Zoothera salimalii: Name Telling Birds Series 21 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 21 - பூங்குருவி Zoothera salimalii

பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி



ஒவ்வொரு மனிதர்களுக்கும் வித்தியாசமான குரல்கள் இருப்பது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனித்தன்மையுடன் உள்ளன. யானைகள், வௌவால்கள் ஆகியவை அகவொலிகள் மூலம் நமக்கு கேட்காத மொழிகளில் பேசுகின்றன. மற்றவை அவர்களுக்குள் பேசும் பொழுது அவர்கள் மொழி புரியும். நமக்கு அர்த்தம் தெரியாததால் சப்தமாக உணர்கிறோம். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் மொழியை கற்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் அலைபேசியில் பேசும்பொழுது நமக்கு பழக்கமான குரலை எளிதில் கண்டுபிடித்து விடுவோம். சில நேரங்களில் குழப்பம் இருக்கும். அதே போல் பறவைகளில் குறிப்பாக அதன் குரலில் ஆய்வு செய்பவர்களுக்கு பல பறவை இனங்களின் குரல்கள் பழக்கப்பட்டவை. அதனால் வித்தியாசமான குரலை கேட்டால் உடனே நின்று கவனித்து அது என்ன பறவை என்று கண்ணில் பார்த்து முடிவு செய்வார்கள்.

அதன் விளைவு 2016 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் வடகிழக்கு இந்தியா மற்றும் சீனாவின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பறவைகளை பற்றிய ஆய்வின் போது இத்தனை நாட்கள் கேட்காத, பழக்கமில்லாத ஒரு குரலை கேட்டுள்ளனர். ஸ்வீடன், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அதன் உடல் அமைப்பு வண்ணங்களை கவனித்தனர், அதன் கழுத்து பகுதி முதல் வால் பகுதி வரை அடிப்பகுதி கருப்பு புள்ளிகளையும். மேட்பகுதி இறகுகள் அடர் பழுப்பு நிறத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் திட்டவட்டமான உருவ வேறுபாடுகள் புலத்தில் கண்டறியப்படவில்லை. ஆதலால் வெவ்வேறு இடங்களில் 45 முறை பதிவு செய்த இக்குறிப்பிட்ட பறவையின் குரலை பகுப்பாய்வு செய்துள்ளனர். இதே போல் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் இது புதிய இனம் என உறுதி செய்துள்ளனர்.

இப்பறவை குறைந்தது 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடம் இருந்து பிரிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பூங்குருவி 1440 – 3800 மீட்டர் உயரமான வனப்பகுதிகளில் வாழ்கிறது. தரையில் உணவு தேடுகிறது, மூங்கில் மரங்களை அதிகம் பயன்படுத்துகிறது. நத்தை, பூச்சிகள், வெட்டுக்கிளிகள், எறும்புகள் ஆகியவை உண்ணுகின்றன.

Zoothera salimalii: Name Telling Birds Series 21 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 21 - பூங்குருவி Zoothera salimalii

இந்தியா, பூட்டான், மியான்மார், நேபால் மற்றும் வியட்னாம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. ஆனால் இந்தப் பறவை இனங்கள் இந்தியாவில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கில் இருந்து சீனாவில் வடமேற்கு யுனான் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பறவையின் குரல் மற்றப் பூங்குருவிகளின் குரலைவிட இனிமை வாய்ந்ததாக உள்ளதே இதன் தனிச்சிறப்பு.

இமாலய பகுதியில் மட்டும் வாழ்வதால் இந்தப் பறவைக்கு இமாலயன் ஃபாரஸ்ட் த்ரஷ் (Himalayan Forest Thrush) ஆங்கிலத்தில் பொது பெயர் வைத்துள்ளனர். அறிவியல் பெயராக Zoothera salimalii என்று இந்திய பறவையியல் வல்லுநரான டாக்டர் சலிம் அலி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சாலிம் அலி உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சாலீம் அலி நவம்பர் மாதம் 12 ஆம் நாள் 1987 ல் பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர்.

Zoothera salimalii: Name Telling Birds Series 21 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 21 - பூங்குருவி Zoothera salimalii
வலது – salimalii – Dr Sálim Moizuddin Abdul Ali (1896–1987)

அவருடைய மனைவியுடன் சேர்ந்தே விடைகளை தேடி அலைந்தார். நாடு விடுதலை அடைவதற்கு முன்பு சாலை வசதிகள் இல்லை, பள்ளம்-மேடான சாலைகளில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். இருவரும் சிறிய கூடாரங்களில் தங்கினர். அனைத்து விதமான கடினமான சூழலிலும் இருவரும் சேர்ந்தே பயணித்தனர். “The book of Indian Birds” என்று 1934-1939 வரையிலான காலத்தில் இந்தியப் பறவைகளை பற்றி புத்தகம் எழுதினர். இப்புத்தகம் 1941ல் வெளிவந்தது. விடுதலை போராட்டத்தின் மூலம் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவை சந்தித்து இப்புத்தகத்தை இவருடைய கையெழுத்துடன் கொடுத்தார். படித்து ஆச்சரியமடைந்த அவர் தனது மகள் இந்திரா காந்தி அவர்களுக்கு பரிசளித்ததை தொடர்ந்து உலக அளவில் இந்நூல் கவனத்தை பெற்றது. இந்நூல் உருவாக இவருடனேயே அனைத்து களப்பணிகளுக்கும் பயணம் செய்து, இந்நூல் எழுதுவதற்கும், திருத்துவதற்கும் இவருடைய மனைவி பெரும் உதவியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்து பிறகு அவர் தனிமையில் வேலை செய்த கடினங்களை வெளிப்படுத்தியதில் மனைவி தெஹ்மினா பேகம் அவர்களின் இழப்பு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Zoothera salimalii: Name Telling Birds Series 21 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 21 - பூங்குருவி Zoothera salimalii
சாலிம் அலி அவர்கள் எழுதிய புத்தகம்

சாலிம் அலி அவர்களின் ஆய்வு பறவைகளை மற்றும் காப்பாற்றவில்லை. கேரளத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகிவையும் காப்பாற்றப்பட்டன. தற்போதும் இவர் அறிமுகபடுத்திய பறவைகளின் காலில் வளையமிடுதல், மற்றும் இவர் வெளியிட்ட புத்தகம் ஆகியவையே பறவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தப் படைப்புகள் இன்றைக்கும் உலக அளவில் மதிக்கபட்டு வருகின்றன. இந்திய அரசு அவரை கௌரவிக்கும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.

Zoothera salimalii: Name Telling Birds Series 21 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 21 - பூங்குருவி Zoothera salimalii

இதுமட்டும் அல்லாமல் சாலிம்அலி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தன்வரலாற்று நூலான “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையை பற்றிய நூல் வெளியிட்டுள்ளார். சாலிம் அலி அவர்கள் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Latidens salimalii என்று ஒரு வௌவால் வகைக்கும் இவருடைய பெயர் வைத்துள்ளனர். எழுத்தாளர் ச.முகமதுஅலி அவர்களும் ஆதிவள்ளியப்பன் அவர்களும் இவரை பற்றிய நூலை எழுதியுள்ளனர்.

பறவை நோக்கல் என்பது பொழுதுபோக்காக ஆரம்பித்து பிற்காலத்தில் மொத்த இயற்கையையும் காப்பாற்ற ஆராய்ச்சி முடிவுகளை செயல்படுத்தி, அவரே பி.என்.எச்.எஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு ஏற்கும் அளவிற்கு உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் மேல் தட்டு மக்களால் பயன்படுத்திய பறவைநோக்கல் எனும் இத்துறை தற்போது அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மக்கள் என விரிந்துள்ளது. மேலும் இவை பற்றிய ஆராய்ச்சிகளை இன்னும் பரவலாக்க வேண்டும்.

வரும் 12 நவம்பர் அன்று சாலிம் அலி அவர்களின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. “நான் என்னுடைய பங்கை முடித்துவிட்டேன், இனி இளைஞர்களாகிய உங்கள் கையில்” என்று ஆங்கிலத்தில் “I suppose I have done my bit, Its now upto you younger people“ சாலிம் அலி அவர்களின் செய்தியுடனே இக்கட்டுரையை நான் முடிக்கிறேன்.

தரவுகள்
http://indianbirds.in/pdfs/IB_12_6_Singh_Blackbird_Thrush.pdf
https://www.conservationindia.org/articles/himalayan-forest-thrush
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/new-bird-found-himalayan-forest-thrush-304858-2016-01-21
https://avianres.biomedcentral.com/articles/10.1186/s40657-016-0037-2
சாலிம் அலி: உயரப் பறந்த இந்தியக் குருவி ஆசிரியர் ஆதி வள்ளியப்பன்

பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி