுள்ளது.
வேர் என்பது நமது பிள்ளைகள் தானே..இனி எதிர்காலத் தலைமுறை முற்போக்கான
அறிவியல் சிந்தைக் கொண்ட வனமாகப் பூத்துக் குலுங்கவிருப்பது சாத்தியமாகும்
காலம் மிளிரப் போவது தெரிகிறது.வாழ்த்துகள் தோழர் முத்துக்கண்ணன் மற்றும்
தோழர் முத்துக்குமாரி. நூலின் நடுபகுதிகள் என்னை மெய்சிலிர்க்கச்செய்தன. பிள்ளைகளின் கருத்தாழங்கள், எதையும் மாறுபட்டு யோசிக்கும் திறன், பேய்க்கதை பனியாரத்துடனான அறிவியல் சார்ந்த கிரகண தரிசனம், அதன் விளக்கம் கூடுதலாக இறுதிப்பக்கங்கள்மூடநம்பிக்கைகளுக்கெதிராகச் செயல்பட்டவர்களை பற்றிய குறிப்புகள் பிள்ளையறிவுக்கு ஏற்றாற் போல லாவகமாக.. மற்றும் ஆசிரியர் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு என தொகுப்பு வாசித்தப்பின் மூடநம்பிக்கையில் நின்றுக் கொண்டு மதவாதிகளைச் சாடாமல் சிந்திக்கத்தக்கன வகையில் சிறார் இலக்கியத்தின் மாண்புமிகுப் படைப்பாகவே எனக்கு தரிசனம் தருகிறது. இனி சமூகத்தின் அநீதிகளை அவலங்களைக் களைய சிறார் இலக்கியத்தைக் கைக்கொள்வோம் என அறைகூவுகிறது .கேள்வி கேட்டுப் பழகுநூல்.

நன்றி.