Book Review R.Balakrishnan's Sangasurangam muthal pathu kadavul aayinum aaga book review by Abiraa. ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச்சுரங்கம் - அபிரா

நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச்சுரங்கம்(முதலாம் பத்து) கடவுள் ஆயினும் ஆக – அபிரா




உலகமே இருண்டிருந்த காலம், காலச் சக்கரம் உருளாமலே இருந்தது போல் இருந்த காலம், எப்போது முடியுமோ? எப்போது இந்தத் துயர நீர் வடியுமோ? என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த காலம், கொரனாக் காலம். ஓயாது உழைத்தவர்களையும் வீட்டிலேயே ஓய்வெடுக்கச் சொன்ன காலம் அது. இருப்பவர்கள் நிம்மதியாய் இருக்க, இல்லாதவர்களைச் சாலைகளில் சாரை சாரையாக ஊர்ந்து செல்ல வைத்த காலம்.

ஆங்காங்கே மனிதத்தின் மிச்சப் படகுகள் அவர்களை கரை சேர்க்க, பலரும் ஆக்கப்பூர்வமாக வீட்டிலிருந்தபடியே முடிந்ததைச் செய்தார்கள். அப்படி ஒரு ஆகச்சிறந்த மனிதர், எழுத்தாளர் மதிப்பிற்குரிய ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டே வளங்கள் நிறைந்த சங்க இலக்கியச் சுரங்கத்தைத் தோண்டியிருக்கிறார். சங்க இலக்கியத்திற்கும் தற்கால நடப்புகளுக்கும் இடையே ஓர் தங்கச்சாலையே அமைக்க முயன்றிருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது, கால காலத்திற்கும் பயணமே, வாசிப்புப் பயணமே.

பத்துத் தலைப்புகள், அழகான, நேர்த்தியான மொழிப் பிரசங்கம். அத்தனை தலைப்புகளும் சங்க இலக்கியத்தின் பாடல்களில் இருந்தே, காரணங்களோடு, உதாரணங்களோடு, விளக்கப் படங்களோடு அன்றிலிருந்து இன்றுவரை பட்டியலோடு, தொய்வில்லா நடைபோடும் உரைகள். சுரங்கம் போகப் போக ஆழமாக இருக்கிறது, அதனாலென்ன துணைக்கு ஆசிரியரின் 25 வருட உழைப்பென்னும் ஆக்ஸிஜன் இருக்கிறது, ஒளி காட்ட விளக்காய் பல பாடல்கள் இருக்கின்றன. அருமையான, அலுக்காத, மதிப்பு மிகுந்த மொழி வளங்களைத் தோண்டும் பயணம் இது. ஒவ்வொரு உரையின் முடிவிலும் ஒரு பாடல் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளார், “சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு” என்ற தலைப்பில்.

1. முதல் உரை: சங்கச் சுரங்கம் அறிமுகவுரை:
ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அச்சிடப்பட்டு நமது கைகளில் இருக்கும் சங்க இலக்கியத்தினை நாம் மீள்வாசிப்பு செய்து புரிந்து கொண்டோமா? என்ற கேள்வியில் துவங்குகிறது இந்த உரை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இருப்பத்தி ஓராம் நூற்றாண்டு வரை, ஒரு இலக்கியம் உயிருப்புடன் இருக்கிறதெனில் அது செவ்விலக்கியமான சங்க இலக்கியமே, அதற்குக் காரணம் நம் தாய்மொழி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே என்ற அருமையான தகவலை ஆசிரியர் இப்படித் தருகிறார்.

“நிலமற்ற இலக்கியங்கள் அந்தரத்தில் தொங்கலாம், ஆகாயத்தில் மிதக்கலாம், ஆனால் அதில் ஒருபோதும் மண்வாசனை இருக்கவே இருக்காது, ஆனால் சங்க இலக்கியம் மண்ணுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் தொடர்ந்து இயங்க்கிக் கொண்டே இருக்கிறது.ஏனெனின் அது தொன்மையானது மட்டுமல்ல, உண்மையானதும் ஆகும்”.

சங்க இலக்கியம்= தொல்காப்பியம்+பத்துப்பாட்டு+எட்டுத்தொகை

தொல்காப்பியம் தொன்மையான நூலாயினும், அதிலும் அதற்கு முன்பிருந்த நூல்கள் பற்றிய குறிப்பு உள்ளதெனில் நம் சங்க இலக்கிய மரபின் ஆணிவேரின் ஆழம் நாம் உணர வேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர். அதோடு, சங்க இலக்கியத்தின் வழியே சமகாலத்தைப் பற்றிப் பேசுவதே இந்த உரைகளின் நோக்கம் என்பதனைத் தெளிவாகச் சொல்கிறார்.

2. இரண்டாம் உரை: பசிப்பிணி மருத்துவன்
புறநானூற்றில் ஒரு சிறுகுடித் தலைவனைப் பற்றி ஒரு பேரரசர் பாடிய பாடலில் இருந்தே இந்தத் தலைப்பு பெறப்பட்டுள்ளது.

“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ?சேய்த்தோ? கூறுமின்.எமக்கே”

பசி பற்றி, பசியின் வகைகள் பற்றி, கொரானா காலத்தில், மனிதம் அதை எப்படித் துடைத்தது என்பது பற்றியும், அந்தப் பசி தீர்வதற்கான மருந்து பற்றியும் அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிப் பேசுகையில் ஒரு கருத்தினை முன்வைக்கிறார். அது இத்தனை வருடங்கள் கடந்தும் நம் நெஞ்சைச் சுடும் அணையா நெருப்பாகவே இருக்கிறது.

“இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தபோதெல்லாம் தானியக் கிடங்குகளில் தானியங்கள் இருந்தன. துறைமுகங்களில் தானியங்கள் இருந்தன. அந்த தானியங்களை எடுத்து மக்களுக்குக் கொடுப்பதற்கான மனமோ அதற்கான முன்னெடுப்போ இருக்கவில்லை என்பதுதான் உண்மை” இந்த உரையின் இறுதியில் புலவர் பெருஞ்சித்திரனார், குமண வள்ளலிடம் பாடிய (புறநானூறு) ஒரு பாடலின் மூலம் விநியோக அறம் பற்றிப் பேசுகிறார்.

சங்க இலக்கியத்தினை அகத்தமிழ், புறத்தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பதோடு ”பரிவுத்தமிழ்” எனவும் கூறலாமெனச் சொல்வது நம் மொழிப்பசி தீர்க்கும் மருந்தாகவே இனிக்கின்றது.

3. மூன்றாம் உரை: பிறர்க்கென முயலுநர்:
யாரால் இயங்குகிறது இந்த உலகம்? என்ற கேள்விக்கு “நல்லவர்களால் தான் இந்த உலகம் இருக்கிறது: இயங்குகிறது” என்ற பதிலோடு துவங்கும் இந்த மூன்றாம் உரையின் தலைப்பு எடுக்கப்பட்ட பாடல், புறநானூற்றின் 182-வது பாடல்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திர்ர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

இந்தப் பாடலை மனித நேயத்தின் குரலாகப் பார்ப்பதாகவும், மனிதநேயத்துடன் ஒரு காலத்தில் ஆட்சிக்கட்டில் நல்லவர்களின் கைகளில் இருந்திருக்கிறது என்பதை நினைக்கையில் வியப்பாக உள்ளதாகவும் கூறுகிறார் ஆசிரியர்.

“கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு” 

என்ற நற்றிணைப் பாடலிலும் பிறர்க்கென முயலுதல் பற்றிப் பேசப்படுவதைச் சொல்லி, வாழ்வியல் சிந்தனைகள் ஒரு சமூகத்தில், அதன் பண்பாட்டில், பொதுச் சிந்தனையில் அடிமுதல் முடிவரை ஆழமாக வேரூன்றியிருந்தால்தான், சமூகப்பொறுப்பு மிக்க கருத்துகளை இவ்வாறு இயல்பாகப் பேச முடியும் என்கிறார். இந்த உரையின் இறுதியில் ஒரு பெண் புலவர் பாடிய பாடல் புறநானூற்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அதன் உட்பொருள் ஒரு தலைவனின் தகுதிகள் பற்றிப் பேசுகிறது. பிறர் வறுமையினை அடையும்போது நாணக்கூடிய தலைவர் பற்றிப் பேசும் இப்பாடலோடு, இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் பிறர் துன்பத்தை வெறுமனே கடந்து செல்லாமல், ஏதோ ஒருவகையில் பிறர்க்கென முயன்ற, முயலும் அனைவருக்கும் இந்த உரையைக் காணிக்கையாக்கி முடிக்கின்றார் ஆசிரியர்.

4. நான்காம் உரை: பருத்திப் பெண்டிர்:
சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்கைப் போற்றும் உரை. அகநானூறு, கலித்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை பாடல்கள் வழியே பெண்களின் தொழில்களைப் பற்றிப் பேசி சங்க இலக்கியம் கற்பனை சார்ந்த இலக்கியம் அல்ல, வாழ்வியலுடன் பிணைந்த இலக்கியம் எனச் சான்றுகளுடன் எடுத்த்ரைக்கின்றார் ஆசிரியர். பருத்தி, நூல், சாயம், பஞ்சு, நூல்-பனுவல் பொருள் ஒற்றுமைகள், மருத்துவத்தில் பஞ்சு பற்றியெல்லாம் நாம் வியக்க வியக்க உரை விரிகின்றது.

சங்க இலக்கியத்தின் வழியே சமகாலத்தில் ஈரோட்டில் “Five P” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பாரதி தேவராஜன் என்ற பெண் தொழில் முனைவோர் பற்றிப் பேசி பெருமிதம் கொள்கிறார் ஆசிரியர்.

5. ஐந்தாம் உரை: கடவுள் ஆயினும் ஆக:
தெய்வத்தினையும் கேள்வி கேட்கும் மானுட இலக்கியம் சங்க இலக்கியம் என்பதற்கு ஆசிரியர் இந்த உரைக்குக் கொடுத்த தலைப்பு வரும் பாடல் நற்றிணையில் உள்ளது. இந்த உரையின் தலைப்புதான் நூலிற்கும் தலைப்பு. இதில் வரும் ஓவியம்தான் இந்த நூலின் அட்டைப்படத்தில் உள்ளது. விரல் உயர்த்திக் கடவுளை கேள்வி கேட்கும் பெண்ணின் உருவம் ஆகச்சிறப்பு. இது விளக்குவது சங்க இலக்கியத்தில் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இருந்த உறவை. ஒரு சாதாரண பெண் கடவுளை வாழ்த்துகிறாள். சங்க இலக்கியம் மானிடவியல், பண்பாட்டியல், சமூகவியல் முதலிய பல்வேறு புலங்கள் சார்ந்தே இயங்கியிருக்கிறது.

வெறியாடல்(சாமியாடல்), கெடாவெட்டு, அறத்தோடு நின்ற அன்பு பற்றியெல்லாம் பேசிவிட்டு ஒரு இடத்தில் சிறுகோவில்களில் மட்டுமே காணப்படும் இந்த சாமியாடல் ஏன் பெருங்கோவில்களில் இல்லை? என ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அவர் கூறும் பதில் உள்ளேறி உணர்த்துகிறது உண்மையை. அது, “பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது: உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார் யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை”

6. ஆறாம் உரை: கல்லா இளைஞர்:
படிப்பதின் பயனை விரிவாகச் சொல்லும் உரை. சங்க இலக்கியத்தின் வழியே இந்தியாவில் கல்வி குறித்த அண்மை வரலாறு, உயர் கல்வி பற்றிப் பேசுகிறார் ஆசிரியர். கல்விக்கான வாய்ப்பு பற்றிப் பேசுகையில், இந்திய ஆட்சிப்பணியில் இருந்த, தற்போது ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகவும் உள்ள கற்றுத் தேர்ந்த, ஒரு மாபெரும் வரலாற்று ஆய்வாளர் போன்ற பன்முகங்கள் கொண்ட ஆசிரியர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்* “நீட் போன்ற தேர்வு அன்று இருந்திருந்தால் நான் நிச்சயம் தோற்றுப் போய் இருப்பேன்”…. *கல்வியின் சம உரிமை பற்றி நம்மை யோசிக்க வைக்கும் வார்த்தைகள் இவை.

அதோடு 1978-ல் இந்திய ஆட்சிப்பணித் தேர்வை அவரவர் தாய்மொழியில் எழுதலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த கோத்தார் கமிஷனை நன்றியோடு நினைவு கூர்கிறார் ஆசிரியர். ஏனெனில் முழுக்க முழுக்க தமிழில் தேர்வெழுதி, தமிழில் நேர்காணல் செய்து, ஐஏஸ் நுழைந்த முதல் மாணவன் இவர். “வாய்ப்புதான் உரிமையின் வாசல்படி! கேட்டில் நிறுத்தி கேள்வி கேட்பது அறம் அல்ல!” *என்ற அற்புதமான கருத்தைத் தாங்கி வளர்கிறது இந்த உரை.

இந்த உரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய புறநானூற்றில் வரும் கீழ்க்கண்ட பாடல் அனைவரும் அறிய வேண்டியது.
“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே”

(கல்வித்திறன்தான் அளவுகோல், மூத்தோன் இளையோன் என்பது வெறும் வயதுக் கணக்கு, அரசு படித்தவன் பேசுவதைக் கேட்கும் என்பதே இதன் உட்பொருள்)

7. ஏழாம் உரை: முதுவோர்க்கு முகிழ்த்த கை:
வயதில் முதியோரைக் கண்டால் வணங்கும் கை என்பதே இதன் பொருள். முதியோரை வணங்குவது உளவியலா, அழகியலா, தற்போதைய முதுமையின் பிரச்சனைகள் சங்க இலக்கியத்தில் இருந்தது பற்றியும் விரித்துரைக்கிறார் ஆசிரியர்.

முதுமை பற்றிப் பலதும் பேசுகையில், கும்பமேளா போன்ற இடங்களில் அந்நிகழ்விற்குப் பின் இரயில்வே நிலையங்களிலும், கும்பமேளா நடந்த இடங்களிலும் தொலைந்த போன முதியவர்கள் காணப்படுகிறார் என்ற செய்தி வரும். அவர்கள் தொலைந்தவர்கள் அல்ல, தொலைக்கப் பட்டவர்கள் என்பதே உண்மை என்று வலியோடு சொல்கிறார் ஆசிரியர். முதுமை பற்றிய இந்த உரையில் ஆசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் “கண்ணீர்த் தீவுகள்” என்ற முதுமை பற்றிய ஆழமான கவிதையினைச் சொல்கிறார்.

“மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்
முதுமக்கள் தாழிகள்!
தள்ளி வைக்கப்பட்டிருப்பது
தகனம் மட்டுமே
இங்கேதான் இருக்கிறார்கள்
வீட்டுக்கு விலக்கான ஆண்களும்”

8. எட்டாம் உரை: இமிழ் பனிக் கடல்:
பரந்து விரிந்த கடல் பற்றி, அறிவியல் ரீதியாக, உளவியல் ரீதியாக கடலோடு பிணைந்த தமிழ் பற்றியும், தமிழோடு பிணைந்த கடல் பற்றியும் கடலின் ஆழம்போல் ஆழமாகப் பேசும் உரை. வலை வளம், வேட்டம் பொய்யாது, மீன் கொள்ளை, சுறா வேட்டை, நெய்தல் நில மக்களின் உழைப்பு, விருந்தோம்பல் பற்றியெல்லாம் பேசுகையில் சங்க இலக்கியத்தினை ஒரு கவனக்குவிப்பு இலக்கியம் என்றே சொல்கிறார் ஆசிரியர். தூங்கும் மீன்கள், கடல் சூழலியல், நெகிழிக் கடல், மீன்களற்ற கடல், புவிவெப்பம் பற்றிப் பேசுகையில் பதறாமல் இருக்க முடியவில்லை.

“பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே:
எம்மனோரில் செம்மலும் உடைத்தே”

என்ற நற்றிணையில் வரும் பாடலில் தோழி தலைவனிடம் இப்படிச் சொல்கிறார். “பெரிய கடலுக்கு அருகில் உள்ள சிறு வாழ்க்கை ஆயினும் நல்வாழ்க்கை எங்களுடையது. எங்கள் குடியிலும் நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், அவர்கள்தான் தலைவிக்கு ஏற்றவர்கள்” பரதவர் மகளின் சுயமரியாதை பற்றிப் பேசுமிடமாக இதைப் பார்க்கிறார் ஆசிரியர்.

9. ஒன்பதாம் உரை: சேண் நெடும் புரிசை:
உயர்ந்த நெடும் மதில் சுவர் என்பதே புறநானூற்றுப் பாடலில் வரும் இந்த வரிகளின் பொருள். செங்கல்கள், சூளை, மதில்கள் அதில் மறைந்திருக்கும் வரலாறு பற்றிப் பேசும் உரையிது. நூலறிப்புலவர் என்ற சொல்லின் பொருள்..ஆஹா அருமை. நெடுநல்வாடையின் ஒரு பாடலில் சுட்டப்படும் அரண்மனையைப் பற்றி ஒரு ஓவியர், ஒரு கட்டட வடிவமைப்பாளர் கொண்டு காட்சிப்படுத்தியிருக்கும் இடம் மிகவும் அழகு. அந்தப் பாடலின் வரியிது,

“வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக”

சுவரின்றி சித்திரம் மட்டுமல்ல, சுவரின்றி சரித்திரமும் எழுத முடியாது என்ற கருத்தினை பல பாடல்கள் மூலம் விவரிக்கும் உரையிது.

10. பத்தாம் உரை: இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
வாழ்வியல் இலக்கியம் பற்றிப் பேசுகையில் வாழ்க்கையின் எதார்த்தம் கொண்டு முடிப்பதுதானே அழகு. ஆசிரியர் அதனைக் குறைவின்றிச் செய்திருக்கிறார் இந்த உரையில் நில்லா வாழ்க்கை, சீர் இல் வாழ்க்கை, பேர் எழில் வாழ்க்கை, சிறு நல் வாழ்க்கை என நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்தில் வரும் வரிகள் மூலம் வாழ்க்கையின் வகைகள் பற்றிப் பேசுகிறார்.

“செய்ப எல்லாம் செய்தனன்” என்ற பாடலின் மூலம் நம்பி நெடுஞ்செழியனின் ஆளுமைகள் பற்றிப் பேசி சமூகத்தின் சாளரங்களைத் திறந்து வைக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இந்தப் பாடலில் பாராட்டப் பெற்ற நம்பி நெடுஞ்செழியன் மாபெரும் அரசன் அல்ல, அவன் ஒரு சாதாரண குறுநில மன்னன்.

சங்க இலக்கியத்தில் அனைவருக்கும், அனைத்திற்கும் பாட்டிருக்கிறது. அனைவரின் தொழில்கள், குணநலன்கள், நன்மை, தீமைகள், தவறிழைத்திருப்பின் கேள்வி கேட்டல், கேள்வி கேட்டவர்களுக்கு உரிய பதிலளித்தல் எனப் பல சான்றுகள் சங்க இலக்கியப் பாடல்களில் பரவிக் காணப்படுகின்றன. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நானூற்றி சொச்சப் புலவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது சங்க இலக்கிய காலகட்டத்திலேயே நம் சமூகக் கூட்டம் பண்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இந்த உரைகள் நீண்டதாய் இருக்கின்றன. என்னுடைய பதிவும் நீண்டதாய் இருக்கின்றது. என்ன செய்வது? சங்க இலக்கியம் நீண்ட நெடிய, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது.

பழையன கொண்டு
புதியன பாடிய
புதியன போற்றிய*
*சங்கச்சுரங்கம்*
*கடவுள் ஆயினும் ஆக*
*தமிழ்ப்பரப்பில்*
எப்போதும் வீற்றிருக்கும்*
*தமிழ் வழங்கும் சுரங்கமாக!!!

நன்றி: ராஜேஷ் சிவம்

சங்கச்சுரங்கம்(முதலாம் பத்து)
கடவுள் ஆயினும் ஆக
ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 263
விலை: ரூ.270/-