அ.கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் - நூல் அறிமுகம் | Thalidapatta Kathavukal - A.Kareem - Short Stories - Bharathi Puthakalayam - https://bookday.in/

தாழிடப்பட்ட கதவுகள் – நூல் அறிமுகம்

தாழிடப்பட்ட கதவுகள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : தாழிடப்பட்ட கதவுகள் ஆசிரியர் : அ.கரீம் வெளியீடு : பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பு : டிசம்பர் 2016 நான்காம் பதிப்பு : டிசம்பர் 2022 நூலைப்…
அ.கரீம்- அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி | Agalyavukkum oru rotti BookReview

அ.கரீம் எழுதிய “அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி” – நூலறிமுகம்

நமக்கென்று ஒரு மனம் உண்டு. எதையும் சுதந்திரமாக சிந்திக்க. அது போல் தானே நம் எதிரில் நிற்பவருக்கும் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. எதிரில் நிற்பதால் அவர் எதிரி அல்ல .அருகில் நிற்க இடமில்லாததால் கூட அவர் எதிரில் நிற்கலாம். தவிர…
A Kareem Thazhidapatta Kathavukal அ கரீம் தாழிடப்பட்ட கதவுகள் பாரதி புத்தகாலயம்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தாழிடப்பட்ட கதவுகள்” – நௌஷாத் கான் .லி

      ஊரில் இருந்த வரை நூலகமே கதியாக இருந்தேன் ,இந்த அரபு நாட்டு வாழ்க்கை என்னை முழுவதுமாய் வேலையின் பின்னால் ஓடும் ஒரு இயந்திரம் போல குடும்பத்துக்காக என்னை அலைய வைத்து விட்டது ..சமீபத்தில் தான் அமீரக தமிழ்…
Vandharai Short Story by A. Kareem Synopsis 90 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 90: அ.கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 90: அ. கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற உணர்வில் மனம் துடிக்கச் செய்கிறது

வந்தாரை
 -அ.கரீம்

பேயடித்தமுகம் போல் ரத்தினபுரி வீதிகள் முகம் தொங்கிப் போய் வெறிச்சோடிக் கிடந்தன.  நடமாடும் ஒன்றிரண்டு பேரும் எதிரெதிரே வந்தாலும், நின்று பேசாமல் கடந்து போயினர்.  சலீம் கடையின் முன்பு பொருட்கள் சிதறிக் கிடந்தன.  கடைக்குள் வைத்து யாரோ சமையல் செய்ததுபோல் புகை படர்ந்து கருப்பப்பி இருந்தது.  சலீம் எங்கு ஓடிப்போனான் என்று யாருக்கும் தெரியவில்லை.  அநேகமாய் அவன் சொந்த ஊருக்கே “போய்க்கோலினடா மயிரு நீங்களும் நிங்களுட நாடும்” என்று அவன் மொழியில் சபித்தபடியே கேரளம் போயிருப்பான்.  இனிமேல் இடியே விழுந்தாலும் இந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

தினமும் சலீம் கடைவாசலைக் கூட்டிப் பெருக்கும் சொர்ணம்மாள் சலீம் வந்துவிட்டானா என்று எட்டிப்பார்க்க வந்தாள்.  கடையின் முன்பு அவன் தினமும் போடும் நொறுக்கித் தீனியைத் தின்று பழகிய தெருநாய் மட்டும் படுத்திருந்தது.

அவன் வரவில்லை என்பதற்கு அடையாளமாய்ச் சிதறிய பொருட்கள் ஐந்தாம் நாளும் அப்படியே கிடந்தன.  மனசு தாங்காமல் எடுத்து ஒதுங்க வைக்கலாம் என்று நேற்று எடுக்கப் போனவளை அவர்கள் வந்து ‘இது வேண்டாத வேல எடத்தக் காலி பண்ணு’ என்று மிரட்டினார்கள்.  அடி வாங்கிய பயம் இன்னும் அவளுக்கு இருந்தது.  

கலவரம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தன.  சலீம் கடை எதிரேயிருந்த சிக்கந்தர் வீட்டில் பெரிய பூட்டோடு தாழ் தொங்கியது.  துருதுருவென்று ஓடிக்கொண்டிருக்கும் அமீரின் சத்தமில்லாமல் அந்த வீடு.  சொர்ணம்மாவுக்கு என்னமோபோல் இருந்தது.

பாவமறியாத சலீமை நினைத்து நெஞ்சு மறுவியது.  ‘எப்படியாப்பட்ட புள்ள அது.  யாரோட வம்புதும்புக்கும் போகாத புள்ளைய இப்படி முக்கிட்டாங்களே, அவனுங்க புள்ளகுட்டி உருப்படுமா நாசமத்துப் போனவங்கே’ முணுமுணுத்தபடியே சலீம் கடை எதிரே இருந்த புங்கமரத்தடியில் உட்கார்ந்தாள்.

பால் பாக்கெட் போடும் முருகேஷ் அவனுக்கு வரவேண்டிய நூறு ரூபாய் கிடைக்காமல் போய்விடுமோ என்று இன்றும் வந்து எட்டிப் பார்த்தான்.  சலீம்கடைக்கு வரும் பால்பாக்கெட்டுகளைத் தினமும் காலையில் ஒவ்வொரு வீடாய்ப் போடும் முருகேசுக்குக் கமிசன் மாதிரி சலீம் மாதச் சம்பளம் கொடுப்பான்.  அப்படிச் சேர்த்து வைக்கும் பணம்தான் முருகேசுக்குப் படிப்புச் செலவு.  அரசுப்பள்ளியில் பத்தாவது படித்து வந்தான்.  மாதம் இருபது ரூபாய்  என்று கமிசன் வாங்கும் அவன் காசு வாங்கினால் செலவாகிடும் என்று கணக்கு மட்டும் வைத்துக் கொண்டுவந்தவன் ஐந்து மாதச் சம்பளம் போனதில், முகம் தொங்கிக் கடையையே சுற்றிச் சுற்றி வந்தான்.

அவ்வீதியில் இருந்த எல்லோருக்கும் ஒரு குற்றவுணர்வு இருந்தது.  நம்ம வீட்டுப் புள்ளமாறிப் பழக்கமா இருந்த புள்ளைய, அவனுங்க அடிக்கும்போது நாமே ஏன் தடுக்கலே?  தடுக்காமப் போனதற்கு என்ன காரணம்?  அவனா குண்டு வைச்சான்?  எவனோ வச்சதுக்கு இவன அடிச்சபோது ஏன் தடுக்க முடியல என்ற குற்றவுணர்வு அவர்களை வாட்டியது.  காலை கடை திறக்கும்முன்பே கடைவாசல் கூட்டித் தண்ணீர் தெளித்துப் பளிச்சென்று வைத்துவிடுவாள் சொர்ணம்மாள்.  எந்தக் கவலையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம் என்று இருந்தவளுக்கு சலீமின் ஓட்டம் பெரும் இடியாய் இருந்தது. 

ஆஸ்பத்திரி முன்பு புது ஹோட்டல் வந்ததால் போலீஸ் இட்லிக்கடை வைக்கத் தொடர்ந்து தொல்லை செய்ததாலும், முன்பைப்போல் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு கடைவைக்கத் தெம்பு இல்லாததாலும், அடுத்து வாழ்க்கை ஓட்ட என்ன செய்யலாம் என இருந்தபோதுதான் சலீம் இரத்தினபுரியில் கடை வைத்தான்.  ‘தம்பி தினமும் வாசல் எல்லாம் கூட்டிப் பெருக்குகிறேன் ஏதாவது மாசமான கொடு சாமி’ என்று வம்படிக்குப் போய் வேலை வாங்கினாள்.  அவன் தலையாட்டினான்.   பழைய நினைவு அவளை வாட்டியது.

பத்து வருடத்திற்கு முன்பு கேரளாவிலிருந்து கோயமுத்தூர் போனால் கடைவைத்துப் பிழைக்கலாம் என்று டவுனுக்குள் மளிகைக்கடை வைத்திருந்த அவன் மாமா சொல்லி இங்கு வந்தவன், இந்தப் பத்து வருட வாழ்வில் ஒரு முறைகூட யாரிடமும் முகத்தைக் காட்டியதில்லை. ‘அங்க எங்கூட வந்து கொஞ்சநாள் கடையப் பாத்துக்கோ, வியாபாரம் பழகி அங்கேயே நல்ல இடமாப் பாத்து கடய வையி’ என்று சொல்லி அவன் மாமா அழைத்து வந்தார். 

சலீம் ஓடிப்போனதில் கடன் சொல்லி வாங்கிக் குவித்த மளிகைக்கு இனிப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்ற மகிழ்ச்சியும், அவசரத்துக்கு காசுஇல்லாட்டியும் கடன் கொடுக்கிற சேட்டன் இல்லையே என்ற வருத்தமும் ஒருசேரத் தெருவில் இருந்தது.  சலீம் ஒரு முஸ்லீம் என்ற அந்தத் தெருவாசிகள் எப்போதும் நினைத்தது கிடையாது.  அப்படியான எந்தச் சிந்தனையும் இல்லாத தெருவில் புதிய சிந்தனைக்கு விதையாய் சலீம்கடை எரிக்கப்பட்டது.

கலவரத்தைப் பற்றியே கேள்விப்படாத அந்நகரத்தில் அந்த அனுபவம் எல்லோருக்கும் புரியாத புதிராகயிருந்தது,  கொஞ்ச மாதங்களுக்கு முன்னதாகவே முக்கோண வடிவிலிருந்த கொடிகள் ரத்தினபுரி வீதிகளில் அடிக்கடி கண்ணில் பட்டன.  சில இளவட்டங்கள் நெற்றியில் இழுக்கப்பட்ட பொட்டுகளோடு, பால் மாரியம்மன் கோயில் மைதானத்தில் மாலைநேரத்தில் கூடி இரவுவரை வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கலைவதும், இடையிடையே உடற்பயிற்சி செய்வது ஆ ஊ என்று கத்திக்கொண்டு கராத்தே பயிற்சி செய்வதும் புதியதாக அவ்வீதியில் முளைத்திருந்தது.  இதற்காகவே மாஸ்டர் ஒருவர் வந்திருந்தார்.  தெருவில் இருந்த பள்ளிக்கூடப் பொடுசுகள் ப்ரீ கராத்தே கிளாஸ் என்று அதுகளும் ஆ ஊ என்று அந்த மைதானத்தில் கத்திக் கொண்டிருந்தனர்.

சலீம் கடைக்கு எதிரேயிருந்த சிக்கந்தர் பையன் அமீரும் கராத்தே கிளாஸ் போனான்,  ஐந்தாம் வருப்புப் படிக்கும் அமீர் உற்சாகமாய் போய்க் கொண்டிருந்த கொஞ்சநாளில் எந்தக் காரணமும் இல்லாமல் மாஸ்டர் வர வேண்டாம் என்று கூறி விட்டார்.   எப்படியும் மாஸ்டர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏங்கிப் போனான்.  அமீரை அவன் அம்மா அந்தப் பக்கமே போகதேன்னு கண்டிப்பாகச் சொல்லிவிட்ட பின்புதான், அங்கு போவதையே நிறுத்திக் கொண்டான்.  

மாலைநேரப் பயிற்சி  வகுப்பில் புதிய  இளவட்டங்கள் கொஞ்சம் சேர்ந்திருந்தார்கள்.  சில இளவட்டங்களை மட்டும் தேர்வு செய்து எங்கோ அரசியல் பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று அழைத்துச் சென்றார் மாஸ்டர்.  தீவிரமாய் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

விநாயகர் விழாவிற்கு நன்கொடை கேட்டு மைதான இளவட்டங்கள் மாஸ்டர் தலைமையில் சலீம் கடைக்கு வந்தபோது, பணத்துடன் பொங்கல் வைத்தால் கொடுங்கள் என்று பையில் கொஞ்சம் வெல்ல உருண்டைகளையும் போட்டுக் கொடுத்தான்.  கடைவீதியில் உள்ள மாமா கடையில் வேலை பார்ததபோது பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயில் பொங்கல் சாப்பிட்டு பழகிய நாக்கு இன்னும் கோயில் பொங்கலுக்கு அலைந்தது.  

எந்த நல்லது கெட்டதிற்கும் போகாமல் கடையையே கட்டிக் கொண்டு அழுதவனுக்கு ஆய்சா நல்ல ஜோடியாக இருந்தாள்.  கூடமாட ஒத்தாசி செய்து அவளும் சேர்ந்தே உழைத்தாள்.  ஒரு முறை கடைக்குள்ளேயே மயக்கமானவளைச் சொர்ணம்மாதான் தாங்கிப் பிடித்துக் கண்ணையும் நாடியையும் பார்த்துப் ‘புள்ளத்தாச்சியா இருக்கேன்’னு வாயில் சர்க்கரை போட்டாள்.  அப்போதிலிருந்து ஆய்சாவை எந்த வேலையும் செய்ய விடாமல் அனைத்தையும் அவனே செய்தான்.  கூட்டிப் பெருக்குற வேலையையும் தாண்டிக் கடையில் சின்னச் சின்ன வேலையைத்தானே சொர்ணம்மாள் எடுத்துக் கொண்டாள்.  

வயிறு பெருத்த ஆய்சா பொறுமையாகப் பிரசவம் பார்க்க ஊருக்குப் போகிறேன் என்றாள்.  ‘இது விளையாட்டுக் காரியமில்ல ரெண்டு உசுரு’ என்று சொர்ணம்மா திட்டி சலீமிடம் சொல்லிப் போனமாதம்தான் தன் மனைவியைப் பேத்துக்காக ஊரில் விட்டு வந்திருந்தான், 

கடையும் வீடும் ஒன்றாக இருந்ததால் அவன் எங்கும் போகவேண்டியது இல்லை.  ஆய்சா இல்லாததால் வாய்க்கு ருசியாக ஏதாவது செய்யும்போது சொர்ணம்மாள் மறக்காமல் சலீமுக்கும் கொண்டு வருவாள்.

முந்தைய கலவரத்தின் போது பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட போதும் சலீம்கடை தப்பிக்க காரணம் யாரிடமும் முகம் காட்டாத அவன் குணம்.   இம்முறை திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.  எவனோ நகரத்தில் குண்டு வைத்ததாகச் சொல்லி இவன் கடை சின்னாபின்னமானது.

அன்று மதியம்.  கடையில் சொர்ணம்மாவை உட்கார வைத்துவிட்டு உள்ளறையில் இரண்டு வாய் எடுத்துச் சாப்பிட்ட நேரம் பிஸ்கெட் அடுக்கி வைத்திருக்கும் பெரிய பாட்டில் படீர் என்று உடைந்து சிதறிய சத்தம் கேட்டு எச்சில் கையோடு ஓடி வந்தான்.  மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த பக்கத்துத் தெரு இளவட்டங்கள் சலீம் கடையை நொறுக்கிக் கொண்டிருந்தனர்.  கடையை எதற்காக அடிக்கிறார்கள் என்று புரியாமல் சலீம் தடுத்தான்.  பத்தாண்டு உழைப்பை நொறுக்கித் தள்ளுவதை அவனால் தாங்கமுடியவில்லை.

ஒருவன் பெட்ரோலால் நிரப்பப்பட்ட பாட்டிலை திரி கிள்ளிப் பற்றவைத்துக் கடைக்குள் தூக்கி அடித்தான்.  அது நெருப்புமிழ்ந்து கடையைக் கருக்கியது.  விநாயகர் விழாவுக்குச் சலீம் கையில் காசுவாங்கிய கராத்தே மாஸ்டரின் கைவிரல்கள் சலீம் கன்னத்தில் கோடுகளாய்ப் பதிந்தன. மாஸ்டரின் காலைப் பிடித்து கதறினான்.  அவன் நெஞ்சின் மீது ஓங்கி உதைத்தபோது நிலை குலைந்து கீழே விழுந்தான்.  இன்னொருவன் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அவன் காலில் ஓங்கி அடித்தான்.

‘அம்மே.. அம்மே’ வலியில் அலறினான்.  கடையைக் காப்பதா இல்லை மகனாய்ப் போன புள்ளையைக் காப்பதா என்று தெரியாமல் இங்கும் அங்கும் சொர்ணம்மாள் ஓடினாள்.  அவளையும் நெட்டித் தள்ளி ரெண்டு அடி விட்டார்கள்.  தடுமாறிக் கீழே விழுந்தாள்.

முகம் கை கால் முதுகு எனச் சகட்டு மேனிக்கு விழுந்த அடியில் நிலைகுலைந்துபோன சலீமின் சிவந்த உடலில் சிவந்த பாம்பாய் ரத்தம் ஊர்ந்தது.  பித்துப் பிடித்தவனைப் போல் அடித்து நொறுக்கப்படும் கடையைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.  தினமும் காலையில்  வீசியெறியும் வருக்கியை லாகவமாய்ப் பிடித்து நொறுக்கும் தெருநாய் மட்டும் சலீமையும் கடையையும் மாறிமாறிப் பார்த்துக் குரைத்துக் கொண்டேயிருந்தது.

இவர்களைத் தடுக்க முடியாது.  உயிராவது மிஞ்சட்டும் என்று தடுமாறி எழுந்தவன் கிழிந்த சட்டையோடு கைலியைத் தூக்கிக் கட்டிப் பிச்சைக்காரனைப் போல் அடிபட்ட காலைத் தூக்கி வைக்க முடியாமல் இழுத்திழுத்து அழுது கொண்டே போனான்.

அவன் போன கோலம் இன்னம் சொர்ணம்மாவின் கண்ணில் அகலாமல் அப்படியே இருந்தது.  ஒரு வாய் நிம்மதியாக்கூடச் சாப்பிடாமல் ரத்தம் வழிந்த சோற்றின் எச்சில் கையோடு போன முகம் அவளை அழவைத்துக் கொண்டேயிருந்தது.  தலையுயர்த்திப் புகையடித்த கடையைப் பார்த்த அவளுக்கு தாங்க முடியாத மனவலி கன்னத்தில் நீர்க்கோடுகளாய் வழிந்தோடியது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

Thee Nunmigalin Kaalam by Era.Boobalan Book review by A.Kareem இரா.பூபாலனின் தீ நுண்மிகளின் காலம் நூல் அறிமுகம் அ.கரீம்

நூல் அறிமுகம்: இரா.பூபாலனின் தீ நுண்மிகளின் காலம் – அ.கரீம்



சமகாலத்தை எழுதுபவன் காலத்தால் களவாடமுடியதவன்

“எப்போதும் சாலையில்
சாக்பீஸ் ஓவியங்களை
வரைந்து காத்திருக்கும்
கால்களற்றவன்
யாரும் வராத
ஊரடங்கு நாளில்
வெறிச்சோடிக் கிடந்த
தார்ச் சாலையின்
நடுவில் அமர்ந்து
தன் இடுப்புக்கு கீழ்
இரண்டு கால்களை
வரைந்து பார்த்துக்கொண்டான்

நாம் வாழும் காலத்தில் கொரோனா என்னும் பெரும் தொற்று லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிட்டது. நுண்மி மனிதனால் உருவாக்கப்பட்டதா? இல்லை இயற்கையால் உருவாக்கப்பட்டதா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டு இருந்தாலும் நாம் எப்போதும் பார்த்திடாத பேரழிவை பார்த்துவிட்டோம். உலகமே கண்ணுக்கு தெரியாத நுண்மிக்கு பயந்து வீட்டுக்குள் அடங்கி விட்டது. இன்னும் இயல்பு வாழ்வுக்கு மனித சமூகம் திரும்பவில்லை. இந்த பெரும் சுழலில் வாழ்வுக்காக போரடிய மனிதர்களின் துயரங்களை சமகாலத்தை பதிவு செய்யும் கடப்பாடோடு இரா.பூபாலன் “தீநுண்மிகளின் காலம்” தொகுப்பு வழியாக பதிவு செய்கிறார்.

பெரும்தொற்று காலத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் கவிதைகள் ஆக்குவது சவாலானது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்ற மெனக்கெடளில் கவிதைக்கான தன்மை மாறிவிட எல்லா வாய்ப்புகளும் உண்டு. அவசரத்தில் அது கட்டுரை தன்மையோடும் சொல்லப்படும் தகவல் போலவும் மாற வாய்ப்புகளும் உண்டு. ஆனால் எல்லா கவிதைகளையும் சாமர்த்தியமாக பூபாலன் கையாண்டு உள்ளார். எல்லா கவிதைகளுக்குள்ளும் நம்மை அசைத்து பார்க்கும் வலிகள் உள்ளது. மானுடம் பேச வேண்டிய அறத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்திலிருந்து, பரஸ்பரம் உதவியவர்களின் அன்பு வரை எல்லாவற்றையும் பதிந்து உள்ளார். இதற்கு முன்பு எப்போதும் சந்திக்காத புதிய உலகத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்கள் வரை தீ நுண்மிகளின் காலம் பேசுகிறது.

கடனட்டைகளில்
பொன்னிறத்தில்
பொறிக்கப்பட்டிருக்கும்
என் பெயரை
ஒருமுறை
ஆறுதலாக தடவிக் கொள்கிறேன்
எல்லா நாட்களுமே
மாத இறுதி நாட்களாகின்றன..

என்ற கவிதை வழியே…. எண்பது சதவிதமான இந்திய மக்கள் கொரோனா காலத்தில் கடனாளிகள் ஆகியுள்ளர்கள் என்று தற்போது புள்ளி விபரங்கள் சொல்கிறது. வருமானம் இல்லாத காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசும் கைவிட்டதினால் எப்படியும் உயிர் வாழ வேண்டுமே” என்ற துடிப்பில் கார்ப்பரேட்டுகளின் கடன் அட்டையில் அகப்பட்டுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பவர்களை கண்முன்னே பார்த்துகொண்டு இருக்கிறோம், வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து செத்து போனவர்களையும் இந்த கவிதை நினைவுப்படுத்துகிறது.

முகக் கவசம் அணிந்துகொள்வது
கட்டயமாக்கப்பட்ட பூமிக்கு
தகவல் அறியாது வந்துவிட்டார்
இளவயது கடவுள் ஒருவர்
வீதியுலா வருகையில்
வசமாகச் சிக்கிக் கொண்டார்
கடமை தவறாத காவலர் ஒருவரிடம்
நான் கடவுள்
நான் கடவுள் என
எவ்வளவு மன்றாடியும்
இரங்காத காவலரின் முன்
முட்டி வலிக்க
ஒன்பது தோப்புக்கரணங்களைப்
போட்டுகொண்டு இருந்தார் கடவுள்

ஹெல்மட்டுக்கு பயந்து தெருவுக்குள் ஓடிக்கொண்டு இருந்த இளம் வயது கூட்டம் முக கவசத்துக்கு பயந்து ஓடி ஒளிந்த காலத்தை கடவுளுக்கு பொருத்தி ஒரு கதையைப்போல கவிதையை பூபாலன் கையாண்டுள்ளார். மனிதர்கள் சிரிக்கிறார்களா இல்லை முறைக்கிறார்களா? என்று எதுவும் தெரியாமல் மறைக்கும் முககவசங்கள் குறித்த கவிதைகளும், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட கடவுள் குறித்தும் நேர்த்தியாக எழுதிய கவிதைகள் தொகுப்பில் உள்ளது.

விபத்தில்ல சாலைகள்
கூட்டமில்லா மருத்துவமனைகள்
மாசற்ற வெளி
இந்தக் கிருமி தந்தவை
கொஞ்சம் வரமும் தான் …

பல ஆண்டுகாலமாக பெரும் தாக்குதலுக்கு உள்ளான இயற்கை இந்த காலத்தில் கொஞ்சம் ஆசுவாசப்பட்டதையும் தவறாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லாண்டுகாலமாக கவனிக்காமல் கைவிடப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள் திடீரென உயிர் பெற்றதும், பரணில் கிடந்த பரமபதம் களத்துக்கு வந்ததும், அறைக்குள் அடைப்பட்டு கிடந்த அப்பத்தா அவ்விளையாட்டில் ராணியாக மாறியதும். கைவிடப்பட்ட நாட்டுபுற கலைஞர்களின் துயரம் சூழ்ந்த வாழ்வும், பழக்கப்படாத ஆன்லைன் வகுப்புகள், குழந்தைகள் வளர்த்த செடிகள், தனிமை, மனிதர்களால் கைவிடப்பட்ட அறம், அரசு அதிகாரத்தால் வீழ்ந்து போன மக்கள், அரசனின் அலட்சியத்தால் ரயிலின் தண்டவாளத்தில் உடல் நசுங்கிய வடமாநில எளிய மக்கள் என்று அநேகமாக கொரனோ காலத்தின் எல்லாவற்றையும் தீ நுண்மிகளின் காலத்தின் வழியே பூபாலன் பதிவு செய்துவிட்டார். சமகாலத்தை பதிவு செய்வது கிரிமினல் குற்றம் போல எழுதாமல் தப்பித்துக்கொண்டு இருக்கும் படைப்பாளிகளுக்கு சமகாலத்தை எழுதுவதுதான் ஒரு படைப்பாளனின் தார்மீக கடமை என்று நெற்றில் அடித்து பூபாலன் பதிவு செய்துள்ளார். சமகாலத்தை எழுதுபவனை காலம் எப்போதும் கைவிடாது. வாழ்த்துக்கள் பூபாலன்.

அ.கரீம்
“தீ நுண்மிகளின் காலம்”
விலை ரு.70
ஆசிரியர் இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிடு

Writers Gallery: A. Kareem Thaazhidappatta Kathavugal Short Story Book Review and Interview. Book Day is Branch of Bharathi Puthakalayam.

எழுத்தாளர் இருக்கை: தாழிடப்பட்ட கதவுகள் நூல் குறித்து ஓர் உரையாடல் | Short Story | Book Review

தாழிடப்பட்ட கதவுகள்  அ. கரீம் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை : ரூ. 140/- புத்தகம் வாங்க : https://thamizhbooks.com #ThaazhidappattaKathavugal #ShortStory #BookReview 1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ…
Saga Muthukannan in Silettukuchi Book Review by Pa. Kejalakshmi. Book Day (Website) And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: “உயிர்ப்புள்ள இடத்தில் இயங்கும் ஒலி இருக்கத்தான் செய்யும் “ – அ. கரீம்

நூலின் பெயர் : சிலேட்டுக்குச்சி ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன் பக்கங்கள் : 112 விலை. : ₹ 110 முதல் பதிப்பு : ஜூன் 2020 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/ நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது எங்கள்…
நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – செ. விஜயராணி

நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – செ. விஜயராணி

நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஆசிரியர்: அ. கரீம்  வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ. 140 ஒரு எழுத்தாளன் எதற்காக எழுதுகிறான் என்றால், அவனது எழுத்துக்கான வெற்றி என்பது தனக்காக எழுதத் தொடங்கி வாசகனைத் தன் படைப்பின்வசம் இழுத்துச் செல்லும் வல்லமையே எழுத்தாளனின் வெற்றி.…
நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – கருப்பு அன்பரசன்

நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஆசிரியர்: அ. கரீம்  வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ. 140 உலகத்தின் பல நாடுகள் கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் தம் மக்களைக் காப்பாற்ற, நோய்த் தொற்றிலிருந்து அச்சமின்றி வாழ்ந்திட நிறபேதமின்றியும், கட்சி வித்தியாசமின்றி…