நூல் அறிமுகம்: மு. அராபத் உமரின் ’நசீபு’ (உண்மையின் சாட்சியங்கள்!) – தேனி சீருடையான்

நூல் அறிமுகம்: மு. அராபத் உமரின் ’நசீபு’ (உண்மையின் சாட்சியங்கள்!) – தேனி சீருடையான்
உண்மையின் சாட்சியங்கள்!

”நவீன சிறுகதை’ என்ற தாவரக் கொப்பு தமிழ் நிலத்தில் நடப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறுகதை என்ற பதியனில் ஆயிரம் ஆயிரம் மலர்கள் பூத்தவண்ணம் இருக்கின்றன. ஒரே வேர்! ஒரே தண்டு! பூக்கள் மட்டும் பல்லாயிரம். நூற்றாண்டுப் பயணத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு விதமாய் எழுதிப் பார்த்திருக்கின்றார். வாழ்க்கையை உள்வாங்கி எழுதுவதே இலக்கியம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட்தொரு வரையறையில் உலகம்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை வண்ணங்களைக் கொண்டிருக்கின்றது!

“முதல் எனப்படுவது நிலம், பொழுது இரண்டின் இயல்பு” என்கிறார் தொல்காப்பியர். இந்த இரண்டின் வழியாகத்தான் ஜீவிதக் கோடு உதயமாகிப் பயணிக்கிறது. அதாவது உயிர்கள் தோன்றுவதும் பயணிப்பதும் மறைவதுமான சுழற்ச்சி நிகழ்கிறது. நிலம் கண்ணுக்குப் புலப்படாமலும் பொழுது என்கிற காலம் புலப்பட்டும் இயங்குகின்றன. இந்த இயக்க நிலையின் உயுரியல் தாக்கமே வாழ்க்கை ஆகும்.

வா வே சு ஐயர் முதல் இன்று உயிர்த்துக் கிளம்பியிருக்கும் அராபத் உமர் வரை எழுதிப் பார்த்த தரவுகள் தமிழ் மண்ணின் வரலாற்றையும் வாழ்வியல் தத்துவத்தையும் செழுமைப் படுத்தியிருக்கின்றன. உயிர்ப்பதும் உறவுகொள்வதும் இடம்பெயர்வதும் ஓய்வதும் ஆன பாதை அனைத்து உயிகளுக்கும் பொதுவானது. ஆனால் மனிதன் மட்டும்தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கவும் எதிர்நீளும் பாதையைச் செப்பனிடவும் செய்கிறான். செப்பனிட விழையும் போது அவனுக்குக் கைக் கருவியாய்த் துணை நிற்பது அன்பு, அல்லது மனிதநேயம். அந்த மனிதநேயம்தான் இலக்கியத்தின் அடிவேர்.

மத சித்தாந்தத்தை அடிக்கோடாகக் கொண்டு வாழும் கணவன் மனைவி உறவுமுறை அவ்வளவு எளிதானது இல்லை. கிறித்துவ மதக் கல்யாணம் ஒன்றில் கலந்துகொண்ட போது, திருமணத்தை நடத்திவைத்த ஃபாதர் பேசினார். “உன்னை அண்டி வந்திருக்கும் இந்தப் பெண்ணைத் தலையில் தூக்கிச் சுமக்காதே; முகத்துக்குக் கீழ் இருக்கும் இதயத்துக்குள் வைத்துக் கொள். உனக்கு அவள் அடிமை.”

இந்து மதக் கல்யாணங்கள் மிகவும் வெளிப்படையானவை. “ஆண்மகன் போடும் மூன்று முடிச்சுகளுக்குள் கட்டுண்டு கிடப்பவளே மனைவி மீறுவது தெய்வ நிந்தனை.”

இஸ்லாமும் விதிவிலக்கல்ல. வேற்று ஆண்களைப் பார்ப்பதும் பேசுவதும் ஹராம் (பாவம்) என்று போதிக்கப் படுகிறது. நான் சிறுவனாய் இருந்தபோது சின்னமனூரில் அப்துல் கனி ராவுத்தர் கடலை மண்டியில் என் தந்தையும் தாயும் கூலிவேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது நானும் அங்குதான் விளையாடிக் கொண்டிருப்பேன். சாராக்கா என்னை மிகவும் நேசத்தோடு பராமரிப்பார். பார்வை இழந்தவன் என்பதால் வட்ட பிஸ்கட், கமர்கட் எல்லாம் தந்து மகிழ வைப்பார். அவரின் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார் என்றால் சாராக்கா விழுந்தடித்து உள் அறையில் போய் ஒளிந்து கொள்வார்.

“எதுக்குக்கா இப்படி?” என்பேன்.

“அத்தா பெரியவுக; அவுக முன்னாடி பொம்பளப் புள்ள மொகங்காட்டக் கூடாது.”

“பீபி ஆச்சி மட்டும் இருக்காக?” பீபி ஆச்சி சாரா அக்காவின் அம்மா.

“அத்தாவுக்கு சோறு போடணுமில்ல.”

தந்தை முகமே பார்க்கக் கூடாது என்றால் வேறு ஆண்முகம் காண்பது முடியுமா? “தெரு அவ்வளவு அகலமில்லை என்றாலும், இடது ஓரத்தில், மிகக் குறைந்த அகலத்தில் சாக்கடையிலும் தடுக்கி விடாமல், நடுவில் வந்து விடாமலும் நடப்பது பெண்களின் பழக்கம். எந்த ஆண் எதிர்ப்பட்டாலும் தலையைக் குனிந்துகொண்டே நடக்கவேண்டும்.” (கியாமத்) பக்கம் 27. அராபத் தனது படைப்பு இயக்கத்தின் வழியாக இந்த வார்த்தைகளை உச்சரிக்கும்போது இஸ்லாமியப் பெண்களின் நிலைபாடு புரிகிறது. அன்னிய ஆண்முகம் பார்ப்பது தடை செய்யப்பட்ட ஒரு இறுக்கமான வாழ்க்கைமுறை. அது அந்தப் பெண்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. (இப்போது ஓரளவு மாறியிருக்கிறது என்பது வேறு விஷயம்.)

இந்தத் தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை ஆண்களால் ஒடுக்கப்படும் பெண்களின் கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியை உள்ளடக்கமாய்க் கொண்டிருக்கிறது. எல்லாமே இஸ்லாமிய வாழ்க்கை முறையின் பிரதிபலிப்புகள்.

’கியாமத்’ எனும் கதை பிரச்சார தொனி இல்லாத கலைப்ப்டைப்பு. ஆய்ஷாவைவிட அவள் கணவன் 17 வயது மூத்தவன். ஒரு சந்தேகப் பேர்வழியும் கூட. (கணவனுக்கும் மனைவிக்கும் வயது இடைவெளி அதிகம் இருந்தால் சந்தேகம் வருவது இயல்புதானே? ஆணின் இயலாமை சந்தேகப் பார்வையை வீசச் செய்கிறது.) ஒருமுறை கணவனோடு ஆய்ஷா கடைவீதிக்குப் போயிருந்த போது அவளின் ஆசிரியர் ஒருவரை யதேச்சையாகச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறாள். என்னதான் ஆசிரியராக இருந்தாலும் அவன் வேற்று ஆண் என்பதால் சந்தேகிக்கிறான் கணவன். சந்தேகப் பார்வை தொடர்கிறது. அனுதினமும் அவள் கைபேசிக்கு வரும் புலனச் (வாட்சப்) செய்திகளை அவள் தூங்கியபின் பார்வையிடுகிறான் என்பதோடு மனச் சித்திரவதை செய்கிறான். தன் தோழியாகிய ஃபாத்துமாவிடம் வந்து புலம்பிச் செல்கிறாள் ஆய்ஷா. வீட்டார் யாரும் அவளுக்கு ஆறுதல் தருவதில்லை. சாவு நாள் அன்று “செத்துப் போகலாம்னு இருக்கு” என்று ஃபாத்துமாவிடம் புலம்பியபோது “அப்படியெல்லாம் நெனக்யாதடா” என ஆறுதல் சொல்கிறாள். “எம்மகளக் கர சேக்குற வரக்யும் தப்புச் செய்ய மாட்டேங்க்கா” என உறுதி சொல்லிவிட்டுப் போனவள் அன்று இரவே தூக்குப் போட்டுக் கொண்டதாகத் தகவல் பரவுகிறது. கணவனின் நடவடிக்கைகளும் “இன்னம் நாப்பது நாள்ல ஒனக்கு நல்ல பொண்ணாப் பாத்து வாழ வக்கிறேன்” என்று கணவனின் தாயார் உறுதி சொல்வதும் ஆய்ஷா கொலை செய்யப்பட்டாள் என உணர்ச்சி மொழியில் கூறுகிறது கதை.

அனைத்துமே யதார்த்தவாதக் கதைகள். பாரை இருக்கிறது என்று சொல்வதல்ல யதார்த்தம். பாரைக்குள் ஒரு சிலை இருக்கிறது எனக் கணிப்பதே யதார்த்தவாதம். உளியால் செதுக்கி உள்ளிருக்கும் சிலையை வெளிக் கொணர்வது சோஷலிச யதார்த்தவாதம். ”இத்தா” என்ற சிறுகதை அந்தச் சிலையை வடித்தெடுக்க முயன்றிருக்கிறது. அசப்பில் அது ஒரு சோஷலிச யதார்த்தவாதக் கதைதான் என்றாலும் அதிகப் படியான சில வார்த்தைகள் அதைச் சிதைக்க முயன்றிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

’இத்தா’ என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் ஒருவிதச் சடங்குமுறை. கணவன் இறந்தபின் மனைவி நான்கு மாதங்கள்வரை வெள்ளைச் சேலையுடுத்தித் தனிமையில் இருக்கவேண்டும். வெள்ளைச் சேலை உடுத்துவது கணவன் புதைக்கப் பட்ட கபுர் (சவக்குழி) வெளிச்சமாய் இருக்க வேடும் என்பதற்காக. ஆனால் ஆண்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்கள் வெள்ளை உடுத்தி வெளிச்சம் காட்ட வேண்டிய நிபந்தனை இல்லை.

ரோஜாவின் கணவன் காஜா இறந்தபோது அவள் அப்படித்தான் இருத்தி வைக்கப்பட்டாள். அவள் மகள் ஜெனி பன்னண்டாப்புப் படிக்கும் இந்தக்காலத்துப் பெண். வேற்றுமைப்பட்டு நிற்கும் வாழ்வியல் சடங்குகள் மேல் அவளுக்குக் கேள்விகள் எழுகின்றன. ஆண்களின் கபூருக்கு வெளிச்சம் வேண்டும் என்றால் பெண்களின் கபூருக்கு வேண்டாமா? இந்தக் கேள்வியின் வழியே பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக இயல்பான குரலை வெளிப்படுத்துகிறாள் ஜென்னி

(காலம் மாறும்போது எல்லாம் மாறும் என்பது மதச் சட்டங்களுக்கும் பொருந்தும்.)

ஆனால் ஜென்னியின் அடுத்த கேள்விதான் ஓர் இஸ்லாமியச் சிறுமியின் இயல்புக்குப் பொருந்தாமல் செயற்கையாய்த் திணிக்கப் பட்டிருக்கிறது. அவள் கேட்கிறாள். “ஏம்மா! இந்தச் சட்டம், ஹதீஸ் எல்லாம் எழுதினது ஆம்பளைங்கதானம்மா?”

கேள்வி சரிதான் என்று தோன்றும். ஆனால் பெண்களின் கபூருக்கும் வெளிச்சம் வேண்டாமா என்ற கேள்வியிலேயே இந்தக் கேள்வியும் உள்ளடங்கி விடுகிறது என்பதால் இரண்டாவது கேட்டது தேவையற்றதாகி விடுகிறது. சாதாரணமாகப் பேசுவதை அப்படியே பிரதிபலிப்பதல்ல சோஷலிச யதார்த்தவாதம். எழுதும் பேனா அதைத் தனக்குள் வாங்கிக் கொண்டு நீக்குவதை நீக்கி செழுமைப் படுத்த வேண்டும். ஆனாலும் பரவாயில்லை. கதையின் கடைசிக் கேள்வியை எடுத்துவிட்டு, அடுத்த பதிப்பில் வெளியிட்டால் தமிழுக்கு ஒரு சோஷலிச யதார்த்தவாதக் கதை கிடைக்கும்.

என் வாழ்வோடும் எழுத்துகளோடும் நெருக்கமாய் வந்திருக்கும் கதை “ஈமான்.” என்ற கடைசிக் கதை. உலக சமுதாயம் இன்னும் பொதுவுடமைச் சமுதாயமாகப் பரிணாமம் அடையாததற்குக் காரணம் வறுமைதான். அஹமத்-பர்வீண் தம்பதியரின் வறுமை வாழ்க்கைக் கண்ணில் நீர் சுரக்க வைக்கிறது. 30 நாள் நோன்பிருந்து அதன் பின் வரும் பிறைநாள், உலகமெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களின் கொண்டாட்ட நாள். இந்துக்களுக்குத் தீபாவளியும் கிறித்துவர்களுக்கு கிறிஸ்துமஸ்ஸும் போல இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான். அந்த நாளில் பிள்ளைகளுக்குப் புத்தாடை எடுக்க முடியவில்லை, கறிகஞ்சி ஊற்ற முடியவில்லை என்றால் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? (முகம்மதியர்கள் பரவாயில்லை; செல்வந்தர்கள் அந்த நாளில் மாடோ ஆடோ உரித்து இல்லாதவர்களுக்குத் தருவார்கள். அல்லாவின் ஐந்து கட்டளைகளில் ஒன்று உனது வருமானத்தில் எட்டில் ஒரு பங்கை ஏழைகளுக்குத் தர்மம் செய் என்கிறது.)

துணிக்கடைக்குச் சம்பளத்துக்குப் போய்க்கொண்டிருந்த அஹமது கொரோனாக் காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய சூழல்! தன் வறுமையைப் போக்க பர்வீண் எப்படியெல்லாம் பாடுபடுகிறாள்! கொழுக்கட்டை உருட்டுகிறாள்; கடலை மிட்டாய் தயாரித்து விநியோகம் பண்ணுகிறாள். பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாமே தோல்வியடைகின்றன. ரம்ஜான் மாதத்தின் முப்பது நாளும் பள்ளிவாசலுக்குச் சென்று நோம்புக் கஞ்சி வாங்கிவந்து பிள்ளைகளுக்குத் தருகிறாள். பிறைநாளில் கறியெடுக்கவும் துணியெடுக்கவும் எங்கே போக? அஹமதுவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வறுமையை வெல்லத் துடிக்கும் ஆன்மாவின் மன வியூகம் அபாரமானது. பணக்காரர்கள் ஆடுமாடு சாப்பிடும்போது (சிலர் ஒட்டகமுன் வெட்டுவார்கள்.) ஏழைகள் கோழிக்கறி சாப்பிடுவார்கள். அன்றைய நாளில் மட்டும் கோழிக்கறி அறுத்து விற்றால் என்ன என்று யோசிக்கிறான். 20 கோழிகள் கடனுக்கு வாங்கி, அடுத்த சிற்றூரில் கடைபோட்டு ஆயிரத்து இருநூறு ரூபா சம்பாதிக்கிறான். அந்தக் கதைப் பாத்திரங்களோடு ஒன்றும்போது வாசக மனம் சபாஷ் போடுகிறது. அடிமட்ட ஏழைக்கு ஆயிரத்து இருநூறு என்பது பலகோடிக்குச் சமம். குழந்தைகளுக்கு மட்டும் துணியெடுத்துக் கொண்டாடுகிறார்கள். நானும் இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தேன் என்பதால் இந்தக் கதை என்னோடு ஒட்டிக் கொண்டுவிட்டது.

மற்ற படைப்புகள் எல்லாம் பெண்களின் துயரங்களைப் பேசும்போது ‘ஈமான்’ வறுமையைப் பற்றிப் பேசுகிறது. வறுமை என்பது உலகப் பொதுமொழி அல்லவா? வறுமை முற்றாக ஒழிக்கப் பட்டுவிட்டால் பெண்ணடிமைத் தனமும் ஆணாதிக்கமும் வாழ்க்கை இயல்பிலிருந்து உலர்ந்து உதிர்ந்துவிடும். ஆதலால் எனது ரசனையில் ஈமான் இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை என்பேன்.

முதல் தொகுப்பே முத்தாய்ப்பாக இருக்கிறது. நிச்சயம் நூலாசிரியருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

– தேனி சீருடையான்

நூல்: நசீபு
ஆசிரியர்: மு. அராபத் உமர்
பக்கம்:  103
விலை: ரூபா 120/
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924