நூல் அறிமுகம்:பியானோவின் நரும்புகை -அமீபா nool arimugam : piyaanovin narumougai -ameepa

நூல் அறிமுகம்:பியானோவின் நறும்புகை -அமீபா

கவிதை என்பது இரு வகையாக எழுதப்படுவது. ஒன்று கருத்தியல் ரீதியாக, மற்றொன்று உணர்வெழுச்சியாக.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கருத்தியலால் உருவாகும் உணர்ச்சியில். உணர்ச்சியால் உருவாகும் கருத்தில்.

நுட்பமான அகரீதியான புற ரீதியான வாழ்வியல் காட்சிகளை சொற்களின் தரிசனமாக தருவது தான் கவிதை.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் உணர்வெழுச்சியானவை. பெரும்பாலான கவிதைகள் வறுமை குறித்த சோகத்தை கொண்டவை. ஆனால், அவை பஞ்சப்பாட்டுகளாக இல்லாமல் செறிவான படிமங்களால் சிறப்பானதாகிறது.

கண்ணீரை தொட்டு தொட்டு புன்னகை என்று எழுதுவது போல் இருக்கிறது என்று வாழ்த்துரையில் கவிஞர் வெய்யில் சொல்லி இருப்பது போல, இவரது கவிதையில் சோகம் தூசி போல் படியாமல் ஜிகினாவாக பொன் துகளாய் படிந்துள்ளது.

“எனக்கு பாடல் என்பது கண்ணீர் சுரப்பி”. என எழுதும் கவிஞர் நிலா கண்ணன்
கண்ணீர் துளிகளை கவிதைகளின் கிரீடம் ஆக்குகிறார்.

“ஈரக் கூந்தலில் நுனி போல் இருக்கின்றன இமைகள்
கண்ணீரை காட்டிக் கொள்ளாத அழுகை என்ன அழுகையோ போ.”என்கிறார்.

அவள் ஒரு வயலினிஸ்ட் என்ற கவிதையில்
” கிழிந்த ஆடைகளை சிறு ஊசியால் வயலினை போல் மீட்டுவாள்
அந்த இசையை நாங்கள் உடுத்தி இருந்தோம்”.

இவரது கருத்தியல் பார்வை என பார்த்தோமென்றால் ஈழம் குறித்து “குருதியில் நனைந்த நிலம்” என்று இரு கவிதைகள் எழுதியுள்ளார் .பேரறிவாளன் தாயார் குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.பிரான்சிஸ் கிருபா மறைவிற்கு அஞ்சலி கவிதை எழுதியுள்ளார். இதையும் அவரது கருத்தியல் என்று நான் கணிக்கிறேன்.

நவீன கவிஞர்களுக்கு பழந்தமிழ் சொற்களை பயன்படுத்துவதில் ஒரு மோகம் உள்ளது. இவரும் ஒரு கவிதையின் தலைப்பில் பயன்படுத்தியுள்ளார். “அழை தூர ஞமலி” கவிதையில் நாய் என்றே பயன்படுத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கிய மரபும், தொடர்பும் ,தொடர்ச்சியும் உள்ளதென பறை சாற்றும் முயற்சியது.

இவர் கொஞ்சம் மெச்ச்சுர்டான கவிஞர் போல.. இத் தொகுப்பில் காதல் கவிதைகளே இல்லை. ஒரே ஒரு மாஜி காதலி பற்றி கவிதை இருக்கு. மற்றபடி மனைவி, குழந்தைகளை காதலிக்கும் கவிதைகள் உண்டு.

எனக்கு தொழில் கவிதை என இப்போது மார்த்தட்ட முடியாது. ஆனால் செய்யும் தொழிலை கவிதையாக்க முடியும். ஒரு வாகன ஓட்டியின் மன உணர்வை பதிவு செய்யும் பல கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு.

அம்மாக்களைப் பற்றிய கவிதைகள் ஆங்காங்கே உள்ளது. அதுவும் வழமையானதாக இல்லாமல், வேறு தளத்தில் நிற்கிறது. கிராமத்து அம்மாவை, கண்ணீர் அம்மாவை கண் முன்னே காட்சிப்படுத்தும் கவிதைகள் கொண்டிருக்கும் அதே நேரம் “கடைசி டேபிள்” கவிதை முரண்பட வைக்கிறது. “அம்மாவை யாரோ கொலை செய்கிறார்கள்” கவிதை ‘வாசிப்பு அதிர்ச்சி’யை மட்டும் கொடுக்கிறது.

பட்டிமன்றத்தில் மேடைப்பேச்சில் பார்வையாளர்களை கவரும் விதமாக கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல் என்றும், வடிவேலு சொல்வது போல் என்றும் பேசுவார்கள். அதை இவர் கவிதையில் பயன்படுத்தி உள்ளார். “கடனில் முளைத்த பூ”அட்டகாசமாக கவிதை.
“ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது”.
“ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்” போன்ற கவிதைகள் இத்தளத்தில் இயங்கும் நவீன முயற்சி.

“அன்பின் வால்” கவிதையில் எதார்த்த படிமத்தை காட்டும் கவிஞர் “ஸ்மோக்கர் லார்ட்” கவிதையில் மாயப் படிமத்தை கைக் கொள்கிறார்.

இவரது பாடு பொருள் வித்தியாசமான களங்களை கொண்டுள்ளது. கவிதை வடிவம் வித்தியாசமான படிமங்களை கொண்டுள்ளது. இதுவே இத்தொகுப்பின் பிளஸ் ஆகவும், அதே நேரம் சில கவிதைகளில் மைனஸ் ஆகவும் உள்ளது.
மொத்தத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அதிர்ச்சி அடைய வைத்தும், மகிழ்ச்சி அடைய செய்யும், முரண்பட செய்யவும் செய்யும் ஒரு நல்ல தொகுப்பு.