தங்கேஸ் கவிதைகள்
பறவைகள்
**************
மேகத்தை விழிகளில் சிறைபிடித்தவன்
இப்போது மேகமாகிவிட்டான்
தன்னந்தனியாக வானத்தில் பறக்கும் பறவைக்கு
சிறிது இளைப்பாறுதல் தர வேண்டும்
நீ சிறகின் வடிவில் குடையாக மாறிவிடு மேகமே
யார் கண்டது விண்ணிலிருந்து மகிழ்ச்சியின் வித்துக்களை தூவ
அது வெகுதூரம்
பறந்து வந்திருக்கலாம்
கடவுளர்கள் மறந்து போன புவியின் பொருட்டு
சாபவிமோசனம் தருபவை
என்றுமே பறவைகள் தானே
கவிதையைக் கொண்டாடுவது
**************************************
கவிதை போலத் தான் இதுவும்
சாத்தான் குடியேறுவதற்குள்
நன்றாக இருக்கிறதென்று சொல்லிவிடுங்கள்
சிறிது நேரம் அவகாசம் கொடுத்தால் கூட
தலையிலிருந்து ஒற்றை மயிரைப் பிடுங்கி
அதற்கு ஈடாக இந்தக் கவிதையை
நேர் செய்ய தயங்கமாட்டீர்கள்
மலரும் நினைவில்…
கொம்பு முளைத்த ஒனிடோ
பூதம் வேறு
வந்து முட்டித் தள்ளி விட்டுப் போய்விடும். உங்களை
தொண்டை வரையிலும் வந்து விட்ட பாராட்டுக்களை
ஏவாள் வந்து அழுத்திப் பிடிக்க
அது அங்கேயே நின்று ஆதாம் ஆப்பிளாக மாறிவிடும்
எதிர்பாராத நொடியில் விழுந்த
மின்னல் வெட்டில்
‘காணக் கிடைத்த சுயதரிசனத்தில்
மமதையின் மண் விழுந்து மூடிப்போக
போன ஜென்மத்து ஞாபகமாய்
போய் விடும் ரசனை
வாய்ப்பு கிடைக்கும் போதே
இந்தக் கவிதையைப் பார்த்துச் சொல்லிவிடுங்கள்
அற்பப். பதரே
மண்புழு போல நெளியும்
உன்னைக் கொத்த
இப்பொழுதே ஒரு கவிதை எழுதிப் போடுகிறேன் என்று.
சாதி ஒழிய
***************
என் சாதியின் பெயரை என் வீட்டு நாய் குட்டிக்கும் சூட்டியிருக்கிறேன்
புளகாங்கிதத்தில் வால் ஒரு அடி நீள
பாரபட்சம் பாராமல் யாரையும் கண்டபடிக் குரைத்து வைக்கும்
நாய் தான் என்றில்லை
எங்கள் வீட்டிற்கு வந்து போகும்
எலி பூனை கரப்பான் பூச்சி கட்டெறும்பு
யாவும் கொஞ்சம் சாதியை ஈஷிக்கொண்டுதான் நகர முடியும்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
ஈராயிரம் வருடங்களுக்கும் முன்பே
நிலவை கண்டு பிடித்ததும்
சூரியனுக்கு ஆதவன் என்று பெயர் சூட்டியதும்
நதிகளை கடலோடு கலக்கவிட்டதும்
எங்கள் சாதிக்காரர்கள் தான்
அதாவது கடைசியில் ர்…என்று முடியும்
அடைமொழி சொன்னால்
இரத்தம் துடிக்கத் துடிக்க
இருக்கட்டும்
தேர் நிலைக்கு வர வேண்டுமென்றால்
நாங்கள் தான் வடம் பிடிக்க வேண்டும்
சப்பரம் என்றால் நாங்கள் தான் கட்டை சுமக்க வேண்டும்
எங்கள் தோள் மீது நிற்கும்
சாமிக்கும் ஆசாமிக்கும்
வலித்தாலும்
எங்களுக்கு வலிக்காது
நாங்கள் நிற்பதே
அடுத்தவன் தோள் மீது தானே
நாங்கள் ஆரியத்தை ஒழிப்போம்
திராவிடத்தை வளர்ப்போம்
( இந்த முறை நீலம் கருப்பு பதிப்பகங்களில் நல்ல விற்பனையாம்
ஒரு முறையும் அங்கு சென்றதில்லை)
திராவிடப் பாசத்தில்
தலைவர் சொன்னது தான்
அதாவது தமிழன் என்றொரு இனம் உண்டு
அதற்குள் சாதிகள்
பல உண்டு
சாதி ஒழிய வேண்டும்
அதில் எங்கள் சாதிக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை
சாதியை ஒழிப்பதற்கு
இந்த முறை புதிய தொரு விதி செய்துள்ளோம்
எங்கள் கிராமத்து தேநீர்க் கடைகளில்
இனி அனைவரும் சரிசமம்
என்றுஎழுதி போட்டாயிற்று
அவர்களுக்கும் கண்ணாடி தம்ளர்களில் தான்
தேநீர் தந்து கொண்டிருக்கிறோம்
என்ன இந்த முறை ஒரு சிறிய மாற்றம்
எங்களுக்கு மட்டும் அங்கே
எவர்சில்வர் தம்ளர்
சாதி ஒழிய வேண்டும்
என்பதில் எங்கள் சாதிக்கு என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்