கட்டுப்பாட்டை இழந்த ஓர் ஆளுநர் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

கட்டுப்பாட்டை இழந்த ஓர் ஆளுநர் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




கேரளம் தற்போது கட்டுப்பாட்டை இழந்த வினோதமான ஓர் ஆளுநரின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒருநாள் அவர் கேரளப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார். மற்றொரு நாள் அவர் அரசாங்கத்தில் உள்ள ஓர் அமைச்சர் மீதான “விருப்பத்தைத் திரும்பப் பெறுவதாக”க் (“withdraws pleasure”) கூறி, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டார்.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தைத் தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளுநர் ஆரிப் முகமது கான், வேந்தராகப் பொறுப்பேற்ற சமயத்தில், அக்டோபர் 25 அன்று காலை 11.30 மணியளவில் மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களையும் ராஜினாமா செய்யக் கோரினார். இவ்வாறு கோரிய கடிதம் அக்டோபர் 24 அன்று அனுப்பப்பட்டது.

எட்டு துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய மறுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஒன்பதாவது துணை வேந்தர்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீக்கப்பட்டவராவார். அவர்கள் அளித்திட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்பு, ஆளுநர் தன் நிலையிலிருந்து பின்வாங்கிக் கொண்டு, அனைத்துத் துணை வேந்தர்களுக்கும் ‘நியமன நடைமுறையில் முறைகேடுகள் செய்தமைக்காக தங்களுடைய பதவிகளிலிருந்து ஏன் வேலை நீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்கு நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று கோரி காரணம் கோரும் அறிவிப்பை அனுப்பினார். பின்னர், இதேபோன்று காரணம் கோரும் அறிவிப்பை மேலும் இரு துணை வேந்தர்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

இவ்வாறான ஆளுநரின் இந்நடவடிக்கை சமீபத்தில் அவர் மேற்கொண்ட பல அருவருப்பான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். முன்னதாக, ஆளுநர், கண்ணூர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மறுநியமனத்தின்போது அவருடைய நியமன உத்தரவில் கையெழுத்திட்டபின், அவர் மறுநியமனத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினார். இந்த நியமனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்நியமனத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மிகவும் சமீபத்தில் ஆளுநர், கேரளப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மற்றும் அதன் செனட்டிற்கு எதிராகவும் போர்க்களத்தை மேற்கொண்டார். காலியாக இருக்கும் துணை வேந்தர் பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்திட, இருந்து வந்த தேர்வுக்குழுவின் விதிமுறைகள் சம்பந்தமாக உள்ள சட்டத்தின் ஷரத்துக்களையெல்லாம் ஓரங்கட்டி வைத்திட வேண்டும் என்று கோரினார். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை செனட் எதிர்த்தபோது, செனட்டில் இருந்த 15 பேர் செனட் உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து தான்தோன்றித்தனமாக நீக்கம் செய்யப்பட்டனர்.

இப்போதைய துணை வேந்தர்களுக்கு எதிராக ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடப்பு நடவடிக்கை, அவர் இந்தப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.

இந்தப் பல்கலைக் கழகங்கள் சம்பந்தமாக உள்ள சட்டங்களின்கீழ், வேந்தர் எந்தவொரு நபரையும் துணை வேந்தர் பதவியிலிருந்து தன்னிஷ்டத்திற்கு நீக்க முடியாது. உதாரணமாக, இந்தப் பல்கலைக் கழகங்களின் சட்டங்களின்கீழ், ஒரு துணை வேந்தர் நிதி மோசடி அல்லது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கிறது- இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் மீது உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, ஆளுநர், துணை வேந்தர்களை டிஸ்மிஸ் செய்திடுவேன் என்று மிரட்டுவதெல்லாம் சட்டவிரோதமாகும், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களுக்கு எதிரானதாகும்.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், ஒரு குறிப்பிட்ட நியமனம் சம்பந்தமாக, அந்தப் பல்கலைக்கழகத்தில் எழுந்த புகாரின் மீதான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இதர அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி ஆளுநர் நடவடிக்கை எடுத்ததற்கு எவ்வித சட்ட அடிப்படையும் கிடையாது. பல்கலைக் கழகங்கள் சிலவற்றின் சட்டங்களின்படி, பல்கலைக் கழகங்களின் தேர்வுக்குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஒருவரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவரும் இருப்பதோடு, மாநில அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். இதேமுறைதான் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற வேறு சில மாநிலங்களும் பின்பற்றுகின்றன. தேர்வுக் குழுவில், மாநில அரசின் சார்பில் எவரும் இருக்கக்கூடாது என்கிற ஆளுநரின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல.

ஆளுநர் கான் அவர்களுடைய நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் என்ன? பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும், ஆளும் கட்சியின் நபர்கள் துணை வேந்தர்களாகப் பொறுப்பேற்பதைத் தடுக்கவுமே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாக அவர் வாதிடுகிறார். இது, ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்வதற்காகவே மாநிலப் பல்கலைக் கழகங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மூடிமறைப்பதற்கான பச்சோந்தித்தனமேயாகும்.

ஆளுநர் கான் அவர்களால் தன்னுடைய பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற பதவி துஷ்பிரயோகம் செய்யப்படுவது தனித்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள், துணை வேந்தர்கள் மற்றும் கேந்திரமான பொறுப்புகளில் நபர்கள் நியமனங்கள் செய்யப்படுவதில் தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, பஞ்சாப்பில் நடைபெற்றுள்ள சம்பவமாகும். அங்கே ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித், பாபா ஃபக்ரித் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக புகழ்பெற்ற இதயநோய் நிபுணர் (cardiologist) ஒருவர் நியமனம் செய்யப்பட்டதை நிராகரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் நியமனமும் “சட்டவிரோதம்” என்று கூறி அவரையும் நீக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக ஆளுநர்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தான்தோன்றித் தனமான முறையில் தலையிடுவதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களின் சட்டமன்றங்களால் மாநிலப் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கேரளாவில், இந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்று பல்கலைக் கழக சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (The University Laws (Amendment) Bill) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தமானது, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுக்குழுவில் ஏற்கனவே 3 பேர்கள் இருந்ததை 5 பேர்கள் என அதிகரித்திருக்கிறது. ஆனாலும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் அளிக்கவும் இல்லை, அதனை விளக்கம் அல்லது ஆட்சேபனைகளைக் கோரி திருப்பி அனுப்பவும் இல்லை.

ஆளுநரின் ஆட்சேபனைப் போக்கு குறித்து விமர்சனங்கள் எழும்போது, ஆளுநர் கான், தன்னை விமர்சனம் செய்திடும் எந்த அமைச்சரையும் தனக்கு “விருப்பம்” இல்லை எனக்கூறி விலக்கிடுவேன் என்று மிரட்டத்தொடங்கி இருக்கிறார். இப்போது அவர், நிதி அமைச்சர், கே.என். பாலகோபாலை, தனக்கு “விருப்பம்” இல்லாத அமைச்சர் என அறிவித்து, அமைச்சரவையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவ்வாறு, அவர் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அவருக்கு அளிக்கப்படாத அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கி இருக்கிறார்.

துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான பரிகாரம், பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக அம்மாநிலத்தில் உள்ள ஆளுநர்களைக் கருதும் போக்கை நிறுத்துவதேயாகும். ஐமுகூ அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான எம்.எம்.புஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரை இவ்வாறுதான் கூறுகிறது. இந்த ஆணையமானது, ஆளுநர்களைப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாகக் கருதும் வழக்கத்திற்கு (convention) முடிவு கட்ட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

கேரளாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆளுநர் தலையிடுவதற்கு எதிரான போராட்டம் முக்கியமானதாகும். ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றால், அவை நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலைத் திணிக்க ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். ஆளுநரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்த்து முறியடிக்கப்படும். கேரள இடது ஜனநாயக முன்னணி, வரும் நவம்பர் 15 அன்று இந்த விஷயம் தொடர்பாக ஆளுநர் மாளிகை நோக்கி மக்கள் பேரணியை நடத்திட வேண்டும் என்றும், அப்போது கேரளாவில் உயர்கல்வி அமைப்புமுறையின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்பினை அடித்துவீழ்த்திட இவர்கள் செய்திடும் சூழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டப்படக்கூடிய விதத்தில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.

(அக்டோபர் 26, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

திரைவிமர்சனம்: ‘ராக்கெட்ரி’ – பொய்களின் அட்டகாசம் – ஆயிஷா. இரா. நடராசன்

திரைவிமர்சனம்: ‘ராக்கெட்ரி’ – பொய்களின் அட்டகாசம் – ஆயிஷா. இரா. நடராசன்




‘ராக்கெட்ரி’ – பொய்களின் அட்டகாசம்
ஆயிஷா . இரா. நடராசன்

ஒரு கலைப் படைப்பு உண்மையை பேசாவிட்டால், அது செல்லரித்துப் போன ஓவியத்துக்கு சமானமாகி ஆகிவிடும்.
சத்யஜித்ரே

அறிவியலை அல்லது அறிவியலின் வரலாற்றை முன்வைத்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் என்பவை குறைந்தபட்சம் பத்தாண்டு ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்டு – தொகுத்த முறையான ஆவணங்களை முன்வைத்து படமாக்கப்பட வேண்டியவை.

ஸ்டீவன் ஸ்பீல் பர்க்

(ஜீராசிக் பார்க் உட்பட திரைபடங்களின் இயக்குநர்)

ரொம்பவும் தயங்கி காலதாமதமாக நான் ராக்கெட்ரி படம் பார்த்தேன். இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய படம். எதுவும் தவறாக சொல்லிவிட வேண்டாம் என்று எவ்வளவு கட்டுப்படுத்தினாலும்… முடியவில்லை மனம் ஆற மறுக்கிறது.

ஏற்கனவே ‘மங்கள்யான்‘ மற்றும் ‘ராக்கெட் பாய்ஸ்’ எப்படி வரலாற்றை வளைத்து ‘அறிவியல் பூர்வமான‘ பக்தி அதிலும் தேசபக்தி பேசினவோ அதே வேலையைத்தான் ராக்கெட்ரி – நம்பி விளைவும் செய்கிறது. நம்பி விளைவா அல்லது நம்பிக்கை வாத விளைவா என்பதில் ‘உண்மை’ பேசியதற்காக நான் நடிகர் இயக்குனர் மாதவனை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் இந்து மத அடிப்படை வாதத்திற்கும் நமது ‘இஸ்ரோ’ வுக்கும் என்ன சம்பந்தம் என்று கொதிப்பவர்களும் ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன். நம் நாட்டில் ராக்கெட் விண்வெளி நோக்கி பறந்த போதெல்லாம் அடுத்த நாளே ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு தலைமை வகித்தவர் திருப்பதி சென்று மொட்டை போடுவதே நடைமுறை. தினசரிகளில் ஒரு நாள் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது என்றும் மறுநாள் ‘இஸ்ரோ‘ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் மொட்டை என்றும் வாசித்து வளர்ந்த ஒரு தலைமுறை விண்ணில் ராக்கெட் பறப்பதற்கும் திருப்பதியில் மொட்டை போடுவதற்கும் ஒரு ‘அறிவியல் பூர்வ‘ தொடர்பு இருப்பதாகவே நம்பியது என்பதன் தொடர்ச்சியே மாதவனின் நம்பி- விளைவு என்பதாக நான் பார்க்கிறேன்.

தன்னையும் அறியாமல் இந்தத் திரைப்படம் நாம் விவாதிக்க தகுந்த சில விஷயங்களை ஆங்காங்கே காட்சிகளாக விட்டுச் செல்கிறது விக்ரம் சாராபாய் முதல் அப்துல்கலாம் வரை ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நாசா இஸ்ரோ, பிரெஞ்சு கியானா விண்வெளி நிறுவனம் என்று விரியும் அறிவியல் காட்சிகளில் கூட அறிவியலை விட, நம்பி நாராயணனின் பக்திக்கும், தேசபக்திக்கும் அதிகம் உரையாடல்கள் முக்கியத்துவம் தருகின்றன. நெற்றியில் விபூதி குங்குமம் கமழ கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திர தீவிர அறிவியல் சோதனையில் ஒரு விஞ்ஞானி ஈடுபடுவதை காட்டுவது நியாயமா என்று நீங்கள் கேட்க முடியாது நமது இஸ்ரோ, டி.ஆர். டி .ஏ இங்கெல்லாம் கோட் சூட்டு போட்ட விபூதி – நாயகர்கள் சகஜமாக இடம் பெற்றுள்ளது எதார்த்த சூழல் தான் என்றாலும் கேரளத்திற்கு 2013ல் விஜயம் செய்த தற்போதைய பிரதமர் (அப்போதைய குஜராத் முதல்வர்) திரு நரேந்திர மோடியுடனான விஞ்ஞானி நம்பி நாராயணனின் சந்திப்பிற்கு பிறகு தான் நம்பி நாராயணன் பொதுவெளியில் குங்குமப் பொட்டு வைத்து பிரவேசம் செய்தார் என்பதும் பாஜக மாநிலங்கள் அவை உறுப்பினர் ராஜூ சந்திரசேகர் முன்மொழிவின்படி நம்பி நாராயணன் 2018 இல் பத்மபூஷன் விருது பெற்றதையும் படம் பேசும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறுதான் அது சரி யார் இந்த நம்பி நாராயணன்.

இந்தியாவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப வாதிகளில் ஒருவர். அதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. தமிழ்நாட்டுக்காரர். நாகர்கோவிலில் ஒரு தமிழ் குடும்பத்தில் 1941 இல் பிறந்தவர் நாகர்கோயில் டி.வி,.டி ஹை ஸ்கூலில் படித்து மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை இயந்திரவியல் பொறியியலில் முடித்தார். கல்லூரி மாணவராக அவர் வாழ்வின் கடும் சோதனை களை எதிர் கொண்டவர். பட்டப்படிப்பு முடிவதற்குள் தந்தையை தாயை இழந்து தங்கைகளை கரை சேர்க்கும் பொறுப்பை ஏற்று தவித்த போதும் 1966 இல் தும்பா ராக்கெட் தளத்தில் தொழில்நுட்ப உதவியாளராக இஸ்ரோ பணியில் சேர்ந்தார்

உடன் பணி செய்தவர்களில் ஒருவரான ஆராவமுதனின் வழிகாட்டுதலில் நாசாவின் உதவித்தொகையோடு (அதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தை ராக்கெட் ஊர்தி இயலில் பெற சேர்ந்தார் . இத்தாலிய ராக்கெட் விஞ்ஞானி கணிதவியலாளர் லூயிகி குரோக்கோவின் கீழ் திரவ -எரிபொருள் வானூர்திகள் குறித்து ஆய்வு செய்தார் நம்பி நாராயணன்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றிய இயலில் முதுநிலை பட்டம் வென்றவர் வெறும் திட- எரிபொருள் ராக்கெட் சார்ந்து இந்திய விண்வெளி ஊர்தி இயல் செயல்பட்ட ஆண்டுகளான 1969-1970 களின் தொடக்கம் அது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணி செய்ய தேர்வு பெற்ற நம்பி நாராயணனை இந்திய விண்வெளி கனவுகளில் வந்து இணையுமாறு விக்ரம் சாராபாய் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார். திரவ – எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பம் அறிந்தவராக நம்பி நாராயணன் இந்தியா திரும்பியது இப்படித்தான்.

1970 களின் நம்பி நாராயணன் பற்றி நாம் அப்துல் கலாம் உட்பட பலரது கருத்துப் பதிவுகள் வழியே தேடி ஆராய முடியும் 1974 முதல் 1994 வரையிலான இருபது வருடங்கள் அவரது உழைப்பு காலம் என்று கருதலாம். முதல் பத்தாண்டுகள் – அதாவது 1974- 1985 வைக்கிங் காலகட்டம் என்று சொல்லலாம். வைக்கிங் எனும் ராக்கெட் எஞ்சின் பிரான்ஸ் நாட்டின் சோசியட் யுரோபினி டி புரொபல்ஷன் எனும் விண்வெளி அமைப்பு சார்ந்தது சதீஷ் தவான் எனும் மாமனிதர் இஸ்ரோவின் தலைவராக பம்பரமாய் சுழன்று பணியாற்றிய அந்த நாட்களில் திரவ எரிபொருள் ராக்கெட் இன்ஜினான வைக்கிங்கை இந்தியா பெறுவதற்கு பிரான்சோடு ஒப்பந்தம் போடப்பட்டது. யுரோபினி டி புரொபல்ஷன் அந்த தொழில் நுட்பத்தை இந்திய பொறியாளர்களுக்கு வழங்க 100 நாள் பணி திட்டத்தை அறிவிக்க மூன்று குழுக்களாக சதீஷ் தவான் தொழில்நுட்பத்தை பெற இஸ்ரோ தொழில் நுட்பவாதிகளை அனுப்புகிறார். அதில் ஒரு குழுவிற்கு தலைமை ஏற்றவர் நம்பி நாராயணன். வைக்கிங் ராக்கெட் இன்ஜினின் இந்திய வடிவம் விக்காஷ். மயிலாடுதுறை காரரான இஸ்ரோ விஞ்ஞானி சூரிய நாராயணன் சீனிவாசன், உடுப்பி ராமச்சந்திர ராவ் உட்பட பலரது உழைப்புதான் பிற்கால பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆக பரிணமித்தது. சிறந்த அந்த விக்காஷ் இஞ்ஜின் வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்தவர் நம்பி நாராயணன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போது கொஞ்சம் திரைப் படத்திற்கு திரும்பவோம். படம் நம்பி நாராயணன் மைய வாழ்க்கை கதை என்றாலும் நம்பி நாராயணனே விகாஷ் ராக்கெட் இன்ஜினை கண்டுபிடித்தார் என்று காட்டுகிறது. நாசாவிலிருந்து இந்தியாவுக்கு அவர் வந்தது தேசபக்தி காட்சியாகிவிட்டது. வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்கும் பின்னணியில் விக்காஷ் பி எஸ் எல்வி ஆகி விண்ணில் பறக்கிறது தி பியூட்டிஃபுல் மைண்ட் (கணிதமேதை ஜான் நேஷ் வாழ்க்கை கதை) படத்தைப் போலவோ தி தியரி ஆஃப் எவரித்திங் – ( ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கைக் கதை) படத்தைப் போல மெய்சிலிர்ப்பு தருணமாக விகாஷ் இயந்திர காட்சிகள் மனதில் பதிய மறுக்கிறது. காரணம் வெறும் உரையாடல்களில் அறிவியலைக் கரைத்து கடந்து போய்விடுகிறார்கள். ஒரு அற்புத தொழில்நுட்பக் குழுவின் சாதனையை ஒரு மனிதரின் சொந்த சாதனையாக காட்டுவதால் போலித்தனம் வந்து விடுவதை பார்க்கிறோம். 1985இல் விகாஷ் விண்ணில் பிஎஸ்எல்வியாக பறந்தது சத்தீஷ் தவானின் இன்-சாட்(Ind-Sat) பெருந் திட்டம் அதை தனது (பெரிய திட்டத்தின்) ஒரு பகுதியாக கொண்டிருந்தது. ஆனால் வெங்கடேச சுப்ரபாதம் இசைக்க விக்காஷ் விண்ணில் பறக்கும் காட்சி என்ன சொல்ல வருகிறது. இன்றுவரை அந்த விக்காஷ் இஞ்ஜின் இஸ்ரோவின் பல நிபுணர்களால் பலவிதத்தில் மேம்பாடு கண்டுள்ளதை எந்தக் கணக்கில் சேர்ப்பது.

எ பியூட்டிஃபுல் மைண்ட் (A beautiful mind ) திரைப்படம் ஜான் நேஷ் எனும் கணிதமேதையின் வாழ்க்கை வரலாற்றை பற்றியது. கேம் தியரி (Game Theory)யில் ஒழுங்கின் மை கோட்பாட்டியலின் கண்டுபிடிப்பை பாதி நிகழ்த்தும்போது மனப்பிரழ்வு நோய் (ஸ்கிஸோஃபெர்னியா) ஏற்படுகிறது.

தன்னை சுற்றி மனிதர்கள் சிலர் இருப்பதாக கற்பனை செய்து கொள்வார் நேஷ். இருபதாண்டுகள் கழித்து அவருக்கு ஒரு நாள் ‘சரியாகிவிடும்’. காதலியும் மனைவியுமான ‘ரோஸ்’ (அலிஸியா) கதாபாத்திரம் மூலம் எவ்வளவோ செண்டில்மெண்ட் பேசி இருக்கலாம். ஆனால் அந்த பிரின்ஸ்டன் பல்கலைகழக நூலக கரும்பலகை காட்சியை மறக்கவே முடியாது. பாதிக்கணித வரையரைகளை எழுதி அத்தோடு நோய்வாய்படுவார் ஜான் நேஷ். அங்கே ஹான்சன் எனும் பேராசிரியர் ஜான்நேஷின் எதிரியாக இருப்பார். இருபதாண்டுகள் கழித்து நோய் குணமாகி ஜான்நேஷ் பிரின்ஸ்டன் திரும்பும்போது அதே ஹான்சன் கணிதத்துறை தலைவர் ஆகிஇருப்பார். நூலகத்திற்குள் நுழைவார் ஜான் நேஷ். இருபதாண்டுகளுக்கு முன் அவர் எழுதி முடிக்காமல் விட்ட கணித வரையரைகளை அழிக்காமல் பாதுகாத்திருப்பார்கள். அவர் விட்ட இடத்தில் இருந்து மீதியை எழுதுவார்…ஒழுங்கின்மை கோட்பாடு (KYOS Theory) பிறக்கும். பின்னே இருந்து ஹான்சன் வெற்றிப்புன்னகைபுரிவார். அடுத்த காட்சி நோபல் பரிசு.

கரும்பலகையில் அவர் எழுதுவது என்ன என்பது நமக்கு புரியாதுதான். ஆனால் நமது சிலிர்ப்பு அவரது ‘கண்டுபிடிப்பை’ கொண்டாடும் (இயக்குநர்.ரான் ஹவர்டு)

அதேபோல ‘தி தியரி ஆஃப் எவரித்திங் (The Theory of Everything) படம். அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைகள் குறித்த தன் ஆய்வை சமர்ப்பிக்கும் காட்சி. கருந்துளைகள் பற்றிய தனது புரிதலையும் – மோட்டார் நியூரான் நரம்பியல் நோய் முழுதும் முடமாக்கியும் தன்னால் தான் நினைத்ததை வெளிப்படுத்த முடியும் என்பதையும் – ஒருங்கே ஸ்டீபன் ஹாக்கிங் சுயமாக அறியும் அந்தத் தருணம் நமக்கு ஏற்படுத்தும் விம்மல்கள் அலாதியானவை (இயக்குநர் ஜேம்ஸ் மார்ஷ்)

அப்படி ஒரு அறிவியல் பூர்வ உணர்ச்சிப்படமாக ராக்கெட்ரி இல்லை. சொல்லப்போனால் சில இடங்களில் ஒரு பள்ளிக்கூட மேடை நாடகம் போல போலித்தனம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் நம்பி நாராயணன் எனும் இஸ்ரோ விஞ்ஞானி மீதான குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த காட்சிகளுக்குள் நுழைகிறோம். 1994 இல் நம்பி நாராயணன் திடீரென்று அவராகவே முன்வந்து இஸ்ரோவிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அது படத்தில் இல்லை ஆர்.பி. ஸ்ரீகுமார் எனும் காவல்துறை உயர் அதிகாரி மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் விக்ரம் சாராபாய் மைய இயக்குனராக இணைகிறார். நம்பிநாராயணின் கூற்றுப்படி இந்த ஸ்ரீ குமார் தனது உறவினர் ஒருவருக்கு இஸ்ரோவில் வேலை கேட்டு வருகிறார். நம்பிநாராயணன் தகுதி அடிப்படையில் தான் வேலை தர மறுப்பதால் ‘இதற்கு ஒரு நாள் வருத்தப்படுவீர்கள்’ என்று ஸ்ரீகுமார் எச்சரித்ததாக பதிவாகியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் தயவில் அவரது ஈடுபாட்டில் இந்தியா ராக்கெட் தொழில் நுட்பத்தில் உலக ‘சாம்பியன்’ அந்தஸ்து பெறுவதை தடுத்திட ‘அயல்நாட்டு’ சதி என்று ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது திரைப்படத்திற்கு தேவையான விறுவிறுப்பு தீனிக்கு இது போதும் நம்பி நாராயணன் உண்மையில் சிறையில் இருந்த்து ஒரே ஒருநாள் மட்டுமே என்கிறார் உடன் கைது செய்யப்பட்ட சக விஞ்ஞானி சசிக்குமார். அவர் சிறைக்கு வரும்போதே வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டிருந்த்து.

ஆனால் ஒரு அறிவியல் புனைவாக இத்திரைப்படம் பரிணமித்திருக்க முடியும். திரவ எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பம் சார்ந்தும், தாழ்ந்த வெப்ப நிலை இயல் (கிரையோஜெனிக்ஸ்) பற்றியும் மிக சுவையான காட்சிகளை சேர்த்து அறிவியல் சார்ந்த இளைய தலைமுறை ஆர்வத்தை தூண்டி இருக்க முடியும். ஒரு தொழில்நுட்பக் குழு அதன் தலைவராக நம்பி நாராயணன். அது ஒரு சிறப்பு விஞ்ஞான குழுவாக எப்படி ஒரு தொழில்நுட்பத்தை இந்தியாவில் கிடைத்ததை வைத்து நம் மண்ணிற்கான தாக மாற்றியது என்பது மிக சுவையான விஷயமாகும் இக்குழு ஸ்விட்சர்லாந்தில் 1877-ல் ரவுல் பிக்டெட் – வாயுக்களை திரவமாக்கிட பயன்படுத்திய (பிறர் இந்த முறைப்படி முயன்ற போது) நீர் துளி முறையை தவிர்த்து, சிக்முந்த் வுரூபிளேஸ்கி என்பவரால் போலந்தில் 1883 ல் முயலப்பட்ட கெல்வின் வெப்பமானியின் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் குறைவெப்ப திரவ ஆக்க முறையை ( அதாவது ஆக்சிஜன் 77 கே குறை வெப்பத்திலும் நைட்ரஜன் 90கே குறை வெப்பத்திலும் திரவமாக மாறும்) மாற்றி யோசித்தது இந்த விஷயம் நைட்ரஜனுக்கு பதிலாக ஹைட்ரஜனை பரிசோதித்த பிறகு முழுமை கண்டது.

நம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திர கிரியில் திரவ இயக்கத்திட்ட மையத்தை அமைத்தவர் நம்பிநாராயணன் அல்ல. ஜி. எஸ். எல்.வி மார்க்-3 என்ற ராக்கெட் உருவாக்கத்தின் பின்னணியில் பல அடுத்தடுத்த தோல்விகள் உண்டு பிறகு முழுமையாக பல அடுக்கு முயற்சிகளுக்குப் பிறகு 2014(மோடி பதவி ஏற்பதற்கு பல மாதங்கள் முன்) ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் கதை மிக சுவாரசியமானது அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா, ஜப்பான் அதற்கடுத்து திரவ –குளிர் வெப்ப ராக்கெட் தொழில்நுட்பம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. 1991ல் ரஷ்யாவோடு ஏற்பட்ட ஒப்பந்தம் 1988 புஷ்-மன்மோகன் ஒப்பந்தம் என்று சர்வதேச அரசியலும் இதில் உண்டு.

இந்த கிரையோ ஜெனிக் ராக்கெட் இயந்திர சாதனைகளின் பின்னணி டாக்டர் ஏ. இ. முத்து நாயகம் எனும் (நாகர்கோவில்காரார்) மாபெரும் ராக்கெட் அறிஞரையும் அவருக்கு கீழே செயல்பட்ட நம்பி நாராயணன் உட்பட ஒரு தொழில்நுட்ப குழுவையும் சாரும். அந்த குழுவிற்கு சத்தீஷ் தவான் முதல் ராதாகிருஷ்ணன் வரை இஸ்ரோவின் தலைமை எப்படி உறுதுணையாக இருந்தது,
அவர்களது போராட்டம் என்ன வென்றது எப்படி என்று ஒரு அற்புத- அறிவியல் தொழில்நுட்ப போராட்டத்தை திரைக்காவியம் ஆக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

இயக்குநர் மாதவனின் பஞ்சாங்கம் குறித்த கருத்து படத்தை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் நம்பி நாராயணின் உறவினராக (அக்காள் மகன்) அருணன் என்று ஒரு பாத்திரம் வருகிறது. உண்மையில் மருமகனான அருணனும் இஸ்ரோ விஞ்ஞானி ஆனால் ஒரு காட்சியில் அருணன் பஞ்சாங்கத்தை காட்டி நம்பியிடம் பேசுவது போலவருவது வேதகால அறிவில் இல்லாததே இல்லை எனும் நம்பிக்கை வாதமே. பிராமண-அறிவு வாதம் எனும் திரிபை அறிவியல் இனிப்பு -கிரீம் –பூசி சந்தையில் இறக்கி இருப்பதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை. அல்மனாக் எனும் வானியல் சார்ந்த வருட நாட்காட்டிகளைத்தான் மாதவன் பஞ்சாங்கம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டார் என பல வகை விளக்கங்கள் தரப்பட்டன. பாபிலோனியர் தொடங்கி வானின் நிகழ்வுகளை முன் அறிவிக்கும் ஆண்டுக் கணிப்புகளை பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். சந்திர, சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்களின் (Constellation) வான் -அமைப்பு முதல் பருவ காலங்களின் மாற்றம் உட்பட அறிவியல் முறைப்படியானா அத்தொகுதிகளை நம் நாட்டில் வெளியிட ஜந்தர் மந்தர் உட்பட எவ்வளவோ வகையில் முயன்று வெற்றி கண்ட வானியல் துறை வேறு சடங்குகளை முன்னறிவிக்கும் மத அடிப்படைவாத பஞ்சாங்கம் வேறு என்பதை இயக்குனர் நடிகர் மாதவன் உள்ளிட்டவர்களுக்கு நாம் ‘வேலை மெனக்கட்டு’ விளக்க வேண்டியதாகிறது. வானிலை முன் அறிவிப்பு வரை பல அறிவியல் சார்ந்த ஆழமான- வரலாறு வானியல் பதிவுகளை ‘பஞ்சாங்கம்‘ எனும் சொல்லாக்கத்திற்குள் அடக்குவதற்கும் பிள்ளையார் உருவானதே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அன்றே இருந்ததற்கு சாட்சி என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லை.

நம்பி விளைவு இந்திய ராக்கெட் முன்னேற்றத்தை சாதிக்காமல் இருக்க –‘எதிரி நாடு சதி செய்து’ -கேரளத்தின் கருணாகரன் அரசு அவர் மீது- பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை கடத்தியதாக தேச துரோக வழக்கு பதிவுசெய்து கைது செய்கிறது. 1994 இல் நடந்த சம்பவம். நம்பி நாராயணன் சக விஞ்ஞானி ஒருவரின் வீடியோ பதிவு முதலில் வெளிவந்தது மாலத்தீவின் மிரியம் ரிஷிதா பவ்சியா ஹசன் ஆகியோருக்கு ராக்கெட் வரைபடங்கள் சிலவற்றை ‘விலைக்கு‘ நம்பி விற்றார் என்பதே குற்றச்சாட்டு அதன் பின்னணி காரணம் நம்பிக்கும் சகாவுக்குமான டெண்டர் போட்டி சர்ச்சைகள் என்பது பின்னர் தெரிய வருகிறது முதல்வர் கருணாகரனின் காங்கிரஸ் கோஷ்டிக்கும் ஓமன் சாண்டி கோஷ்டிக்குமான பிரச்சினையாக அதை பார்ப்பதும் பிறகு அடுத்த 50 நாட்களில் அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதும் இருக்கட்டும். சிறை வாழ்வின் காவல்துறை கொடுமைகளை நம்பி எனும் விஞ்ஞானி அனுபவித்த நாட்களில் இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் டாக்டர். கஸ்தூரி ரங்கன் என்பதும் சட்ட நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று அவர் அறிவித்ததையும் திரைக்கதை வசதியாக மறந்துவிட்டது இ.கே நாயனார் (கம்யூனிச) அரசு இந்த விஷயத்தில் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் சிபிஐ வழக்குமன்றத்திலும் மனிதஉரிமை ஆணையத்திலும் பிறகு நடந்த திருப்பு முனைகளையும் குர்ஷித் ஆலம்கான் சுக்தேவ் சிங் காங் என்று வரிசையாக கேரள கவர்னர்களின் பங்களிப்புகள் என நாம் நிறைய பேசலாம். இவற்றின் ஊடாக ‘ஜெய் பீம்’ போலவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு காலத்தில் வெளிவந்த (ஜெய்சங்கர் சுஜாதா படமான) ‘விதி’ போலவோ சட்ட போராட்டத்தையாவது படம் பேசியிருக்கலாம்.

ஆனால் அறிவியல், மனித உரிமை இவை பற்றி எந்த சொரணையும் நமக்கு ஏற்படவில்லை கோர்ட்டு நிரபராதி என்று நம்பி நாராயணனை அறிவிக்கும் காட்சி நேரடியாக படமாக்கப்பட்டிருக்கலாம். அதே நீதிமன்றத்தில் நம்பி- மன நிறைவு அடைவதையாவது காட்டி இருக்கலாம் ஆனால் அதை பூஜை அறை காட்சியாக்கி தான் நிரபராதி என்று நிரூபணமாகிவிட்டது. என தனக்கு போன் வந்தது என்று தன் மனைவி மீனா நம்பி (சிம்ரன்) யிடம் அவர் சொல்வது போல வருவதால் அது மீண்டும் பக்தி தேச பக்தி சம்பந்தப்பட்டே அமைகிறது. எனவே இப்படியான ஒரு திரைப்படம் ஒன்று அது சார்ந்து இயங்கும் அறிவியலை முழுமையாக பேசியிருக்க வேண்டும் அல்லது அரசின் மெத்தனம் சட்டப் போராட்டம் என்று விரித்துரைத்து இருக்க வேண்டும் இரண்டையுமே செய்யத் தவறி வெறும் அயல் சதி-பக்தி- மதவாத – சென்டிமென்ட் பேசுவதால் அந்த கடைசி காட்சியில் அவர் முன் சூர்யா (தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்) மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதும் கூட அத்தகைய தேச சென்டிமென்ட் பட்டியலிலேயே சேர்ந்து விடுகிறது.

கணினி உலக மேதை ஆலன் ட்ர்ரிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் தி இமிடேஷன் கேம் (2014) போலவோ உயிரியல் சூழலியல் விஞ்ஞானி டியான் ஃபோஸி அம்மையாரின் ருவாண்டக் காடுகளது சவால்களைப் பேசிய கொரில்லான் இன் மிஸ்ட் (1988) படம் போலவோ அல்லது குறைந்தபட்சம் சார்லஸ் டார்வினின்- படைப்புகள் பற்றிய மனப்போராட்டத்தை பேசும் கிரியேஷன் (2009) மாதிரியாவது ஒரு அறிவியல் படமாக ‘ராக்கெட்ரி’யை நாம்மால் பரிசீலிக்க முடியவில்லை- காரணம் அது பேசும் நம்பி – விளைவு எனும் நம்பிக்கை வாத (செண்டிமென்ட்) விளைவே ஆகும்.

இந்திய அறிவியலில் இருண்ட சரித்திரத்தை உண்மையான அறிவியல் வரலாற்று படமாக எடுக்கவேண்டுமாயின் இயற்பியல் அறிஞர் மெக்நாட் சாஹா முதல் மக்கள் விஞ்ஞானி ஜி.டி.நாயடு வரை பல துயர சகாப்தங்கள் காத்திருக்கின்றன. என்பதே உண்மை. அறிவியல் என்பதே ராக்கெட் செயற்கை கோள் ஏவுகணை சோதனை என்பது மட்டும்தான் என மக்கள் நம்பும்வரை நம்பி – விளைவுகளே எடுபடும்.

நூல் அறிமுகம்: சிவகுமாரின் ’திருக்குறள் 50’ (அகம் மலர்ந்த தருணங்கள் கட்டுரை) – பாவண்ணன்

நூல் அறிமுகம்: சிவகுமாரின் ’திருக்குறள் 50’ (அகம் மலர்ந்த தருணங்கள் கட்டுரை) – பாவண்ணன்




கற்பதன் வழியாக நாம் அடைவது கல்விஞானம். விடாமுயற்சியும் ஊக்கமும் அதற்கு அவசியம். சொந்தமாகக் கற்க இசைவான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மற்றவர்கள் வழியாக சிறுகச்சிறுக அறிந்துகொள்வது கேள்விஞானம். அதற்கு பொறுமையும் நட்பார்ந்த சூழலும் அனைவரோடும் நெருங்கிப் பழகும் நல்லிணக்க மனமும் அவசியம். வாழ்வில் தானே நேரில் கண்டதும் கேட்டதுமான நிகழ்ச்சிகள் வழியாகவும் பிறர் சொல்லக் கேட்ட நிகழ்ச்சிகள் வழியாகவும் எங்கெங்கோ துணுக்குத்துணுக்காகப் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டவை வழியாகவும் நாம் அடைவது   அனுபவஞானம். மூன்று வழிகளும் முக்கியமானவை. மூன்றுமே நம் மனவிரிவுக்கு வழிவகுப்பவை. மனம் விரிந்தால்தான் நம் பார்வை விரியும். மனம் சுருங்கினால் வாழ்க்கையே சுருங்கிவிடும்.

சிவகுமார் தான் அடைந்த மனவிரிவின் விளைவாக  சமீப காலமாக இலக்கியத்தையும் வாழ்க்கைநெறிகளையும் இணைத்துப் பார்க்கும் பார்வையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். கம்பராமாயணத்தையும் மகாபாரதத்தையும் முன்வைத்து அவர் ஆற்றிய உரைகள், அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. தற்போது அவருடைய கவனம் திருக்குறள் மீது திரும்பியிருக்கிறது. தீராத தேடல் கொண்ட அவருடைய மனம் தற்போது தன் வாழ்க்கையனுபவங்களையும்    திருக்குறளையும் இணைத்துப் பார்ப்பதில் முனைந்திருக்கிறது. அந்த முயற்சியில் தன் அகம் மலர்ந்த தருணங்களை பொருத்தமான கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருக்கிறார். அல்லயன்ஸ் அதைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.

இத்தொகுதியில் ஊராருக்கு குடிநீர் கொடுத்து உதவிய பேச்சியம்மாள் என்னும் பெண்மணியைப்பற்றி மன எழுச்சியூட்டும் வகையில் சிவகுமார் எழுதியிருக்கும் கட்டுரை மிகமுக்கியமானது. மின்சார வசதி இல்லாத காலத்தில் கிணற்றுநீர்ப் பாசனத்தின் உதவியோடு விவசாயம் செய்துகொண்டிருந்தது பேச்சியம்மாளுடைய குடும்பம். ஒருபக்கம் கிணற்றிலிருந்து வாய்க்கால் வழியாக விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் குடிநீருக்காக குடங்களோடு தொலைதூரத்திலிருந்து நடந்துவரும் பெண்மணிகளுக்காக இருபதடி நீளமும் பத்தடி ஆழமும் ஐந்தடி அகலமும் கொண்ட பெரிய தொட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பார் பேச்சியம்மாள். தண்ணீர் தீரத்தீர தொட்டியை நிரப்பிவைத்துக்கொண்டே இருப்பார் அவர். 

அந்த வட்டாரத்திலேயே அவருடைய கிணற்றைத்தான் மக்கள் தேடி வருவார்கள். அடுத்தடுத்த தோட்டங்களில் கிணறுகள் இருந்தாலும் தோட்ட உரிமையாளர்கள் பிறரை தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. யாராவது குடத்துடன் வருவதைப் பார்த்ததுமே அங்கே வேலை செய்பவர்கள் மாட்டுசாணத்தை எடுத்து அந்தத் தொட்டித்தண்ணீரில் கலந்துவிடுவார்கள். அப்படி ஒரு காலம். சில கிணறுகளின் தண்ணீர் அருந்துவதற்குத் தகுதியுடையதாக இருக்காது. ஊருக்கு ஒரு பொது நீர்த்தேக்கத்தொட்டி வரும் காலம் வரைக்கும் ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக அக்கம்பக்கத்து கிராமங்களில் வசித்த மக்களின் தண்ணீர்த்தேவையை நிறைவுசெய்த பேச்சியம்மாள் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்து மறைந்தார்.  பேச்சியம்மாளின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்துகொள்ளும் சிவகுமார், அவருடைய சித்திரத்தை  ”ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு” என்னும் திருக்குறளோடு இணைத்திருக்கும் விதம் நன்றாக உள்ளது. 

தன் ஓவிய நண்பரான மனோகர் தேவதாஸ் பற்றி இன்னொரு கட்டுரையில் சுருக்கமான ஓர் அறிமுகத்தை அளித்திருக்கிறார் சிவகுமார். மனோகர் கோட்டோவியங்கள் வரைவதில் திறமை மிக்கவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்தியும் சென்னை நகரில் உள்ள பழைய காலத்துக் கட்டடங்களை முன்னிலைப்படுத்தியும் அவர் வரைந்த கோட்டோவியங்கள் எண்ணற்றவை. அவையனைத்தும் கருப்புவெள்ளைக் கோடுகளைக் கொண்ட அற்புதமான காவியம் என்றே சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவரிடம் பார்வைக்குறைபாடு உண்டு. மதுரை வரலாற்றின் பக்கங்களை மனைவி மகிமா படித்துக்காட்ட, பூதக்கண்ணாடி உதவியுடன் அவர் அக்காட்சிகளை ஓவியங்களாக வரைவார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஒருமுறை அவர் தன் மனைவியுடன் காரில் பயணம் செய்தபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் அவர் மனைவியின் உடல் கழுத்துக்குக் கீழே செயல்படாத நிலைக்குச் சென்றுவிட்டது. அந்த நிலையிலும் மனம் தளராத மனோகர் தேவதாஸ் தன் காதல் மனைவி மகிமாவுக்கு அவரே ஒரு தாயைப்போல ஆண்டுக்கணக்கில் எல்லாச் சேவைகளையும் செய்தபடியே ஓவியத்திலும் சாதனை புரிந்தார். தாய்மை நிறைந்த அக்கலைஞனைச் சந்தித்த அனுபவத்தைப்பற்றிய சிவகுமாரின் குறிப்பு மனத்தை நெகிழவைக்கிறது.

அப்துல்கலாம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது சிவகுமார் பழையபுத்தகம் வாங்கி விற்கும் ஒரு கடைக்காரரைப்பற்றி அளித்திருக்கும் சின்னஞ்சிறு தகவல் மனிதர்களைப்பற்றி நாம் வைத்திருக்கும் முன்முடிவுகளைக் கலைத்துவிடுகிறது. மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, முடிந்த அளவுக்கு கூடுதல் விலைக்கு விற்க முயற்சி செய்வார்கள் என்பதுதான் பழைய புத்தகக் கடைக்காரர்களைப் பற்றி பொதுமக்களின் மனத்தில் பதிந்திருக்கும் எண்ணம். ஆனால் அப்துல் கலாம் சந்தித்த மூர் மார்க்கெட் புத்தகக்கடைக்காரர் அப்படிப்பட்டவரல்ல. 

அப்துல் கலாம் அப்போது குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் ஏரோனாடிக்ஸ் என்ஜினீரிங் படித்துவந்த காலம். அச்சமயத்தில் தமிழகத்தைச் சூழ்ந்த கடும்புயல் ராமேஸ்வரத்தை அதிக அளவில் தாக்கி சீரழித்துவிட்டது. அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த படகுகளும் வீடும் கடலில் மூழ்கிவிட்டன. அவருடைய அப்பா அந்தச் செய்தியை அவருக்கு கடிதம் வழியாகத் தெரிவித்தார். கல்லூரி மாணவராக இருந்த கலாமுக்கு உடனடியாகச் சென்று பெற்றோரையும் சகோதரர்களையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனால் பயணச்செலவுக்கு அவரிடம் பணமில்லை. ஒருமுறை அவரை கல்லூரியில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏரோ ஸ்ட்ரக்ச்சர்ஸ் அண்ட் ஏரோ எலாஸ்டிசிட்டி என்ற அபூர்வமான புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அந்தப் புத்தகத்தை தன் மேசை மீது இருப்பதைப் பார்த்ததும் அவருக்குச் சட்டென ஒரு திட்டம் உதித்தது. உடனே அப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு மூர் மார்க்கெட்டுக்கு ஓடி அறிமுகமான புத்தகக்கடைக்காரர் முன்னால் நின்றார். அப்புத்தகத்தை நானூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அந்தப் புத்தகத்தைப் புரட்டியதுமே அதன் மதிப்பைப் புரிந்துகொண்டார் புத்தகக்கடைக்காரர். அதே சமயத்தில் அந்த மாணவரின் நெருக்கடியான நிலையையும் புரிந்துகொண்டார். 

லாபம் மட்டுமே குறிக்கோள் என இயங்கும் சாதாரணமான புத்தகக்கடைக்காரராக இருந்தால், சத்தம் போடாமல் அவர் கேட்ட தொகைக்கு புத்தகத்தை வாங்கிவைத்துக்கொண்டு இரண்டு மூன்று மடங்கு கூடுதலான விலைக்கு அப்புத்தகத்தை விற்றுப் பணம் பார்த்திருக்கமுடியும். எனினும் அந்தக் கடைக்காரருக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அந்தப் புத்தகத்தை அடமானமாக வைத்துக்கொள்வதாகவும் தற்சமயம் அறுபது ரூபாய் தருவதாகவும் பிறகு எப்போதாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்து மீட்டுக்கொண்டு செல்லும்படியும் சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்தனுப்பினார். எதிர்பாராத விதமாக அவர் நடந்துகொண்ட முறை அப்புத்தகத்தையும் காப்பாற்றியது. அவரையும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது.

சிவகுமார் தன் நண்பரான சீனு என்பவரைப்பற்றி எழுதும்போது அவருடைய மனைவி உஷாவைப்பற்றியும் சேர்த்து எழுதியிருக்கிறார். அதன் பின்னணியில் உள்ள வலிமையான காரணத்தை குறிப்பிட்ட அத்தியாயத்தைப் படித்து முடித்ததும் புரிந்துகொள்ள முடிகிறது. பத்தாவது படிக்கும்போது நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் காலை இழந்தவர் சீனு. செயற்கைக்காலோடு வாழப் பழகிவிட்டார். கடுமையாக முயற்சி செய்து சி.ஏ. முடித்து ஆடிட்டராகப் பணிபுரிந்தார். ஒரு நாடக சபாவின் செயலாளர் என்கிற முறையில் நாடக ஒப்பந்தம் செய்வதற்கு வந்தபோதுதான் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பழக்கம் நாளடைவில் நல்ல நட்பாக வளர்ந்தது. கால் இழந்த தன் நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார் சிவகுமார். அவர் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சீனுவும் தனக்கு திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து சோர்வில் மூழ்கிவிட்டார். 

ஆறு மாத இடைவெளியில் சீனுவுடைய உடற்குறையை அறிந்துகொண்ட நிலையில் ஒரு பெண் அவரைத் திருமணம் செய்துகொள்ள தானாகவே முன்வந்து அறிவித்தார். அவர் பெயர் உஷா.  சீனுவின் பக்கத்து வீட்டிலேயே வசித்துவந்தார் அவர். சீனுவைப்பற்றி முழுமையாகத் தெரிந்தவர். உடனே அத்தகவலை சிவகுமாருக்குத் தெரிவித்தார் சீனு. சீனு – உஷா திருமணம் இனிதே நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தன் கல்வித்தகுதியை வளர்த்துக்கொண்ட உஷா ஒரு பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றினார். பிறகு ஒரு நிறுவனத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக சுருக்கெழுத்தாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் உடற்குறையை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் உடற்குறையை அறிந்த நிலையில் மணவாழ்க்கைக்கு ஒப்புக்கொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். உஷா அத்தகைய அரிய பெண்மணி.

தன் அறக்கட்டளை வழியாக மேல்நிலைப்பள்ளித் தேர்வுகளில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெறுகிறவர்களுக்கு விருதும் பரிசும் கொடுப்பதை ஒரு மரபாகப் பின்பற்றிவருவதை ஓர் அத்தியாயத்தில் விவரித்திருக்கிறார் சிவகுமார். பரிசளிப்பு விழாத் தருணங்களை நினைவுகூரும் சிவகுமார் விழா மேடையில் ஏற்புரையாற்றிய ஒரு மாணவனைப்பற்றி எழுதியிருக்கும் குறிப்பு மிகமுக்கியமானது. வேலூரைச் சேர்ந்தவன் அம்மாணவன். விருதுத்தொகையாக ஐயாயிரம் ரூபாய் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது அவன் தன் ஏற்புரையில் தன் குடும்பச்சூழலைப்பற்றிச் சொல்கிறான். பிறகு தன்னிடம் இரண்டு மேல்சட்டை, இரண்டு கால்சட்டை மட்டுமே இருக்கின்றன என்றும் இரண்டிலும் பின்புறம் கிழிந்திருக்கும் என்பதைப்பற்றியும் சொல்கிறான். எப்போதும் வகுப்பில் தனக்கே முதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் விருது பெறுவதற்காக மேடையேறும் போது இடது கையால் கிழிசலை மறைத்துக்கொண்டு வலதுகையால் பரிசு வாங்குவேன் என்றும் சொல்கிறான். தன் வகுப்பில் தன்னைப்போலவே கிழிந்த உடைகளை அணிந்து பள்ளிக்கு வரும் பெண்களும் இருக்கிறார்கள் என்றும் தனக்குக் கிடைத்திருக்கும் விருதுத்தொகையில் அவர்கள் அனைவருக்கும் புதுத்துணிகள் வாங்கிக்கொடுப்பேன் என்றும் அவன் அந்த மேடையில் தெரிவிக்கிறான். சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் வறுமைச்சூழலின் நெருக்கடிகளும் அவற்றையும் மீறி அவர்கள் நெஞ்சில் இயற்கையாக நிறைந்திருக்கும் கொடைமனமும் கேட்பவர்கள் நெஞ்சில் பதிந்துவிடக் கூடியவை. பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அத்தருணத்தை சிவகுமார் இன்னும் மறக்காமல் இருப்பதற்குக் காரணம் அந்தக் கொடைமனம்தான். 

கொடைமனம் கொண்ட மற்றொரு பெரியவரைப்பற்றிய ஒரு நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் நினைவுகூர்கிறார் சிவகுமார். ஒரு தம்பதியினர் ஒரு நாள் காலை நேரத்தில் தாம் தங்கியிருக்கும் விடுதியறையைக் காலி செய்துவிட்டு காரில் புறப்படுகிறார்கள். குழந்தைக்காக அவர்கள் வாங்கிக்கொண்ட பாலுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கிறார் விடுதி நிர்வாகி. பயணத்தின் நடுவே திண்டிவனத்துக்கு அருகில் அவர்களுக்கு குழந்தையின் பொருட்டு மீண்டும் பால் தேவைப்படுகிறது. 

வழியில் ஒரு டீக்கடைக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு பால் கேட்கிறார்கள். அவர்களையும் அவர்கள் மடியில் குழந்தை இருப்பதையும் பார்க்கிறார் டீக்கடைத்தாத்தா.  அவர்களிடமிருந்து பாட்டிலை வாங்கிச் சென்று முதலில் வெந்நீர் விட்டு தூய்மையாகக் கழுவுகிறார். பிறகு சுத்தமான பாலை சூடில்லாதபடி ஆற்றி நிரப்பிக் கொடுக்கிறார். தம்பதியினர் பணம் கொடுக்க முன்வரும்போது வாங்க மறுத்துவிடுகிறார். “குழந்தைக்குக் கொடுக்கிற பாலுக்கு பணம் வாங்குவதில்லை” என தாம் கடைபிடிக்கும் மரபை எடுத்துச் சொல்கிறார். அவர்கள் எவ்வளவோ சொல்லி வற்புறுத்தியும் பணத்தை அவர் மறுத்துவிடுகிறார். “நூறு குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டியதாக் இருந்தாலும் பாலை இலவசமாகத்தான் கொடுப்பேனே தவிர பணம் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லி அனுப்பிவைக்கிறார். “குழந்தைக்கு பால் தர்றது சாமிக்கு நைவேத்தியம் பண்றமாதிரி” என்று அவர் சொன்ன சொல் எல்லோருடைய நெஞ்சிலும் பதிந்துவிடுகிறது. 

கோவில் திருவிழாவில் தனியாக அழுதுகொண்டிருந்த சிறுமியை பழத்தைக் கொடுத்து அழுகையை நிறுத்தி பக்கத்திலேயே உட்காரவைத்துவிட்டு கயிற்றிலேறி நின்று வித்தை காட்டும் சிறுமியின் நடைக்குத் தகுந்தபடி மேளமடிக்கும் கொடைமனம் கொண்ட கழைக்கூத்தாடியைப்பற்றிய விவரத்தை இன்னொரு அத்தியாயத்தில் அளிக்கிறார் சிவகுமார்.

சிவகுமார் தன் நினைவுச்சுரங்கத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அரிதான மானுடச்சித்திரங்களும் அரிதான வாழ்க்கைத்தருணங்களும் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அதற்குப் பொருத்தமான திருக்குறளைக் குறிப்பிட்டு இரண்டைப்பற்றியும் இணையாக யோசிக்கத் தூண்டுகிறார் அவர். திருக்குறளை, காலம் காலமாக அதற்கு எழுதப்பட்டிருக்கும் பல்வேறு உரைகளோடு பொருத்திப் பார்த்துப் படிப்பது ஒரு வழிமுறை. தன் வாழ்க்கையில் கண்ட அரிய பழைய நிகழ்ச்சிகளையும் சந்தித்த மனிதர்களையும் அசைபோட்டு அவற்றின் வழியாக திருக்குறளின் சாரத்தைத் தொட்டு உணர்வது இன்னொரு வழிமுறை. இரண்டாவது வழிமுறையில் செயல்படும் சிவகுமாரின் அறிவுத்தேடல் அனைவரும் பின்பற்றத்தக்க முன்னுதாரணமாகும்.

– பாவண்ணன்

(திருக்குறள் 50: சிவகுமார். அல்லயன்ஸ் வெளியீடு. ப.எண்.244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை – 600004)