நூல் அறிமுகம்: அஜயன் பாலாவின் நட்பின் இலக்கணம் – புல்வெளி காமராசன்
நட்பாற்றுப்படை
(நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார் நூலை முன்வைத்து)
பதியப்படும் வாழ்வின் அனுபவங்களே கலை ஆகின்றன. நேர்மையும் உண்மையும் இணைந்த கலையே காலத்தில் நிற்கும் படைப்புகள் ஆகிவிடுகின்றன .இந்த வகையின் புதுவரவு அஜயன்பாலாவின் நட்பின் இலக்கணம் நா முத்துக்குமார் என்கிற நூல்.
இது என் இரண்டு நண்பர்கள் பற்றிய நூல்.முதல் நண்பர் நா.முத்துக்குமார். காஞ்சியின் விளிம்பு கிராமம் ஒன்றில் பிறந்து புத்தகங்கள் மீது தவழ்ந்து நடந்து காஞ்சி இலக்கிய வட்டத்தில் வளர்ந்தவர். ஹைக்கூக்களில் மண்ணின் மனம் சேர்த்தவர், கவிதைகளில் எளிய மனிதர்களை நாயகர்கள் ஆக்கியவர், கட்டுரை வரிகளில் கவிதை எழுதியவர் .திரைப்படப் பாடல்களின் மூலம் தேடு பொருள் சேர்ப்பவர் மத்தியில் பாடுபொருள் பல சேர்த்தவர் .உழைப்பின் உச்சமாய் வாழ்ந்தவர். நினைவின் எச்சமாய் இப்போதும் வாழ்பவர். எளிமையின் அடையாளம்; முயற்சியின் முகவரி அவர்.
இரண்டாம் நண்பர் அஜயன் பாலா. பாலாஜி என்கிற இயற்பெயருடைய இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து திருக்கழுக்குன்றத்தில் வளர்ந்து சினிமாவுக்காக சென்னைக்கு வந்தவர். தேர்ந்த வாசகர் .இவருடைய நூல் தேர்வும் வாசிப்பு முறையும் ஆச்சரியப்படுத்துபவை. மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். வார்த்தைகளை மனமென்னும் கலைடாஸ்கோப்பிலிட்டு குலுக்கி குலுக்கி சிறந்ததையே எடுத்து சிறுகதை வரிகளாக்குபவர் .கலை நேர்த்திககாக பெரிதும் மெனக்கெடுபவர் எனவேதான் மௌனி போல சில சிறுகதைகளையே எழுதி இருந்தாலும் சிறந்த சிறுகதைகளுக்கான பாராட்டும் பரிசுகளும் பெற்றுக் கொண்டிருப்பவர். நல்ல சிறுகதைகளை தேடிப் படிப்பதோடு அவற்றை நண்பர்களுக்கும் அடையாளப்படுத்துபவர்.
அந்த வகையில் சிறந்த சிறுகதை எழுத்தாளரான எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களின் சிறுகதைகளை தற்போது வெளியிடும் முயற்சியில் இருப்பவர். கடுமையான உழைப்பினாலும் தீவிர சிந்தனையாலும் விடாமுயற்சியாலும் சிறந்த கலைஞனாக பலரால் பாராட்டப்படுபவர்.சினிமாத்துறையில் தீவிரமாக இயங்கி வருவதுடன் சினிமா தொடர்பான பல நல்ல புத்தகங்களை எழுதி வருபவர். அறம் மீறாத சினிமா கலைஞன். பிரபலமானர்களுடன்நல்ல தொடர்பில் இருந்தாலும் தம் முன்னேற்றத்துக்காக அதைப் பயன்படுத்தாத பண்பாளர்.
தனக்கு வருகின்ற வாய்ப்புகளை மற்றவர்களுக்கு விட்டுத்தருகின்ற மேன்மை மிக்க நண்பர். நவீன கவிஞர்கள் பலருக்கு இவரே புகலிடம் .கேட்பவர் மனம் புண்படாவண்ணம் வார்த்தைகளை தேடித்தேடி பேசுபவர்.
முதல் நண்பரைப் பற்றி என் இரண்டாம் நண்பரின் பதிவே இந்த நூல் .வெறும் சம்பவங்கள் மட்டுமே இருந்திருக்குமானால் இது நாட்குறிப்பு நூலாக (டைரிக்குறிப்புகளாக) தேங்கி விட்டிருக்கும் .சம்பவங்களை நினைவுகளால் உரசி அனுபவங்களால் தேய்த்து, தத்துவத்தில் பட்டை தீட்டி இருப்பதால் சிறந்த கலைப்படைப்பாக மின்னுகிறது.
நா முத்துக்குமாரை அவருடைய ஐந்து வயது முதல் எனக்குத் தெரியும். முதல் ஹைக்கூ, முதல் கவிதை, முதல் கட்டுரை, முதல் திரைப்பட பாடல் என அவருடைய முதல் படைப்பிலிருந்தே நான் அவருடன் பயணித்திருக்கிறேன். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இளம் அறிவியல் மாணவராக இருந்த காலத்திலேயே அவரும் நானும் காஞ்சி காமு என்ற பெயரில் கவிதைகள் துணுக்குகள் ஹைக்கூக்கள் எழுதி வந்தோம். எங்கள் சந்திப்பு களமே அவருடைய அன்னை நூலகம்தான்.
இளங்கலை அறிவியல் படிப்பு முடிந்ததும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்புபடிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அங்கே அவருடைய பாட்டி வீடு சூளையில் இருந்தது. தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் முதுகலை இயற்பியல் படிக்காமல் முதுகலை தமிழை ஆர்வமாக படித்தார். அவர் சென்னைக்கு சென்ற சில நாட்களிலேயே நண்பர் அஜயன் பாலா அவருக்கு அறிமுகம் ஆகி விட்டார் எப்படி அறிமுகமானார் என்பதை மிக சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை ஒன்றில் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து நா முத்துக்குமார் இறக்கும் வரையில் அவர்களுக்கிடையே இருந்த நட்பின் தருணங்களை விரிவாக இந்த நூலில் விளக்கியுள்ளார்.
1997ஆம் ஆண்டு நான் சென்னை புறநகர் விரிவுப்பகுதிஒன்றில் ஒரு தென்னந்தோப்பு நடுவே அமைந்திருந்த ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன் .தங்குமிடம் தேடி தவித்து கிடைக்கையில் நண்பர் நா முத்துக்குமார் திரு அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவர் அறையிலேயே என்னை தங்க வைத்தார்.
அஜயன் பாலா நா முத்துக்குமார் நான் மூவரும் சென்னையில் சுற்றிய நாட்களில் சென்னைக்கு மேம்பால முதுகுகள் அதிகம் இல்லை. ஒருவழிப்பாதை என விரல் நீட்டி மிரட்டும் பதாகை விழிகள் இல்லை .சென்னையின் நீள அகலங்களை மாநகர சர்வேயரைவிட விட அதிகம் அறிந்திருந்தோம். விதவிதமான உணவகங்கள்; பன்மொழி படங்களைத்திரையிடும் திரையரங்குகள்; இன்று அழிந்து போன சிதிலமடைந்த நூலகங்கள்; அரிய புத்தகங்கள் தேடிய பழைய புத்தகக் கடைகள் என என் நினைவில் அலைகள் வீசிக் கொண்டே இருக்கின்றன…
அஜயன் பாலா நா. முத்துக்குமார் இருவரின் நட்பின் பயனாய் விளைந்த விளைவுகளை விரிவாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இருவரின் நட்பால் எனக்கும் சில நற்பயன்கள் கிடைத்திருக்கின்றன.
இவர்கள் இருவரும் என் வாசிப்பு முறையை ஆழமாக்கியவர்கள். இவர்களை சந்திப்பதற்கு முன்பே நான் தீவிர இலக்கிய வாசகன் .நவீன எழுத்து முறைகளை உள் வாங்குவதில் எனக்கு சில தடைகள் இருந்தன .கோணங்கியின் எழுத்தை வாசிக்கும் நுட்பம், பொம்மை அறை சண்முகத்தின் உள் பொருண்மை ,நவீன கவிதைகளின் வாசிப்பு முறை இவையெல்லாம் இந்த இருவரின் உரையாடல்களே எனக்கு வழங்கின.
தமிழ் சினிமாவை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அற்புதமான பிற மொழி இந்திய படங்களையும் உலக சினிமாக்களையும் அறிமுகப்படுத்தியது இவர்களின் நட்பு .இதோடு நின்றுவிடாமல் சினிமா ரசனையை மேம்படுத்த செயல்வடிவம் தரும் வகையில் என்னோடு ரத்தினகுமார், அமுதகீதன்,டேனியல், லோகநாதன் ,சிவா, ஆகிய நண்பர்களுடன் இணைந்து தரையரங்கம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு படம் காட்டும் கருவிகளை பல ஆயிரம் செலவழித்து வாங்கி எங்களுக்கு வழங்கி எங்களை வழி நடத்தியவர்கள் இவர்கள். இன்றைக்கும் பதிமூன்றாம் ஆண்டாக அந்த தரையரங்கம் என்ற அமைப்பு காஞ்சிபுரத்தில் நடந்து வருகிறது.
இந்த நூல் சங்க இலக்கிய மரபில் சொல்வதானால் ஓர் ஆற்றுப்படை நூல் .ஒரு சாதாரண வாசகன் எப்படி திறமைமிக்க படைப்பாளியாக ஒளிர்ந்தார் என்பதை சொல்லும் வழி நூல்.அதற்கு நட்பு எப்படி பயன்பட்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நட்பாற்றுப்படை நூல் இது.
மிகை நாடாது குறைபட்டு போகாது உள்ளதை உள்ளபடி கூறுவதால் சிறக்கிறது இந்த நூல். தனிமனிதர்களின் பலங்களை பலவீனங்களை, ஒவ்வொரு தருணத்தையும் மாற்றி அமைக்கும் சூழலை, மாற்றத்துக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொள்ளும் மனிதர்களை என இப்புத்தகம் முழுவதும் நேர்மறை சிந்தனையுடன் பலவற்றை பதிவு செய்துள்ளது.
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலே துளி
என்கிறது
நட்பு
என்கிற அண்ணன் அறிவுமதியின் கவிதைக்கு விளக்கமாய் அமைந்திருக்கிறது இந்த நூல். இது ஒருவகையில் அஜயன் பாலாவின் தன் வரலாற்று நூலாகவும் அமைந்துள்ளது தன் பலவீனங்களை தான் பட்ட அவமானங்களை அனுபவ முதிர்ச்சி இன்மையால் நினைத்துக் கொண்டிருந்த போலி மதிப்பீடுகளை, காயப்படுத்தியவர்களை, கோபதாபங்களை மிக நேர்மையாக பதிவு செய்து எதிர்த் தரப்பினர் எண்ணங்களையும் சரியாக பதிவு செய்ததன் மூலம் இதை ஒரு இலக்கியப் பிரதியாக உயர்த்தி இருக்கிறார்.
நட்பு இனிக்கும் அனுபவம். அசைபோடுவதன் மூலம் மனதை நெகிழ வைப்பது அது. கடந்த காலங்களை அர்த்தம் ஆக்குவதும் நிகழ்காலத்திற்கு பிடிமானம் தருவதும் எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டுவதும் நட்புத்தருணங்களே. இக்கட்டுரைகளை படித்து வருகையில் பல வரிகள் சற்றென்று பூத்துக்குலுங்கும் மலர்களாய் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன. தத்துவ வரிகளாய் எப்போதும் நிலைத்திருக்கும் வரத்தையும் சிலவரிகள் பெற்றுவிடுகின்றன. என்னை கவர்ந்த வாக்கியங்களில் ஒன்று இது.
“ஒரு பாறை, கால் முளைத்து தினமும் நடந்து மோதி, பலரையும் சந்தித்து சிலரது வெறுப்பில் அடிவாங்கி சிலரது அன்பால் செதுக்கப்பட்டு, கடைசியில் ஒரு சிற்பமாக தன்னைத்தானே கண்டடைய சினிமாவில் சில வருடங்கள் ஆகும்”.
நன்றி மறவாமை; ஆபத்தில் உதவி; எளிமை ;பரஸ்பரம் பகிர்தல்; தவறு செய்யும்போது எடுத்துரைத்தல்; சுய வாழ்க்கை ரகசியம் காத்தல்; இன்னல் போக்குதல் ;அறிவை பரப்புதல் ;சூழலுக்கு ஏற்ப தகவமைத்தல்; சுதந்திரம் காத்தல்; துன்பத்தில் ஆறுதல் தருதல்; மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குதல் இவையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று அற நூல்கள் அறுதியிடுகின்றன. இந்த இலக்கணங்களோடு வாழ்ந்தவர் நண்பர் திரு நா முத்துக்குமார் என்றால் இதே இலக்கணங்களோடு வாழ்பவர் என் நண்பர் திரு அஜயன் பாலா அவர்கள்.
ஒரு நண்பராக மறைந்த திரு.நா.முத்துக்குமாருக்கு இவர் செய்துவரும் உதவிகள் பிறருக்கு தெரியாதவை .நா. முத்துக்குமாரின் 12 நூல்களை நண்பர் டிஸ்கவரி புக் பேலஸ் திரு வேடியப்பன் அவர்கள் அச்சிட்டு வெளிக்கொண்டுவர அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். இன்றைக்கும் நா முத்துக்குமாரின் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கிறார் .அவருடைய திரைப்படப் பாடல்களை தொகுத்தளிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நூல் இவர்கள் இருவரின் 12 வருட நட்பில் விளைந்தவை .இன்னும் சொல்ல வேண்டிய தகவல்கள் இவரிடம் ஏராளம் உண்டு எழுதிய இந்த நூலை வரவேற்று எழுத இருக்கும் அந்த இரண்டாம் பாகத்திற்காக நான் உங்களுடன் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்
என்றென்றும் அன்புடன்,
புல்வெளி காமராசன்,
9585667824,
காஞ்சிபுரம்,
23 .1 .2022.