டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிரடி அறிவிப்பு: பாஜகவின் குட்டு அம்பலம்
மரிச்ஜாப்பி: தகர்க்கப்பட்ட புனைவுகள் – அ.பாக்கியம்
“கடன் பொறி இராஜதந்திரம் ” – அ.பாக்கியம்
சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம் அடைய செய்துள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை உடைய ஒரு நாட்டின் வளர்ச்சி அவர்களின் அடித்தளத்தையே ஆட்டிப்படைப்பதாக அச்சப்படுகின்றன. எனவே சீனாவிற்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த கடன் பொறி ராஜதந்திரம்.
இந்த வார்த்தைகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி வலைதளங்களில் பரப்பி சுமார் சில மில்லியன்கள் தேட ஆரம்பித்தனர். டொனால்ட் ட்ரம்ப், பைடன், உலக வங்கி மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் சீனாவுக்கு எதிரான இந்த வார்த்தைகளை ஊதி பெரிதாக்கினார்கள். சீனா தற்போது அமலாக்கி வருகின்ற பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் 149 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் 200க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இவையெல்லாம் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. எனவே தான் சீனாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
முதல்கட்டுக்கதை:
சீனா பெல்ட் அண்ட் ரோடு தங்களை ஒருதலை பட்சமாக அறிவித்து பிற நாடுகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது! உண்மையில் சீனாவின் மேம்பாட்டு நிதியகத்தின் மூலமாக இரு தரப்பு தொடர்புகள், ஒப்பந்தங்கள் மூலமாக திட்டம் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக கடன் பெறும் நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அந்த நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் அடிப்படையில் கடன் பெறுபவர்கள் இதை தீர்மானிக்கிறார்கள்.
இரண்டாவது கட்டுக்கதை:
சீனா கடன் வாங்கும் நாடுகளை சிக்க வைப்பதற்காக கடுமையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறது! உண்மையில் சீனா உலக வங்கி மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் கொடுப்பதை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை கொடுக்கிறது. வட்டியை தவிர வேறு எந்த நிபந்தனைகளும் சீனா விதிப்பது இல்லை.
கடன் வாங்கும் நாடுகள் கடனை மறுசீரமைப்பதற்கும் விதிமுறைகளை கொடுக்கிறது தவிர்க்க முடியாத நேரங்களில் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய சலுகைகளும் இந்த கடன் வழங்கும் திட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது
ஆகஸ்ட் 2022 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 23 வகையிலான வட்டி இல்லா கடன்களை தள்ளுபடி செய்தது. 2000-2019 இடையில் ஆன காலத்தில் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை மறுசீரமைத்துக் கொடுத்தது.
இந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொடுத்த 3.4 பில்லியன்கள் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தது.
உலக வங்கி மற்றும் ஐ எம் எப் போன்ற நிறுவனங்கள் கடன் கொடுத்து நாட்டை அடிமையாக நிபந்தனை போடுகிறது சீனா வட்டிக்கு மட்டும் கடன் கொடுக்கிறது.
மிகவும் பின்தங்கிய அடிமட்டத்தில் இருக்கும் கூடிய நா, அதற்கு மேல் இருக்கக்கூடிய நடுத்தர நாடுகளுக்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் கொடுக்க மறுக்கும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சீனா, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக கூடுதலாகவே கடனை வழங்கி வருகிறது.
சுமார் 150 நாடுகளுக்கு 1.5 ட்ரீல்லியன் டாலர்களை நேரடி கடனாகவும் வர்த்தக கடனாகவும் சீனா வழங்கி வருகிறது.
மூன்றாவது கட்டுக்கதை:
சீனா கடனை திருப்பி கொடுக்காத நாடுகளின் சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வது என்ற கதைகளை கட்டிவிடுகின்றனர். சீனா இதுவரை கடன் திருப்பி செலுத்தாத எந்த ஒரு நாட்டின் சொத்துக்களையும் கைப்பற்றவில்லை. ராணுவ தளங்களையும் அமைக்கவில்லை. மாறாக அமெரிக்கா 159 நாடுகளில் 845 ராணுவ தளங்களை வைத்துள்ளது. இதில் 1,73,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகம்:
இந்த கடன் பொறி ராஜதந்திரத்திற்கு இலங்கையின் அம்பாந் தோட்டைத் துறைமுகத்தை உதாரணமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெல்ட் அண்ட் ரோடு பகுதியாக தெற்கு கடற்கரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கடன் கொடுத்து அதற்கு ஈடாக சீன கடற்படை ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டது என்று கதை கட்டுகிறார்கள்.
அம்பாந்தோட்ட துறைமுகத்தை கட்ட வேண்டும் என்று சீனாவால் அல்ல இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு திட்டம் உருவாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு திட்டத்தை உருவாக்கியது.
இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் நிதி உதவியை கேட்டிருந்தது. இவர்கள் நிதி உதவி இல்லை என்று மறுத்து விட்டார்கள். இலங்கை அரசு சீனாவை அணுகியது. சீனாவின் “சைனா துறைமுக குழுமம்” ஒப்பந்தத்தை பெற்றது சீன வங்கி நிதியளிக்க ஒப்புக்கொண்டது. இவை அனைத்தும் 2007 ஆம் ஆண்டு அதாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சீனாவால் துவங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. இதை சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக ஆலோசனை உருவாக்கி கடன் கொடுத்து பிடித்துக் கொண்டது என்று நடக்காத ஒரு விஷயத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது ஏகாதிபத்தியம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு சீனா தான் காரணம் என்று கதை கட்டுகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு கடன் 50 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சீனாவின் பங்கு மிகக்குறைவான 9%மட்டுமே. இலங்கையின் கடன்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. சீனாவை விட உலக வங்கியும் ஜப்பானும் இலங்கைக்கு கூடுதலாக கடனை கொடுத்துள்ளார்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், வெளிநாட்டு கடன் நெருக்கடி அதிகமானதால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தது ஆனால் சர்வதேச நாணய நிதியகம் உதவி செய்யவில்லை.
வேறு வழியின்றி கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் குத்தகைக்கு விட முடிவு செய்தது. முதலில் இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களை இலங்கை அரசு அணுகியது. ஆனால் அவர்கள் குத்தகைக்கு எடுக்க தயாராக இல்லை மறுத்துவிட்டார்கள். இதன் பிறகு சீன அரசு நிறுவனமான China Merchants Ports Holdings பேச்சுவார்த்தை நடத்தி 1.12 பில்லியன் டாலருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசு தனது கடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காகச் சீனா கைப்பற்றியது பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்கிறது. இது கட்டுக்கதை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவாகு தெளிவுபடுத்தி உள்ளார். சீனா ஒரு பொழுதும் துறைமுகத்தை கடற்படை தளமாக பயன்படுத்தவில்லை என்று பயன்படுத்துவதற்கு அனுமதியும் இல்லை என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் கொந்தளிப்புக்கும் உலக வங்கி சர்வதேச நாணய அமைப்பு காரணம் என்பதை மறைப்பதற்காக அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின்மீது பழிசுமத்தி திசைதிருப்புகிறார்கள்.
81% கடன் தொகை ஐ.எம்.எப் மற்றும் ஜப்பான் நாட்டினுடையது. குறுகிய காலத்தில் மட்டும் IMF இலங்கைக்கு 16 முறை கடன்வழங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளின் நவீன தாராள மையக் கொள்கைகளை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியதும் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியதில் தான் இலங்கை நெருக்கடிக்கு உள்ளானது.
உகாண்டாவில் உள்ள Entebbe சர்வதேச விமான நிலையம்:
கடன் பொறி ராஜதந்திரத்திற்கு உகண்டா நாட்டு விமான நிலைய கட்டுமானத்தைப் பற்றிய கட்டுக் கதைகளை உருவாக்குகிறார்கள்.
உகாண்டா நாட்டில் அமைந்துள்ள எண்டெபா விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான ஒப்பந்தம் சீனாவுடன் ஏற்பட்டது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்த திட்டத்திற்காக நிதி வழங்கியது. 207 மில்லியன் டாலர் கடனை 2% வட்டிக்கு மட்டுமே கடன் கொடுத்தது. இத்திட்டம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வருவதாகும்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல், இந்தியாவின் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை, உகண்டாவின் சில பத்திரிகைகள் சீனா விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். அது மட்டுமல்ல ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்றும் எழுதுகிறார்கள். உகாண்டா கையெழுத்து போடவே இல்லை என்று பொய் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.
ஒப்பந்தத்தின் நகலை பெற்று பகுப்பாய்வு செய்து கடன் அளிப்பவர் விமான நிலையத்தை கைப்பற்றுவதற்கான எந்த சரத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர். சர்வதேச திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான நிலையான விதி ஒன்று உள்ளது. அதாவது திட்டத்திற்கான அல்லது பண பிணையத்திற்காக எக்ஸ்ரே கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று சரத்து உள்ளது. அமெரிக்க சார்பான பத்திரிகைகளின் பிரச்சாரத்தை உகாண்டா நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறையே மறுத்துவிட்டது இருந்தாலும் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையான கடன் பொறி:
சீன “கடன் பொறி இராஜதந்திரம்” என்று பிரச்சாரம் செய்வது அமெரிக்காவும் சர்வதேச நாணய நிதியம், தங்களது மோசடிகளைத் திசைதிருப்புவதற்காக செய்யக்கூடியதாகும்.
அபரிமிதமான அதிக வட்டி விகிதங்களுடன் கொள்ளையடிக்கும் கடன்களை உலகளாவிய நாடுகள் மீது திணிக்கும் அமெரிக்காவின் கடன் பொறி ராஜதந்திரம்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
சீனக் கடன்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.அவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவை தனியார்மயமாக்கல் திட்டங்கள், மற்றும் IMF மற்றும் உலக வங்கி கடன்களைப் போல கட்டமைப்பு சரிசெய்தல், சிக்கன நடவடிக்கை போன்றவற்றுடன் இணைக்கப் படவில்லை.
உண்மையில்,IMF, உலக வங்கி கடன்கள் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குதல், சமூக நலத்திட்டங்களைக் குறைத்தல், மேற்கத்திய முதலாளித்துவ நலன்களை வளப்படுத்த வர்த்தக தாராளமயமாக்கல், ஆகியவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
கொள்ளையடிக்கும் வட்டி விகிதங்கள், இந்தக் கடன்களை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை உறுதிசெய்கிறது. கடன் வாங்கும் நாடுகளை ஏழைகளாக வைத்து, வளர்ச்சியடையாத நிலையில் அவர்களை அடைத்து, மேற்கத்திய முதலாளிகள் மேலும் கொள்ளையடிப்பதையும், வளங்களைப் பிரித்தெடுப்பதையும், இவர்களின் கடன் உறுதிசெய்கிறது. இதுதான் உண்மையான கடன் பொறி.
அ.பாக்கியம்
கால்பந்து முதலாளித்துவம் கட்டுரை – அ.பாக்கியம்
உலக மக்களின் கால்பந்தாட்டம் படிப்படியாக பணக்காரர்களால் திருடப்பட்டு, வணிகமயமாக்கப்பட்டு, தற்போது பங்குச்சந்தையின் சூதாட்டமாக சுழலத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களின் உயர் அடுக்கு (elite clubs) உரிமையாளர்கள் ஐரோப்பிய சூப்பர் லீக் (European super league) என்ற ஒரு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு ஐரோப்பிய லீக் அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட கழகம் (UEAF) அமைப்பும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பை தெரிவிக்கும் இந்த அமைப்புகள் புனிதமான அமைப்புகள் அல்ல. இவையும் கால்பந்தாட்டத்தை வணிக மயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டது தான். தற்போது ஐரோப்பிய கால்பந்தாட்டம் கழகங்கள் முதலாளித்தவ சுரண்டலின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருவது தான் இந்த ஐரோப்பியன் சூப்பர் லீக் (ESL) போட்டியின் அம்சமாகும்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாவது ஆண்டில் அதாவது 1990 க்கு பிறகு, ஐரோப்பிய கால்பந்தாட்ட துறையில் குணாம்ச ரீதியில் மாற்றம் ஏற்பட்டது. கால்பந்தாட்டத்தை முதலீடு செய்வதற்கான ஒரு இடமாகவும் சொத்துக்கள் சேர்ப்பதற்கான தளமாகவும் இந்த மாற்றம் உருவானது.
மார்கரெட் தாட்சரின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பொதுத் துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்கி இங்கிலாந்தை தடையற்ற சந்தையை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
1992 ல் இங்கிலாந்தில் பிரீமியர்ஷிப்பின் லீப் என்ற பெயரில் போட்டி நடத்துவதற்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் இங்கிலாந்தில் உள்ள ஒரு கால்பந்தாட்டத் தொடர் போட்டியாகும். இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் உலக தொலைக்காட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரூபர்ட் முர்டோக்கின் BSkyB ஐ தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கையாளுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே போட்டி நடத்துவதற்கான நிபந்தனியாகவும் உருவாக்கப்பட்டது.
ஒருபுறம் இந்த நடவடிக்கை உயர்மட்டத்தில் பெரும் பணப் பாய்ச்சலை உருவாக்கியது. மறுபுறம், வருமானத்தின் அடிப்படையில் பிரீமியர் லீக் மற்றும் கால்பந்து லீக்கிற்கு இடையே ஒரு தீவிர ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது. அதாவது பிரிமியர் லீக் பண பலத்துடன் நடத்துவதும் இதர கால்பந்தாட்ட லீக் வசதியற்ற நிலையில் இருப்பதுமாக மாறியது. பல கிளப்புகள் பங்குச் சந்தையில் மிதக்க இந்த பிரீமியர் லீக் போட்டியை பயன்படுத்திகொண்டன.
கால்பந்தாட்டத்தை வணிகமயமாக்களின் முதல் அம்சமாக விளையாட்டு அரங்கில் டிகெட்டுகள் விற்பது மட்டும்தான் இருந்தது.
உலகளாவிய வலைதள அமைப்பின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி மாறிய பிறகு தொலைக்காட்சி உரிமைகள் கால்பந்தாட்டத்தின் பிரதான வணிக மையமாக மாறியது. கால்பந்தாட்ட பொருளாதாரம் உருவானது.
அடுத்ததாக தலைசிறந்த வீரர்கள், மேலாளர்கள், பயிற்சியாளர்கள், போன்றவர்களை ஈர்ப்பதுடன், பணக்கார பில்லியனர்களையும் இந்த லீக்கில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
எனவே விளையாட்டின் வெற்றி அடிப்படையில் பணத்தை கொண்டு தீர்மானிப்பதற்கு வழி வகுத்தது.
மேலும் இது பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், சிறிய கிளப்புகள் அவர்களுடன் போட்டியிட முடியாத அளவிற்கும் பரவலான சமத்துவமின்மைக்கு அடித்தளம் அமைத்தது
பிரீமியர் லீகின் இந்த நிலைமை கடந்த மூன்று தசாப்தங்களாக மாறாமலேயே தொடர்கிறது.பணம் தீர்மானிக்கும் இடத்திற்கு வந்து விட்டதால் கீழ்கண்ட கிளப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
மான்செஸ்டர் யுனைடெட், அர்செனல், செல்சியா,மான்செஸ்டர் சிட்டி (சமீபத்தில் லிவர்பூலும்) போன்ற பணக்கார கிளப்புகளும் விதிவிலக்காக பிளாக்பர்ன் ரோவர்ஸ், (1995) லெய்செஸ்டர் சிட்டி (2016) போன்ற கிளப்புகள் லீக் பட்டங்களை தங்களுக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்ளக்கூடிய முறையில் செயல்படுகின்றன.
இதேபோன்று எலைட் லீக் போட்டிகளான செரியா ஏ, லா லிகா மற்றும் பன்டெஸ்லிகா மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் (ஐரோப்பாவின் சிறந்த போட்டி) ஆகியவை இதே போன்ற பணம் படைத்த கிளப்புகள் மட்டுமே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.
எனவே, கால்பந்தாட்ட வெற்றி என்பது கிளப்களின் வாங்கும் சக்திக்கு ஒத்ததாகிறது. பணம் படைத்த கிளப்புகள் வெற்றி பெற முடியும் மற்றவர்கள் அருகிலேவர முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
இத்தகைய நம்பிக்கைக்குரிய வருவாய் ஈட்டும் தொழில் வளர்ச்சியுடன் பெருநிறுவன முதலீட்டாளர்கள் கிளப்புகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள், பங்குகளை வாங்குகிறார்கள் அல்லது எலைட் ஐரோப்பிய லீக்குகளில் பங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்க விளையாட்டு உரிமையாளர்கள் கிளேசர்ஸ் (தம்பா பே புக்கனேயர்ஸ்), ஜில்லட் (மாண்ட்ரீல் கனடியன்ஸ்) & ஹிக்ஸ் (டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்), ஜே.டபிள்யூ. ஹென்றி (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), தாமஸ் டி பெனெடெட்டோ (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), எரிக் தோஹிர் (டிசி யுனைடெட்) ஆகியோர் முறையே மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், ஏஎஸ் ரோமா மற்றும் இன்டர்நேஷனல் போன்ற புகழ்பெற்ற பாரம்பரிய கிளப்புகளின் உரிமையாளர்களாக, பங்குதாரர்களாக மாறி ஆங்கிலேய மற்றும் இத்தாலிய கால்பந்தாட்ட கிளப்புகளின் உரிமையாளர்களாக உருவெடுத்தனர்.
ஒரு பொருளை எங்கிருந்தும் வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் சந்தை சரக்காக கால்பந்தாட்டத்தை முதலாளித்துவம் மாற்றிவிட்டது.
மறுபுறம், ரஷ்யாவின் ரோமன் அப்ரமோவிச், எண்ணெய் வளம் கொண்ட அரபு உரிமையாளர் ஷேக் மன்சூர், கத்தார் முதலீட்டு ஆணையம், செல்சியா, மான்செஸ்டர் சிட்டி, PSG ஆகியவற்றின் வெற்றியின் வரலாற்றை தீர்மானிக்கிறது. இவற்றின் முதலீடு செய்திருக்கிறார்கள்.
Fly Emirates (Arsenal) மற்றும் Qatar Foundation (Barcelona) Audi (Bayern Munchen) போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் மூலமாக விளையாட்டின் வெற்றி, தோல்வியில் முதலீடு செய்கிறார்கள்.
இதுபோன்ற வணிகமய முதலீட்டை மையமாக வைத்துள்ள கால்பந்தாட்ட போட்டிகள் பாரம்பரியமான உழைப்பாளி மக்கள் விளையாடக் கூடிய கால்பந்தாட்ட கலாச்சாரத்தை முறித்து விடுகிறது.
இந்த இந்த முதலீடு சார்ந்த பணமயமாக்கல் மூலமாக கால்பந்தாட்டத்தின் ஸ்டேடியம் டிக்கெட்கள் விற்பது உரிமையாளர்களின் முதல் கவலையாக இப்போது இருப்பதில்லை. அவர்களின் சந்தை தயாரிப்புகளை விற்பது நுகர்வோர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உலகளாவிய ஈர்ப்பை உருவாக்குவது இவர்களின் பிரதான வேலையாக மாறிவிடுகிறது.
கால்பந்தாட்ட வீரர்களை ஒரு சந்தை பொருளாக மாற்றுகிறார்கள். அதேநேரத்தில் முதலீட்டாளர்களுக்கான நுகர்வோர் சந்தை தளத்தை உருவாக்குகிறார்கள்.
1990 களில் சராசரி ஐரோப்பிய உயரடுக்கு கால்பந்து வீரர்களுக்கும், சராசரி வீரர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதம் வேகமாக மாறத் தொடங்கியது.1990 ல், கால்பந்தாட்டம் உலகளாவிய கவரேஜுக்கு முன்பாக ஊதிய விகிதம் 5:1 ஆக இருந்தது.
உலகளாவிய கவரேஜ் கிடைத்த பிறகு 2010 ல் 48:1 என்ற அளவில் ஊதிய விகிதம் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
வீரர்கள் தங்கள் பிராண்ட்கள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உடல் உறுப்புகளுடன் கிட்டத்தட்ட பண்டம் போன்ற உருவங்களாக மாறுகிறார்கள்.
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கால்பந்தாட்ட வீரர்களை ஐரோப்பிய கிளப்புகள் இறக்குமதி செய்கிறது. இதற்காக முகவர்கள் அமைப்புகள் செயல்படுகிறது அவர்கள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். மறுபுறம், உலகளாவிய கவரேஜ் மூலமாக ஜெர்சிகள்,பிற தயாரிப்புகளை விற்பதற்கான சந்தைகளை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள். ரசிகர் கிளப்புகளை உருவாக்குவதற்கு நிதி உதவி செய்து உருவாக்கி வியாபாரமாக மாற்றுகிறார்கள்.
ஐரோப்பிய உயரடுக்கு கிளப்புகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த கால்பந்தாட்ட சந்தைகள் ஐரோப்பிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. கால்பந்தாட்ட முதலாளித்துவம் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கால்பந்தாட்டத்தில் உருவாக்கி உள்ளது.
விளையாட்டை பணம் கட்டுப்படுத்துவதால், பெருமையாகக் கூறும் போட்டித்தன்மை என்று அழைக்கப்படுவது வெறும் வெற்று வார்த்தைகளாக மாறிவிடுகிறது.
இருப்பினும், சிறிய அணிகளின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோய்விடவில்லை. விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடிய 90 நிமிடங்களில் பலம் வாய்ந்த அணிகளை சவால் விடுகின்ற செயல்களை சிறிய, வசதியற்ற அணிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
தற்போது மேலும் கால்பந்தாட்டத்தில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐரோப்பிய சூப்பர் லீக்(ESL)போட்டி நடத்துவதற்கு முன்மொழிந்து உள்ளது. இந்தப் போட்டியில் 15 உயர் அடுக்கு அணிகள் மட்டுமே பங்கேற்கும். போட்டிகளில் போட்டித் திறன் வாய்ந்த அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்ற எல்லைகளை உருவாக்குகிறது. பெரிய அணிகள் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிட முடியும். முதலீட்டாளர்கள் இதிலிருந்து பெரிய லாபத்தை எடுக்க முடியும் என்ற நோக்கத்திற்காக இப்படிப்பட்ட ஒரு லீக் போட்டியை தேர்வு செய்துள்ளனர்.
மக்களின் கால்பந்தாட்டத்தை, கூட்டுணர்வு அமைதி ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய உணர்வு மிக்க விளையாட்டை செல்வம் சேர்க்கும் வெறித்தனமான விளையாட்டாக மாற்றுகிறது இந்த கால்பந்தாட்ட முதலாளித்துவம்.
ஏப்ரல் 2021 ல் ஐரோப்பிய சூப்பர் லீக்கின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் சில நாடுகள் உலக கால்பந்து சம்மேளனம், ஐரோப்பிய சம்மேளனம் உட்பட கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். கால்பந்தாட்டத்தை உயரடுக்கு விளையாட்டாக மாற்றும் செயல் என்று தெரிவித்தனர்.
தற்போது உள்ள முழு ஐரோப்பிய லீக் அமைப்பிலும், UEAF உட்பட போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு சிறிய அணிகள் உட்பட முறையான வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஒரு வகையான வாய்ப்புகள் உள்ளது. ஐரோப்பிய சூப்பர் லீக் (ESL) அந்த வாய்ப்புகளை பறிக்கிறது. சந்தையில் ஏகபோக உரிமை பெற எலைட் கிளப்புகளின் இந்த முயற்சி தொடர்ந்து மேலோங்கி வருகிறது.
இந்த முதலாளித்துவ போக்குகள் உழைப்பாளி வர்க்க மக்களிடமிருந்து விளையாட்டை பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறது.
அ.பாக்கியம்.
மேலும் வாசிக்க…
கால்பந்துபோட்டியும் இனவெறியும்..https://bakkiam.
மொராக்கோ முன்னேறுமா? ஆப்பிரிக்க கால்பந்தாட்டம் ஒரு பார்வை.
https://bakkiam.blogspot.com/2022/12/blog-post_42.html
புரட்சியின் மகளே வருக! – அ.பாக்கியம்
அலெய்டா குவேரா. சேகுவேராவின் மகள் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் அவரது தந்தை வழியில் புரட்சிகரமான களப்பணிகள் மூலமாக இன்று உலகின் முற்போக்காளர்களால் வரவேற்கப்படுகிறார்.
அலெய்டா குவேரா மார்ச். இதுதான் இவரின் முழு பெயர். எர்னஸ்டோ “சே” குவேரா மற்றும் அவரது இரண்டாவது மனைவி அலெய்டா மார்ச் ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளின் மூத்த மகள். குவேரா என்பது தந்தை வழி குடும்பப் பெயர். மார்ச் என்பது தாய் வழி குடும்பப் பெயராகும்.
அலெய்டா ஹவானாவில் உள்ள வில்லியம் சோலார் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். குழந்தை மருத்துவத்துறையில் நிபுணராக செயலாற்றும் திறன் படைத்தவராக உள்ளார்.
ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டிலும் மத்திய அமெரிக்காவின் ஈக்குவடார், நிகரகுவா நாட்டிலும் நெருக்கடியான காலகட்டங்களில் மருத்துவ குழுவிற்கு தலைமையேற்று பணியாற்றி இருக்கிறார்.
அங்கோலாவில் கியூபா மருத்துவ குழுவுடன் சென்று நீண்ட காலம் பணியாற்றியதை நினைவு கூர்ந்து உள்ளார். அங்கோலாவில் பணியாற்றியதை மறக்க முடியாத அடையாளமாக கருதுகிறார்.
“பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. சில சமயங்களில் என்னால் பல குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் துக்கமும், வருத்தமும் என்னுடன் என்றென்றும் இருக்கும். அங்குள்ள இனவெறி, மனித சுரண்டல், மனித உயிர்கள் மீதான அலட்சியம் ஆகியவற்றிற்கு எதிராக என்னை செயல்பட தூண்டியது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல் வளரும் நாடுகளில் மனித உரிமை மீறலுக்கு எதிரான போராளியாகவும் களம் கண்டு வருகிறார்.
“சாவேஸ், வெனிசுலா மற்றும் புதிய லத்தீன் அமெரிக்கா” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இதற்காக 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸை நேர்காணல் செய்தார். இந்த புத்தகம் ஒரு ஆவணப்படமாக மாற்றப்பட்டது.
பொலிவேரியன் புரட்சியைப் பற்றி விவாதிக்கும் சாவேஸின் நேர்காணலின் பகுதிகள், கியூபா மனிதாபிமான மருத்துவர்களின் நேர்காணல்கள், ஏப்ரல் 2002 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைப் பற்றி ஜெனரல் ஜார்ஜ் கார்னிரோவின் நேர்காணல் ஆகியவை முக்கிய ஆவணமாக இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மைக்கேல் மூரின் “சிக்கோ” திரைப்படத்தில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் பின்னணியில் உள்ள தத்துவத்தைப் பற்றி மைக்கேல் மூரிடம் நடத்திய நேர்காணல் புகழ்பெற்றது.
மைக்கேல் மூர் அமெரிக்க பட தயாரிப்பாளர், எழுத்தாளர், இடதுசாரி களசெயல்பாட்டாளர். “சிக்கோ” மைக்கேல் மூரின் 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் ஆவணத் திரைப்படமாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் வணிகமய சுகாதார அமைப்பை அம்பலப்படுத்திய திரைப்படமாகும்.
நாட்டின் சுகாதார காப்பீடு மற்றும் மருந்துத் துறையில் கவனம் செலுத்துகிறது. திரைப்படம். கனடா, பிரிட்டன், பிரான்ஸ், கியூபா ஆகிய நாடுகளின் லாபநோக்கற்ற உலகளாவிய சுகாதார அமைப்புகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க சுகாதார அமைப்பை அம்பலப்படுத்திய ஆவணப்படம்.
காங்கோவில் புரட்சி நடத்துவதற்காக சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறிய பொழுது அலெய்டாவிற்கு நான்கு வயது. பொலிவியாவில் அவர் சாகடிக்கப்பட்ட பொழுது அலைடாவிற்கு 7 வயது.
எனினும் சேகுவாராவை பற்றிய இனிமையான நினைவுகளை அலெய்டா நினைவு கூறுகின்றார். எங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க என் தந்தைக்கு வாய்ப்பு இல்லை. அவர் வெளியில் இருக்கும் போது, பெரும்பாலான நேரங்களில், அவர் எங்களுக்கு தபால் அட்டைகளில் கதைகள், வரைபடங்களை அனுப்புவார். எங்களுக்கான விலங்கு கதைகளை எழுதி அனுப்புவார்
அலெய்டா தனது தந்தையின் பணிகள் எங்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தது என்றும், உலகின் பல பகுதிகளில் நான் உரையாற்றுகிற பொழுது அவரது எழுத்துக்களை குறிப்பிடுவதாகவும் அலெய்டா நினைவு கூறுகிறார்.
சேகுவேராவின் நாட்குறிப்புகளும் அதில் உள்ள அரசியல் நுண்ணறிவு, முதிர்ச்சி எனக்கு உதவியாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.
கிளர்ச்சியின் அடையாளமாகத் தனது தந்தையை பரவலாகப் பயன்படுத்து வதையும், “நான் சே போல இருக்க விரும்புகிறேன், இறுதி வெற்றி வரை போராட விரும்புகிறேன்” என்று ஒரு குழந்தை அவரது படத்தை உயர்த்திப் பிடித்து செல்லும் பொழுது எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று உணர்ச்சி வசப்படுகிறார்.
என் தந்தைக்கு எப்படி நேசிப்பது என்று தெரியும். நேசிக்கும் திறனே அவரது மிக அழகான அம்சம். ஒரு சரியான புரட்சியாளராக இருக்க, நீங்கள் ஒரு ரொமான்டிக்காக இருக்க வேண்டும்.
சேகுவாராவின் நம்பிக்கையின் மையமாக இருந்தது மற்றவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என்பதாகும். நாம் அவருடைய முன்மாதிரியை பின்பற்றினால் மட்டுமே உலகம் அழகானதாக இருக்கும் என்று நினைவு கூறுகிறார்.
தற்போது அலெய்டா குவேரா , கியூபாவில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக இரண்டு இல்லங்களையும், அகதிக் குழந்தைகளுக்காக இரண்டு இல்லங்களையும் நடத்துகிற பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வருகிறார்.
கிழக்கு கியூபாவில் உள்ள ரியோ காடோவைச் சுற்றியுள்ள அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிற பகுதியில் மருத்துவ உதவியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு பல சூறாவளிகளால் பேரழிவிற்குள்ளான இளைஞர் தீவில் (island of youth) பணியாற்றி இருக்கிறார். இந்தத் தீவு கியூபாவின் இரண்டாவது மிகப்பெரிய தீவு மட்டுமல்ல மேற்கிந்திய தீவுகளில் ஏழாவது பெரிய தீவாகும். கியூபாவின் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் ஒரு நகராட்சியாக இந்த தீவு செயல்படுகிறது. இந்த தீவிற்கு இளைஞர்களின் தீவு என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தீவில் அலெய்டா சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றினார்.
சர்வதேச மாநாடுகளில் அரசியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான தலைப்புகளில் பிரபலமான அறிவு ஜீவிகளுடன் இணைந்து சொற்பொழிவு ஆற்றக்கூடிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சேகுவேராவின் மகளாக தொடர்ந்து கியூபா புரட்சியை பாதுகாப்பதிலும், சர்வதேச புரட்சிகர சக்திகளுக்கு உதவுவதிலும், மருத்துவ சர்வதேசியத்தை முன்னெடுப்பதிலும், கள செயல்பாட்டாளராக அலைடா சேகுவேரா திகழ்வது உத்வேகம் நிறைந்ததாக இருக்கிறது.
போர்க்கள தேசத்தின் புதல்வியே வருக!
அ.பாக்கியம்
நன்றி: தீக்கதிர்
கால்பந்து போட்டியும் இனவெறியும் – அ.பாக்கியம்
உலக கால்பந்து போட்டி முடிந்து விட்டது. ஆனால் சர்ச்சைகள் மட்டும் முடியவில்லை. இறுதிப்போட்டி பற்றிய சர்ச்சை, இனவெறி, அரசியல், வணிகம் என பல தளங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
1986க்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றது மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. ஆனாலும் இறுதிப் போட்டியை திரும்பி நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டில் இருப்பவர்கள் வலைதளங்களில் 2 லட்சம் கையெழுத்தை செலுத்தினர். பிரான்ஸ் தேசமே அழுவதை நிறுத்துங்கள் என்று அர்ஜென்டினா நாட்டில் ஏழரை லட்சம் கையெழுத்துக்களை வாங்கிக் கொடுத்தார்கள். அர்ஜென்டைனாவின் மூன்றாவது கோல் பற்றியும், கோல்கீப்பர் மார்டினஸ் செயல்கள் பற்றியும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த உலகம் கோப்பை போட்டி பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்கள் நடந்தன. மொராக்கோ அரை இறுதிக்கு முன்னேறி அதிசயம் நிகழ்த்தியது. உலக கால்பந்து குழுவின் தரத்தில் முதலிடத்தில் இருக்கக்கூடிய பிரேசிலை காலிறுதியில் வெளியேற்றியது. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற வலுவான கால்பந்தாட்ட குழுக்கள் குழு நிலைகளைக் கடக்கத் தவறியது. சவுதி அரேபியா முதல் சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஜப்பான் ஜெர்மனியை தோற்கடித்தது.இவை அனைத்துக்கும் மேலாக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய அணிகளின் செயல்திறனை வெளிப்படுத்தியது.
கால்பந்தாட்டத்தின் பாரம்பரிய சக்திகளுக்கு வெளியே கால்பந்தாட்ட அணிகள் வலிமை பெற்று வருகின்றன என்பதற்கான அடையாளம் இந்த உலக கால்பந்தாட்ட போட்டியில் வெளிப்பட்டது.
இந்த ஆச்சரியங்களின் கூடவே கால்பந்தாட்டத்தில் நடைபெறகூடிய இனவெறியும், வணிகமும், அரசியலும் வெளிப்பட்டது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் இனவெறியை கிளப்புவதற்கான கிடைத்த எந்த வாய்ப்பையும் தவற விடாமல் செய்து முடித்தார்கள்.
கத்தார் ஒரு ஜனநாயக நாடு அல்ல. இங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் மனித உரிமைமீறல்கள் பற்றி பேசுகிற மேற்கத்திய நாடுகள் அங்கு நடைபெறுகிற உழைப்பாளி மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்கள். இது பற்றி தனியாகவே எழுத வேண்டும்.
முதல் முறையாக மத்திய கிழக்கு நாடு கத்தாரில் உலகின் மிகப்பெரிய நிகழ்வு நடைபெறுவதை மேற்கத்திய ஊடகங்கள் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த நாட்டிற்கு போட்டி நடத்த ஒதுக்கியதை எதிர்த்தார்கள். ஊழல் நடந்தது என்று தெரிவித்து ஐரோப்பாவில் சிலரை கைது செய்தார்கள்.
கத்தாரில் உலகக் கோப்பைக்கான கட்டுமானப் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை இறந்ததை முக்கிய விஷயமாக விவாதித்தன.
ஜெர்மன் விளையாட்டு குழு தன்பாலின உரிமைக்காக அடையாளச் சின்னம் அணிந்து வருவதை தடுத்ததால் வாயை பொத்திக் கொண்டு விளையாடி கத்தார் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பதை பெரிதாக மேற்கத்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியது.
அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் மக்களுக்காக ஆதரவு கொடிபிடித்த மொராக்கோ விளையாட்டு குழுவையும், ஈரானில் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக ஈரான் தேசிய கீதத்தை பாடமாட்டோம் என்று மறுத்த ஈரான் விளையாட்டு குழுவையும் இருட்டடிப்பு செய்தது மேற்கத்திய ஊடகங்கள்.
ஸ்டேடியத்தில் மதுவிலக்கு அமலில் இருந்ததால் குண்டர்கள் நடமாட்டம் இல்லை என்று பல ரசிகர்கள் நினைத்தனர். உலகக் கோப்பையை முழுவதுமாக பார்வையாளர்களால் ரசிக்க முடிந்தது. உலகளாவிய நிகழ்வின் போது இங்கிலாந்து ரசிகர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. போக்கிரித்தனத்திற்கும்
மதுவுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க காரணமாக இருக்கலாம்.
மெஸ்ஸி கோப்பையைப் பெறுவதற்கு முன்பு, கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் பின் கலீஃபா, மெஸ்ஸியின் தோள்களில் “பிஷ்ட்” (Bisht) பாரம்பரிய அரபு உடையை போர்த்தினார். இது சிறப்பு நிகழ்வுகளில் அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களால் அணியப்படக்கூடியது. இது கௌரவப்படுத்தக் கூடிய ஒரு செயலாகும்.
உலகக் கோப்பையை நடத்தும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மெஸ்சிக்கும் இது ஒரு சிறப்பாக அம்சமாகும். மேற்கத்திய ஊடகங்களுக்கும், பல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இதை ஜீரணிப்பது கடினமாக இருந்தது.
தி மிரர் என்ற பத்திரிக்கை தரம் தாழ்ந்து எழுதியது. “கோப்பையை உயர்த்தும் போது லியோனல் மெஸ்ஸி ஏன் அர்ஜென்டினாவின் சட்டையை கட்டாரி பிஷ்ட்டுடன் மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றும் இது உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தை அழித்துவிட்டது என்றும் எழுதியது.
இதேபோல், தி அத்லெடிக் எஃப்சி என்ற பத்திரிகையில் நிருபர் ஜேம்ஸ் பியர்ஸ் ட்வீட் செய்தார்: “ஒரு டிராபி லிஃப்ட்டிற்காக (உயர்த்துவதற்காக) நீண்ட நேரம் காத்திருந்து, அதை அழிக்க அவர்கள்(அரேபியர்கள்) தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்”. என்ற இனவெறியை கிளப்பியது.
இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே நடந்த போட்டிகளில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. அப்பொழுது தெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் கூச்சலிடவில்லை.
1970 மெக்சிகோ உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, பீலேவின் மூன்றாவது FIFA கோப்பையை வென்ற சில நிமிடங்களில் ஒரு சோம்ப்ரெரோ (Sombrero) அவரது தலையில் போடப்பட்டது. இதேபோல், ஏதென்ஸ் ஒலிம்பிக் 2004 வெற்றியாளர்கள் ஆலிவ் மாலைகளால் முடிசூட்டப் பட்டனர்.
மேற்கத்திய ஊடகங்கள் கிழக்கத்திய நாடுகளுக்கு எதிராக இனவெறியைக் காட்டுவதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை.
போர்ச்சுகலுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு மொராக்கோ வீரர்கள் தங்கள் தாய்மார்களுடன் கொண்டாடுவதை உலகமே பார்த்தது. இந்த நிகழ்வை டேனிஷ் நாடு TV2 செய்தியின் செய்தி தொகுப்பாளர் சோரன் லிப்பர்ட், குரங்குகள் ஒன்றை ஒன்று கட்டிப்பிடிக்கும் படத்துடன் ஒப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். “கத்தார் மற்றும் மொராக்கோவில் குடும்பக் கூட்டங்களில் இப்படித்தான் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் இணைந்திருக்கிறார்கள்.” என்று மோசமாக கிண்டல் அடித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் சீற்றத்திற்குப் பிறகு, சேனலும் தொகுப்பாளரும் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. தற்செயலாக நடந்தது என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
ஐரோப்பிய சமூகத்தில் இனவெறி உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
2020 யூரோ கோப்பை இறுதி தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்தின் கறுப்பின வீரர்கள் (புகாயோ சாகா, சான்சோ மற்றும் ராஷ்ஃபோர்ட் போன்றவை) பெனால்டியை தவறவிட்டதற்காக இனவெறி நாகரீகமற்ற அவதூறுகளை எதிர்கொண்டனர்.
மனித உரிமைகள் பிரச்சினைகளுக்காக கத்தார் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் வியட்நாம், லாவோஸ், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் இனப்படுகொலை செய்து, லத்தீன் அமெரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கலைத்த வரலாறு இருந்தபோதிலும்,இதே மேற்கத்திய ஊடகங்கள் 2026 FIFA உலகக் கோப்பையை அமெரிக்கா நடத்துவதை கேள்வி கேட்கவில்லை.
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் உலக அளவில் எதையாவது சாதிக்கும் போதெல்லாம் மேற்குலகில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நாடுகள் விளையாட்டு எப்படி விரும்புகிறார்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் மேற்கத்திய ஊடகங்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கவலையில்லை. அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திணிக்க முயலும் இனவெறி அரசியல் மேலோங்கி உள்ளது.
ஒரு பெரிய ஐரோப்பிய கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற அப்பாவி கனவுகளுடன் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க இளைஞர்கள், மோசடியான கால்பந்து முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டூ கைவிடப்பட்ட பிறகு, ஐரோப்பிய தலைநகரின் தெருக்களில் அவர்களது கனவு சிதைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து இளம் கால்பந்து வீரர்கள் வருடத்திற்கு 6000 க்கு மேற்பட்டவர்கள் ஐரோப்பாவிற்கு கால்பந்து கிளப்பில் சேர்வதற்கு முகவர்கள் மூலம் செல்கிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள் என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புட்சாலிடர் என்ற தொண்டு நிறுவனம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பெற்றோர்கள் செலவு செய்து அனுப்புகிறார்கள். அங்கு அவர்கள் முகவர்களால் கடினமான முறையில் நடத்தப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் தெருக்களிலே அலைந்து கொண்டிருக்கும் காட்சிகள் நடக்கிறது. மிகப்பெரிய வணிகமாக இன்று மாற்றம் பெற்று வருகிறது. மனித உரிமைகள் ஐரோப்பாவில் தெருக்களின் அன்றாடம் மீறப்படுவதை இந்த காட்சிகள் வெளிப்படுத்துகிறது.
உலக முதலாளிகள் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்கு பிரம்மாண்ட போட்டிகளை நடத்துகிறார்கள். அந்த நேரங்களில் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிப்பதற்கும் இது போன்ற நிகழ்வுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலக மக்களால் ரசிக்கப்படும் போற்றப்படும் வீரர்களுடன் உறவு இருப்பதாக காட்டிக் கொண்டு ஆட்சியாளர்கள் அரசியல் லாபத்தை அடைகிறார்கள்.
கத்தாரின் அமீர் காலிஃபா மெஸ்ஸியை சுற்றி சுற்றி வந்ததும், மைதானத்தில் துவண்டு கிடந்த கிலியன் எம்பாப் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஆறுதல் சொன்ன விஷயம், பிரேசில் நாட்டு பிற்போக்கு ஜனாதிபதி ஆக இருந்த போலன்சரோ கால்பந்து சின்னத்துடன் மஞ்சள் கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் லாபத்திற்கும் மக்களின் கால் பந்தாட்ட உணர்வை பயன்படுத்தும் நிலைக்கு சென்று இருக்கின்றனர்.
உலகளாவிய மக்களின் அழகிய விளையாட்டான கால்பந்து விளையாட்டை இனவெறி,தேசிய வெறி , வணிகம், அரசியல் லாபம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து மக்களின் அழகிய விளையாட்டாக நிலை நிறுத்த வேண்டும்
அ.பாக்கியம்
பீலே மறைந்தார் கட்டுரை – அ.பக்கியம்
உலக கால்பந்து ஜாம்பவான், கால்பந்தின் அடையாளம், பீலே 29-ம் தேதி தனது 82 வது வயதில் பிரேசிலின் சா பவலோ நகரில் மறைந்தார்.
உலகம் அஞ்சலி அலைகளால் திணறிக் கொண்டிருக்கிறது.
அவரது உடல் இருக்கும் மருத்துவ மனையை சுற்றி மக்கள் வெள்ளம் சூழ்ந்து மூழ்கடிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் உன்னை எல்லை இல்லாமல் நேசிக்கிறோம் நிம்மதியாக இருங்கள் என்று அவரது மகள் கிளி நாசிமெண்டோ தெரிவித்துள்ளார்.
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், பீலே கால்பந்தை ஒரு கலையாக மாற்றியவர், பிரான்ஸ் நாட்டின் கிலியன் எம்பாபாபே பீலே யின் பாரம்பரியத்தை எப்போதும் மறக்க முடியாது என்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மில்லியன்களின் உத்வேகம் என்றும் மெஸ்ஸி அமைதியுடன் ஓய்வு எடுங்கள் என்றும் உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராக மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு ஆற்றலை அவர் புரிந்து கொண்டார் என்று ஒபாமா அஞ்சலி தெரிவித்துள்ளார்.
தனது தனது 15 வது வயதில் கால்பந்து விளையாட்டில் நுழைந்தார். கால்பந்து வணிகமயம் ஆக்கத்தின் துவக்கட்டமாக அக்காலம் இருந்தது.
1958, 1962, 1970 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றார் ஒரே கால்பந்து வீரர் பீலே மட்டும்தான்.
21 வருட கால்பந்த வாழ்க்கையில் 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோள்களை அடித்து உலக சாதனை படைத்தார்.
1940 அக்டோபர் 23-ம் தேதி அன்று பிரேசில் தென்கிழக்கு நகரான ட்ரெஸ் கோரக்எஸ் இடத்தில் பிறந்தார்.
Edson Arantes do Nacimento என்று தாமஸ் எடிசன் பெயர் சூட்டப்பட்டது. ஒருமுறை அவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவரது பெயரை சரியாக உச்சரிக்கவில்லை என்ற காரணத்தினால் பீலே என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.
தன் குடும்பத்தை ஏழ்மையை போக்குவதற்காக தெருவில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வளர்ந்தார்.
“சம்பா கால்பந்து” என்று அழைக்கப்படும் பிரேசில் தேசிய அணியின் விளையாட்டு பாணியை உருவக படுத்தினார்.
சாண்டாஸ் கிளப்பில் 15 வயதில் தொழில் ரீதியாக விளையாடத் தொடங்கிய பிலே பலரை திகைப்பு அடையச் செய்தார்.
1962-63 கண்டங்களுக்கிடையான பல போட்டிகளில் பட்டங்களை அலையலையாக பெற்றார்.
1950 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் சொந்த மண்ணில் உருகுவேயிடம் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் தோற்ற பொழுது தந்தை அழுது கொண்டிருந்தார். பீலே அவரது தந்தை அழுவதை பார்த்து கோப்பையை ஒரு நாள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று உறுதி அளித்தார்.
1958 ஆம் ஆண்டு 17 வது வயதில் உலகக் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தார்.
1970 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையில் பீலே மகத்துவத்தின் உச்சத்தை அடைந்தார்.
அவர் பல நாடுகளுக்கு சென்ற பொழுது அங்கிருந்த சூழல் மாற்றப்படும் நிகழ்வு நடந்திருக்கிறது. 1969 ஆம் ஆண்டில் அவர் நைஜீரியாவிற்கு சென்றதால் அங்கு நடைபெற்ற போர் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
பீலே ஐரோப்பிய கிளப்புக்களில் விளையாடுவதை நிராகரித்தார். ஆனால் தனது தொழில் முறை விளையாட்டின் இறுதி கட்டத்தில் நியூயார்க் காஸ்மோஸ் உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ஒரு திரைப்பட நட்சத்திரம், பாடகர், நாட்டின் விளையாட்டு மந்திரி (1995-98) போன்ற கால்பந்து கடந்த துறைகளிலும் அவரின் பணி நீடித்தது.
பிரேசில் நாட்டின் முதல் கருப்பின அமைச்சரவை உறுப்பினர் பீலே என்பதை குறிப்பிடுகிறார்கள்.
அவர் மீதான விமர்சனங்களும் உள்ளது.சமூகப் பிரச்சனைகள் மற்றும் இனவெறி போன்றவற்றில் அவர் அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக இருந்தார் என்று விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அர்ஜென்டினாவின் கிளர்ச்சியாளர் டி யாகோ மரடோனாவை போன்று அல்லாமல் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பட்டத்தை பெறுவதற்காக பீலே அமைதி காத்தார் என்று விமர்சனங்கள் உள்ளது பிரேசில் நாட்டில் 1964- 85 காலகட்டங்களில் நடைபெற்ற ராணுவ ஆட்சி உட்பட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்ற விமர்சனம் எதார்த்தம் என்பதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.
கால்பந்தின் ஈர்ப்பு சக்தியாக, ஒட்டுமொத்த தேசத்தின் கால்பந்து அடையாளமாக, உலக கால்பந்து சாதனையாளராக, கால்பந்தின் தூதுவனாக, கால்பந்து மைதானத்தினை கடந்து உலகம் முழுவதும் சுழலும் சக்தியாக இருந்த பீலே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் அவருக்கான அஞ்சலியை ஒரு தாக்குவோம்.
– அ.பாக்கியம்.