“அகநானூற்றில் வேளிர்” கட்டுரை – வி.நாகலெட்சுமி
முன்னுரை
சங்க இலக்கியங்கள் அகம் புறம் என்ற இரு பொருள் பாகுபாட்டில் புலவர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளன. அகஇலக்கியங்கள் தலைவன் தலைவி தனியொழுக்கத்தைக் கூறுவதால் அப்பாடல்களில் வரலாற்றுச் செய்திகளை நேரடியாகக் கூறாது பிறிதுமொழிதலாகப் பாடியிருப்பதைக் காணமுடிகிறது. அக இலக்கியங்களில் புறச்செய்திகள் புறஇலக்கியங்களையும் விஞ்சுகின்ற வகையில் அமைந்துள்ளன. மற்ற சங்க அகநூல்களைக் காட்டிலும் மிகுதியாக அரசர்களிடையே நடைபெற்ற போர், அவர்தம் வீரம், கொடை முதலான செய்திகள் அகநானூற்றில் பரவலாகவே புலவர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளன. சேர சோழ பாண்டிய பெருவேந்தர்களுக்கு அடுத்த நிலையில் புலவர் பெருமக்களால் பாடப்பட்டவர்கள் வேளிர்கள் ஆவர். அவ்வகையில் எட்டுத்தொகை அகநூல்களில் ஒன்றான அகநானூற்றில் வேளிர் வரலாறு குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வேளிர் வரலாறு
சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் வேளிர் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. தமிழகத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சிபுரிந்த நிலையில் அவர்களுள் வேளிர் என்பவர்கள் ஒரு குடியைச் சேர்ந்தவர்களாக சுட்டப்பட்டுள்ளனர்.
” வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து” (பதிற்.49:7)
“இருபெரு வேந்தரொடு வேளிர் சாய” (மதுரை.55:56)
“ பதினொரு வேளிரொடு வேந்தர் சாய” (அகம்.246:12)
ஆகிய பாடல்களில் வேந்தர்களோடு வேளிர்களை உடன்படுத்தி புலவர்கள் பாடியிருப்பதை அறியமுடிகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரின் பாயிரவுரை வேளிர் வரலாற்றை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
“தேவரெல்லாம் கூடி யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது. இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகொடுத்து நாடாக்கி பொதியிலின்கண் இருந்தனர்”(1) என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளிர் வரலாறு குறித்து மு.இராகவையங்கார் தமிழகத்து துவாரகையிலிருந்து வந்து குடியேறியவர் என்றும், கண்ணன் வழிவந்த யாதவரென்றும் தான் எழுதிய ‘வேளிர் வரலாறு’ என்ற நூலில் கூறியுள்ளார்.
‘தொன்முது வேளிர்’ (அகம்.258) ‘தொன்று முது வேளிர்’ (நற்.280) என்று கூறியிருத்தலால் இவர்களின் தொன்மையினை அறிந்து கொள்ள முடிகிறது.
சங்ககால வேளிர்கள்
சங்ககாலத் தமிழகத்தில் நெடுவேளாவி, வேளாவிக் கோமான் பதுமன், வையாவிக் கோப்பெரும் பேகன், நன்னன் வேண்மான், வெளியன் வேண்மான் ஆய் எயினன், வெளிமான், எருமையூரன், ஆய் அண்டிரன், பொதியிற் செல்வன் திதியன், பாரிவேள், இருங்கோவேள், நெடுங்கை வேண்மான், நெடுவேளாதன், செல்லிக்கோமான் ஆதனெழினி, வாட்டாற்று எழினியாதன், அழுந்தூர்வேள் திதியன், வேளெவ்வி, வீரைவேண்மான் வெளியன் தித்தன், நன்னன்சேய் நன்னன், பொருநன் ஆகியோர் வாழ்ந்தனர் என்பதை அறியமுடிகிறது. “சங்க காலத் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த வேளிர்களாக அறிய வருவோர் இருபதின்மர்”(2) என்கிறார் வ.குருநாதன்.
நெடுவேளாவி
வேளாவியர் குடியுள் முதல்வனாக அறியப்படுமளவில் வருபவன் நெடுவேளாவி ஆவான்.
” உருவக் குதிரை மழவ ரோட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளாவி_
அறுகோட்டு யானைப் பொதினி’ (அகம்.1:2-4)
” முழவுறழ் திணிதோள் நெடு வேளாவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” (அகம்.61:15-16)
இவ்விரு அகநானூற்றுப் பாடல்களில் நெடுவேளாவியை அவனுக்குரிய பொதினி மலையோடு சேர்த்துப் பாடியுள்ளார் மாமூலனார்.
அச்சம் தருகின்ற குதிரைகளின் மீது ஏறி சண்டையிட வரும் மழவர்ப் படையை ஓட ஓட விரட்டிய வேளாவி போராற்றலில் முருகனுக்கு நிகரானவனாக பாடப்பட்டுள்ளான்.
“இக்காலப் பழநி மலையாகிய பொதினி மலையும் அதனைச் சூழ்ந்த நாடும் பண்டைக் காலத்தே ஆவியர் என்ற வேள்குடி மன்னரால் ஆளப்பட்டு வந்தன. வேள்குடியைச் சார்ந்த ஆவிக்கோ வேளாவிக்கோ எனப்பெயர் பெற்றான். ஆவிக்கோவின் ஊராகிய நன்குடியே ஆவிநன்குடியெனப் பெயர் பெற்று, அதுவே இக்காலத்து திருவாவிநன்குடியாய் இலங்குகின்றது”(a) என்பதனால் திருவாவிநன்குடி பெயர்க்காரணத்தையும் அறிய முடிகிறது.
வெளியன் வேண்மான் ஆய்எயினன்
வெளியன் வேண்மான் ஆய்எயினன் வெளியம் என்ற ஊரைச் சேர்ந்தவன் என்பதை அகநானூற்றின் பாடல் வழி அறியமுடிகிறது. வாகையென்னு ஊரொன்றும் வெளியன் வேண்மான் ஆய்எயினனுக்குரியதாக இருந்தது. வெளியன் வேண்மான் பரணரால் (அகம்.142,148,181,208,396) அகநானூற்றின் பல பாடல்களிலும் பாடப்பட்டுள்ளான்.
யாம இரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமயக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆய் எயினன்
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, புள்ஒருங்கு
அம்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல்செய்து உழறல் ……………………………..” (அகம்.208:1-12)
என்ற வரிகள் வாயிலாக நடுஇரவில் தன் வீட்டின்முன் நின்று தேன் நிறைந்த உச்சியை உடைய மலையைப் பாடுகின்ற சிறிய கோலினை கையிலே உடைய பாடுநர் விரும்பினால் அவர்களுக்குத் தந்தத்தை உடைய யானைகளைப் பரிசாகத் தருகின்ற வண்மையால் ஆகிய மகிழ்ச்சியினையும் அருளுற்ற வாழ்க்கையினையும் உடைய வெளியன் வேண்மான் என்று பரணர் பாடியுள்ளார்.
பாழிப்பறந்தலை என்னும் ஊரின்கண் போர்க்களத்தில் முகப்படாம் அணிந்த யானையையும், தேரையும் உடைய மிஞிலி என்பவனோடு நண்பகல் வேளையில் செய்த போரில் வலிமையோடு போரிட்டு புண்மிக்கு வீழ்ந்தான். அப்பொழுது அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றின் கதிரானது எயினன் உடலில் படாதிருக்க பறவைகள் பலவும் கூடித் தம் சிறகுகளால் பந்தலிட்டு நிழலைத் தந்து வருந்தின. இச்செயலானது ஆய் எயினன் தன்னைப் பாடி வரும் பாணர்களுக்கு மட்டுமல்லாது தன்னைப் பாடாத பறவைகளுக்கும் பாதுகாவலனாய் இருந்தான் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளெவ்வி
சோழ நாட்டின் மிழலை, நீடூர் ஆகிய ஊர்களைச் சார்ந்தவனாக வேளெவ்வி (புறம்.24), (அகம்.266) பாடப்பட்டுள்ளான்.
“இவனுடைய ஊர்களெல்லாம் நெய்தல் வளம் சான்றனவாகவே புனையப் பெறுகின்றவனாதலால், இவற்றின் கடற்கரைச் சார்பு காணப்படும். சோழநாட்டிலே தேவாரப்பாடல் பெற்ற ஊர்களான திருவீழிமிழலையும், திருநீடூருமே எவ்வியின் இந்த மிழலையும் நீடூருமாகலாம்”(4) என்கிறார் கா.கோவிந்தன்.
வாய்வாள் எவ்வி, பல்வேல் எவ்வி என்று பாடப்பெற்றுள்ள நீடூர் தலைவனான எவ்வி தன்னுடைய ஏவலை ஏற்காத பகைவர்களை அரிமணவாயில் உறத்தூர் என்னுமிடத்தில் அவர்கள் வலிமை கெடுமாறு அழித்து வெற்றி பெற்றான். அவ்வெற்றிக்கு வித்தாக அமைந்த படைவீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்த ஆரவாரம் குறித்து பரணர்,
“யாழிசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன
கவ்வை யாகின்றால் பெரிதே” (அகம்.266:10-15)
என்று பாடியுள்ளார்.
முடிவுரை
தமிழகத்தில் பல்கியிருந்த வேளிர் குடிகள் குறித்தும், தமிழகத்தை இருபதின்மர் ஆட்சி செய்தமையும் அறியமுடிகிறது. நச்சினார்க்கினியர் உரைச்செய்தியும், மு.இராகவையங்காரின் ‘வேளிர் வரலாறு’ நூலின் வழியும் வேளிரின் தொன்மை வரலாறு தெரிய வருகிறது. வேளாவியர் குடியின் முதல்வனாக கூறப்பட்ட நெடுவேளாவியின் போராற்றல், வெளியன் வேண்மான் ஆய்எயினன் Pageடைச்சிறப்பு வேளெ©வியி+ வெற்றிச்சிறப்பு ஆகியவை அகநானூற்றின் வழி புலப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
- நச்சினார்க்கினியர், தொல்காப்பியம், சிறப்பு பாயிரம் உரை.
- வ.குருநாதன், சங்ககால அரசர் வரலாறு, ப.258
- வ.குருநாதன், சங்ககால அரசர் வரலாறு, ப.258
- கா.கோவிந்தன், சங்ககால அரசர் வரிசை-5, ப.67
வி.நாகலெட்சுமி,
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
12964/Ph.D.K6/Tamil/Part Time/July 2015/Confirmation/Date:7-8-2017
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைகழகத்துடன் இணைவு பெற்றது),
திருவாரூர் – 610003.