2021ல் என் மனம் கவர்ந்த புத்தகங்கள் – ச.சுப்பாராவ்
2021ல் 100 புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தாலும், எழுத்து வேலைகள், சொந்த வேலைகள் காரணமாக 90 தான் படிக்க முடிந்தது. அவற்றில் என் மனம் கவர்ந்த 20 புத்தகங்கள் பற்றிய குட்டிக் குட்டி அறிமுகம் இங்கே… இது தர வரிசையல்ல.. ஒன்றின் கீழ் ஒன்றாகத் தான் எழுத முடியும் என்பதால் வரிசை எண் தரப்பட்டுள்ளது. மற்றபடி எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை.
1.ஞாயிறு கடை உண்டு – கீரனூர் ஜாகீர் ராஜா.
தஞ்சை என்றாலே பிராமணர்களும், கர்னாடக சங்கீதமும் என்பதாக ஒரு தோற்றம் எவ்வாறோ ஏற்பட்டுவிட்டது. தஞ்சையில் தவணைக்கு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்து, பணம் வசூலிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள், துணிக்கடைகளில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்கள் என தஞ்சையின் நாமறியாத ஒரு முகத்தைக் காட்டுகிறார் ஜாகீர்.
2.சினிமா எனும் பூதம் – R.P.ராஜநாயஹம்.
ஆசிரியர் பின்னட்டைக் குறிப்பில் சொல்லுவது போல, எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி, முற்றிலும் அவரது ஞாபக அடுக்குகனை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல். ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக, Shakespearean Scholar ஆக, இருப்பதால், அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து தெறிக்கும் தகவல்கள் மிக அழகான நடையில், எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன.
3.வெற்றிப் படிகள் – வானதி திருநாவுக்கரசு
தமிழில் எழுத்தாளர்களின் சுயசரிதையே அரிது என்ற நிலையில் ஒரு பதிப்பாளரின் சுயசரிதை என்பது நிச்சயமாக அரிதினும் அரிதுதான். தமிழ்ப் பதிப்பாளர் ஒருவரின் சுயசரிதை என்ற வகைமையில் இதுவே முதலாவதாகக் கூட இருக்கலாம். மிக நீண்ட காலமாக பதிப்புத் துறையில் ஏராளமான பெரிய பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டவர் என்ற வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு விதத்தில் தமிழ் பதிப்புலப் பெரியோர்களின் வரலாறாகவும், அக்காலத்திய ஆளுமைகள் பற்றிய சித்திரமாகவும் விரிகிறது.
4.யாத் வஷேம் – நேமி சந்த்ரா – தமிழில் கே.நல்லதம்பி
இரண்டாம் உலகப் போர், நாஜிக் கொடுமைகள் பற்றிய நாவல்கள் ஆங்கிலத்தில் ஏராளம், ஏராளம். குட்ரீட்ஸ் டாட் காமில் WW2 என்று தேடினால் .04 நொடியில் 797 நாவல்களைக் காட்டிவிடும். எங்கோ ஐரோப்பாவில் நடந்த விஷயம் என்பதால் இயல்பாகவே இந்திய மொழி எதிலும் மேற்குறித்த வரலாற்றைச் சுற்றிய புனைவு இருக்காது. அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக நேமி சந்த்ரா கன்னடத்தில் எழுதியிருக்கும் யாத் வஷேம் கே.நல்லதம்பியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ளது. ஆஹா…. என்ன ஒரு புனைவு…. என்ன ஒரு ஆய்வு.. என்ன ஒரு களப்பணி…. இந்த அளவோடு நாவல் நிற்கவில்லை. இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய செய்தியையும் முடிவாகச் சொல்கிறது நாவல்.
5.தீக்கொன்றை மலரும் பருவம் – அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் – தமிழில் லதா அருணாச்சலம்
நைஜீரிய நாவல். முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் சொல்வதைப் போல பிறந்தது முதல் மனதளவில் தனிமையில் உழலும் இருபத்தைந்து வயது ஆணுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கும் இடையே சமூகத்தின் அத்தனை தளைகளையும், நியதிகளையும், மதிப்பீடுகளையும் கடந்து மலரும் உறவைப் பற்றிப் பேசுகிறது இந்தப் புதினம். அந்த வகையில் நான் முதலில் சொன்னது போல இது நைஜீரிய மோகமுள்ளாக, நாமறிந்த கதையாக இருக்கிறது. அதே சமயம் முன்னுரையின் முடிவில் லதா சொல்வது போல் இது நைஜீரியாவின் வட மாகாணங்களில் வாழும் மக்கள், அந்த நிலப்பரப்பின் வரலாறு மற்றும் புவியியல் பயணமாக, உள்ளார்ந்த வாழ்வையும், உணர்வுகளையும், பிரச்சனைகளையும். வலிகளையும், ரகசியமாக ஒளிரும் கண்ணீரையும் பற்றியும் பேசுகிறது. அந்த வகையில் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கிருப்பவர்களும் உங்கள் ஊர்க்காரர்கள் மாதிரிதான் என்பதையும் காட்டுகிறது.
6.ஒன்பது குன்று – பாவண்ணன்
தன் பணி நிமித்தம் கர்னாடக மாநிலமெங்கும் சுற்றியலைந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனக்கேயுரித்தான பாணியில் எழுதியிருக்கிறார் பாவண்ணன். புத்தகத்தைப் படித்த இரண்டு நாட்களும் நானும் அவருடன் கூடவே கர்னாடக மாநிலத்தின் காடுகளிலும், மலைகளிலும் டெலிபோன் கேபிள் பதித்தவாறு சுற்றித் திரிந்தேன்.
7. நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட் யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் –பாவெல் சக்தி
நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவாகளை கொலைகளுக்கு பலிகொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக் கொண்டு, இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப் போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும்.. நீதிமன்றத்தைத் தான் கடவுளாக நம்பி வருகிறார்கள். அவர்களின் இறுதி நம்பிக்கையும், அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் துணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் மீது பரிவும், பாசமும், ஓரளவிற்கு மேல் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்ற கரிசனமுமாக எழுதப்பட்ட கதைகள் இவை. விசித்திரமான வழக்குகள், குற்றங்கள் என்பதோடு வாழ்வில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நீதிமன்றத்தின் வளாகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும் கோடானுகோடி பாவப்பட்ட மக்கள் பற்றிய விரிவான, அக்கறையான, உண்மையான பதிவுகளாக இக்கதைகள் உள்ளன.
8.சென்று போன நாட்கள் – எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு தொகுத்தவர் இரா.ஆ.வேங்கடாசலபதி
நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பத்திரிகையாளரின் நூல். அக்காலத்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களைப் பற்றிய அபூர்வமான பதிவு. பாரதியோடு நேரடியாகப் பழகியவர் நாயுடு. பாரதியைப் பற்றி முதன்முதலில் எழுதியவரும் அவரே. வியப்பூட்டும் தகவல்கள் உள்ள அரிய புத்தகம்.
9.அதிதி – வரத.இராஜமாணிக்கம்
வீடு தரும் பாதுகாப்பை மீறி அதை விட்டு வெளியேறுபவனின் கதை. பழநியின் குதிரை வண்டிகளைப் பதிவு செய்த முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும். வெளியேறுபவனின் துயரத்தோடு, அவன் வீட்டாரின் துயரங்களையும் சேர்த்துச் சொல்லும் வித்தியாசமான நாவல். ஆசிரியரின் முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை.
10.நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் – சச்சிதானந்த சுகிர்தராஜா
கல்லூரி நாட்களில் கணையாழி அறிமுகமானதிலிருந்து நான் அவரது பத்தி எழுத்துகளின் ரசிகன். புத்தகக் காதலர்கள் பற்றி புத்தகம் பேசுது இதழில் புதிய தொடர் ஒன்றை எழுத என்னைத் தூண்டிய புத்தகம்.
11.நீலத் தங்கம் – இரா.முருகவேள்
புனைவு எழுத்தாளர் முருகவேளை விட கட்டுரையாளர் முருகவேள் என்னை மிகவும் கவர்கிறார். உலகமயச் சூழலில் தண்ணீர் விற்பனை குறித்து மிக ஆழமாக அதே சமயம் மிகச் சுருக்கமாக விளக்கும் நூல். புனைவுலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை நீ வாழும் உலகம் எப்படி இருக்கிறது என்ற பார் என்று கன்னத்தில் அறைந்து சொன்ன புத்தகம்.
12.பி.ஆர்.எஸ். கோபாலின் குண்டூசி சரித்திரமும், ஏடுகளும் – வாமனன்
சினிமா பத்திரிகைகள் குறித்து சற்றே ஏளனமான பார்வை கொண்டிருந்த எனக்கு சினிமா பத்திரிகை பற்றிய நல்ல பார்வையை, சினிமா பத்திரிகைக்காரர்களுக்கும் இருக்கும் தொழில் தர்மத்தைப் பற்றியெல்லாம் சொன்ன புத்தகம். மிக அரிதான தகவல்கள் உள்ள காலப் பெட்டகம்.
13.Greatest folk tales of Bihar
பீஹார் பகுதிகளில் புழங்கும் மைதிலி மொழியில் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட சிறார் கதைகளின் தொகுப்பு. சில கதைகள் மௌரியர் காலத்தவை. சில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தவை. ஆனால் எல்லாக் காலத்து குழந்தைகளும் படிக்க வேண்டியவை. விரைவில் என் மொழிபெயர்ப்பில்….
14.உபசாரம் –சுகா
சுகாவின் அனுபவப் பகிர்வுகள் மிகவும் நகைச்சுவையான மொழியில். ஒரு கட்டுரையில் வண்ணதாசன் கதைகளை நம்மால் வாசிக்க முடியாது. கேட்கவும் முடியாது. உணரத்தான் முடியும் என்பார் சுகா. உபசாரம் கூட அந்த மாதிரிதான்.
15.Rhino in my garden – Conita Walker
ஒரு காண்டாமிருகத்தையும், நீர்யானையையும் தன் வீட்டில் வளர்த்த ஒரு பெண்ணின் அனுபவங்கள். தென்னாப்பிரிக்காவின் காடுகள், நிறவெறி, கானுயிர் பாதுகாப்பு என்று எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சேர்த்துச் சொல்லிப் போகும் புத்தகம். ஏழை நாடு, அல்லது வளரும் நாட்டில் தான் அழிந்து படும் நிலையில் அரிய வனவிலங்குகள் அதிகம் உள்ளன. உணவின்றித் தவிக்கும் மக்களா, அல்லது அரிய வனவிலங்குகளை அழிவிலிருந்து பாதுகாப்பதா, எதற்கு முன்னுரிமை என்ற பெரும் கேள்வியில் அந்த நாடுகள் திண்டாட கோனிட்டா போன்றோர் தனிமனிதராக தம்மால் இயன்ற அளவு போராடுகிறார்கள்.
16.Ex libris –Confessions of a common reader – Anne Fadiman
நேருவோ, அப்துல் கலாமோ பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பது பெரிய விஷயமல்ல. மாதச் சம்பள வேலை பார்த்துக் கொண்டு பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பதுதான் பெரிய விஷயம். ஆனி என்ற புத்தகக் காதலியின் புத்தகக் காதல் பற்றிய நூல். புத்தகக் காதலர்கள், காதலிகள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
17.Weird things customers say in bookshops – Jen Campbell
புத்தகக் கடைக்காரர்களும் உண்மையில் புத்தகக் காதலர்கள்தான். புத்தகக் காதலின் உச்சபட்சத்தில், கிறுக்கு அதிகமாகும் போது, புத்தகக்கடை வைத்து நஷ்டப் படுகிறார்கள். அங்கு வரும் வாடிக்கையாளர்களோ, இவர்களை விட கிறுக்கர்களாக இருப்பார்கள். அந்த அனுபவங்களின் தொகுப்பே இது. தமிழில் இது போல் யாராவது எழுதினால் தமிழ்புத்தகக் கிறுக்கர்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
18. இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா – இரா.முருகன்
சமீபகாலமாக சுஜாதா பற்றி பெரிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முன்பே, சுஜாதா ஒரு இலக்கியச் சிற்பிதான் என்று ஆதாரபூர்வமாக நிறுவி இருக்கிறார் இரா.முருகன். நான் சுஜாதாவைப் பற்றி எழுதினால் எதை எதை எல்லாம் எழுதுவேனோ, அவை அனைத்தையும் இரா.முருகன் எழுதியிருக்கிறார். என் மனதில் எப்படி அவர் புகுந்து பார்த்தார் என்று வியந்து கொண்டே இருக்கிறேன்.
19.என் குரு நாதர் பாரதியார் – ரா.கனகலிங்கம்
பாரதியைப் பற்றிய மிக அழகான, அரிதான பதிவுகள். பிரெஞ்சு தேசிய கீதத்தை பிரெஞ்சுக்காரர்களைப் போலவே பாடும் பாரதியார், பாரதியாரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்கும் பிரெஞ்சுக்காரர், தேச முத்துமாரி பாடல் உருவான கதை என்று புல்லரிக்க வைக்கும் புத்தகம்.
20.முற்றுகை – வேலூர் சுரா
‘அதீத இயந்திரமயம் வேலைகளைப் பறிக்கும். தேவைக்குக் குறைவான இயந்திரமயம் தொழிலையே பாதிக்கும்,‘ ( Too much autaomation kills employment and Too little automation kills organisation ) என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கேற்ப பொதுத் துறை தொழிற்சங்கங்களின் அணுகுமுறை அமைய வேண்டியதன் அவசியத்தை மிக அழகாகப் புனைவாகக் கூறும் படைப்பு.
வரலாற்றைப் புனைவாக்குவது மிகவும் கடினம். மிகப் பழங்கால வரலாறு என்றால் தரவுகள் கிடைப்பது, கிடைத்த தரவுகளை சரிபார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும். சமீபத்திய வரலாற்றைப் புனைவாக்குவதில் வேறு விதமான சிரமம். அந்த வரலாற்றில் பங்கேற்றவர்கள் பலர் உயிரோடு இருப்பார்கள். அவர்களது நினைவுகளில் அந்த நிகழ்வு பசுமையாக இருக்கும். அதில் சிறிதளவு தவறாக எழுதிவிட்டாலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிச் சிக்கலான வரலாற்றுப் புனைவை தன் முதல் நாவலாக எழுதியிருக்கிறார் வேலூர் சுரா. முற்றுகை என்ற அந்த வரலாற்றுப் புனைவில் மற்றொரு புதுமையும் உண்டு. ஒரு தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான போராட்ட வரலாற்றைப் புனைவாகக் கூறும் புதுமை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 1960களில் இயந்திரமயத்திற்கு எதிராக நடத்திய இலாக்கோ விஜில் என்ற மாபெரும் போராட்டம் பற்றிய சிறு நாவல் இது.
இவை தவிரவும், வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும், மதுரை போற்றுதும், நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ், டால்ஸ்டாய் சிறார் கதைகள், உலகப் புகழ்பெற்ற சிறார் கதைகள் என்று என் மனம் கவர்ந்த ஐந்து புத்தகங்களையும் இந்த ஆண்டு படித்தேன். ஆனால் அவற்றை எழுதியது அடியேன் என்பதால் அவை பற்றி விரித்துக் கூறாது முடிக்கிறேன்.
வாசிப்புதான் தீராத இன்பம். அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும்.