தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி
மெட்டுக்குப் பாடல் எழுதுவது புதிதாக வருகிறவர்களுக்கு பெரும் சிரமமான காரியமாக இருக்கும். மெட்டுக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்று சில தம்பிமார்களும் நண்பர்களும் கேட்பார்கள். முதலில் உங்களுக்குத் தெரிந்த திரைப்பாடலின் மெட்டுக்கு எழுதிப் பழகுங்கள் என்பேன். அப்படி எழுதிப் பார்க்கிற போது நம்பிக்கை பிறக்கும். எழுதிய பாடல் வரிகளை ஒரு மெட்டில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டாகும். ஒருவகையில் தெரிந்த மெட்டிற்குப் பாடல் எழுதுவது சுலபமாக இருக்கும் அதில் அவர்கள் பெறுகிற புரிதலை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடலாம் என்பது என் எண்ணம். அதனைத் தொடர்ந்து கேட்காத இந்திப் பாடலை அல்லது வேறு மொழிப் பாடலை எடுத்துக் கொண்டு அதன் மெட்டுக்கு எழுதச் சொல்வேன். அதையும் எழுதிவிட்டால் அவர்களின் நகர்வை என்னாலும் அவர்களாலும் உணர முடியும். அதன் பின் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட என் பாடலின் மெட்டை அந்த பாடல் வெளிவந்த பிறகு கொடுத்து எழுத வைப்பேன். அதிலும் எழுதிப் பழகிவிட்டால் அவர்கள் மெட்டுக்கு எழுதுகிறவர்களாக மாறிவிடுவார்கள். இப்போது மெட்டுக்கு எழுதிப் பழகிவிட்டார்கள் ஆனால் அவர்களின் கருத்தும் கவித்துவமும் அழகிலும் எப்படிக் கைவரப் பெற்றிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. இது குறித்தும் பயில நமக்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு பாணி இருக்கிறது. தமிழ் பாடலாசிரியர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பில் ஒவ்வொருவரின் பாடல் எழுத்துமுறையையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும் என எனக்குக் கூட ஓர் எதிர்காலத் திட்டம் இருக்கிறது.
சென்னைக்கும் மதுரைக்கும் என்னைவிட அதிகம் பயணித்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் இதில் விதிவிலக்கு. இன்னொன்று இதற்கு நான் நடத்துநர் வேலையோ ஓட்டுநர் வேலையோகூட செய்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றும். அப்படி நான் பயணிக்கையில் மோசமான அனுபவமும் சந்தோசமான அனுபவமும் ஓரிடத்தில் கிடைக்கும். அந்த இடம் தான் ஹோட்டல். அங்கே கழிப்பறை மட்டமாக இருக்கும். பள்ளிக்கூட அனுபவத்திற்குப் பிறகு ஒருவரைக் கையில் குச்சியோடு பார்த்தேனென்றால் அது இங்கு தான். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு கக்கூஸ்க்குள் அனுப்ப ஓர் அண்ணன் ஆசிரியர் வேலையைச் செய்வார். என்ன மாணவர்களுக்குத் தான் வயது கொஞ்சம் அதிகம். அதே போல் அங்கிருக்கும் ஹோட்டலில் தோசையும் சால்னாவும் சாப்பிட்டால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பஸ் ஒரு நான்ஸ்டாப்பில் நின்று ஒருவர் வாட்டர் பாட்டிலோடு காடுகரை நோக்கி ஓட வேண்டும் தான். இப்போ விசயம் இதுவல்ல பஸ் நிற்கும் அந்த 15 நிமிடங்களில் அங்கே நான்கு ஐந்து பாடல்கள் ஒலிக்கக் கேட்கலாம். அந்த பாடல்களின் மூலமாகத்தான் நான் தமிழகத்தின் பல முக்கிய நாட்டுப்புற கானா பாடகர்களை அறியப்பெற்றிருக்கிறேன். அங்கு எல்லாவிதமான பாடல்களும் ஒலிக்கும். அங்கேயே கேசட் பிற்காலத்தில் சிடி விற்பனையும் நடக்கும். அங்கே என் பாடல் ஒலித்தால் எத்தனையோ பேரைச் சென்றடையுமே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் என் பாடல் இரண்டாவது ஒலித்துவிடுகிறது ஆனால் நான் இப்போது மதுரைக்கும் சென்னைக்கும் ரயிலில் பயணிக்கிறேன்.
ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கே உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களோடு போயிருந்தேன். யாரும் கற்பனை செய்ய வேண்டாம் நான் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அங்கே என் பாடல்களைத் தமிழ் நாட்டிலிருந்து வந்த பாடகர்கள் பாடும்போதும் அவற்றை அங்கிருந்த நண்பர்களும் நண்பிகளும் கேட்கும் போது எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது எனக்கு றெக்கை முளைத்தது.
ஒருமுறை “வானவில்” என்கிற ஒரு படத்திற்குக் கேரளா சென்றிருந்தேன். அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். மிகச் சிறப்பாக வந்திருந்தது. அந்த டீம் கேரளத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் பெயர்கள் மறந்தபோயின. ஆனால் அவர்கள் ஒரு தமிழ் கவிஞனுக்குக் கொடுத்த மரியாதையும் உபசரிப்பும் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை என் பாடல்களும் தான். இதை எதற்காக சொன்னேனென்றால் பத்தாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் என் அருமைத் தம்பி அமைப்பொன்றின் ஆல்பத்திற்காக பத்துப் பாடல்கள் எழுத ஒரு மழைக்கால இரவில் ஒரு காட்டுப் பங்களாவில் தங்கவைத்தான். உடனிருப்பானென எண்ணினேன் இருக்கவில்லை. பேப்பர் பேனா எடுத்து எழுதத் தொடங்கினேன். கரண்ட் கட்டானது. மழைக் கொட்டியது ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை. யாரோ ஒருவர் நான்கு இட்லியைத் தந்துவிட்டு குடையோடு ஓடி மறைந்தார். மெழுகுவர்த்தியும் இல்லை. பேய் பயம் எனக்கில்லை. ஆனால் பயம் இருந்தது. தூங்குவதற்குத் தொந்தரவாக வெக்கை இல்லை ஆனால் சரியான விரிப்பான் இல்லை.
கொசுக்களின் துணை இருந்தது ஆனால் கடித்தன. விடிய விடிய தூங்கவில்லை. அந்த நான்கு இட்லியையும் சாப்பிடவில்லை பத்து பாடல்களும் எழுதவில்லை.
கேரளா போய் பாடல் எழுதிய அனுபவம் போல் கேரளத்து நண்பர்கள் சென்னை வந்து என்னிடம் பாடல் வாங்கிய விதமும் அழகானது தான். படத்தின் பெயர் “ட்ராமா” இது இரண்டே ஷாட்டில் எடுக்கப்பட்ட சினிமா. இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் திரைக்கு வரும். இந்த வாய்ப்பு என் பெற்றெடுக்கா மகள் விஜயலட்சுமியால் கிடைத்தது. அவர் வாட்ஸ்அப்பில் உரையாடும் போது நீங்கள் மண்வாசனை பாடல் மட்டும் தான் எழுதுவீர்களா வேறு வகைப் பாடல்களும் எழுதுவீர்களா எனக் கேட்டபோது சின்னதான கோபத்தில், நான் இங்கிலீஷ் படத்திற்கே பாடல் எழுதியிருக்கிறேன் என்னப் போய் இப்படி கேட்டிட்டியே மகளே என்றேன்.(அதற்கு அவர் என்ன.. இங்கிலீஷ் படமா என வாயைப் பிளந்தது, பிறகு அது என்ன படம் எனக் கேட்டபோது என் வாய் மூடிக் கொண்டதெல்லாம் எடிட்) அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு, ஏனெனில் அந்தப் படத்திற்கு விஜயா தான் வசனக்கர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர் அஜய்குமார் என் அன்புக்குரியவர். அந்தப் படத்தில் மதுரையின் பெருமையைச் சொல்லும் விதமான ஒரு பாடல் ஜெய கே தாஸின் இசையில் வேல்முருகனின் குரலில்.
தொகையறா
மல்லிகைப் பூ வாசம் எங்க மதுரையோடது
நாயக்கர் மஹால் தூண்களால பெரும கூடுது
தெப்பக்குளத்தில பசங்க பாரு கிரிக்கெட் ஆடுது
நம்ம கோனார் மெஸ்ஸு கறி தோச நாக்கு தேடுது
பல்லவி
ஜிகர்தண்டா பேருபோன மதுரைதானுங்க
சிங்கப்பூரத் தோக்கடிக்கும் எங்க ஊருங்க
டீக்கடைங்க எங்களுக்கு சட்டமன்றம் தான்
அடிகுழாயில் நடக்கும் பட்டிமன்றம் தான்
வாழத்தார வச்சதுபோல் நான்கு கோபுரம்
வைகை ஆத்து இடுப்புலதான் நாங்க வாழுறோம்
சரணம் – 1
வருஷத்துல ஆறு மாசம் சென்ரல் ஜெயிலு
வந்ததுமே கோழி அடிக்கும் பொண்டாட்டி மயிலு
உசுப்பிக் கேளு ஒரு மணிக்கும் இட்டிலி கிடைக்கும்
சாமத்துக்கும் சலிக்காமல் சட்னி இருக்கும்
நண்பனை தொட்டவனை பிடித்திடும் சனிதான்
உசுரு கூட எங்களுக்கு பாக்கெட் மனிதான்
சரணம் – 2
கேலி கிண்டல் நக்கல் பேச்சு கூட பிறந்தது
பூமி போல எங்க ஊரு தூங்க மறந்தது
தியேட்டரில் புதுப் படன்னா விசில் தான் பறக்கும்
வெள்ளைக்காரச் சனங்க பாரு டவுசரில் நடக்கும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது எங்களின் மண்ணு
நீ அதை நீதி கேட்டு எரிச்சதுங்க கண்ணகிப் பொண்ணு