palvangar baloo book reviewed by prof.s.balaraman நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ - முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ – முனைவர் சு.பலராமன்

இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ எனும் நூல் தொன்னூற்று ஆறு பக்கங்களுடன் 2023ஆம் ஆண்டு ஓங்கில் கூட்டம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளது.  எழுத்தாளர் இ.பா.சிந்தன்  பல்வங்கர் பலூ, நாதுராம் கோட்சே, ஜானகி அம்மாள், மௌனம் கலைத்த சாட்சியங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது?,…
நூல் அறிமுகம் : லூசி  – முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம் : லூசி  – முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம் : சி.ராமலிங்கம் எழுதிய லூசி  உலகைக் குலுக்கிய பரிணாமத் தத்துவம்   சி.ராமலிங்கம் எழுதிய லூசி உலகைக் குலுக்கிய பரிணாமத் தத்துவம் என்னும் அபுனைவு பிரதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் வாயிலாக அறுபத்து நான்கு பக்கங்களுடன் 2021ஆம் ஆண்டு…
நூல் அறிமுகம்: ஆழ்கடல் -முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: ஆழ்கடல் -முனைவர் சு.பலராமன்


ஆழ்கடலுக்குள் பயணம் : நாராயணி சுப்ரமணியன் எழுதிய ’ஆழ்கடல்’ சூழலும் வாழிடங்களும் – நூல் அறிமுகம்

 

கடல்சார் உயிரின ஆராய்ச்சியாளராக உள்ள முனைவர் நாராயணி சுப்ரமணியன் ஆழ்கடல் குறித்த அறிவியல் சார்ந்த செய்திகள் மற்றும் ஆராய்ச்சிகளில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். சமவெளிப் பரப்பில் கடல் குறித்த உரையாடலே அண்மையக் காலமாகப் பரவலான சூழலில் ஆழ்கடல் உரையாடலுக்கான அவசியம் குறித்த உரையாடலை தீவிரமாக முன்னெடுத்துள்ளார் முனைவர் நாராயணி. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, கடலும் மனிதரும். விலங்குகளும் பாலினம் இவரது படைப்புகளாகும். இப்படைப்புகளின் வரிசையில் 2022இல் ஓங்கில் கூட்டம் மற்றும் புக் ஃபார் சில்ரன் இணைந்து நாற்பது பக்கங்களில் பதிப்பித்த ஆழ்கடல்’ சூழலும் வாழிடங்களும் என்னும் படைப்பை வெளியிட்டுள்ளார். இப்படைப்பானது பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டோர் வாசிப்பதற்காகவே ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், இந்நூல் வெளியாகி ஆறு மாதங்களே ஆகின்ற சூழலில் இளையோர் மற்றும் சிறார்களிடம் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்நூலானது பல்வேறு எளிய அடிப்படை வினாக்கள் மூலம் ஆழ்கடல் குறித்த அறிமுகத்தை இளையோர் மற்றும் சிறார் வாசகர்களிடம் அளிக்க முனைந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையை இந்நூல் தாங்கியுள்ளது.

ஆழ்கடல் படைப்பு ஆழ்கடலுக்குள் பயணிக்கப்போகிறோம், கடலுக்கடியில் வெந்நீர் ஊற்றுகள், குளிர்க் கசிவுகள், பவள வாழிடங்கள், உப்புநீர்க் குளங்கள், மலைகளும் பள்ளத்தாக்குகளும், ஒரு திமிங்கலத்தின் வீழ்ச்சி, ஆழ்கடல் வாழிடங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் என எட்டு உட்தலைப்புகளில் பேசுகிறது. மேலும், இத்தலைப்புகள் பக்க எண்களுடன் பட்டியலாகத் தொகுத்து அளித்திருந்தால், வாசகர்கள் எளிதாகச் சம்பந்தப்பட்ட உட்தலைப்பின் பக்கத்தை அடைய உதவியாக இருந்திருக்கும். நேர்காணல் நிகழ்ச்சியில் வினாக்கள் கேட்டு விடையளிப்பதைப்போல ஆழ்கடல் என்னும் இந்நூலிலும் இந்த உத்திமுறையைத் தேர்ந்தெடுத்து நூலாக அமைத்திருக்கிறார் நாராயணி. நீர்முழ்கிக் கப்பலில் பயணம் செய்து கொண்டு ஆழ்கடலைப் பற்றி அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொண்டு பல்வேறு தரவுகளுடன் செய்திகளைப் பகிர்ந்துள்ளது ஆழ்கடல்

ஆழ்கடல் தொடர்பான செய்திகளில் ஓவியங்கள் மற்றும் இரண்டு முதல் ஏழு வரையிலான உட்தலைப்புகளில் இறுதியில் விரைவுக் குறியீடு மூலம் காணொலிகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறார்களுக்கான அறிவியல்சார் புத்தகங்களில் ஓவியங்கள் இடம்பெறும் போக்குள்ளது. ஆனால் விரைவுக் குறியீடுகளைப் பயன்பாடு புதிய போக்கிற்கான தடமாக உள்ளது. அதேபோல் அறிவியல்சார் நூல்களில் பின்னிணைப்பாகக் கடல்சார் சொல்லாடல் குறித்த கலைச்சொற்கள் பட்டியல் இடம்பெறும் போக்கும் இயல்பாக வேண்டும். அந்தவகையில் ஆழ்கடல் படைப்பில் உள்ள கலைச்சொற்கள் (Seamount – கடல் மலைகள், Submarine Canyon –  பள்ளத்தாக்குகள், Hydrotherma Vent – வெந்நீர் ஊற்றுகள், Cold seep – குளிர்க் கசிவுகள், Coral Reef – பவள வாழிடங்கள், Brine Poll – உப்புநீர்க் குளங்கள்) பின்னிணைப்பாக்க வேண்டும் என்பது வாசகர்களின் எண்ணமாக உள்ளது.

பவளப்பாறைகள், எரிமலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், உப்புநீர்க் குளங்கள், குளிர்க் கசிவுகள், வெந்நீர் ஊற்றுகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் செயல்பாடுகளையும் பதிவாக்கியுள்ளது ஆழ்கடல். இவற்றில், வெந்நீர் ஊற்றில் நீர் ஆவியாகாமல் இருப்பதற்கு அதீத அழுத்தம் காரணமாக உள்ளது.

உணவு உற்பத்திற்குச் சூரியஒளி அவசியம் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் சூரியஒளி கிட்டாத ஆழ்கடலுக்குள் வாழும் உயிரிகளுக்குத் தேவையான உணவு பாக்டீரியா மற்றும் உயிரிகளின் தொடர் செயல்பாடுகளால் கிடைக்கின்றன. இதில், குளிர்க் கசிவுப் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் சல்பேட்டை ஹைட்ரஜன் சல்ஃபைட்டாகவும், மற்றொரு வகை பாக்டீரியாக்கள் சல்ஃபைட்டை உணவாகவும் மாற்றுகின்றன.  

கடலோரப் பவளங்கள் ’கடலின் மலைக் காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உப்பு நீர் குளங்களில் உள்ள நீர் கடல் நீரில் சேராமல் தனித்து உள்ளன. அக்குளத்தில் கரை ஏற்படுத்தி இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், கடல்நீரோடு ஒப்பிடுகையில் 3 முதல் 8 மடங்கு வரையிலான உப்புத் தன்மையை உப்புநீர்க் குளங்கள் பெற்றுள்ளன. இதன் அடர்த்தி அதிகம் என்பதால் உப்புநீர் கீழே தங்கி விடுகிறது என்கிறது ஆழ்கடலாய்வு. 

கடலில் உயிரிழக்கும் ஒரு திமிங்கிலமானது 400 வகை உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. மேலும், இது நான்கு கட்டங்களாகப் பகுக்கப்பட்டு நூற்றாண்டு வரைக்கும் உணவாகும் பதிவும் அதுசார் ஓவியக் காட்சியும் வாசகர்களுக்குப் பெருவியப்பை அளிக்கக்கூடும். ஆழ்கடல் ஆய்வில் எந்திர தானியங்கிகளை (Robo) ஈடுபடுத்தல் என்பது ஆழ்கடல் ஆய்விற்கு உகந்த ஒன்றாக உள்ளது. ஆழ்கடல் உயிரிகளைப் பாதுகாக்க அவசியமான முன்னெடுப்புகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 

செறிவும் செழுமையும் கொண்ட ஆழ்கடல் குறித்த ஆய்வை இளையோர் மற்றும் சிறார்களுக்கு ஏற்ற மொழிநடையில் சுருக்கி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்மொழியில் இது போன்ற அறிவியல் நூல்கள் மிகுதியாகி வருவது ஆரோக்கியமானதாகும். இளையோர் மற்றும் சிறார்களிடம் அறிவியல் மனப்பான்மை, அறிவியல்சார் பார்வையை எளிமையாகக் கடத்த இது போன்ற அறிவியல் தரவுகளுடன் கொண்ட படைப்புகள் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.

நூல் அறிமுகம்: நிலவுக்குள் பயணம் -முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: நிலவுக்குள் பயணம் -முனைவர் சு.பலராமன்


 

முதுநிலை அறிவியல் விஞ்ஞானியாக உள்ள த.வி.வெங்கடேஸ்வரன் அறிவியல் சார்ந்த செய்திகளை, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து படைப்புகளாகப் பதிவு செய்து வருகிறார். அதில் ஒன்று ’நிலவுக்குள் பயணம்’ என்னும் அபுனைவு நூல். 176  பக்க அளவில் 2010ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூல் வெளியாகி 13 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தொடக்க நிலை மற்றும் பொதுநிலை வாசகனுக்குத் திறப்பாகவும், அறிவியல்சார் மற்றும் நிலவு குறித்த தேடலில் உள்ள வாசகனுக்கு மேலும் ஒரு கூடுதல் திறப்பாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

நிலவுக்குள் பயணம் என்னும் நூல் நிலவின் முக்கியத்துவம், செயல்பாடுகள், புதிய தகவல்கள் மற்றும் சந்திராயன் குறித்த அறியப்படாத உண்மைகள் பற்றிய பதிவுகளில் ஆய்வுத் தரவுகள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றோடு எளிய மொழிநடையில் தொகுத்துப் பேசுகிறது. 23 உள்ளடக்கத்தைக் கொண்ட இந்நூலில் 22இல் வினாக்கள் எழுப்பி உரையாடிச் செல்லும் உத்திமுறையைப் பயன்படுத்தியுள்ளார் த.வி.வெ. மேலும், நிலவு குறித்து ஆழமான ஆய்வைப் பேசும் இந்நூலில் திரைப்படப் பாடல்களின் வரிகளை உட்தலைப்புகளாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?, நீ இல்லாமல் நான் இல்லை, வெண் நிலவே வெண் நிலவே, கன்னத்தில் என்னடி காயம், நிலா காயுதே, என் இனிய பொன் நிலாவே, அன்று வந்தது அதே நிலா போன்றவை)  

இந்நூலின் துணைத் தலைப்பாகச் சந்திராயன் : அறியப்படாத உண்மைகள் என்பதில் சந்திராயன் தோல்வி இல்லை என்பதைப் பறைசாற்றும் குறியீடாக உள்ளது. இதற்கு வலுவூட்டும் விதமாகச் சந்திராயன்-1 விண்கலம் பற்றி ஐந்து முதல் ஆறு வரையிலான உட்தலைப்புகளுக்கு மேல் விரிவாகவும் ஆழமாகவும் உரையாடுவது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புவி என எட்டுக் கோள்கள் உள்ளன. இதில் புவிக்கான துணை கோள் நிலவு ஆகும். இந்நிலவு ஏற்படுத்தும் வேகத்தடையினால்தான் தற்போது 24 மணிநேர நாள் ஏற்பட்டது. 1000 கோடி ஆண்டுகளுக்குப் பின்பு நிலவு வெகுதொலைவு செல்லும். அப்போது புவியின் ஒரு பகுதியினருக்குத்தான் நிலவு தெரியும் என்பதான ஆய்வுப் பதிவை முன் வைக்கிறது நிலவுக்குள் பயணம். குறிப்பாக நிலாவில் நிலநடுக்கம், வான்பொருட்கள் (பாறைக் கற்கள்) மோதல் முதலிய பேரிடர்களை அடையாளப்படுத்துகிறது. நிலவு குறித்த புனைவுகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தையும் பெற முடிகிறது.

386 கோடி (குறைந்த) செலவினத்தில் சந்திராயன் நிலவுக்கு அனுப்பியது. சந்திராயனில் பயன்படுத்தப்பட்டுள்ள 11 கருவிகளில் ஆறு கருவிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த 11 கருவிகளும் தொலை உணர்வு தொழில்நுட்பம்வழி செயல்படக்கூடியவை என்பது நோக்கத்தக்கது. சந்திராயன் நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும். உலகில் உள்ள ஏழு கண்டங்களைப்போல நிலவு எட்டாவது கண்டமாக அறிவியல் அறிஞர்கள் சிலர் பார்க்கின்றனர். 

நிலவு குறித்த ஆய்வில் கலிலீயோ கலிலீயின் ஆய்வின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகிறார். மேலும், அவரது ஆய்வு இருட்டடிப்பும், புறக்கணிப்பும் செய்யப்பட்டுள்ளதில் மத நம்பிக்கை வலுவாக இருப்பதைக் காணமுடிகிறது. நிலவின் நாயகன் கலிலீயோ என்று தன் மதிப்பீட்டை அழுத்தமாக முன் வைக்கிறார் த.விவெ.

அண்மைய காலமாக உலக நாடுகளின் பார்வை நிலவு குறித்த ஆய்வில் திரும்பியதற்கான காரண காரணிகளையும் நிலவில் பெயர் பதிவு செய்யும் முறையையும் குறித்து பதிவு செய்துள்ளது. விண்ணியல் ஆய்வில் மனிதர்களைக் கடந்து ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், இரண்டிரண்டு நாடுகளாக இணைந்து (இந்தியா-ரஷ்யா, ஜெர்மனி-இங்கிலாந்து) கூட்டுமுயற்சியில் நிலவு குறித்த ஆய்வை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கொலம்பஸ் பற்றிய பதிவில் ஆதிவாசிகளின் இயற்கைசார் நுண்ணறிவைக் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. கருமை என்பது நிறமல்ல, ஒளியில் பார்வையில் எந்த நிறமும் இல்லாத ஒளியற்ற வெற்றிடமே கருமை. வெண்மை என்பது பல நிறங்களின் கலவை என்பதான அறிவியல் பார்வையையும் அளித்துச் செல்லத் தவறவில்லை.

நூலின் பின்னிணைப்பாக இதுவரை நிலவை அடைந்துள்ள விண்கலங்கள் பட்டியலில் 1959இல் இருந்து 1976 வரைக்கும் இரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டும் கோலோச்சியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், கூடுதல் பின்னிணைப்பாக நிலவிற்குச் சென்றுவந்தவர்கள் (பிராங் போர்மென், ஜேம்ஸ் லோவல், வில்லியம் அன்ரீஸ், நீல் ஆம்ஸ்டிராங், மைக்கேல் கோலின்ஸ், எட்வின் யூஜின் அல்டரின், யூஷின் செனான், ரோனால்டு இவான், ஹரிஸன் ஸ்மிட்ஸ்…) பட்டியல் மற்றும் விண்கலன் பட்டியலில் 2008லிருந்து நடப்பு வரையிலான பதிவை நிலவுக்குள் பயணம் கோரி நிற்கிறது. 

இந்நூலில் மொழிநடை எளிமையானதாகக் கையாளப்பட்டுள்ளதால் வாசிப்பை விரைவாக்கியும் எளிதில் புரிதலையும் ஏற்படுத்திச் செல்கிறது. சொல்லாட்சியில் பெரும்பாலும் கலைச்சொற்களைப் (மின்கலம், நினைவுத்திறன், அளவி, தானே ஏவு ஊர்தி, உந்துசக்தி, விண்கலன், வன்தட்டு முப்பட்டக கண்ணாடி…) பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்ட நெடிய கட்டுரைகளாக வார்க்காமல் அளவான பத்தியில் புரிதலோடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புவி பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதைப்போல நிலவு பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

*********************