Ippalam Yarunga Sathi Pakkuraa Poem by Adhirai ஆதிரையின் இப்பலாம் யாருங்க... சாதி பாக்குறா....? கவிதை

இப்பலாம் யாருங்க… சாதி பாக்குறா….? கவிதை – ஆதிரை




நாயர் கடை டீயில் தொடங்கி
செட்டியார் கடை
மளிகையோடு
நாடார் கடையில்
காய்கறி வாங்கி
வீட்டிற்குச் சென்றேன்!

வாசலில் கிடந்த
நாளிதழைப் புரட்ட
ராமசாமி படையாச்சி
மரண அறிவிப்பும்
சிதம்பரம் பிள்ளையின்
நினைவஞ்சலியும் நிரம்பிய பக்கங்களைப்
புரட்டினேன்!

சாதிச் சண்டையில்
மண்டை உடைந்தவர்களின்
மருத்துவமனைப் படங்களைக் கடந்தால்…

புதிதாகத் தொடங்கும்
சாதிக்கட்சி மாநாட்டு
விளம்பரம்
பல்லை இளிக்க…
ஒவ்வொரு சாதிக்கும்
வரன் தேடி அலைகிறது
இரண்டு பக்கங்கள்!

நாலாய் மடித்து
மேசையில் வைத்துவிட்டு
ரிமோட்டை எடுத்து
டீவியைப் போட்டேன்!

தமிழ்சாதி டாட் காம்
விளம்பரம் ஓட
வேறு சேனலை மாற்றினேன்!
தேவர் காலடி மண்ணே…என்று
சிவாஜி கரகரக்க
எழுந்து போய் பல்துலக்கி துப்பிவிட்டு
குளித்து முடித்து
அலுவலகம் புறப்பட்டேன்!

எதிரே வந்து நின்ற
மனைவி சொன்னாள்
மறக்காம….
செட்டிநாட்சிக்கன்
வாங்கிட்டு வாங்க!

வீட்டிலிருந்து வெளிய்யே வந்து
பைக்கை உதைத்துப்
புறப்பட்டேன்….
ரெட்டியார் சாவடியில்
உள்ள என் அலுவலகத்திற்கு!

என்ன ஓய்… என்று
சுப்ரமணிய ஐயர் கேட்க
டிராபிக் சார்னு சமாளிச்சிட்டு சிஸ்டத்தில் அமர….
புராஜக்ட் ஃபைலை
நீட்டினார் சுதாகர்ரெட்டி!

புராஜக்ட் மேனேஜர்
சிஸ்டம் சரியில்ல….
அதெல்லாம் வேற கதை!

மடமடவென பணிகளை முடிக்க……
மதிய உணவிற்கு நண்பர்கள் அழைக்க
கீழிருந்த முதலியார்மெஸ்ஸில்
சாப்பிட்டு முடித்தேன்
வழியில்லாமல்!

மீண்டும் விட்டபணி தொடர…..
ஜனனி ஐயரின் பாடல்
ஒலித்தபடி பக்கத்து சீட்டில் போன் அடிக்க
ஆபிஸ் டைம் முடிந்தது
ஒரு வழியாக!

மீண்டும்…..
பைக்கை உதைத்து
வண்டியைக் கிளப்ப…..
சீறிப்பாய்ந்து சென்றது
நாயுடு ஹாலைக் கடந்து..!

திடீரென வேகம்
செட்டிநாடு ஹோட்டல்
அருகே குறைய…..
தன்னையறியாமலேயே
பிரேக் போட்டது…
மனைவியின் ஞாபகம்!

ஒரு செட்டிநாட் சிக்கன் கிரேவி பார்சலோடு
நகர்ந்து….,
செங்குந்தர் பள்ளி வழியே செல்லும்போது….!

சாதிகள் இல்லையடி பாப்பா …. என்ற
வாசகத்தோடு பாரதி
முறைப்பதைப் பார்த்து
ஒரு நமட்டுச் சிரிப்போடு
சென்றேன்!

அம்பேத்கர் சிலையொன்று கைநீட்ட
நீட்டிய திசை சென்றேன்
பெரியார் நகர் வந்தது!
உறக்கம் கலைந்தது!

படுக்கையிலிருந்து
எழுந்தேன்….சமத்துவ
சமூகநீதி பாதையிலே
நடந்தேன்!

Jai Bhim Poem by Adhirai ஆதிரையின் ஜெய்பீம்! கவிதை

ஜெய்பீம்! கவிதை – ஆதிரை




தீண்டப்படாமலிருந்த
வார்த்தை ஒன்று
பேசத் தொடங்கியுள்ளது!

ஒரு நூற்றாண்டை
கடந்த சொல்
இப்பொழுதுதான்
நடக்கத் தொடங்கியிருக்கிறது!

ஊமை சனங்களின்
குரல் எல்லோருக்கும்
கேட்கத் தொடங்கியிருக்கிறது!

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின்
வலி புரியத் தொடங்கியிருக்கிறது!

ஆதிக்கத்திற்கு எதிரான
சமத்துவப் பாதை
திறக்கப்பட்டிருக்கிறது!

சனாதனத்திற்கு எதிரான சக்திவாய்ந்த
ஒரு ஆற்றல் பிறந்திருக்கிறது!

ஆரிய சூழ்ச்சியால்
திறந்தவெளி சிறையாக்கப்பட்ட
ஐந்து இலட்சம் சேரிகளின் தலைநிமிர்வு!

அதை…………..!

சாதிக்குள்
சமயத்திற்குள்
ஆதிக்கத்திற்குள்
அதிகாரத்திற்குள்
என்று….எதற்குள்
அடைத்தாலும்…..

கிளர்ந்தெழும்!இருட்டைக் கிழித்தெழும்!

ஜெய்பீம்….!
முழக்கம் அல்ல…
விடுதலையின் குரல்!
அதை….
மொழிபெயர்த்து பாருங்கள்!

வலி புரியும்
அன்பு தெரியும்
அறம் மிளிரும்
சமத்துவம் ஒளிரும்!