கலை இலக்கியப் போராளி டாக்டர் கே. ஏ. ஜி – முனைவர் எ. பாவலன்

கலை இலக்கியப் போராளி டாக்டர் கே. ஏ. ஜி – முனைவர் எ. பாவலன்


கலை இலக்கியப் போராளி டாக்டர் கே. ஏ. ஜி

 

தற்கால தமிழக வரலாற்றையோ? இலக்கிய வரலாற்றையோ? எழுத முற்படும் வரலாற்று ஆய்வாளராகவோ? படைப்பிலக்கியவாதியாகவோ? யாராக இருந்தாலும் அன்புடன் அனைவராலும் டாக்டர் கே. ஏ. ஜி. என்று அழைக்கப்படும் கே.ஏ.குணசேகரனின் வரலாற்றையும், இலக்கிய தடைத்தையும் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவிற்கு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் இதுவரை இலக்கிய உலகிற்கு சத்திய சோதனை, நாடக அரங்கு, தமிழ் அரங்கில், ஒடுக்கப்பட்டோர் அரங்கில், தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும், தலித் அரங்கில், இன்றைய தமிழ் நாடகச் சூழல், தொடு, பலியாடுகள், நாட்டுப்புறக் கதைகளும் நாடக ஆக்கமும், பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு, பதிற்றுப்பத்துக்கு உரை, பட்டினப்பாலைக்கு உரை எழுதியது போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அதுபோன்றே மானுட வரலாற்றுக்கு பழங்குடியின மக்களையும், அவர்களின் கலைகளையும் வெளிக்கொணரும் தன்மையில் நாட்டுப்புற கலைகளின் ஆட்ட மரபுகள் எனும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

 

அவற்றோடு மட்டுமல்லாது இதுவரை அவர் வரலாற்று ஆய்வாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பாடகர், நாடக நெறியாளர், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியர், துறைத் தலைவர், புலம் முதன்மையர்,  இசைக்கலைஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், உலக வரலாற்றில் முதல் தலித்ய அரங்கை கட்டமைத்தவர், தன்னானே கலைக்குழுவை உருவாக்கியவர், பெண் விடுதலை, தலித் விடுதலை, போன்றவற்றிற்காக களம் கண்ட கரப்போராளி, கலைமாமணி பட்டம் பெற்றவர் போன்ற வாழ்க்கையின் அனைத்து கலை இலக்கிய துறைகளிலும் அழியாத தடம் பதித்தவர் தான் டாக்டர் கே.ஏ.ஜி. இன்று அவர் இல்லாதது குடும்பத்திற்கு மட்டுமல்ல இலக்கிய உலகிற்கும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒருவேளை அவர் இருந்திருந்தால் வடுவும் மாறி இருக்கும்.

 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்த போது, அவரை ஒரு தாழ்த்தப்பட்டவர், தலித் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டார். காரணம் அவர் இயக்குனராக வருவதற்கு முன்பு வரை அங்கு யாரும் ஒரு தாழ்த்தப்பட்டவர் பேராசிரியராக இருந்ததில்லை. ஆனால் இந்த நிறுவனத்திற்கு இயக்குனராக ஒரு தாழ்த்தப்பட்டவர் இருக்கிறாரே என்பதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தப் பணி அவருடைய தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்தவை என்று புரிந்து கொள்வதற்கு கூட மனமில்லாமல் போய்விட்டது. 

 

இயல், இசை, நாடக மன்றம் சார்பாக நடத்தப்பட்ட விழாக்களில் இசை கச்சேரிகளும் நாடகங்களும் மேடை ஏற்றிய போது மூத்த பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் என்று பிதற்றிக் கொள்ளும் சாதி இந்துக்கள் இலக்கிய ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் கூத்தாடியை கொண்டு வந்து விட்டால் இதுபோன்றுதான் நடக்கும். கூத்தாடிக்கு தமிழ் இலக்கியத்தைப் பற்றி என்ன தெரியும் என்று காழ்ப்புணர்ச்சியால் வசைபாடினர். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இரவு பகல் என்று பார்க்காமல் வெகு விரைவிலேயே பதிற்றுப்பத்துக்கு உரை எழுதி வெளியிட்டு தமிழ் மொழி மீதும், இலக்கியத்தின் மீதும் இருந்த தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தபோது உண்மையில் அவர் காலத்தில் மறைந்து கிடந்த பல அரிய நூல்களை பதிப்பித்தார். அறிஞர் பெருமக்களையும் அறக்கட்டளை சொற்பொழிவுகள் மூலம் மேடையேற்றினார். அவருடைய மேசை மீது எந்த கோப்புகளும் காத்துக் கிடந்தது கிடையாது. மாணவர்களின் தேவைகளை எப்பொழுதும் பூர்த்தி செய்த வண்ணம் இருந்தார். ஆசிரியர்களின் வேண்டுகோளையும் தன் அதிகாரத்திற்குட்பட்டதை நிறைவேற்றியுள்ளார். புதிய கட்டிடங்களைக் கட்டி புத்தொளி ஊட்ட பாடுபட்டவர். இப்படி பல தகவல்களை தர முடியும் ஆனாலும் அவரை ஒரு சாதி அடையாளமாகவே பார்த்தனர். 

 

அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்கு மிகப் பெரியது. தன் வாழ்நாளில் இறுதியில் கூட உடல் நலமில்லாத போதும் பட்டினப் பாலைக்கு உரை எழுதி வெளியிட்டார். திரும்பவும் புதுவை பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போதும் அங்கு History of Drama எனும் தலைப்பில் ஆய்வு செய்து நூல் எழுதி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி தன் வாழ்நாளின் பெரும்பங்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கு செலவிட்ட பெருந்தகை. எனினும் இங்கு மனம் விரும்புவதையே நாடும் என்பதற்கு இனங்க அவர் நாடகங்களைப் பற்றி ஆய்வு செய்யும் தன்மையில் இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

 

நாடகம் என்ன செய்யும்?

 

நாடகத்தால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பவர்களுக்கு நாடகம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும், சுயமரியாதையை எதிர்பார்க்கும், ஏன் தேவைப்பட்டால் புரட்சியும் செய்யும் என்பதற்கு டாக்டர் கே. ஏ.ஜியின் நாடகங்கள் ஓர் உதாரணம். அவர் படைத்த சத்திய சோதனை, பலி ஆடுகள், மாற்றம், மழி, பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு, தொடு போன்ற எல்லா நாடகங்களும் மானுட விடுதலைக்காக படைக்கப்பட்டவை. 

 

எண்பதுகளில் நாட்டில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அறிவியல் வளர்ச்சியால் ஒருபுறம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றது. சமூக வளர்ச்சியில் ஆரோக்கியமான விவாதங்கள் உருவானது. குறிப்பாக ஒடுக்கப்பட்டோரைப் பற்றியும், பெண் விடுதலை பற்றியும் பேசத் தொடங்கின. இலக்கியத் தளத்திலும் நவீன நாடகம் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகம், தேசிய நாடகப் பள்ளி போன்றவற்றில் நவீன நாடகங்கள் தோற்றம் பெற்று சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. 

 

தமிழ் இலக்கியத்திலும் மறுவாசிப்பு அதிக அளவில் இடம்பெறத் தொடங்கின. அன்று பெரும்பாலும் பெண்ணிய கோணத்திலும் தலித் விடுதலையையும் முன்னெடுக்கும் விதத்தில் சங்க இலக்கியம் தொடங்கி, எல்லா இலக்கியத்தையும் மறுவாசிப்பு செய்தனர். அவற்றுள் பெரும்பாலும் பக்தி இயக்கமே கேள்விக்கு உட்பட்டு இருந்தது. கடவுளாக வழிபடும் ராமனையும் குற்றவாளி கூண்டில் நிற்கவைக்கப்பட்டனர். அந்த வகையில் டாக்டர் கே.ஏ. குணசேகரனின் பலி ஆடுகள் என்னும் நாடகம் சாதி ஏற்றத்தாழ்வையும், மதத்தையும் குறிப்பாக இந்து மதத்தின் கொடுங்கோன்மைகளை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்து மதம் கட்டமைத்துள்ள வர்ணாசிரம கோட்பாட்டையும், மதத்தின் பெயரால் இங்கு மனிதர்கள் அடிமைப்பட்டச் சூழலைப் படம் பிடித்து காட்டியது. தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதைப் பற்றியும் மதத்தின் பெயரைச் சொல்லி ஒடுக்கப்படுவதைப் பற்றியும், சுரண்டப்படுவதையும் ஒரு தலித் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டது. 

இந்த நாடகம் பலமுறை மேடை ஏற்றப்பட்டது. தேசிய நாடகப் பள்ளியிலும் இரண்டாம் பரிசை பெற்றது. அதிக அளவிற்கு விமர்சனமும் செய்யப்பட்டது. ஆனாலும் பலி ஆடுகள் என்னும் நாடகத்தைப் போன்று தலித் இலக்கியத்தை முன்னெடுக்கும் அளவிற்கு கூர்மையான படைப்பு இன்னும் உருவாகவில்லை. அதேபோன்று பலியாடுகள் முதல் தலித்ய நாடகமாகவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடகத்திற்கான கருவை ஒரு கல்வெட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதை ஆசிரியர் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். ஓர் உண்மை நிகழ்வை வைத்து படைக்கப்பட்டவை என்று அறிய முடிகிறது. இந்த நாடகத்தை இரண்டு தன்மைகளில் பிரித்து அறியவியலும். 1. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்கள் தொடுக்கப்படும் வன்முறை. 2. தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண்ணாக இருப்பது அதைவிட கொடுமையானது என்பதை ஒரே நேரத்தில் பெண்ணிய நோக்கிலும், தலித் விடுதலையும் முன்னெடுத்துள்ளது. 

 

பலி ஆடுகள் போன்று, சத்திய சோதனையும் தற்கால பெண்ணிய நோக்கில் படைக்கப்பட்டவை. குறிப்பாக அரிச்சந்திர புராணத்தை பார்த்தவர்கள், படித்தவர்கள் அரிச்சந்திரன் போன்று வாழ வேண்டும் எனும் நோக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தியடிகளும் சாட்சியாக விளங்கியதை அவருடைய சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார். நல்லவனவற்றை ஏற்றுக் கொள்வது மனித பண்பு என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்நாடகத்தில் உள்ள உண்மைத்தன்மையை உணராமல் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையைப் போன்று இருப்பது தவறு. குறிப்பாக சந்திரமதி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையை காணும் பொழுது நியாயத்தின் மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதனும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு சத்திய சோதனை நாடகம் அமைந்துள்ளது.

 

மாற்றம்

 

மாற்றம் என்னும் நாடகம் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய நாடகமாகும். ரத்தமும் சதையுமாக கொண்ட சக மனிதர்களாக பிறந்தாலும் உடலில் ஏற்பட்ட மாற்றத்தாலும், உணர்வுகளின் தன்மையாலும் முழு ஆணாகவும், முழு பெண்ணாகவும் வாழ முடியாமல் மூன்றாம் பாலினமாக வாழ நினைக்கின்றனர். அப்படி வாழ முற்படும்போது இந்த சமூகம் அவர்களை எந்த அளவிற்கு துன்புறுத்துகிறது என்பதை வெளிக்கொணரும் தன்மையில் மாற்றம் என்னும் நாடகம் அமைந்துள்ளது. குடும்பத்திலும் ஆணாகப் பிறந்து, பெண் தன்மையுடன் வாழும் மாறிய பாலினத்தவரை பொதுவுடமை, பகுத்தறிவு பேசுபவர் கூட ஏற்க மறுப்பதையும், இந்திய நாட்டின் பிரக்ஞை என்று அடையாளத்திற்கு குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதில் எத்தனை பெரிய சிக்கல் இருப்பதையும் அதற்காகபடும் அவமானத்தையும் சொல்லொன்னா துயரமாக விளக்குகிறது. எல்லோரையும் போன்று ஒரு மனுசியாக வெளியில் எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு பாலியல் தொல்லையும் கொடுக்கின்றனர். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருதலை கொள்ளியாக இருந்து அவமானப் படும் காட்சி அவருடைய வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. அவற்றை விளக்கும் தன்மையில் மருத்துவமனையில் நடக்கும் காட்சி ஒன்றை பின்வருமாறு காணலாம்.

 

அரசாங்கம் தர்ம ஆஸ்பத்திரியை அந்த காலத்தில் இருந்து வச்சி நடத்தது. ஏழை எளியவர்களுக்கு இது தோதா இருக்கு. எங்களைப் போல அரவாணிகளுக்கு மருத்துவமனையே இல்லே. ஆம்பளைங்க வார்டு, பொம்பளைங்க வார்டுனு தனித்தனியா இருக்கையில எங்களுக்கு எந்த வார்டு இருக்கு? அரசாங்க மருத்துவமனை அத்தனை பேரும் பொதுவானது தானே. ஆனா எங்களுக்கு மட்டும் ஏன் தனி வார்டு இல்லை (தொடு: ப.22) என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு மனிதாபிமானம் ஒன்றும் தேவையில்லை சராசரியான மனிதனாக பதில் சொன்னாலே போதும். மேலும் பொதுக்கழிவறையை பயன்படுத்துவதில் சிக்கல், பேருந்துகளில் இருக்கையை பயன்படுத்துவதில் சிக்கல் போன்ற எல்லாவற்றிலும் மாறிய பாலினம் அனுபவிக்கும் கொடுமைகளையும்,  வேதனைகளையும் மக்கள் மன்றத்தில் பதிவு செய்து அவர்களை ஏற்க மறுப்பதற்கான காரணங்களை கேட்கும் தன்மையில் மாற்றம் நாடகம் படைக்கப்பட்டுள்ளது.

 

காரல் மார்க்ஸ் சொல்வதைப் போன்று மாற்றம் என்ற ஒரு சொல்லைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும் என்பார். அதன் அடிப்படையில் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக பேராசிரியர் டாக்டர் கே.ஏ.ஜி. தன் வாழ்நாள் எல்லாம் போராடினார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களையெல்லாம் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாடகக் கலையை பயன்படுத்தினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைக் கோட்பாடுகளை அறிந்து ஞானப்பால் பருகியதை போன்று ஆங்காங்கே வெளிப்படுவதை காணமுடிகிறது. நாடகம் வெறும் பொழுதுபோக்கிற்கானது என்பதை தாண்டி மக்கள் விடுதலை முன்னெடுக்கும் போராட்டக் கருவியாகவும் அதில் களப்போராளியாகவும் இருந்துள்ளார். அவர் வெறும் நாடகப் பிரதிகளை எழுதியதோடு மட்டுமல்லாமல் மேடை ஏறியும் களம் புகுந்தவர்.

 

தனக்கு கருத்து தெரிந்த நாட்களில் இருந்தே பொது மேடைகளில் இருந்து வளர்ந்தவர். மனிதர்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்தவர். சென்னை சங்கமம் தொடங்கி, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரை அவருடைய அழுத்தமான பதிவை இன்றும் காண முடியும். எங்கெல்லாம் இசையையும்,கலைஞர்களையும் மேடை ஏற்ற முடியுமோ அங்கெல்லாம் அலங்கரிக்கச் செய்தவர்.

 

இன்றும் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கும் வன்மம் தோய்ந்த மனிதர்கள் இருந்து வருகின்றனர். அதேபோன்று திருச்சி குளப்பாடி கிராமத்தில் ஒரு மிராசுதாரின் கிணற்றில் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித்ததனால் கிணறு தீட்டாகிவிட்டது என்று சொல்லி அந்த சிறுவர்களின் மீது மின்சாரம் வைத்து கொலை செய்த வரலாறை யாராலும் மறக்க முடியாது. இதைக் கண்டு கவிஞர் இன்குலாப் வெகுண்டெழுந்து எழுதிய கவிதை தான் மனுசங்கடா நாங்கள் மனுசங்கடா. ஒரு கவிதையை எந்த அளவிற்கு மூர்க்கமாக பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்த கவிதை ஒரு சாட்சி. இந்த கவிதைக்கு தன் வசீகரமான குரலால் உயிரோட்டம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை பேராசிரியர் கே. குணசேகரன் அவர்களுக்கு உண்டு.

 

பேராசிரியர் இன்று நம்மோடு இல்லை. அவர் விட்டுச்சென்ற கலை இலக்கியப் பணியை முன்னெடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.