பழனி தாத்தா சொன்ன கதையில்- தோப்புக்கரணத்தில் விஞ்ஞானம் கட்டுரை – முனைவர் மா. அபிராமி
பழனி தாத்தா சொன்ன கதையில்- தோப்புக்கரணத்தில் விஞ்ஞானம்
பழனிதாத்தா சொன்ன கதைகளைச் சொல்வதற்கு முன் பழனிதாத்தாவைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இவர் என் சொந்த தாத்தா அல்ல. பக்கத்து வீட்டு தாத்தா. என் அப்பாவின் அப்பாவும், அம்மாவின் அப்பாவும் நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டனர். எனவே, எனக்குத் தாத்தா என்றால், அது பழனிதாத்தா தான். பார்ப்பதற்குக் கம்பீரமான அவர், தனி மனிதராக வாழ்ந்தார்.
இவருக்கு ஐந்து மகன்கள். இரு மகள்கள் உண்டு. ஐந்து பிள்ளைகளும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இரு பெண்களும் நல்ல நிலையில் உள்ளனர். பிள்ளைகள் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டாலும் தாத்தா செல்லவில்லை.
ரயில்வேயில் வேலை பார்த்தவர் என்பதால் பென்சன் மாதாமாதம் உண்டு. இதனை வைத்துக்கொண்டுத் தனியாகச் சுய மரியாதையாக வாழ்கிறார். உறவுகளைத் தாண்டிச் சில தனி மனிதர்கள் தமது அன்பால் பண்பால் உயர்ந்த உன்னத இடத்தை நம் மனதில் பிடித்துவிடுவார்கள்.
அப்படித்தான் பழனிதாத்தாவும், நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது எழுந்தவுடன் நேராகத் தாத்தாவின் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று தாத்தாவிற்கு குட்மார்னிங் சொல்லிவிட்டுத்தான் மற்ற வேலைகளைத் தொடங்குவது வழக்கம்.
காலை ஆறு மணிக்கெல்லாம் தாத்தா குளித்துமுடித்து வெள்ளை வேட்டி வெள்ளை முண்டாசு பணியினை வெள்ளை வெளேரென்று தும்பைப் பூவைப் போலப் பளிச்சென்று அணிந்து காட்சியளிப்பார்.
அவர் மனதும் அப்படித்தான். எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் தாத்தாவும் ஒருவர். அவருடைய வீடு ஓட்டு வீடு 4 அறைகள். சுற்றிலும் தூண்களைக் கொண்ட தாழ்வாரம் நடுவில் திறந்தநிலை வாசல்.
தாத்தா ஒரு அறையில் தங்கிக்கொண்டு மற்ற அறைகளை வாடகைக்கு விட்டிருந்தார். யாரிடமும் எதையும் கேட்பதில்லை தானாகச் சமைத்து உண்பார். தன்னால் இயன்றவரை ஊருக்கு நல்லது செய்வார். ஓய்வு நேரங்களில் எங்களுக்குக் கதைகள் சொல்வார்.
எல்லாவற்றையும் விடத் தாத்தாவிடம், தாத்தா வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பூஜை அறை. மிகப்பெரிய மர ஸ்டாண்ட். அதில் பெரிதாக ஒரு புத்தர் சிலை, விநாயகர், முருகன், இயேசு, மகாவீரர், திருவள்ளுவர் என அனைத்து மதங்களும் ஒன்றாய்.
காந்தி, நேரு, திருப்பூர்குமரன், பாரதி என மகிழ்ச்சியைக் கொடுக்கும். பார்க்கும்போதே நானும் எனது தோழிகளும் தாத்தாவின் பூஜையறையில் நின்றுகொண்டு,
புத்தன் காந்தி இயேசு பிறந்தது பூமியில் எதற்காக
தோழா பழனி தாத்தா பூஜை அறைக்காக.
எனக் கோரசாகப் பாடுவோம். அதனைக் கேட்டுத் தாத்தா பெரிதாகச் சிரிப்பார்.
நானோ மற்ற தோழிகளோ கோபமாக இருந்தால், தாத்தா புத்தர் சிலையைச் சென்று பார்த்து வரச் சொல்வார். அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப் புத்தர் சிலையைப் பார்த்தவுடனேயே மனதிற்குள் ஒரு அமைதி ஊடுருவி மகிழ்ச்சியை அளிக்கும்.
என்னுடைய முதல் பிறந்த நாளின் பொழுது, என் அக்காவின் பிறந்தநாளின் பொழுதும் தாத்தா நூறு ரூபாயை முதலில் 20 வருடத்திற்கான R.D.யை ஆரம்பித்து என் அப்பாவிடம் கொடுத்தாராம். எங்களுடைய இருபத்தி ஒன்றாவது வயதில் அது என்னுடைய படிப்பிற்கும் அக்காவின் திருமணத்திற்கும் உபயோகமாக இருந்தது.
இன்னும் தாத்தாவைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். தாத்தா சொன்ன கதைகளை அறிவுரைகளைச் சிறுபிள்ளையாகக் கேட்டுக் கடைபிடித்து இருந்தாலும் இப்பொழுது அதன் உண்மையை உணரும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது.
தாத்தாவின் பரந்த அறிவு என்பது எவ்வளவு அறிவுப்பூர்வமானது. அனுபவம் எவ்வளவு தெளிவானது, அழகானது, ஆழமானது என்பதை உணர முடிகிறது. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது என்பது தனி கலை தான். அதனைத் தாத்தாவிடம் கற்றேன்.
என்னுடைய அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்குத் தகுந்ததகுந்தவிதத்தில் என்னால் கொண்டுபோய் சேர்க்க முடியுமா என நினைக்கையில் பயமாகத்தான் இருக்கிறது. தாத்தா கதையாகச் சொன்ன அத்தனை கதைகளும் விஷயங்களும் ஒரு புதையலை போல் குவிந்து கிடக்கின்றன. இக்குவியலிலிருந்து அனைவருக்கும் சிறிது எடுத்து கொடுக்கலாம். அந்தளவிற்கு அற்புதப் புதையல் அது. இப்போது அவற்றை அனைவருக்கும் தரும் முயற்சியில் கொடுக்க முயல்கிறேன்.
தோப்புக்கரணம்
அப்பா கூறினார் அபி நாளைக்கு விஜயதசமி. உன்னை ஸ்கூல்ல சேர்க்கப் போறோம். அவ்வளவுதான் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அபி துள்ளித் துள்ளிக் குதித்தாள். நேராகப் பழனி தாத்தா வீட்டிற்கு ஓடினாள்.
”தாத்தா ஒன்னு தெரியுமா நான் நாளைக்கு ஸ்கூல் சேரப் போறேன்” தாத்தா சிரித்தார். வெளியில் சென்று கண்ணில் பட்ட அனைவரிடமும் அபி கூறினாள்.
இரவு அப்பா அபியை உட்காரவைத்து ஆனா ஆவன்னா சொல்லு, க ங ச ஞ சொல்லு, ஒன்னு ரெண்டு சொல்லு, ஏபிசிடி சொல்லு, ஒன்று இரண்டு மூன்று சொல்லு, எனக் கேட்கக் கேட்க, அபியும் டாண் டாண் என்று அனைத்தையும் கூறிக்கொண்டே வந்தாள்.
டென்னுக்கு மேல் தெரியாமல் விழித்தாள்.
“அம்மா அப்பா அண்ணா அக்கா என ஒருவர் மாறி ஒருவர் 6 மாதமாகச் சொல்லிக்கொடுத்தது எல்லாம் நன்றாகச் சொல்லத் தெரிகிறது. ஆனால் 123 மட்டும் டென்னுக்கு மேல வர மாட்டேங்குது. மறந்து போகுது”
இதை நினைத்தவுடன் அபி பெருங்குரலெடுத்து ஓவென்று அழ ஆரம்பித்தாள் அபி.
அழும் சத்தம் கேட்டவுடன் தாத்தா வேகமாக ஓடி வந்தார்.
”அபி பொண்ணு எதுக்கு அழற” எனக் கேட்க, அபியும் தாத்தா எனக்கு ஆனா ஆவன்னா ஏபிசிடி எல்லாம் கரெக்டா சொல்ல வருது, 123 மட்டும் மறந்து போகுது. ஏன் தாத்தா” என்றாள்
தாத்தா சிறிது நேர யோசனைக்குப் பின் கூறினார்.
“அதிகாலையில் எழுந்து பல் தேய்த்துக் குளித்து முடித்துப் புதுபுதுடிரஸ் போட்டுட்டு கிளம்பு. நேர ஸ்கூலுக்கு போகக் கூடாது விநாயகர் கோயிலுக்குப் போய் கற்பூரம் ஏத்திகிட்டு தோப்புக்கரணம் போடணும், போயி போடு” என்றார் தாத்தா.
அபியும் ”தோப்புக்கரணம்னா இப்படித்தானே தாத்தா போடணும்”
என்று இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்து எழுந்தாள். தாத்தாவும்
”அடிசக்கை பலே பலே இப்படித்தான், ஆனா நாளைக்கு ஒரு நாள் மட்டும் எப்படி போடக்கூடாது தினமும் பிள்ளையார் கிட்ட போட்டா 123 எப்பவுமே உனக்கு மறக்காது” என்றார்
அன்று போட்ட தோப்புக்கரணம் இன்றுவரை அபி போட்டுக் கொண்டு இருக்கிறாள் ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக,
தோப்புக்கரணத்தின் விஞ்ஞான ரகசியம் என்னவாக இருக்கும்.
ஒரு காலத்தில் செய்த தவறுக்குத் தண்டனையாகத் தோப்புக்கரணம் போடப்பட்டது. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்குப் பல விதங்களில் உதவுகிறது. தோல்வியை, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் விதத்தில் போடும் தோப்புகரணம் என்பதுதான் பின்நாளில் தோப்புக்கரணம் என மருவியது.
நாம் மற்ற உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் பல நன்மைகளை அடைய முடியும். அதனால் தான் இதனை வெளிநாடுகளில் சூப்பர் பிரைன் யோகா என்று குறிப்பிடுகின்றனர்.
நம்முடைய தோள்பட்டை அகலத்திற்குக் கால்களை விரித்து வைத்து நிற்க வேண்டும். இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரல் வலது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை மடக்கி வலது கையில் பெருவிரலால் இடது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் உட்காரும் நிலையில் தோப்புகரணம் போட வேண்டும்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உட்கார்ந்து எழும் போது மூச்சை வெளியே விட்டபடி எழவேண்டும். அப்படி உட்கார்ந்து எழும்போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்னும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும்.
காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு, கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புக்களின் தொடர்பும், தொடர்புப் புள்ளிகளும் அமைந்துள்ளன. எனவே தோப்புக்கரணம் போடும் பொழுது எல்லா உறுப்புகளுமே பயன் பெறுகின்றன.
இதன் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. எனவே மூளை சுறுசுறுப்பு அடைந்து நினைவுத்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது.
தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து போடும்போது, மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகின்றன. இப்பயிற்சியால் இடுப்பில் உள்ள எலும்புத் தசை, ஜவ்வு உள்ளிட்டவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து சுகப்பிரசவம் ஏற்படும். குடல் பகுதிக்குத் தேவையான இயக்கம் கிடைப்பதால் மனித கழிவை எளிதில் வெளியேற்றி விட முடியும். அதே சமயம் தோப்புக் கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறையும்.
இதனால்தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்தனர். இந்த அறிவியல் உண்மைகளைப் புராணங்கள் கதைகளாகச் சொல்லியது.
கஜமுகாசுரன் என்னும் அசுரன் பல அறிய வரங்களைப் பெற்று தேவலோகத்தை வென்று தேவர்கள் அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் இவ்வசுரனை அழித்தார். எனவே அனைவரும் விநாயகருக்குத் தோப்புக்கரணம் போட்டனர். எனவே தான் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த உடல்கூறு வைத்தியர் எரிக்ராபின்ஸ் யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் யுஜீனியஸ் அங் ஆகியோரும் தோப்புக் கரணத்தைச் சூப்பர் பிரைன் யோகா என்ற பெயரில் ஆய்வு செய்துள்ளனர்.
தோப்புக்கரணம் மூன்று வகைகளில் போடப்படும்.
1)கை கால்களை மாற்றிப் பிடித்துக்கொண்டு போடுவது.
2)கை கால்களை மாற்றிப் பிடித்துக் கொண்டு கால்களைப் பின்னிய நிலையில் போடுவது.
3)இருவர் தன் கைகளால் மற்றொருவரின் காதைப் பிடித்துக் கொண்டு போடுவது.
முனைவர் மா. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி.