நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் – பெ.விஜயகுமார்
புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் துயரம்
டான்சானியா நாட்டின் ஜான்ஜிபர் தீவில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அப்துல்ரஜாக் குர்னா 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்றுள்ளார். காலனிய ஆட்சியின் கொடூரங்களையும், அகதிகளின் வாழ்வியல் சோகங்களையும் தன்னுடைய புனைவிலக்கியங்களில் சித்தரித்துள்ளார். ’பாரடைஸ்’, ’ஆஃப்டர் லைவ்ஸ்’ ‘தி லாஸ்ட் கிஃப்ட்’ போன்ற பத்து நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள குர்னா மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். சல்மான் ருஷ்டி, குகி வா தியாங்கோ, வி.எஸ்.நைபால் ஆகியோரின் படைப்புகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 1968இல் தன்னுடைய பதினெட்டு வயதில் ஜான்ஜிபர் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்திலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய மேற்படிப்புக்காகவும் இங்கிலாந்து வந்த குர்னா அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளார். கெண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பின்காலனிய இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தன் படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதினாலும் வாய்ப்புகள் கிடைக்குமிடத்தில் தாய்மொழியான சுவாஹிலியின் சொல்லாடல்களையும் குர்னா பயன்படுத்துகிறார்.
குர்னா 2011இல் எழுதிய ’தி லாஸ்ட் கிஃப்ட்’ நாவல் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு குடும்பத்தினர் சந்திக்கும் இன, நிறப்பாகுபாடுகள் பிரச்சனைகளைச் சித்தரிக்கிறது. நாவலில் தந்தை அப்பாஸ், தாய் மரியம், மகள் ஹனா, மகன் ஜமால் ஆகியோர் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக நடமாடுகிறார்கள். அப்பாஸ் பதினெட்டு வயதில் ஜான்ஜிபரிலிருந்து தப்பித்து இங்கிலாந்து வந்தவர். பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் வேலை செய்துவிட்டு இங்கிலாந்தின் எக்சிடர் எனும் சிறு நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் இன்ஜினியராக நிரந்தர வேலையில் சேருகிறார். தன்னுடைய 34ஆம் வயதில் மரியம் என்ற 17 வயதுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அனாதைப் பெண்ணான மரியம் தன் வளர்ப்புத் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொள்ளாமல் அப்பாஸுடன் ஓடி வந்து விடுகிறார். இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஹனாவையும், ஜமாலையும் நன்கு வளர்த்து ஆளாக்குகிறார்கள். ஹனா படிப்பை முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாகச் சேரவிருக்கிறாள். அவள் தன்னுடன் படித்த நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான்.
நன்கு திடகாத்திரமாக இருந்த அப்பாஸ் தன்னுடைய 63ஆவது வயதில் திடீரென்று நோயில் விழுகிறார். பேச்சுத் திறனை இழந்து படுத்த படுக்கையாகிறார். தன்னுடைய வேலையில் தொடர்ந்து கொண்டே மரியம் கணவருக்குப் பணிவிடையும் செய்து வருகிறார். தன்னை அன்புடன் நேசித்த அப்பாஸின் இளமைக்கால வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள மரியம் விரும்பியதில்லை. அவரும் சொல்லியதில்லை. என்றேனும் ஒரு நாள் மரியத்திடமும், தனது பிள்ளைகளிடமும் தன்னுடைய பழைய வாழ்க்கை ரகசியங்களைச் சொல்லிடவே அப்பாஸ் விரும்பினார். சற்றும் எதிர்பாராமல் அவர் படுக்கையில் விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தங்களுடைய தாய் தந்தையரின் இளமைக்கால வாழ்க்கை பற்றி அறியும் ஆவல் பொதுவாகவே குழந்தைகளுக்கு இருப்பதுண்டு. ஹனாவும் ஜமாலும் தந்தையைப் பார்க்க ஓடோடி வருகிறார்கள். தந்தையின் உடல்நிலை கண்டு மனம் கலங்குகிறார்கள். அப்பாஸுக்குச் சிகிச்சை அளித்திடும் மருத்துவரும் பேச்சுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறார். பயிற்சியாளர் அப்பாஸிடம் ஒரு டேப் ரிக்கார்டரைக் கொடுத்து முடியும் போதெல்லாம் அவரது வாழ்க்கை வரலாற்றை வாய்மொழியாகச் சொல்லி பதியச் சொல்கிறார். தினமும் சிறிது சிறிதாக பதிவாகும் தந்தையின் இளமைக்கால வாழ்க்கையை ஹனா ஓரிரவு முழுவதும் கேட்கிறார்.
துயருற்ற தன் தந்தையின் கடந்த கால வாழ்வை அறிந்து மனமுருகுகிறார். அப்பாஸ் எதிர்பார்த்தது போல் மரியமும், குழந்தைகளும் அவரின் கடந்த கால வாழ்க்கையின் மீது கோபமோ, வெறுப்போ அடையவில்லை. அவர் மீதான அன்பும், நெருக்கமும் அதிகரிக்கவே செய்கின்றன. அப்பாஸின் வாழ்க்கை முழுவதும் வலிகளால் நிறைந்திருந்ததை எண்ணி கண்ணீர் மல்குகின்றனர் அப்பாஸ் ஜான்ஜிபர் தீவில் படிப்பை முடித்து பள்ளி ஆசிரியராகப் பணி ஏற்கும் சமயத்தில் குடும்பத்தினர் அவருக்கு அவசரத் திருமணம் நடத்தி வைக்கின்றனர். அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதை அப்பாஸ் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து வருந்துகிறார். குடும்பத்தையும், நாட்டையும் விட்டுவிட்டு ஓடிவிட நினைக்கிறார். ஜான்ஜிபர் துறைமுகத்தில் நின்றிருந்த வணிகக் கப்பலில் ஏறி ஒளிந்து கொள்கிறார். துறைமுகத்தைவிட்டு கப்பல் நகர்ந்து வெகுதூரம் சென்ற பின்னரே அப்பாஸ் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடிக்கின்றனர். கப்பலில் வேலையாள் தேவைப்பட்டதால் அவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றனர். அப்பாஸ் தன்னுடைய வாழ்வில் பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் பணிசெய்து கழிக்கிறார்.
கப்பலில் உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து பல துறைமுக நகரங்களையும் பார்க்கும் வாய்ப்பு அப்பாஸுக்குக் கிடைக்கிறது. ஒருமுறை கப்பல் சில நாட்கள் தென்னாப்பிரிக்கத் துறைமுகம் டர்பனில் நங்கூரமிட்டிருந்த போது ஓர் இஸ்லாமியப் பெண்ணுடன் பழகுகிறார். அது காதலாக மலரும் முன்னர் கப்பல் புறப்பட்டு விடுகிறது. அதேபோல் மொரிஷியஸ் தீவில் லூயி துறைமுகத்திலும் கிளெய்ர் எனும் பெண்ணிடமான ஈர்ப்பும் ஒரு சில நாட்களே நீடிக்கின்றது, கப்பல் வேலையை விட்டுவிட்டு இங்கிலாந்தில் எக்சிடர் நகரத்தில் நிலையான வேலையில் அமர்ந்ததும் மரியம் மீதான காதல் வெற்றியில் முடிந்திட அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்றாகிப் போகிறது. இருப்பினும் ஜான்ஜிபர் தீவில் விட்டுவந்த பெண், அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை பற்றிய நினைவுகள் அவரின் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் அவரிடம் குற்ற உணர்வும் மேலிட்டது. தன் வாழ்வின் ரகசியங்களை எல்லாம் சொல்லித் தீர்த்த சில நாட்களிலேயே அப்பாஸ் இறந்து விடுகிறார்.
தங்கள் தந்தையின் பால்ய கால வாழ்வை அறிந்த பிள்ளைகள் இருவரும் தங்கள் தாயின் வேர்களையும் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். மரியம் தன்னைத் தத்தெடுத்து வளர்த்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களைப் பார்த்து மன்னிப்புக் கேட்க விரும்புகிறார். அப்பாஸைத் திருமணம் செய்தபோது அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவந்த குற்றம் அவள் மனதை உருத்திக்கொண்டிருந்தது. ஹனாவும், ஜமாலும் அவர்களின் இருப்பிடம் அறிந்து மரியத்தை அங்கே கூட்டிச் செல்கிறார்கள். அந்திமக் காலத்தில் இருந்த தன்னுடைய வளர்ப்புத் தந்தையையும், தாயையும் கண்டு மனம் நெகிழ்ந்து மரியம் மன்னிப்புக் கேட்கிறார். அவர்களின் மன்னிப்பையும், ஆசியையும் பெற்று மனம் நிறைவடைகிறார் மரியம். இதுவே பிள்ளைகள் ஹனாவும், ஜமாலும் தங்கள் தாய்க்குக் கொடுக்கும் ’கடைசிப் பரிசா’கும் தங்கள் தந்தை பிறந்து வளர்ந்த ஜான்ஜிபர் தீவுக்கு பயணத்தை மேற்கொள்ள இருவரும் திட்டமிடுவதுடன் நாவல் முடிவடைகிறது.
அப்பாஸ் – மரியம் தம்பதிகளுக்கு அடுத்தபடியாக ஹனாவும் ஒரு பருமனான கதாபாத்திரமாக நாவலில் தென்படுகிறாள். தன்னுடைய பள்ளி, கல்லூரி, வேலை பார்க்குமிடம், மால்கள், அலுவலகங்கள், ரயில், பஸ் பயணங்கள் போன்ற பொதுவெளிகளில் எல்லாம் வெள்ளையின மக்கள் கடைப்பிடிக்கும் நிறப் பாகுபாடு அவளுடைய மனதில் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்துகிறது. அவள் பல முறை அவர்களின் புறக்கணிப்பையும், நிராகரிப்பையும் அனுபவித்துள்ளாள். ஹனாவின் வாழ்வில் காதல் மலருகிறது, நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் நிறமும், இனமும் அவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கும் என்பதை மிகவிரைவில் புரிந்து கொள்கிறாள். ஒரு முறை நிக் குடும்பத்தினருடன் ஹனா சுற்றுலா செல்கிறாள். நிக்கின் சித்தப்பா ஹனாவின் பூர்வீகத்தைத் தெரிந்து கொள்ள விரும்பி அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். தான் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று திரும்பத் திரும்ப அவரிடம் ஹனா சொல்கிறாள். அதில் தவறேதும் இல்லை என்றும் நினைக்கிறாள். அதுதானே உண்மை. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த தனக்கு இங்கிலாந்தின் குடியுரிமை கிடைத்தும் இவர்களால் ஏன் தன்னை ஒரு இங்கிலாந்துப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறாள்.
நிறப்பாகுபாட்டிற்கும், நிறவெறிக்கும் இடையிலான இடைவெளி மெல்லிய நூலிழை அளவுதானே! அது எப்போது அறுந்து போகும் என்று யாரறிவார். ஹனாவின் காதலன் நிக் விரைவில் அதை வெளிப்படுத்தி விடுகிறான். அவனுக்கு வேறொரு வெள்ளைக்காரப் பெண் மீது காதல் இருப்பதை அறிகிறாள். அதைச் சுட்டிக் காட்டியதும் குற்றவுணர்வு ஏதுமின்றி அதை ஒத்துக் கொள்ளும் நிக் அவளைக் கலவியின்பத்திற்கு அழைக்கிறான். “இதுவே நமது கடைசி துய்ப்பாக இருக்கட்டும்” என்று ஆணவத்துடன் அவளைக் கூப்பிடுகிறான். அவனைப் பொறுத்தவரை கறுப்பினப் பெண்கள் பாலியல் சுகத்திற்கு மட்டுமே தகுதியானவர்கள். திருமணத்திற்கு ஏற்றவர்கள் அல்ல.
நாவல் முழுவதும் அப்துல்ரஜாக் குர்னா நிறம் மற்றும் இனப்பாகுபாட்டின் பல்வேறு வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டிச் செல்கிறார். அதே சமயம் அதைக் குறிப்பிடும் போது கோபம், ஆத்திரம், ஆவேசம் அடையாமல் வன்முறை வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான மொழியில் சொல்கிறார். அமைதியான மொழிநடையில் அதே சமயத்தில் அழுத்தமாக, உறுதியாக வெள்ளையின மக்களின் பாகுபாட்டை, வெறுப்பைச் சொல்லி விட முடியும் என்பதை நிரூபிக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
தமிழ் நாவலாசிரியர் பூமணி இங்கு நினைவுக்கு வருகிறார். தன்னுடைய ‘பிறகு’ ‘வெக்கை’ போன்ற நாவல்களில் வன்முறைகளற்ற மென்மையான மொழிநடையைக் கொண்டு சாதி இந்துக்கள் கடைப்பிடிக்கும் சாதியப் பாகுபாடுகளை, வெறியை பூமணியால் விவரித்துவிட முடிகிறது. ஆர்ப்பாட்டமும், ஆவேசமும் இன்றி அவரால் தலித்துகளின் வலியை, சோகத்தை, துயரங்களைச் சொல்லி விட முடிகிறது. அது போன்றே அப்துல்ரஜாக் குர்னாவாலும் வெள்ளை இனத்தவர்களின் பாகுபாட்டை, வெறியை அமைதியும், மென்மையும் கொண்ட மொழி கொண்டே சித்தரிக்க முடிகிறது. அதுவே குர்னாவின் வெற்றியாகும்.
இலக்கியத்திற்கான நோபல் விருது குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாக கனடாவின் மார்கரெட் அட்வுட், ஜப்பானைச் சார்ந்த எழுத்தாளர் ஹருகி முராகாமி, நைஜிரியாவின் குகி வா தியாங்கோ, பிரான்சின் ஆனி எர்னோ போன்றவர்களில் எவரேனும் ஒருவரே நோபல் விருதை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்துல்ரஜாக் குர்னா விருதை வென்றிருப்பது இலக்கிய ஆர்வலர்களை வியப்பிலே ஆழ்த்தியுள்ளது. அப்துல்ரஜாக் குர்னா நோபல் விருது பெறுவதற்கு முழுமையான தகுதி கொண்டவர் என்பதற்கு அவரின் படைப்புகளே சாட்சியமாக நிற்கின்றன.
பெ.விஜயகுமார்