என்று ஓடும் ஆற்றில் அதன் நீர்? கவிதை – ஆதித் சக்திவேல்
ஆனந்தக் களிப்போடு
அன்று துள்ளி ஓடிய ஆறு
ஆதிப் பச்சையில்
ஊர்கிறது இன்று
ஆறு என ஓடிய நீரில்
ஒரு சொட்டுக் கூட
ஆற்றுக்குச் சொந்தமில்லை
அனைவரும் அறிந்த உண்மை இது
தெரியாதது போல் நடிக்கின்றனர்
அனைவருமே
நீரில்லா ஆற்றில்
அறத்தோடு எல்லாம் மிதக்கின்றன
உயிரின்றி
நஞ்சு மட்டும் உயிருடன்
வானில் பறந்த கழுகின்
கண்களுக்குத் தெரிந்ததெல்லாம்
ஆற்றில் செத்து மிதந்த மீன்கள் தான்
வேகமாய் இறங்கியது கீழே
அதில் ஒன்றைக் கொத்திச் செல்ல
தன் கணக்கீட்டின் துல்லியத்தில்
சிறு பிழை நேர
மீனை இழந்த அதன்
பறக்க விரித்த சிறகுகள்
நனைந்தன நாற்றமெடுத்த நீரில்
மேலிருந்து சொட்டியது
சிறகிலிருந்த நீர்
பூமியில் இருந்தோர் முகத்தில்
நினைவுகளாக
ஏக்கப் பெருமூச்சுக்களாக
ஏமாற்றங்களாக
குற்ற உணர்வுகளாக மாறி
முதலில் துடைத்தனர்
பின் கழுவினர்
மனதை விட்டு அகல மறுத்தன
குற்ற உணர்வுகள்
பல முறை கழுவிய பின்னும்
வயல் வெளிகளில் விழுந்ததை
அப்பாவிப் பயிர்கள் உறிஞ்சின
மழை நீர் என எண்ணி
வெடித்து வெளிவரும் அவ்விஷம்
நாளைய வெள்ளாமையில்
ஆற்றை விற்று
சட்டைப் பை வழிய
நிரப்பிய பணத்தின் மீதும்
சொட்டியது அது
கொஞ்சம் அதிகமாகவே
நாற்றத்தில் ஊறியது பணம்
எக்கூச்சமும் இன்றி
கை மாற்றினர் அதை
ஊரே நாறியது
கைகள் பல அது மாற மாற
மூக்கே நாறியது இறுதியில்
பணமும் நாற்றமும்
போட்டியிடுகின்றன – அவர்களது
பணப் பெட்டியை நிரப்ப
கழிவுகள் பல
ஒரே நேரத்தில் ஆற்றை நிரப்ப
போட்டியிடுவதைப் போல்
“ஆற்றைக் காப்பாற்றுங்கள்” எனக் கதறியது
என் மீது விழுந்த ஒரு துளி
உலகை நேசிப்பவர் எவரும்
ஆற்றை நேசிக்காமல்
எப்படி இருந்திட முடியும்?
இரை கொண்டு வருமென
தாய்க் கழுகுக்குக் காத்திருக்கின்றன
குஞ்சுகள்
தம் கூட்டில்
நம்பிக்கையுடன்
ஆறும் நகர்கிறது
தன் நீர் தன்னுள் ஓடும்
என்றாவது ஒரு நாள் எனும் நம்பிக்கையுடன்
ஆதித் சக்திவேல்